பளிச்சுன்னு மஞ்சள் நிறத்துல இருக்கற முகத்தில் 'கடலோர கவிதைகள்' ஜெனிபர் டீச்சரின் சிரிப்பும், மலர் டீச்சரின் சிவப்பான பருக்களும், பருக்கள் ஆறிய பள்ளங்களில் அழகையும் நிரப்பி இருந்தவர், ஹை ஸ்கூல் போக ஆரம்பித்த ஆரம்ப வருஷங்களில் எனக்கு இங்க்லீஷ் எடுத்த, நான் வாழ்நாள் பூரா மறக்க முடியாத வசந்தி டீச்சர்....

ஒரு பெரிய மெட்ரோ நகரில் இருந்து அந்த சின்ன டவுனுக்கு மாற்றலாகி வந்து அன்னைக்கு தான் அந்த ஸ்கூலுக்கு முதல் நாளா போனேன்.... "இந்த பில்டிங்க்கு பின்னாடி இருக்கற கிரவுண்ட்ல வலது பக்கமா வரிசையா இருக்கற கிளாஸ்ரூம்ல அஞ்சாவது கிளாஸ்க்கு போமா.... " ன்னு பிரின்சிபால் சொன்னதும் நேரா போனவளுக்கு அந்த கிரவுண்டின் விஸ்தீரணத்தை பார்த்ததும் பிரமிப்பு .... பெரிய கிரவுண்ட்.... புது யூனிபார்ம் வாசனையோடு இருந்த கிளாஸ் ரூமுக்குள் கலர் ட்ரஸ்ல நுழைஞ்ச என்னை ஆர்வமா விசித்திரமா புதுசா பொருந்தாதவளா பார்த்தாங்க.... கொஞ்சமா ஓரத்துல இடம் இருந்த மூணாவது பெஞ்சுக்கு போனா ஏற்கனவே அங்க செட்டில் ஆகி இருந்த மூணு பேரும் பேச்சை நிறுத்தி வேண்டாவெறுப்பா இடத்தை தந்தாங்க…

ஒரு வாரம் புது ஸ்கூலுக்கு போனோமா வந்தோமான்னு இருந்தப்போ தான் இன்னொரு விசித்திர பழக்கத்தை ஆரம்பிச்சிருந்தேன்..... டெயிலி ஸ்கூலுக்கு ஒரு பத்து நிமிஷம் முன்னாடியே போய் அந்த பெரிய கிரவுண்ட்ல ஒரு நாலு ரவுண்ட் ஓடிட்டு அப்பறம் கிளாஸ்க்கு போவேன்... அன்னைக்கும் அப்படித்தான் ஓடிட்டு கிளாஸ் போறதுக்குள்ள பிரேயர் பெல் அடிச்சிருச்சு.... வேகமா ஓடி கிளாஸ்க்குள்ள நுழைய போனா உள்ள புதுசா ஒரு டீச்சர் .... திருதிருன்னு பிரேயர் முடியற வரைக்கும் முழிச்சிட்டு மெதுவா "எக்ஸ்க்யூஸ் மீ டீச்சர்.." ன்னு சொன்னவுடனே திரும்பி பார்த்தவங்க தான் நான் முன்ன வர்ணிச்ச வசந்தி டீச்சர்.... "எஸ் ப்ளீஸ் கம் இன் .... Make sure you are not late here after.." ன்னு சிரிச்சுகிட்டே உள்ள வர சொன்ன அந்த நொடில எனக்கு ரொம்ப பிரியமான டீச்சரா மாறினாங்க....

புதுசா வந்துருக்கற இங்க்லீஷ் ப்ளஸ் கிளாஸ் டீச்சர்.... அந்த சின்ன ஸ்கூல்ல அவ்வளவு அழகா இங்க்லீஷ் பேசற இன்னொருத்தரை நான் பாத்ததில்லை.... தினம் அவங்க கட்டற புடவைல இருந்து, அவங்களை தவிர வேற யாருமே போடாத அப்போ பேஷன்ல இல்லாத முழுக்கை பிளவுசும், அவங்க கொண்டு வர்ற கர்சீப் வரைக்கும் எல்லாமே ஒரு நளினமா இருக்கும்.... அதும் திங்கள்கிழமை நீல கலர் யூனிபார்ம் சாரீல அதுக்கு மேல நீளமா தொங்கற கீழ பெரிய தாமரைப்பூ பதக்கம் வெச்ச அந்த செயினும், கைல போட்டிருந்த சிவப்பு ரப்பர் வளையலும், பூ போட்ட செருப்பும் அப்போ எனக்கு அவங்க தான் உலக அழகின்னு தோணவெச்சது.... இப்படி டீச்சரை கடவுளா நான் பாத்துட்டு இருந்தப்போ தான் அவங்களை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை வந்தது.... அவங்க வீடு எங்க, அவங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா, குழந்தை இருக்கா, அவங்க ஏன் முழுக்கை பிளவுஸ் போடறாங்க இப்படி நிறைய ஆர்வமான கேள்விகள்....

