சூரியனை இருள் கவ்விக்கொண்டிருந்த அழகிய மாலை பொழுது… நெஞ்சத்தில் ஏனோ படபடப்பு... நேசித்து சேர்ந்த வேலையை விட்டு போகின்றோமோ என்கிற கவலை... அதனை மூடிமறைக்க உதட்டில் சின்னப் புன்னகை எனப் பத்திரிகை கேமராக்களில் வெளிச்சத்தில் பேரவல் டே பார்ட்டியை முடித்துவிட்டு, அமைதியை நாடி சென்னை ECR கடற்கரைக்கு காரை விட்டேன்.

யாருமில்லாத கும்மிருட்டில் விட்டு விட்டு எறியும் மின்கம்பத்தில் கீழே போடப்பட்டிருந்த சிமெண்ட் நாற்காலியில் அமர்ந்து கண்ணை மூடி நான் VRS வாங்குவதற்கு காரணமான வழக்கை பற்றி யோசிக்கத் தொடங்கினேன். என்னுடைய பெயர் வெற்றி. அசிஸ்டன்ட் கமிஷனர் ஆப் போலீஸ்.வயசு 30. இன்னும் 30 வருஷம் சேவை இருக்கு. ஆனா நான் VRS வாங்க காரணமாயிருந்தது பிருந்தாவன் காலனி கொலை வழக்கு…

“மே 17 2017... திருவான்மியூர் பிருந்தாவன் காலனி... அதிகாலை 5.30 மணி... G2 பிளாக்... என்னுடைய பர்சனல் மொபைல் நம்பருக்கு ஒரு அழைப்பு வந்தது. எதிர்முனையில்... பதட்டத்துடன்…

“சார்… சார்... ரத்தம்... ரத்தம்...”

“என்ன ரத்தமா? மொத பதட்டப்படாதீங்க. நீங்க யாரு? எங்க இருந்து பேசுறீங்க?”

“சார்... நான் ஷீலா... திருவான்மியூர் பிருந்தாவன் காலனில இருந்து பேசுறேன்”

“சரி ஓகே… என்ன ரத்தம்?”

“இங்க எல்ல பைப்புளையும் ரத்தமா வருது சார்”

“ஓகே... இன்னும் பத்து நிமிசத்துல நான் அங்க இருப்பேன். யாரும் பைப்ப ஓபன் பண்ணாதீங்க” எனச் சொல்லி காரை வேகமாக பிருந்தாவன் காலனிக்கு விட்டேன். அனைவரும் பதட்டத்துடன் அபார்ட்மெண்ட் வாசலில் நின்றுக்கொண்டிருந்தனர்.

அவர்களை நோக்கி மெல்ல அடியெடுத்து வைத்து... “இங்க ஷீலா யாரு?” எனக் கேட்க நடுங்கிய உடம்புடன் முன்னோக்கி வந்தாள் ஷீலா…

“எங்க பாத்தீங்க? எப்போ பாத்தீங்க?”

“காலைல முகம் கழுவுலாம்னு பைப்ப ஓபன் பண்ணுனேன். ஒரே ரத்தமா வந்துச்சு. பின்னாடி தான் தெரிஞ்சுது எல்லாருடைய வீட்டு பைப்புளையும் ரத்தம் தான் வருதுன்னு. அதான் போன் பண்ணுனேன்.”

“சரி ஓகே. எங்க அந்த பைப்பக் காட்டுங்க” எனக் கேட்க அங்கிருந்த அனைத்து விரல்களும் நடுங்கிய படியே மூலையிலிருந்த ஒரு பைப்பைக் காட்டியது. ஓபன் செய்தால்... ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது.

அது உண்மையில் ரத்தம் தானா?? என முகர்ந்து பார்த்து ரத்தம் தான் என உறுதிப்படுத்திக்கொண்டு, மேல மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியைத் திறந்தேன். அங்கு ஒரு தடயமும் இல்லை. எல்லாம் சரியாகவே இருந்தது. குழப்பத்தில் மொட்டை மாடி சுவற்றில் கைவைத்து சாய்ந்தவாறு சுற்றும் முற்றும் பார்த்தேன். எதுவுமே புலப்படவில்லை. சரி என்று எதேச்சையாக திரும்பும் போது அப்பார்ட்மெண்ட்க்கு வெளியே 50 அடியில் நின்றிருந்த தண்ணீர் தொட்டி கண்ணுக்கு புலப்பட்டது.

உடனே, “அங்க என்ன வாட்டர் டேங்க்?” எனக் கேட்க... அப்பார்ட்மெண்ட் ஓனர் முத்துகிருஷ்ணன் ஒரு அடி முன்னாடி வந்து,

“சார்... அது எமெர்ஜென்சிக்கு கட்டுனது. இங்க ஏதாச்சும் பிரச்சனைனா அங்க இருந்து தண்ணிய எடுத்துக்குவோம். இப்போ தண்ணி இருக்குறதால அந்த டேங்க்ல இருந்து வர கனக்சன் ஆப் பண்ணி வச்சுருப்போம். தேவைன்னா திறந்துக்குவோம். கடந்த ஒரு மாசமா அந்த டேங்க்க யூஸ் பண்ணவே இல்ல. அப்பப்ப வாட்ச்மேன் வடிவேலு தான் டேங்க்க கிளீன் பண்ணி வைப்பான்”

“ஒ… ஓகே”

“அந்த டேங்க்குக்கும் அபார்ட்மெண்ட்க்கும் கனக்சன் இருக்குற இடத்தை காட்டுங்க” எனக் கேட்க என்னை அந்த இடத்திற்கு கூட்டிச் சென்றார்கள்.

அங்கே பைப் கனக்சன் ஓபன் ஆகியிருந்தது.

அதைப் பார்த்து... “என்ன யூஸ் பண்ணுறதில்லைனு சொன்னீங்க. ஆனா ஓபன் ஆயிருக்கு?”

“அதான் சார் எனக்கும் தெரியல”

“சரி வாட்ச்மேனை கூப்பிடுங்க” எனச் சொல்லி அந்த வாட்டர் டேங்க் மேலயேறி மூடியை திறந்தால் குப்பென்று துற்நாற்றம் வந்தது. உடனே என்னோட டீமுக்கு போன் பண்ணி வரவழைத்தேன்.

அவர்கள் மேலேறி வாட்டர் டேங்கில் செக் பண்ணிக்கொண்டிருக்கும் போது... “எங்க வாட்ச்மேன்?”

“சார்… நான் தான் வாட்ச்மேன் சுப்பிரமணி” என ஒரு உருவம் முன் வந்தது.

“வாட்ச்மேன் வடிவேலுன்னு சொன்னீங்க? இவரு சுப்பிரமணின்னு சொல்லுறாரு”

“சார்… வடிவேலுக்கு எதோ பர்சனல் எமெர்ஜென்சி. அதான் நான் வந்தேன்”

“ஒ… ஓகே” எனச் சொல்லிக்கொண்டிருக்கும் போது…

“சார்… இங்க ஒரு டெட்பாடி இருக்கு” என ஒரு குரல் மேலிருந்து கேட்டது.

“தண்ணிக்குல்லையா இருக்கு?

