ஒரு கதை! சில முடிவுகள்!

“என்னாச்சு பாஸ்! ஏன் டென்சனாயிருக்கீங்க? “என்றான் அருண்.கார் உச்ச வேகத்தில் பறந்து கொண்டிருந்தது நகரத்தின் எல்லையில் முகாமிட்டிருந்த அப்போல்லோ சர்க்கஸை நோக்கி.


ஏதோ சிந்தனையில் மூழ்கியிருந்த விக்னேஷ் “என்ன கேட்டாய்? “ என்றான்.


“நான் என்ன கேட்டேன்னு காதுல விழாத அளவுக்கு சிந்தனைன்னா விசயம் பெரிசாத்தான் இருக்கும் போல.ஆமா டிவில நியூஸ் கேட்டதும் அவசரமா கிளம்பிட்டோமே! அப்படி என்ன பாஸ் அவசரம்! “


“ரோப் வாக்கர் தெரியுமா? “


“மைக்கேல் ஜாக்சனுக்கு மூன் வாக்கர்னு பேர் இருப்பது தெரியும்.அதென்ன ரோப் வாக்கர்? கயித்துல நடக்கறதா? “


“எக்ஸாட்லி! நியூஸ்ல கேட்டோமே?அந்த பகதூர் கயித்துல நடக்கரதுல கில்லி.இன்னைக்கு கால் தவறி விழுந்து செத்துட்டதா நியூஸ்ல சொல்ராங்க!அதைத்தான் நம்ப முடியலை.”


“யானைக்கும் அடி சறுக்குமே பாஸ்! “


“அவனுடைய திறமை அப்படிப்பட்டதுடா! ஒரு தடவை கூட அவன் மிஸ்ஸானதில்லை.!”


“அவனை உங்களுக்கு எப்படி பழக்கம்? “


“ஒரு கேஸ்ல அவன்தான் அக்யுஸ்ட்.அந்த கேஸ்ல பத்தாவது மாடியிலிருந்த டைமண்டை திருடிட்டாங்க.ரொம்ப திணறிட்டேன் கண்டு பிடிக்க முடியாம.ஏகப்பட்ட பேத்து மேல சந்தேகம்.உள்ளயே யாராவது திருடியிருக்கனும்னு முதல்ல நினைச்சேன்.அப்புறம் ஒரு டவுட்டில் வெளியே தேடியதில் ஒரு அலுமினிய பைப் காட்டுக்குள்ள கிடைச்சுது.அப்பதான் அந்த பில்டிங்கிற்கு கயிறு கட்டி போயிருக்காங்கன்னும் அப்ப பேலன்ஸிக்காக யூஸ் பண்ணியது இந்த அலுமினிய பைப்புன்னும் கண்டு பிடிச்சேன்.”


“அப்ப பைப்ப போல்டிங் பண்ணி மடக்கி கையிலயே கொண்டு போயிருந்தா உங்களால் கண்டு பிடித்திருக்க முடியாது? “


“கரெக்ட். அவன கைது பண்ணும்போது இதை சொன்னேன். அந்த கதையோட கிளைமேக்ஸில் காலில் அடிபட்ட ஒரு பையனை முதுகில் கட்டிகிட்டு 200 அடி உயரத்துல கயித்துல நடந்து காப்பாத்தினான்.”


“பையன் பயந்து உலுக்கியிருப்பானே? “


“அதான் இல்லை.அவன் கண்ணை கட்டிட்டு பில்டிங் உள்ளேதான் போகிறோம்னு நம்ப வைச்சிட்டு கயித்துலயே நடந்து கொண்டு வந்துட்டான்.!”


“செம டேலண்டா இருப்பான் போலயே? “


“அதனாலதான் அவன் சாவில் எனக்கு டவுட் வருது! “


“டுவின் டவர்க்கு நடுவுல கயிறு கட்டி நடந்ததா தி ரோப்ன்னு ஒரு படம்கூட த்ரிடீல வந்துச்சு பாஸ்! “


“பார்த்தேன்! இதுல நல்லா கவனிச்சா குறைவான உயரத்துல நடக்கிறவன் குடை மாதிரி சின்ன பொருளை பேலன்ஸிக்கு வைச்சிருப்பான்.உயரம் அதிகமாகும் போது பேலன்ஸோட நீளமும் அதிகமாகும்.ஒரு கணித புதிர் அதில் இருக்கு.அந்த பேலன்ஸோட நீளமோ எடையோ கொஞ்சம் மாறுபட்டாலும் ஆள் காலி.அந்த பேலன்ஸ் ஸ்டிக்லதான் உயிரே இருக்கு! “


அவர்கள் காரை நிறுத்தி விட்டு சர்க்கஸ் கூடாரத்தினுள் நுழைந்த போது மேட்னி ஷோ விற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.சொற்ப கூட்டம் வெளியே காத்திருந்தது.கடும் டயட்டிலிருந்த மிருகங்கள் தங்கள் அசல் அடையாளங்களை இழக்க துவங்கியிருந்தன.மேற்கூரையின் பொத்தல்களில் சூரியன் கசிந்து கொண்டிருந்தான்.பார் கயிறுகள் காற்றில் ஆடிக் கொண்டிருந்தன.