ஆனா அது என்னமோ எந்த வயசுல ஸ்கூல் சேர்ந்தான்னே தெரியாம எங்க கிளாஸ்ல எல்லாரையும் விட குறைஞ்ச பட்சம் மூணு வயசு பெரியவளா இருந்த கடைசி பெஞ்ச் அருள்மொழிக்கு மட்டும் அவங்களை பிடிக்கவே இல்ல.... இங்க்லீஷ் சுட்டு போட்டாலும் வராததா இல்லை படிப்பே வராததா என்ன காரணம்னே தெரில.... பக்கத்து கிளாஸ்ல இருந்த கதிர்வேல் ஸார் ரொம்ப ஸ்ட்ரிக்ட் .... நல்லவர் தான் ஆனா எப்பவும் கடுகடுன்னே இருக்கற கணக்கு வாத்தியார்.... கிளாஸ்ல யாராவது தப்பு பண்ணா சாக்பீசை ஓங்கி விட்டெறிவாரு .... பல சமயம் கிளாஸ்களுக்கு நடுவுல வெறும் ஆறடி தட்டி மட்டும் போட்டுருந்ததால எங்க கிளாஸ்ல வந்து விழும்..... உடனே வேகமா வந்து டீச்சர் கிட்ட மன்னிப்பு கேட்டு அப்பறம் சிரிச்சிட்டே பேசிட்டு போவாரு.... எப்பவும் கடுகடுன்னு இருக்கற ஸார் டீச்சர் கிட்ட மட்டும் மரியாதையா சிரிச்ச முகத்தோட பேசறதை பார்த்துட்டு, அந்த வயசுலயே அப்படி வதந்தி பேசறது தப்புன்னு மட்டும் புரிஞ்ச ஆனா விவரம் முழுசா புரியாத விஷயங்கள் எல்லாம் பேசற அருள்மொழி அப்போதான் புதுசா கதிர்வேல் ஸார் பத்தியும் வசந்தி டீச்சர் பத்தியும் ஏதோ புரளியை கிளப்ப ஆரம்பிச்சா....

எந்த வம்புக்கும் போகாத நானே அவ பேசறதை கேட்டுட்டு சண்டை போட போனேன்.... இதுக்கு நடுவுல வசந்தி டீச்சருக்கு ரொம்ப பிரியமான ஸ்டுடண்ட்டா நான் மாறினதுல அருள்மொழிக்கு என் மேல பொறாமை.... "டீச்சரும் ஸாரும் பக்கத்து பக்கத்து வீடுதான் தெரியுமா..... எனக்கு அவங்க வீடு எங்க இருக்குன்னு தெரியுமே.... நிறைய நாள் ஸார் அவங்க கூட பேசிக்கிட்டே நடந்து போறதை நானே பார்த்திருக்கேன்... அவங்க ரெண்டு பேரும் தான் கல்யாணம் பண்ணிக்குவாங்க பாரேன்... உனக்கு அவங்களை பத்தி என்ன தெரியும்னு இப்படி சண்டை போடற..." ன்னு அவ வெறுப்பேத்தினதுல டீச்சரை பத்தி இன்னும் நிறைய தெரிஞ்சுக்கணும்னு ஆசை அதிகமாச்சு.... இப்படி ஒரு அழகான டீச்சருக்கு சிடுசிடுன்னு இருக்கறவரோட கல்யாணம் ஆகணுமா கடவுளே வேண்டாம்ன்னு வயசுக்கு மீறி வேண்டிக்கிட்டேன்...