“ஆமா சார்…”

“அப்படியே கீழ இருக்குங்க” எனச் சொல்லி, “குழந்தைங்க... பொண்ணுங்க... எல்லாரும் வீட்டுக்கு போங்க. தேவைன்னா நான் கூப்பிடுறேன்” எனச் சொல்லி அனுப்பி வைத்தேன். பின்னர் டெட்பாடியை இறக்க சொல்லி அதனைப் பார்த்தேன். ஒரு 45 வயது மதிக்கத்தக்க உருவம் அது. கழுத்து, கை மணிக்கட்டு, கால் என ரத்த நாளங்கள் சந்திக்குமிடங்களில் வெட்டப்பட்டிருந்தது. ரத்தம் வெளிய போய் உருவம் பார்ப்பதற்க்கே ஒரு மாதிரியாக இருந்தது. முதுகிலே எதோ புள்ளிகள் வைக்கப்பட்டிருந்தது. வாய் ஏதோ பிளாஸ்டிக் பேப்பரை கவ்விக்கொண்டிருந்தது. அது என்ன என எடுத்துக் பார்த்தால்... சுற்றப்பட்ட பிளாஸ்டிக் கவரினுள்ளே பாதுகாப்பாய்... ஒரு வெள்ளைத்தாளில்

“பாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க” என எழுதப்பட்டிருந்தது. ஏதும் புரியாமல் அருகில் இருந்த கல்லின் மீது அமர முற்படுகையில் ரத்தம் தோய்ந்த கத்தி ஒன்று இருந்தது. அதனை கைரேகை படாவண்ணம் எடுத்து ஆய்வுக்கு அனுப்பினேன். முதல இவர் யாரென்று கண்டுபிடிக்க வேண்டுமென்று எண்ணி அங்கிருந்தவர்களிடம் விசாரித்தேன்.

விசாரணையில் அது G2 பிளாக் அர்ஜுன் ராமகிருஷ்ணன் எனத் தெரிய வந்தது. அதுவும் எனக்கு கம்பிளைன்ட் பண்ணுன ஷீலா வீட்டிற்கு எதிர் வீடு. 10 நாலா வீட்டுக்கு வரவில்லைனு வேற ஒரு தகவல் கிடைச்சது.

இப்போ என்னுள் பல கேள்விகள்...

இது கொலையா? இல்ல தற்கொலையா?

வாயிலிருந்த காகிதம் கொலையாளி விட்டு சென்ற தடயமா? இல்லை யாரிடமிருந்தோ அதைக் காப்பாற்ற நினைத்தாரா?

வாட்ச்மேன் வடிவேல் எங்க? இந்தக் கொலைக்கும் ஷீலாவுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ? இப்படி கேள்விகள் என்னைத் துளைத்தெடுக்க, ஏதாவது ஒரு கேள்விக்காவது பதிலைத் தேடுவோமென ஷீலாவின் வீட்டிற்குச் சென்று காலிங் பெல்லை அழுத்தினேன். யாரும் கதவை திறக்கவில்லை. அப்போது தான் தெரிந்தது வீட்டில் யாருமில்லை என்று..

அப்போது இன்னும் சந்தேகம் வலுவானது. ஷீலாவுக்கும் இந்த கொலைக்கும் கண்டிப்பா ஏதோ சம்பந்தமிருக்கு என எண்ணிக் கொண்டு இந்த அபார்ட்மெண்டில் CCTV கேமரா இருக்கானு பார்த்தேன். எங்குமில்லை. சரி கிடைத்த ஆதாரங்களை எடுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றேன். வீட்டிற்குள் நுழையும் போது…உடனே சம்பவ இடத்திலிருந்த இன்ஸ்பெக்டர் அருளிடம் வாட்ச்மேன் வடிவேல், ஷீலா போட்டோ வாங்கிட்டு, அவங்கள பத்தி விசாரிச்சு ரிப்போர்ட் எடுத்துட்டு வாங்க என்று சொல்லி காலைக் கட் செய்தேன்.

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு...

என்னை தயார்படுத்திக் கொண்டு ஆபீஸ்க்கு விரைந்தேன். செல்லும் வழியில் பிரேதத்தை ஆய்வு செய்யும் டாக்டரிடமிருந்து போன் வந்தது.

“குட் மோர்னிங் டாக்டர்”

“குட் மோர்னிங் வெற்றி”

“டாக்டர்... எனி க்குலு”

“இல்ல வெற்றி. எங்களுடைய ஆய்வுப்படி இது தற்கொலைக்கு தான் அதிக வாய்ப்பு இருக்கு”

“ஒ.. அப்படியா? ஆனா டாக்டர் தற்கொலை செய்ய நினைக்கிறவன் ஏன் இப்படி கொடூரமான வழிய தேர்வு செஞ்சாரு? முதுகுல இருந்த அடையாளம்.. வாயில இருந்த காகிதம்.. இது எத குறிக்குது?”

சிரித்தபடியே…“மிஸ்டர் வெற்றி. அத நீங்க தான் கண்டுபிடிக்கணும். நான் ஈவினிங் ரிப்போர்ட் அனுப்பி வைக்கிறேன்”

“ஓகே ஓகே டாக்டர். தேங்க் யு”

மீண்டும் என்னுடைய தலை உருள ஆரம்பித்தது.

இதனையே யோசித்துக்கொண்டு... சம்பவ இடத்தில் எடுத்த போட்டோவைப் பார்த்துக்கொண்டே லிப்ட்டில் ஏறினேன். ஒவ்வொரு போட்டோவாய் புரட்டிக் கொண்டே லிப்ட்டில் நாலாவது மாடிக்கான பட்டனை பிரஸ் செய்யும் போது லிப்ட் பட்டனில் ஏதோ புள்ளிகள். ஒவ்வொரு பட்டனிலும் ஒவ்வொரு விதமான புள்ளிகள். அந்த சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட போட்டோவிலிருந்த புள்ளிகள் நாலாவது தளத்திற்கு செல்வதற்கான பட்டனின் புள்ளிகளுடன் ஒத்துப்போனது.

ஏதோ கண்டுபிடித்தது போல உள்மனசு சமிக்கை கொடுத்தது. அதே உற்சாகத்தோடு கூகிளில் அது என்ன புள்ளிகளென்று தேடினேன். அது பார்வையற்றவர்களுக்கான பிரெய்லி வார்த்தைகள். பின்னர் என்னிடமிருந்து வார்த்தை என்ன? என தேடிக் கண்டுபிடித்தேன்… அது நம்பர் நாலு...

அப்போது முடிவுக்கு வந்தேன் இது தற்கொலை அல்ல… கொலை.. அதுவும் சீரியல் கொலை... இது நான்காவதாக அரங்கேறியிருக்கு. இதற்கு முன்பே மூன்று பேர் இதே மாதிரி கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை கண்டுபிடிக்க வேண்டும்.

அப்போ தான் இது ஏதோ காரணத்துக்காக நடத்தப்பட்டதா? இல்ல சைக்கோ கொலைகாரனால் நடத்தப்பட்டதா?

இந்தக் கேள்விகளுக்கு விடைகாண தமிழ்நாடு முழுவதும் இதே மாதிரி நடந்த கொலைகளை பற்றிய வழக்கு விபரங்களைக் கேட்டு இன்டெலிஜென்ஸ் டீமுக்கு போன் செய்தேன். அவர்களும் மாலை தருவதாக சொன்னார்கள்.

