யாதுமாகியவராய்....

உணர்ச்சிப் பெருக்கான உள்ளம் எப்படி இருக்கும்...

உணர்வற்ற சுழிய நிலையில் எவ்வித நினைவுகளும் இல்லா உள்ளம் எப்படி இருக்கும்...

அல்லது இந்த இரண்டுவிதமான உள்ளத்தின் நிலையை ஒருங்கே உணர்ந்தால் எப்படி இருக்கும்...
அப்படித்தான் இருக்கிறது இதை எழுதுகையில் என் உள்ளம்...

இதுவரையில் எதையெல்லாம் நான் கற்றிருக்கிறேனோ... எதையெல்லாம் கற்காமல் இருக்கிறேனோ..

அதற்கெல்லாம் காரணமானவராக 'அவரே' இருக்கிறார்...

தினமும் அந்த குரல்தான் என்னை எழுப்பிவிடும் 'பூபால இராகமாக' இசைக்கிறது... காலை மட்டுமல்ல எப்பொழுதெல்லாம் நான் உறங்குகிறேனோ... அல்லது உறக்கம் என்னுள் உறங்குகிறதோ...

அந்நேரம் அந்த குரல் எங்கொளித்தாலும்.. 'எழுந்திடு'.... என்று எனக்குள்ளிருந்தே ஆணையிடுகிறது...

நான் எழுந்திட வேண்டுமென்பது அக்குரலின் 'அவா' - வாக இல்லாதபொழுதும்... என் விழிப்பு... அவருக்கான மரியாதையை அப்பொழுதும் அரங்கேற்றுகிறது.. அந்த ஆணையை எம்மனமே இப்பொழுதும் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறது..

வாகனத்தில் செல்லுகையில்...

அபாய வளைவுகளாகட்டும், சாலைகளாகட்டும் அந்த இடத்தை கடக்கையில், பின் இருக்கையில் அமர்ந்து அவர் சொன்ன அறிவுரைகள் தான்..

இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம் என்னுள்ளிருந்தே என் செவியை அடைகிறது...

செய்யாத, சரியாக செய்யாத, செய்ய மறந்த செயல்களுக்கு அவர் காட்டிய கண்டிப்பும், பயன்படுத்திய சொற்களும், அதன் அர்த்தங்களும் இன்று எந்த செயலையும் துவங்குவதற்கு முன்பே கவனிக்க வேண்டிய எச்சரிக்கையாய் மாறி...

முன்னெச்சரிக்கையின் மூலமாய் என்னுள் ஊறி வழிநடத்திச் செல்கிறது..

எனக்கு எதுவெல்லாம் பிடித்ததோ... அதையெல்லாம் பிடிக்காததாய் மாற்றிய.. எதுவெல்லாம் பிடிக்காததோ.. அதையெல்லாம் பிடித்ததாய் மாற்றிய ஒரே 'உருவம்' அவராகத்தான் இருக்கிறார்.. இன்றுவரை..

அந்த 'பிடிக்காமல்' போனவைகள் தான், எனக்கான உலகத்தில் என்னை பலருக்கு 'பிடித்தவனாய்' மாற்றிக்கொண்டிருக்கிறது...

அவர் மடியில் உறங்கியதாகவோ, அவரே உறங்கவைத்தாகவோ நினைவில் இல்லை அல்லது என் நினைவிலிருக்கும் நிகழ்விற்கு முன்பே அதை அவர் செய்திருக்கலாம்..

ஆனால் இன்று தினந்தோறும் அவர் மடியில் சாய்ந்து கொண்டே மழலைப்போல் ஆறுதல் கேட்கிறேன்.. இந்த உலகம் என்னை நிராகரிக்கும்போதெல்லாம்..

எனக்குள் நானே அந்நியப்பட்டு அழும் பொழுதெல்லாம்.. அவர்தான்... அவர்மடி தான்.. எனக்கான விடையாக தெரிகிறது..

அவர் மட்டும்தான் என்னை அள்ளி அனைத்து தேற்றுகிற மனிதனாக தெரிகிறார்..

அவரிடம் கேட்காமல் செய்த அனைத்தும் ஏதேனுமொரு விதத்தில் தவறுதலாக முடிந்ததுண்டு... இன்று வாசலைக் கடந்து காலடி வைத்தாலும் அவரின் ஆசியுடன் ஆரம்பி என்றே அனைத்தும் சொல்கிறது..

அவரால் அழைக்கப்பட்டாலும் அல்லது நானே அவரிடம் சென்று அவரை அழைத்தாலும், ஏதோ ஒரு பயங்கலந்த அன்பினால்.. மரியாதை மிகுந்த அன்பினால்.. எங்களுக்குள் நடந்த எல்லா உரையாடல்களும் 'பா' - விலே தொடங்கி.. 'பா' - விலேயே தான் முடிந்திருக்கிறது...

இன்று அவர் எதிரிலேயும் இல்லை... இங்கே.... எங்கேயும் இல்லை.. ஆனால்... எனக்குள்ளவே இருந்தாலும்... ஒருமுறையேனும் அவரை முழுமையாக உச்சரித்து அழைத்துவிட இருக்கிறேன்...

ஆசையாய்....
.
.
. 'அப்பா'.......................

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.