இந்த சமயத்துல தான் திடீர்ன்னு ஒரு ஒரு வாரம் டீச்சர் ஸ்கூலுக்கு வரலை.... என்னால எதுலயும் கவனம் செலுத்த முடியலை.... அவங்களுக்கு என்ன ஆச்சு ஏன் வரலைன்னு ஒரே குடைச்சல்.... பத்து நாள் கழிச்சு அவங்க அன்னைக்கு கிளாஸ்க்கு வந்தப்போ என்னவோ அவங்க முகத்துல வழக்கமா இருக்கற சிரிப்பு இல்ல.... சாயங்காலம் வரைக்கும் பார்த்துட்டு வீட்டுக்கு போற பெல் அடிச்சதும் அடக்க முடியாம ஸ்டாப் ரூம்க்கு போனா டீச்சர் அழுத மாதிரி கண்ணெல்லாம் சிவந்து போய் இருந்தாங்க ... அவங்ககிட்ட போய் "டீச்சர் ஏன் அழறீங்க... நீங்க ஏன் இவ்வளவு நாளா கிளாஸ்க்கு வரலை.... உங்களுக்கு உடம்பு சரி இல்லையா... .. உங்க வீடு எங்க இருக்கு.... நீங்க ஏன் எப்பவும் இப்படி நீளமா பிளவுஸ் போட்டுக்கறீங்க.... உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா... " அப்படி இப்படின்னு என்னவோ உளற ஆரம்பிச்சேன்.... "உனக்கு இவ்வளவு இடம் கொடுத்தது ரொம்ப தப்பா போச்சு.... ஸ்கூலுக்கு வந்த படிக்கற வேலைய மட்டும் ஒழுங்கா பாரு..." ன்னு பட்டுனு சொன்னது அவங்க தானான்னு சந்தேகமே வந்துருச்சு.... கண்ணுல தண்ணி முட்ட திரும்பி வந்துட்டேன்... கேட்க்கு வந்தப்பறம் தான் லன்ச் பேகை ஸ்டாப் ரூம்லயே மறந்து வெச்சுட்டேன்னு ஞாபகம் வந்து அங்க போனேன்... நுழையறதுக்கு முன்னாடி ப்ரவீணா டீச்சர் வசந்தி டீச்சர் கிட்ட ஏதோ பேசிட்டு இருந்தது காதுல விழுந்தது... "ஏன் டீச்சர் நீங்க இவ்வளவு கோவப்பட்டு நான் பாத்ததே இல்லையே.... அவ கேட்டது இருக்கட்டும் எனக்கே நிறைய நாள் இந்த கேள்வியெல்லாம் மனசுல தோணி இருக்கு.... உங்களுக்கு ஏதாவது ப்ராப்ளமா... ஷேர் பண்ணிக்கனும்னா நீங்க என்கிட்ட சொல்லுங்க... இல்லைனா வேண்டாம்...." ன்னு அவங்க கேட்டவுடனே வசந்தி டீச்சர் அழுதுகிட்டே "என்னோட ஹஸ்பண்ட் போன வருஷம் ஒரு தீ விபத்துல மாட்டிக்கிட்டு இறந்து போய்ட்டாரு.... அவரோட நினைவு நாள்ன்னு தான் ஸ்கூலுக்கு வரலை.... அந்த தீ விபத்துல அவரை எவ்வளவோ காப்பாத்த நான் ட்ரை பண்ணதுல என்னோட கையெல்லாம் தீக்காயத்தழும்பு ... அதை மறைக்கத்தான் இப்படி ஒரு வேஷம்...." அப்படினாங்க... எனக்கு ஒரு வாரம் தூக்கம் வரலை.... அப்பறம் அந்த வருஷத்தோட முடிவுலயே நான் வேற ஊருக்கு போய், அதுக்கப்பறம் வாழ்க்கை வேகமா ஓடி போனாலும், வசந்தி டீச்சர் என் மனசோட ஒரு மூலைல அவங்க அழகான சிரிப்போடு பத்திரமா இருந்தாங்க... கூடவே ஒரு கேள்வியும்....

நிறைய வருஷங்கள் கழிச்சு எதிர்பாராத விதமா ஆபீஸ் வேலையா அந்த ஊருக்கு போயிருந்தேன்.... வேலையெல்லாம் முடிச்சிட்டு நான் படிச்ச ஸ்கூலுக்கு போனேன்.... கேட் எல்லாம் திறந்து இருந்தது.... உள்ள போன என்னை வாட்ச்மேன் "என்னமா.... அட்மிஷனா ... அதெல்லாம் முடிஞ்சிருச்சே....." அப்படினாரு....

"இல்லைண்ணா.... நான் இருபத்தஞ்சு வருஷம் முன்னாடி இங்க தான் படிச்சேன் .... இவ்வளவு வருஷம் கழிச்சு இந்த ஊருக்கு வந்ததால ஸ்கூலை பாக்கலாம்னு வந்தேன்.... அப்போ உங்களை பாத்ததில்லை நீங்க புதுசா ..." அப்படினேன்.... "ஓ அப்படியாமா.. நான் இருபது வருஷமா இங்க இருக்கேன்...." ன்னு அவர் சொன்னவுடனே அப்படி நடந்திருக்க கூடாதான்னு ஒரு நப்பாசைல என் மனசுல இருந்த அந்த ஒரு கேள்வியை கேட்டேன்

"அண்ணா .... இந்த ஸ்கூல்ல இப்போ "வசந்தி கதிர்வேல்" ன்னு யாராவது இங்க்லீஷ் டீச்சர் இருக்காங்களா" !!!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.