பின்னர் எனக்கு எழுந்த கேள்விகளை ஒரு போர்டில் எழுதி அருகில் பதிலை எழுதினேன். ஆனால் எனக்கு இரண்டு கேள்விகளுக்குப் பதில் தெரியவில்லை.

ஒன்னு ஷீலா, வாட்ச்மேன் வடிவேல் எங்க?

ரெண்டு வாயில இருந்த காகிதம் எதைக் குறிக்குது? இதற்கான பதிலை கண்ணை மூடி யோசித்துக்கொண்டிருக்கும் போது என்னுடைய மொபைல் போன் ரிங்க்டோன் ஒலித்தது. யாரென்று பார்த்தால் அது ஷீலா...

“ஹலோ..”

“சார் நான் ஷீலா பேசுறேன். நேத்து ரத்ததை பார்த்து என்னோட குழந்தை மயக்கம் போட்டுடா. அதான் ஹாஸ்பிடல் வரைக்கும் வந்தோம். இன்பார்ம் பண்ண முடியல… சாரி சார்”

“ஓகே... இட்ஸ் ஓகே.. இப்போ குழந்தை எப்படி இருக்கு?”

“ஹ்ம்ம்... இப்போ ஓகே சார்”

“ஆமா எந்த ஹாஸ்பிடல்?”

“அப்போலோ ஹாஸ்பிடல் சார்”

“ஓகே ஓகே”

“சரி நீங்க வீட்டுக்கு வந்த பிறகு போன் பண்ணுங்க” எனச் சொல்லி காலைக் கட் செய்தேன்.

பின்னர் ஷீலா உண்மையாலும் ஹாஸ்பிட்டல தான் இருக்காங்களானு கன்பார்ம் பண்ணிக்க ஒரு கான்ஸ்டபிள்ல விட்டு ஹாஸ்பிட்டல எப்போ குழந்தையை அட்மின் பண்ணுனாங்க? குழந்தைக்கு என்ன ப்ரோப்லம்? ஷீலா கூட யார் யாரெல்லாம் இருக்காங்க? என்பதை விசாரிக்க சொன்னேன்

.இரண்டு அரை மணிநேரம் கழிச்சு கான்ஸடபிள் போன் செய்தார்.

“சொல்லுங்க கதிர்”

“சார். ஹாஸ்பிட்டல வந்து விசாரிச்சேன். விடியக்காலைல வந்து அட்மிட் ஆயிருக்காங்க. குழந்தை எதையோ பாத்து பயந்துருச்சாமாம். அவங்க கூட அவங்களோட ஹஸ்பண்ட் சுப்பிரமணியம், அவங்க சிஸ்டர் பவித்ராவும் இருக்காங்க”

“சரி... ஓகே... எதுக்கும் நீங்க அவங்கள கண்காணிச்சுட்டே இருங்க. ஏதாச்சும்னா எனக்கு கால் பண்ணுங்க”

“ஓகே சார்…”

“ஓகே” எனச் சொல்லி காலைக் கட் செய்தேன்.

சோ “ஷீலா எங்க?” என்றக் கேள்விக்கு பதில் கிடைச்சுருச்சு. ஆனா வாட்ச்மேன் வடிவேலு எங்க? என எண்ணிக் கொண்டிருக்கும் போது...

இன்ஸ்பெக்டர் அருள் உள்ளே வந்து…

“குட் மோர்னிங் சார்...”

“குட் மோர்னிங்”

“சார்... நீங்க கேட்ட ரிப்போர்ட். இதுல ரெண்டு பேரோட எல்லா டீடைல்ஸ் இருக்கு” எனச் சொல்லி நீட்ட, அதை வாங்கி பார்த்துக் கொண்டிருக்கையில்...

“சார்... ரெண்டு பேர பத்தியும் தரவா விசாரிச்சுட்டேன். ரெண்டு பேரு மேல சந்தேக படுறதுக்கு எந்தவொரு பெரிய காரணமும் இல்லை.”

“ஒ... ஓகே... ஷீலாவை விடுங்க. வாட்ச்மேன் வடிவேலு பத்தி சொல்லுங்க”

“வாட்ச்மேன் வடிவேலு அங்க பதினைந்து வருசமா வேலை செய்யுறான் சார். வீடு இந்திராநகரில். இதனால் வரைக்கும் அவன் மேல அஸோஸியேஷன்ல எந்த கம்பிளைன்ட் இல்ல. காலேஜ் ட்ராப் அவுட் என்பதால வாட்ச்மேன் வேலையோட சேர்த்து அப்பார்ட்மெண்ட் மெயிண்டெனன்ஸ் கணக்கு வழக்க அவன் தான் பாத்துக்குறான். அப்பறோம் முக்கியமா கொலை செய்யப்பட்ட அர்ஜூனுக்கும் இவனுக்கும் எந்த சம்பந்தமே இல்ல சார்... அபார்ட்மெண்ட்ல குடியிருக்கிறவங்க கிட்ட விசாரிச்சு பாத்ததுல யார்க்கிட்ட இருந்தும் எந்தவொரு கம்பிளைன்ட்டும் சொல்லல. எல்லாரும் நல்ல விதமா தான் சொன்னாங்க. அவ்வளோ தான்”

“ஒ… ஓகே... அப்பனா அவன் மேல எந்த சந்தேகமுமில்ல”

“ஆமா சார்…”

“சரி… இந்த அர்ஜுன் எப்படி?”

“தங்கமான மனுஷன் சார். எப்போ வராரு எப்போ போறாருனு தெரியாதாம்? அப்படியொரு சைலன்ட் பார்ட்டி. ஏதோ ஒரு கேஸ் இருந்துருக்கு. ஆனா அதுல அவர் மேல எந்த குற்றமுமில்லைன்னு சொல்லி விடுதலை பண்ணிட்டாங்க. அதுவும் ரொம்ப வருசத்துக்கு முன்னாடி”

“ஒ... ஓகே... அந்த கேஸ் ஹிஸ்டரிய கலெக்ட் பண்ணிட்டு வாங்க”

“ஓகே சார்… நான் வரேன்”

“ஹ்ம்ம்...” எனச் சொல்லி அவரை அனுப்பிவிட்டு,”அப்போ வாட்ச்மேன் வடிவேலு மேலயும் தப்பு இல்ல. ஒரு வேலை இது தற்கொலையா இருக்குமோ? ஆனா உள்மனசு இது கொலைன்னு தான சொல்லுது?” என யோசித்துக்கொண்டிருக்கும் போது…

இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மெண்ட்ல இருந்து போன் வந்தது.அதனை ஏற்று...

“சொல்லுங்க மணிமாறன்”

“சார்... நீங்க சொன்ன மாதிரி... பத்து நாள் முன்னாடி காணாம போறது, தண்ணி தொட்டில பிணம், முதுகுல அடையாளம், வாயில காகிதம், நாளங்கள் சந்திக்குமிடத்துல வெட்டு என... இதனால் வரைக்கும் மூணு கொலை நடந்துருக்கு. அதோட டீடெயில்ஸ் உங்க மெயிலுக்கு அனுப்பிருக்கேன்.”