ஓடி வந்து வரவேற்ற மனேஜர் “வாங்க விக்னேஷ்! உங்க ஆளு நேத்து கயித்துலருந்து விழுந்து இறந்துட்டான்! “


“தெரியும்! கீழே நெட் கட்டியிருக்கலாம்! “


“அமெச்சூருக்குத்தான் அதெல்லாம்.பகதூரை பத்திதான் நல்லா தெரியுமே?அவனுடைய பாடி போஸ்ட்மார்டம் போயிருக்கு! .மோனிகாவை ஒரு தலையா லவ் பண்ணிட்டு இருந்தான்.முந்தா நேத்துதான் அவகிட்ட ஐ லவ் யூன்னு சொல்லி பஞ்சாயத்து ஆச்சு.அவ கன்னத்துல அறைஞ்சுட்டா.சோகமாக இருந்தான்.நான் ஆறுதல் சொல்லி தேத்தினேன்.அதுக்குள்ள இப்படி ஆயிருச்சு! “


“ரெகுலரா பகதூர்தானே நடப்பான்? “


“இப்ப மூணு வாரமா அவன் நடப்பதில்லை.அப்பண்டிஸ் ஆபரேசன் பண்ணி ரெஸ்ட்ல இருந்தான்.அவனுக்கு பதிலா குருராஜ் நடந்துகிட்டு இருந்தான்.அவனுக்கு நேத்து காய்ச்சல்.!வேற வழியில்லாம பகதூரை ஷோ பண்ண சொன்னேன்.மூணு வாரமா டச் இல்லாததால் ஸ்லிப்பாகி விழுந்துட்டான்னு நினைக்கிறேன்.!”


“நாங்க குருராஜை பார்க்கனுமே? “


“அவன் டெண்டுலதான் இருப்பான், பார்க்கலாம்! “

அவர்கள் வினோத குள்ளர்களையும், கோமாளிகளையும் தாண்டி ஒரு மினி பாரத விலாஸினுள் பிரவேசித்தனர்.


அவர்கள் குருராஜின் கூடாரத்தினுள் நுழைந்த போது அவன் படித்து கொண்டிருந்த புத்தகத்தை சட்டென்று மூடி வைத்தான்.அறிமுகத்திற்கு பின்னால் “பேசாம நானே நடந்திருப்பேன்.பாழாப் போன காய்ச்சல் இடைஞ்சலா வந்துருச்சு.டச் இல்லாததால் பகதூர் மிஸ்ஸாகி விழுந்துட்டான்.”


“சரி! உடம்பை பாத்துக்க! “


வெளியே வந்து நடக்கும் போது “இவனுக்கும் மோனிகா மேல ஒரு கண்ணு.!”என்றார் மேனேஜர்.


“யாருங்க அந்த மோனிகா? “என்றான் அருண்.


மலைப்பாம்பை உடலில் இறுக விட்டு கொண்டிருந்தவளை காட்டினார் மானேஜர்.


“இறுக்கி கொள்வது மலைபாம்போட ஸ்டைல்.உண்மையாவே இறுக்கிட்டா என்ன பண்றது.?”


“ரொம்ப இறுக்குதுன்னு தெரியும் போது கையிலிருக்கிற பின் ஊசியில் பாம்பை ஒரு குத்து.வலி எல்லா உயிருக்கும் பொதுதானே! உடனே லூசாகும். டப்புன்னு உடம்பை விடுவிச்சுக்கனும்.!”


“நான் பகதூர் யூஸ் பண்ணிய பேலன்ஸ் ஸ்டிக்கை பார்க்கனுமே? “

மானேஜர் அந்த இரண்டடி போல்டிங் ஸ்டிக்கை சட சடவென்று விரித்தார்.எட்டடி நீளத்திற்கு விரிந்த அந்த அலுமினிய குழாய்களை கொஞ்ச நேரம் ஆராய்ந்து கொண்டிருந்த விக்னேஷ் “சரி போகலாம்! “என்றான்.

“எல்லாரும் டிவி, நெட்டுன்னு உக்காந்த இடத்துல எல்லாத்தையும் பாத்து பழகிட்டாங்க.இதுல சர்க்கஸ் பார்க்க யாரு வர்ரா? நாடகத்தை சினிமா அழித்தது போல் இதையும் அழிச்சிருவாங்க! “என்றார் மனேஜர்.


“ஒன்னை அழிச்சாத்தான் இன்னொன்னு வளர முடியும்! “


அவர்கள் காரில் வரும் போது அருண் கேட்டான்.”இது கொலையா? தற்கொலையா? விபத்தா பாஸ்! “


“மூணுமே! மதில் மேல் பூனை எந்த பக்கமும் குதிக்கும்! “


“என்ன பாஸ் குழப்புரீங்க? “


“நான் சொல்வதை கேட்டா நீயும் குழம்புவாய்! “


“சொல்லுங்க! கேட்போம்.”