“ஒ... ஈஸ் இட்? ஓகே… தேங்க்ஸ் மணிமாறன்” எனச் சொல்லி காலை கட் செய்துவிட்டு... மெயிலிருந்த டீட்டைல்ஸை படிக்க ஆரம்பித்தேன். படித்து முடித்துவிட்டு அனைத்து டீட்டைல்ஸையும் போர்டில் எழுதினேன்.

நம்பர் ஒன்னு தாமோதிரன்...

நம்பர் டூ பாலசுப்ரமணியம்...

நம்பர் த்ரீ கார்த்திக்...

இப்போ நம்பர் ஃபோர் அர்ஜுன்...

சரி இவங்க கிட்ட இருந்து எடுக்கப்பட்ட காகிதத்துல இருந்த வாசகத்தை வரிசைப்படி ஏழுத ஆரம்பித்தேன்.

அது...

மூவாறு கல் பகலவன் வழியில் முன்னோக்கி சென்றடைந்தால்

காதல் கொள்ளும் கர்ப்பில் சிறந்த வஞ்சியினை கெட்ட

சிலம்படியும் கொஞ்சும் சிலம்பொலியும் வீச மீன்கொடியோன் தேசத்திலிருந்து

பாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க”


இப்போ என்னோட மனசுல ரெண்டு கேள்வி…

ஒன்னு இந்த பாட்டுக்கு என்ன அர்த்தம்?

இந்த நாலு பேருக்கும் என்ன சம்பந்தம்?

என்னோட போலீஸ் மூளை”இந்த நாலு பேருக்குமிடையான சம்பந்தத்த கண்டுபிடிச்சா போதும் எல்லாமே கண்டுபிடுச்சுரலாம்னு சொன்னது”

அதன்படியே எல்லா டீட்டைல்ஸையும் கலெக்ட் பண்ணி அனாலிசிஸ் பண்ணி பார்த்தா அதில் பெரிய ஏமாற்றம்.

பொறந்த ஊரு… தொழில்… எல்லாமே வேற வேற.

சோ கேஸ் இத்தோடையே முடுஞ்சுருச்சே என்றெண்ணி விரக்தியில் மயிலாப்பூர் காபி ஷாப்புக்கு சென்று காபி அருந்திக்கொண்டே அங்குமிங்கும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது...

எதிரே கல்லூரி மாணவர்கள் இருவர் உரையாடிக்கொண்டிருக்க மூணாவதாய் ஒருவன் வந்தான். மூணாவத்தை வந்தவனைப் பார்த்து ஒருவன் கை அசைத்து”மச்சி... இங்க வா?”

அதை பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவன்”டாய்... யாருடா அது?”

“பிரெண்டு...”

“என்ன பிரெண்டா? எனக்கு தெரியாமயா?”

“டாய் முகநூல் பிரெண்டு டா” எனச் சொல்வதைக் கேட்கும் போது எனக்கு பொறி தட்டியது.

உடனே… சைபர் கிரைம் டிபார்ட்மெண்ட்க்கு போய் அவர்களுடைய முகநூல் ஐடியை சர்ச் பண்ணி பார்க்க சொன்னேன். ஆனால் அவர்கள் முகநூல் பிரென்ட்ஸ் இல்ல.


விரக்த்தியில் கண்ணை மூடி அமர்ந்திருக்க சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் என்னிடம் வந்து”சார்… அவங்க முகநூல்ல பிரென்ட்ஸ் இல்ல. ஆனா ஒரு விஷயம் மட்டும் அவங்களுக்குள்ள பொதுவா இருக்கு”

“என்ன?”

“தமிழ் பொக்கிஷம்”

“என்ன தமிழ் பொக்கிஷம்?”

“அப்படினு ஒரு குரூப் சார்... அந்த குரூப்ல மொத்தம் அஞ்சு பேர் மெம்பெர்ஸ்”

“ஒ அப்படியா? யார் அந்த அஞ்சாவது நபர்”

“போட்டோ இல்லை... ஆனா ப்ரொபைல் பேரு பொன்னியின் செல்வன்”

“பொன்னியின் செல்வன்…”

“சரி... அந்த குரூப்ல என்ன அதிகமா டிஸ்கஸ் பண்ணிருக்காங்க?”

“அதிகமா ஒண்ணுமில்ல சார்... ஒரு 10 போஸ்ட் மட்டும் தான் இருக்கு... அதுவும் தமிழ்நாடு கோயில் போட்டோஸ் மட்டும் தான்”

“ஒ ஓகே... தேங்க்ஸ்” எனச் சொல்லி விட்டு, அடுத்து நான் சென்ற இடம் சென்னை தமிழ் பல்கலைக்கழகம்.

அங்கே சென்று”துணைவேந்தரை பார்க்கணும்”எனக் கேட்க

“அவர் இங்க இல்ல. ஒரு கான்பிரென்ஸ் விஷயமா சிங்கப்பூர் போயிருக்காரு. வர்ரதுக்கு 10 மாசம் ஆகும்”

“ஒ... ஓகே... சரி... எனக்கு ஒரு பாட்டுக்கு அர்த்தம் வேணும். நீங்க சொல்ல முடியுமா?”“இல்ல... அதுக்கு நீங்க சாரோட உதவியாளர் யாழினிய தான் நீங்க பார்க்கணும்”

“யாழினியா? எங்க இருப்பாங்க?”

“இதோ அவங்களே வராங்களே” எனச் சொல்ல, அதைக் கேட்டு…

நானோ அவளைப் பார்த்து”மிஸ். யாழினி”

“ஆமா... நீங்க?”

“நான் அசிஸ்டன்ட் கமிஷனர் வெற்றி”

“ஓகே...”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும்”

“ஹ்ம்ம்... சொல்லுங்க”

“இந்த பாட்டுக்கு அர்த்தம் என்னனு எனக்கு தெரிய வேண்டும்” எனச் சொல்லி பாட்டு எழுதி வைத்திருந்த காகிதத்தை நீட்டினேன்.

அவளும் லேசாக முணுமுணுத்தவாறு ஐந்து நிமிடம் படித்து விட்டு...

“மதுரையில பாண்டவர்கள் பாஞ்சாலி சம்பந்தமான சிலையோ இல்ல ஏதோ அடையாளமோ கிடைக்கும். இது தான் இதோட அர்த்தம்”

“எப்படி சொல்றீங்க?”

“பாட்டு தெளிவா இல்ல சார்… மீன்கொடியோன் தேசம் அது வந்து பாண்டியநாடு… மதுரை. அப்புறம் பாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க… இது வந்து மஹாபாரதம் பாஞ்சாலி வஞ்சிக்க படுத்தப்பட்டதைக் குறிக்கிறது சார். மத்த லைன்ஸ் சும்மா வார்த்தை நயத்துக்காக போடப்பட்டது”

“ஹோ... ஓகே”

“இடமெல்லாம் ஓகே. எப்படி இது சிலைனு சொல்றீங்க”

“அது சிலையானு எனக்கு உறுதியா தெரியல. ஆனா பாண்டவர்கள் சம்பந்தமான ஒரு அடையாளம் அது. பொதுவா இது சிலைகளுக்கான குறிப்பா தான் இருக்கும்”

“உங்க நம்பர் தாங்க. ஏதாவது சந்தேகமிருந்தா கால் பண்ணுறேன்”

“சரி. நோட் பண்ணிக்கோங்க” எனச் சொல்லி நம்பரைக் கொடுக்க, அதனை நோட் செய்துவிட்டு

“ஒ… ஓகே... வெரி தேங்க்ஸ்... மிஸ்... யாழினி” எனச் சொல்லி அங்கிருந்து சென்றேன்.

பின்னர் தமிழ்நாடு இந்து அறநிலைத்துறைக்கு சென்று அப்படியொரு சிலை இருக்கிறதா? என்று உறுதிப்படுத்திக்கொண்டு அந்த சிலையோட சிறப்பு என்னவென்று கேட்டேன். அவர்கள் சொல்லியது எனக்கு மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தியது. அது...”அந்த சிலை முதலாம் நூற்றாண்டை சேர்ந்த மரகத சிலை. பல மருத்துவ குணாதிசியங்கள் நிறைந்தது. மதுரையில இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கு”

அப்படினா இந்த கொலையெல்லாம் சிலைக்காக நடந்தது. ஆனா இந்த கொலையெல்லாம் செஞ்சது அந்த அஞ்சாவது நபர் பொன்னியின் செல்வனா? இல்ல இவங்கள தவிர்த்து ஆறாவது யாராவது இருக்காங்களா?

வெறும் முகநூல் குரூப்ல எந்தவொரு கம்யூனிகேஷன் பண்ணாம போன்லையும் பேசாம எப்படி இவங்க சிலைக்கு கடத்தல் வேலை செய்யமுடியும். சோ இந்த முகநூல் குரூப்பையும் தாண்டி ஏதோ ஒரு விஷயம் இவங்கள லிங்க் பண்ணுது.

அது என்ன விஷயம்னு கண்டுபிடிக்க கொலையானவங்களோட ஊருக்கு போனால் தெரியுமென எண்ணி தாமோதிரன் சொந்த ஊரான கமுதிக்கும், பாலசுப்பிரமணி ஊரான முப்பந்தல், கார்த்திக் ஊரான பாபநாசம்னு எல்லா ஊருக்கும் போனேன். அவங்கள பத்தின எல்லா இன்பர்மேஷன் கலெக்ட் பண்ணும் போதும், எல்லாருக்கும் 18 வருசத்துக்கு முன்னாடி ஏதோ கேஸ் இருந்துருக்கு. ஆனா ஒரே கேஸ்சானு தெரியல. அதனால இன்ஸ்பெக்டர் தரணியை அனுப்பி எல்லா கேஸ் டீ டீடைல்ஸையும் வாங்கி வர அனுப்பினேன்.

இதையும் தாண்டி அவங்ககிட்ட இருந்த பொதுவான விஷயம். அடிக்கடி சிலைக்கடத்தல் விசயத்துல மாட்டுன தமிழ் கிராப்ட் எக்ஸ்போர்ட் கம்பெனி. இப்போ அந்த கம்பெனி மூடியிருக்கு. ஆனா அந்த கம்பெனியில கொலையான நாலு பேருமே சைலண்ட் பார்ட்னர்ஸ்.

ஏன் அந்த ஐஞ்சாவது ஆளு இவங்களுக்கு கீழ வேலை செய்யக்கூடாது? இவங்களுக்குள்ள இருக்குற கொடுக்கல் வாங்கல் விசயத்துல ஏற்பட்ட தகராறில் அவன் ஏன் இவங்கள கொலை செஞ்சுருக்க கூடாது?

சோ இந்த கொலைய செஞ்சது அஞ்சாவது நபர் பொன்னியின் செல்வன் என்ற தீர்மானத்திற்கு வந்தேன்.

இப்போ என் முன்னாடி இருக்குற ஒரே கேள்வி, “யார் அந்த பொன்னியின் செல்வன்?” என நினைத்துக் கொண்டிருக்கும் போது…

எதாச்சையாக போர்டில் பெயர் இறங்கு வரிசையில் எழுதி வைத்திருந்த கொலையானவர்களின் டீடைல்ஸை பார்த்தேன்.

இறங்கு வரிசைப்படி பார்த்தால்…

அந்தப் பாடல் வரிகள்…


“சிலம்படியும் கொஞ்சும் சிலம்பொலியும் வீச மீன்கொடியோன் தேசத்திலிருந்து

மூவாறு கல் பகலவன் வழியில் முன்னோக்கி சென்றடைந்தால்

காதல் கொள்ளும் கர்ப்பில் சிறந்த வஞ்சியினை கெட்ட

பாண்டவருள் நால்வர் சதி செய்ய... ஒருவன் துரோகம் செய்து சாட்சியாய் வீற்றிருக்க”

இப்போ பாடல் வரிகள் புரியும்படி இருந்தது. ஆனா ஒரே ஒரு சந்தேகம். மஹாபாரதத்தில் தர்மன் செஞ்ச சதியால… மற்ற நால்வர் சாட்சியாய் நின்றிக்க… வஞ்சிக்கப்பட்டால் பாஞ்சாலி தான உண்மை. ஆனா இங்க என்ன மாத்தி இருக்கு. சரி யாழினி கிட்ட கேட்கலாம்னு போன் செய்தேன்.

“ஹலோ யாழினி...”

“நான் ஏசிபி வெற்றி”

“ஹ்ம்ம்… சொல்லுங்க”

“எனக்கு ஒரு பாட்டுக்கு அர்த்தம் சொல்ல முடியுமா?”

“சாரி சார். இம்பார்ட்டண்ட் விஷயமாக நான் வெளிய வந்துருக்கேன். ஒரு வாரத்துல வந்துருவேன். உங்களுக்கு அர்ஜெண்ட்னா நீங்க யூனிவெர்சிட்டில யார்க்கிட்டையாவது கேட்டுக்கோங்க”

“ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க வந்தவுடன் கால் பண்ணுங்க.”

எனச் சொல்லி காலைக் கட் செய்தவாறே தினத்தந்தி பேப்பரைப் புரட்டும் போது ஒரு கார்ட்டூன் கண்ணில் பட்டது. அதன் கார்ட்டூன்…

“தாத்தா கிலோமீட்டர் எழுதிருக்க கல்லு கிலோ மீட்டர் கல்லுன்னு தான சொல்லணும். ஏன் மைல் கல்லுன்னு சொல்றாங்க?” எனக் கேள்வி எழுப்பியிருந்தது.

உடனே எனக்கு எதிரிலிருந்த மதுரை மேப்பில் மதுரையிலிருந்து கிழக்கு திசையில் 18 மைல் அதாவது 28 கிலோமீட்டர் தள்ளி என்ன ஊர் இருக்குனு? நேராக ஒரு கொடு வரையும் போது இன்ஸ்பெக்டர் தரணி உள்ளே வந்து…

“சார் நீங்க சொன்னது கரெக்ட் தான். அவங்களுக்குள்ள ஒரு லிங்க் இருக்கு”

வரைவதை நிறுத்தாமல், “என்ன லிங்க்?”

“அவங்க நாலு பேரும் ஒரு ரேப் கேஸ்ல மாட்டி அப்புறம் அவங்க மேல தப்பு இல்லைனு கோர்ட் விடுதலை பண்ணிருச்சு”

மேப்பிலே கவனம் செலுத்தியவாறு,”என்ன கேஸ்?”