“இதுவரைக்கும் தவறி விழாத பகதூர் இந்த முறை தவறி விழ என்ன காரணம்னு யோசிச்சியா? “


“அதான் தெரியலைன்னு சொல்லிட்டேனே பாஸ்! “


“அதுக்கு காரணம் அப்பண்டீஸ்.”


“யூ மீன் குடல்வால்.அது எப்படி காரணமாக முடியும்.?”


“இப்போது நான் சொல்வது முழுவதும் விபத்துங்குற கோணத்தில் மட்டும்தான் பார்க்கனும்.மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்பதற்கு மறுக்க முடியாத ஆதாரமாக இருப்பது குடல்வால்.இப்போது தேவையில்லாமல் இருக்கும் இந்த உறுப்பு குரங்காக இருந்த போது தாவர உணவுகளை செரிக்க உதவி செய்திருக்கிறது.கூடவே இன்னொரு வேலையும் செய்திருக்கிறது.அது என்ன தெரியுமா? “


“தெரியலையே பாஸ்! “


“புவி ஈர்ப்பு விசைக்கு எதிரான உடலோட சமநிலையை தராசு முள் மாதிரி பேலன்ஸ் பண்ணியிருக்கு.உராங் உடான் குரங்கு வாலிலேயே தொங்க பேலன்ஸ் பண்ண இதுதான் காரணம்.இன்னைக்கும் அப்பண்டிஸ்ஆபரேசன் பண்ணியவர்களால் முன் போல் வெயிட்டை பேலன்ஸ் பண்ண முடியாது.முக்கியமாக மலை ஏறும்போது பேலன்ஸிற்கு திணறி விடுவார்கள்.விண்வெளி பயணத்திற்கெல்லாம் இவங்க அன்பிட்.ஸோ விபத்துஎன்கிற கோணத்தில் பார்த்தால் இந்த காரணமெல்லாம் சரியா வரும்! “


“பக்காவா பொருந்துது. கொலைன்னா அதுக்கான லாஜிக்கை சொல்லுங்க? “


“குருராஜ் என்ன புக் படிச்சுட்டு மூடி வைச்சான்னு பார்த்தியா? “


“இல்லையே பாஸ்! “


“அவன் மூடி வைச்சது அப்பண்டிஸ் பத்திய புக்குதான்.விபத்துக்கு நான் சொன்ன காரணத்தை அவனும் படிச்சிருப்பான்.அதனால் அன்னைக்கு காய்ச்சல் வந்த மாதிரி நடிச்சிருப்பான்.இல்லைன்னா உண்மையாவே காய்ச்சலை வர வைத்திருப்பான்.மோனிகாவை அடையும் போட்டியில் பகதூரை காலி பண்ண இதை விட்டா வேற வழியில்லை.மேலும் பேலன்ஸ் ஸ்டிக்கின்நுனியின் உள்ளே ஸ்பான்ஜை திணிச்சு தண்ணியை ஊத்தி வெயிட் பண்ணிட்டான்.பகதூர் விழுந்தவுடனே எல்லாரும் அவனை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போகும் பரபரப்பில் இவனை கவனிக்கலை.இவன் ஸ்பான்ஜை வெளியே எடுத்துட்டான்.ஆனால் அதில் கொஞ்சம் பிசிறு மாட்டி காட்டி கொடுத்துருச்சு.!”


“தற் கொலைன்னா? “


“மோனிகா தன்னுடைய லவ்வை ஏத்துக்காம அறைஞ்சிட்டாங்கிற வருத்தத்துல பகதூரே தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம்.மத்த ரெண்டும் இந்த முடிவுக்கு உதவியிருக்கலாம்.!”


“இந்த கதைக்கு எதுதான் பாஸ் முடிவு! “


“அதை படிப்பவர்களிடமே விட்டு விடலாம்.!”


“மொட்டையா முடிக்கிறீங்க!

“எனக்கு இது பிடிக்கலை பாஸ்! “


ஒரு வாரத்திற்கு பின் குருராஜீம் கயிற்றிலிருந்து விழுந்து இறந்த போது

“கிளைமேக்ஸ் இப்ப சரியா வந்துருச்சு பாஸ்! “என்றான் அருண்.


“இப்படி யோசியேன்.குற்ற உணர்ச்சியில் குருராஜே விழுந்திருக்கலாம்.பகதூரை குருராஜ்தான் கொன்னான்னு தெரிஞ்ச பகதூருக்கு வேண்டப்பட்ட யாரோ அந்த ஸ்பான்ஜை மறுபடியும் பேலன்ஸ் ஸ்டிக்கில் சொருகியிருக்கலாம்.கடைசி ரொம்ப முக்கியம்.கற்றாரை கற்றாரே காமுறுவர்.அந்த மாதிரி பகதூரே பேயா வந்து விழ வைச்சிருக்கலாம்.”


“அய்யோ சாமி ஆளை விடுங்க! கடைசியா பேயை எல்லாமா உள்ளே கொண்டு வந்து கதையை முடிப்பீங்க? “


அருண் புலம்ப தொடங்கிய போது விக்னேஷ் தன் அறைகதவை அறைந்து சாத்தினான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.