“சோழவந்தான் காயத்ரி கேஸ்”

“என்ன ஊரு சொன்னீங்க?”

“சோழவந்தான்…”என தரணி சொல்லும் போது நான் வரைந்த கோடும் சோழவந்தானில் வந்து நின்றது.

அதைப் பார்த்து தரணியோ, “என்ன சார்.. கரெக்ட்டா நீங்களும் அதே ஊர மார்க் பண்ணுருக்கீங்க?”

“அது இருக்கட்டும் மேல சொல்லுங்க”

“இதுல இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னென்னா? அந்த கேஸ்ல இருந்து இவங்க தப்பிக்க காரணம் ஒரே ஒரு சாட்சி தான்”

“ஈஸ் இட்? என்ன சாட்சி”

“அந்தப் பொண்ணு நடத்துன அநாதை இல்லத்துல கணக்கு வழக்கு பாத்துக்கிட்டு இருந்த ராஜா ராஜன்”

“ராஜா ராஜனா?”

“ஆமா சார்”

“எனக்கு ஒரு சந்தேகம். ராஜாராஜ சோழனை தான பொன்னியின் செல்வனு சொல்லுவாங்க”

“ஹ்ம்ம்…ஆமா சார்”

“சோ நாம தேடிட்டு இருக்குற பொன்னியின் செல்வன் ஏன் இந்த ராஜராஜனா இருக்க கூடாது?”

“இருக்குறதுக்கு வாய்ப்புகள் அதிகம் சார்...”

“சரி நீங்க ஒன்னு பண்ணுங்க. சோழவந்தான் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி காயத்ரியைப் பத்தியும், ராஜராஜன் பத்தியும் விசாரிச்சுட்டு ரிப்போர்ட் எடுத்துட்டு இன்னும் அரைமணிநேரத்துல வந்து பாருங்க”

“சரி… ஓகே சார்…” எனச் சொல்லி கிளம்பினார் இன்ஸ்பெக்டர் தரணி.

அரை மணி நேரம் கழித்து…

“சார். எல்லா டீடைல்ஸையும் கலெக்ட் பண்ணிட்டேன்” என்றார் தரணி.

“ஹ்ம்ம்… சொல்லுங்க”

“அந்த காயத்ரி ரேப் கேஸ்ல கடைசி வரைக்கும் கேஸ் கொலையான அந்த நாலு பேருக்கு எதிரா தான் இருந்துருக்கு. இந்த ராஜாராஜன் சொன்ன சாட்சியால தான் கேஸ் தலைகீழா மாறியிருக்கு”

“அப்படி என்ன சாட்சி சொன்னான்?”

“காயத்ரி நடத்த சரியில்ல. என்கிட்டையே பல முறை தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்காங்கனு சொல்லிருக்கான் அந்த படுபாவி”

“ஒ... அது உண்மையா?”

“இல்ல சார்... விசாரிச்சு பாத்ததுல அவங்க மேல எந்த தப்புமில்லைனு தான் சொல்றாங்க”

“ஒ... ஓகே... காயத்ரிக்கு யாராவது சொந்தம்னு யாராச்சும்?”

“யாருமில்ல சார். அவங்க அநாதை. அதனால தான் 10 அநாதை குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்தாங்க”

“இப்போ அவங்க எங்க?”

“அவங்க தற்கொலைக்குப் பிறகு அவங்க எங்க போனாங்கனு தெரியல சார்”

“ஒ… ஓகே… இது நடந்து எத்தனை வருஷாமிருக்கும்?”

“ஒரு 18ல இருந்து 20 வருசத்துக்குள்ள இருக்கும் சார்”

“ஓகே... எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் பண்ணுங்க”

“ஹ்ம்ம்… சொல்லுங்க சார்”

“காயத்ரி தற்கொலை பண்ணிக்கிட்ட கேஸ் ஹிஸ்டரிய வாங்கிட்டு வாங்க”

“ஓகே சார்” எனச் சொல்லி தரணி கிளம்ப...

மீண்டும் பழைய படி மண்டை குடைய ஆரம்பித்தது.

சிலைக்கடத்தல், பொய் சாட்சி இந்த ரெண்டு விஷயத்துலையும் ராஜாராஜன் பேரு தான் அடி படுது. ஒரு வேலை ராஜா ராஜன் தான் கொலை பண்ணிருப்பானா? இல்ல ராஜா ராஜன் பெயரைச் சொல்லி நம்மள டைவர்ட் பண்ண பாக்குறாங்களா? எது உண்மையா இருக்கும்? எனச் சொல்லியவாறே கதவை நீக்க…

இன்ஸ்பெக்டர் தரணி கதவின் ஓரத்திலே நின்றுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்து...

“என்ன தரணி நீங்க போகல?”

“இதோ சார்... போயிட்டேன்.” எனப் பதறியவாறே சொல்ல

“ஹ்ம்ம்… போங்க. சீக்கிரம் நான் கேட்ட ஃபைலைக் கொண்டு வாங்க” எனச் சொல்ல அவரும் கிளம்பினார். அவரை நான் சந்தேகமாய் பார்த்துக் கொண்டு நிற்கும் போது இன்ஸ்பெக்டர் அருள் வாட்ச்மேன் வடிவேல் பற்றிய டீட்டைல்ஸை கொண்டு வந்தார்.

“சொல்லுங்க அருள்? ஏதாவது குட் நியூஸ்”

“சார்… வாட்ச்மேன் வடிவேலுவோட உண்மையான பெயர் ராஜா ராஜன். பிறந்தது தஞ்சாவூர். அவன் இப்போ குடியிருக்கிறது இந்திராநகர். நம்ம இன்ஸ்பெக்டர் தரணி வீட்டுக்கு எதிர்ல இருக்குற லைன் வீட்ல தான். கடந்த ஒரு வாரமா வீடு பூட்டிருக்கு…”

வாட்ச்மேன் வடிவேலு சொன்ன சாட்சியால் காயத்ரி ரேப் கேஸ்ல இருந்து தப்பிச்சவங்க தான் கொலை செய்யப்பட்ட தாமோதிரன், பாலசுப்பிரமணி, கார்த்திக் மற்றும் அர்ஜுன். அப்படினா அந்த அஞ்சாவது நபர் வடிவேலு என்கிற ராஜா ராஜன். ராஜா ராஜன் என்ற பெயரை தான் பொன்னியின் செல்வனென மாத்தி வச்சுருக்கான். அவனே தான் சிலைக்கடத்தலுக்கும் உதவிருக்கான்.

சோ சிலைக்கடத்தல் இல்ல காயத்ரி கேஸ்... இதுல ஏதோ ஒன்னு தான் இந்த கொலைகளுக்கெல்லாம் காரணம் எனச் சொல்லியவாறு அருளை பார்த்து

“சரி எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறீங்களா?”

“இன்ஸ்பெக்டர் தரணியை கொஞ்சம் ரகசியமா கவனிங்க. அவரோட பேக்ரவுண்ட் என்னனு விசாரிச்சு சொல்லுங்க”

“ஓகே சார்”

“ஹ்ம்ம்... இன்னொன்னு இது நமக்குள்ளையே இருக்கட்டும்”

“கண்டிப்பா சார்.” எனச் சொல்லி கிளம்ப, இன்ஸ்பெக்டர் தரணி உள்ளே வந்தார்.

“சார்…”

“சொல்லுங்க தரணி”

“சார். நீங்க கேட்ட ஃபைல்”

“அங்க வச்சுருங்க” எனச் சொல்ல அவரும் சொன்ன இடத்தில் ஃபைலை வச்சுட்டு அப்படியே நின்னார்.

அதைப் பார்த்து, “ஏன் நிக்குறீங்க?”

“ஒண்ணுமில்ல சார். எனி ஹெல்ப்?”

“இல்ல வேண்டாம். நீங்க போலாம்” எனச் சொல்ல,

“ஓகே சார்…” எனச் சொல்லி கிளம்பினார் தரணி.


எனக்கு சந்தேகம் வலுப்பெற்றது. கொலைகாரன் இன்ஸ்பெக்டர் தரணியா? இல்ல வடிவேலுவா? இப்படியே இரண்டு நாட்கள் சென்றது…

இரண்டு நாட்களுக்கு பிறகு…

இன்ஸ்பெக்டர் அருள் என்னிடம் வந்து, “சார்… இன்ஸ்பெக்டர் தரணி பத்தி சந்தேகப்படுற மாதிரி எந்த க்குலுவும் கிடைக்கல சார். அவரோட ரெக்கார்ட்ஸ் பர்பெக்ட் இருக்கு”

“தேங்க் காட். சோ இதெல்லாம் சிலைக்கடத்தல் தொடர்பாக அவர்களுக்குள் நடந்த கொலைகள். காயத்ரி ரேப் கேஸ்ல கிடைச்ச நட்பு தான் சிலைக்கடத்தல் வரைக்கும் போயிருக்கு. சரி நாம சரியான டிராக்ல போயிட்டு இருக்கோம். பொன்னியின் செல்வன்… இல்ல... வடிவேலு கிடைச்சா எல்லாம் முடிவுக்கு வந்துரும்.”

எனச் சொல்லியவாறு திரும்ப, தரணி கொடுத்த ஃபைல் கண்ணில் பட்டது.

அந்த கேஸ் என்னவென்று தெரிந்துக்கொள்ள ஆர்வம் தொற்றிக்கொண்டது. அதனால கேஸ் டீடெயில்ஸ் முழுசா படிக்க ஆரம்பித்தேன். அது புதிய பரிமாணத்தை எனக்கு விளக்கியது. மீண்டும் நால்வரின் கேஸ் டீடைல்ஸையும் தெளிவாக படித்தேன்.

அப்போது இன்ஸ்பெக்டர் தரணி உள்ளே வர…

“சாரி மிஸ்டர் தரணி…”

“எதுக்கு சார்?”

“நீங்க கதவுக்கிட்ட நின்னத பார்த்து உங்கள சந்தேகப்பட்டுட்டேன்”

“ஒ… இல்ல பரவாயில்ல சார்”

“சரி… நீங்க ஏன் அன்னைக்கு பதட்டப்பட்டீங்க?”

“இல்ல சார்… என்ன சின்ன வயசுல தத்தெடுத்து வளர்த்தவங்க காயத்ரி அக்கானு நான் வளர்ந்த சென்னை ஹோம்ல சொல்லிருக்காங்க. ஒரு வேலை அவங்களா இருக்குமோனு தான்…”

“ஒ… ஓகே ஓகே சரி” எனச் சொல்லி ஃபைலை புரட்டும் போது இன்ஸ்பெக்டர் அருள்…

“என்ன சார் இந்த கேஸ் ரொம்ப தண்ணி காட்டுது… பேசாம டாக்டர் ரிப்போர்ட் படி தற்கொலைனு சொல்லி ஃபைலை குளோஸ் பண்ணிரலாமா?”

“அதுக்கெல்லாம் தேவையிருக்காது”

“என்ன சார் சொல்றீங்க?”

“இன்னும் மூணு நாள் தான். அதுக்கு அப்புறம் கேஸ் முடுஞ்சுரும்”

“என்ன சார் சொல்றீங்க?”

“வெயிட்… அண்ட் சி…மிஸ்டர். அருள்”

மூன்று நாட்களுக்கு பிறகு…

சென்னை இந்திராநகரில்…

இரவு பன்னிரண்டு மணி… கும்மிருட்டு... விட்டு விட்டு ஒளியை வீசும் மின்னல் கீற்றுகள்... பயத்தை ஏற்படுத்தும் இடி முழக்கம்… இந்திராநகரிற்கு வெளியே பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டி. அங்கே கையின் மணிக்கட்டு வெட்டப்பட்டு மெல்ல மெல்ல சொட்டும் ரத்தத்துடனும், சோர்ந்து, அரை மயக்கத்தில் கட்டப்பட்டிருந்தான் வாட்ச்மேன் வடிவேலு. எதிரே அந்த அமாவாசை இருட்டிலும் பளபளக்கும் கூறிய ரத்தம் சொட்டும் கத்தியை ஏந்தி முகத்தைக் காட்டாவண்ணம் திரும்பி நின்றிருந்த ஐந்தரை அடி உருவம். பக்கத்திலே அதே உயரத்தில் இருவர். அவர்கள் மூச்சு வாங்கிய விதம் அவர்களின் உட்சபட்ச வெறியினைக் காட்டியது.

இதனைப் பார்த்தவாறே நான் மேலே ஏறும் போது…

“விட்டுறாத… அவனோட கழுத்த அறு...” என ஒரு உருவம் சொல்ல

கத்தியை ஏந்தியிருந்த அந்த உருவம் மெல்ல மெல்ல அடிவைத்து வாட்ச்மேன் அருகில் சென்று கத்தியை ஓங்கும் போது…

“இப்படி இவன கொல்றதால காயத்ரி ஆன்மா சாந்தி அடைஞ்சுருமா? இல்ல அவங்களோட ஆசை தான் நிறைவேறிருமா யாழினி…?” எனத் துப்பாக்கியை ஏந்தியபடி சொல்ல

ஓங்கிய கத்தியை கீழே போட்டவாறு திரும்பினாள் யாழினி…

மேலும்”உங்களுக்கும் தான் ஷீலா அண்ட் பவித்ரா” எனச் சொல்ல அவர்களும் என்னை நோக்கி திரும்பினார்கள்.

அவர்களை பார்த்து,”அவன் பண்ணுனது தப்பு தான். அதுக்கு நீங்க ஏன் கொலைகாரி ஆகி உங்க வாழ்க்கையைக் கெடுத்துக்கிறீங்க?”

யாழினியோ, “இவன் என்ன பண்ணுனானு தெரியுமா?”

“தெரியும்”

“என்ன தெரியும்?”

“கால் சிலம்பும், சிலம்பாட்டமும் ஒலிக்கும் பாண்டிய தேசத்தின் கிழக்கே 30 கிலோ மீட்டர் தொலைவில்… கெட்ட பாண்டவருள் நால்வர் அர்ஜுன், பாலசுப்பிரமணி, தாமோதிரன், கார்த்திக் சதி செய்ய… துரோகம் செய்து சாட்சியாய் நின்ற வாட்ச்மேன் வடிவேலு… வஞ்சிக்கப்பட்டால் காயத்ரி.. அடுத்த லைன் சொல்லட்டுமா..?

வஞ்சத்தைப் பழி தீர்க்க புறப்பட்டாள் பேதை மகள் மூவர்… அதாவது நீங்க மூணு பேரு. சரியா?” எனச் சொல்லும் போது ஐந்தாவது காகிதத்தைக் கீழே போட்டாள் பவித்ரா.

யாழினியோ, “இதெல்லாம் எப்படி தெரியும். எங்களை எப்படி கண்டுபிடிச்சீங்க?”

“நீங்க கொலை செய்யுற விதம் தான் என்ன இந்த இடத்துக்கு கூட்டிட்டு வந்தது. 10 நாள் முன்னாடி கடத்துறது. பத்தாவது நாள் கொலையானவங்க வீட்டை சுத்தி இருக்குற பயன்படுத்தப்படாத தண்ணீர் தொட்டிக்கு மேல நைட் 12 மணில இருந்து 12.30 மணிக்குள்ள கொலை பண்ணுறது. இப்படி சொல்லலாம்… ஆனால் நீங்க தானு கண்டுபிச்சது காயத்திரி கேஸ் ஹிச்டோரி மூலம் தான். அதுமில்லாம எல்லா கொலையையும் முத முத போலீஸ்க்கு தகவல் கொடுத்தது நீங்க மூணு பேர்… முதல் கொலையை யாழினியும், இரண்டாவது மூணாவது கொலையை பவித்ராவும், நாலாவது கொலையை ஷீலாவும்… கூட்டி கழிச்சு பார்த்தா எல்லாமே சரியா வந்துச்சு…”

“அப்படினா இவன இப்படியே விட்டுருதா? எப்படியும் எங்கள கைது பண்ண போறீங்க இவன கொலைப் பண்ண பிறகு கைது பண்ணிக்கோங்க”

“இவன கொலை பண்ணுறதால காயத்ரி பேர் சரியாகிருமா? சட்டத்துக்கிட்ட ஒப்படைச்சுருங்க”

அழுகையுடன், “இவனுங்க காயத்ரி அக்கா... இல்ல எங்க அம்மாவுக்கு என்ன பண்ணுணானுங்க தெரியுமா? பணம் இருக்குற திமிருல கதற கதற கற்பழிச்சு, தப்ப மறைக்க அவங்க மேலயே பழிப்போட்டு, அவங்களையே அவமானம் தாங்காமல் தற்கொலை செய்ய வச்சு, சட்டத்தையும் ஏமாத்தி தப்பிச்சுட்டாங்க. அப்போ உங்க சட்டம் என்ன பண்ணுச்சு?”

அந்தக் கேள்விக்கு பதிலில்லாமல்…

“உங்க வாழ்க்கை நினைச்சுப்பார்த்தீங்களா?”

ஆவேசத்துடன்.. “அது கிடக்கு சார்... அனாதையா இருந்த எங்களை வளர்த்தவங்கள சீரழிச்ச இவனுங்கள பழி வாங்குறதால எங்க வாழ்க்கை போகும்னா அது போயிட்டு போகட்டும்”

“இவன இப்படி கொல்றதால எல்லாம் மாறிய போகுதா?”

“அப்படினா இவன கொல்லாம விட்டுற சொல்றீங்களா சார்?”

இரண்டு நிமிட யோசனைக்குப் பிறகு…

“இல்ல…” எனச் சொல்லி துப்பாக்கியைக் கீழே போட… மூவரின் முகமும் என்னை ஏறிட்டு பார்த்தது.

அப்போது அவர்களைப் பார்த்து… “இவன இப்படி கொல்லாதீங்க. இவனோட கொலை மத்தவங்களுக்கு பாடமாயிருக்கணும். காயத்ரி பெயர சரி செய்யுற மாதிரி இருக்கணும்”எனச் சொல்ல

பவித்ராவோ, “என்ன சொல்றீங்க?”

“இவனுங்க செஞ்ச தப்பு வெளிய தெரியணும். அப்ப தான் மத்தவங்களுக்கு பாடமாயிருக்கும்” ஷீலாவோ,”என்ன செய்யணும் சார்...”

“அவங்க காயத்ரிக்கு பண்ணுன அநியாயத்தை எழுதி… அதுக்கும் உடந்தையாயிருந்ததால என்னோட மனசாட்சி என்ன கொன்னுச்சு… அதனால அவங்க நாலு போரையும் திட்டம் போட்டு கொன்னுட்டு நானும் தற்கொலை பண்ணிக்குறேனு ஒரு லெட்டர் எழுதி அவனோட கையில வழியுற ரத்தத்துல கொஞ்சம் தடவி பாக்கெட்ல வச்சுருங்க. அப்பறோம் இன்னொன்னு அவனோட கட்ட அவிழ்த்து மூலைல உட்கார வச்சுருங்க… பக்கத்துல சாராய பாட்டில்… அப்பறோம் அந்தக் கத்திய அவனோட கையில இறுக்க பிடிக்கிற மாதிரி வச்சுருங்க.. காலைலக்குள்ள எல்லா ரத்தமும் வெளிய போயிரும். அப்பறோம் இந்த கேஸ்ஸ நான் முடுச்சுறேன். காயத்ரி நல்லவனு இந்த உலகத்துக்கு தெருஞ்சுரும்” எனச் சொல்லும் போது


யாழினியும், ஷீலாவும், பவித்ராவும் கையெடுத்து கும்பிட்டார்கள். ரெண்டு மூணு நாள்ல கேஸ்ஸ குளோஸ் பண்ணிட்டேன். சாதாரண மனுசனா நான் செஞ்சது சரியா இருக்கலாம். ஆனா ஒரு பொறுப்பான போலீஸ் ஆஹ் நான் செஞ்சது பெரிய தவறு. அதனால தான் நான் வேலைய ராஜினாமா பண்ணிட்டேன்.

அன்னைக்கு ஆரம்பத்துல அவங்க கண்ணுல இருந்த வெறியும், கடைசியில கண்ணுல இருந்த ஆனந்தமும் என் கண்ணுக்கு முன்னாடி இன்னும் வந்து போகுது.

அது என்னை, “எது அவங்கள கொலை செய்யும்படி தூண்டியது?” என யோசிக்கவைத்தது.

இன்னைக்கு அதற்கான காரணங்கள் தெரிந்தது... அவர்களின் வெறிக்கு காரணம் ஒவ்வொரு நொடியும் பெண்ணின் மீது வக்கிரத்தைக் காட்டும் சில வெறி பிடித்த ஆண் வர்க்கமும், குற்றவாளிகளை விடுத்து பாதிக்கப்பட்டவளை குற்றவாளியாக பார்க்கும் இந்த சமூகமும் தான்.


அனைத்திற்குமே இந்த சமூகம் தான் காரணம். சமூகம் மாற வேண்டும். இப்பவும் எனக்கு புரியாத புதிராக இருப்பது…


பிருந்தாவன் காலனி கொலை வழக்கு முடிவை என்னுடைய மனசாட்சி எழுதியது. ஆனால் என் மனசாட்சியை எழுத வைத்தது காயத்ரி வழக்கிற்கு நியாயம் தேடித்தந்த யாழினி, ஷீலா மற்றும் பவித்ராவின் ரத்த சாட்சி.


(முற்றும்)உங்கள் கருத்துக்கு : https://www.facebook.com/ranjith.kumar.585


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.