மர்ம தேசம்

ஹிச்காக் டிடெக்ட்டிவ்ஸ் ரிஷப்ஷனிஸ்ட் ரீனா ,அவசரமாக தொரையை அழைத்தாள் .

தொரையும் அவளைப் பார்ப்பதற்குத்தான் வந்துகொண்டிருந்தான்.

`தொரை சார் ! இந்தாங்க .. பாஸ்போர்ட் , விசா, டிக்கெட் ,டாகுமெண்ட்ஸ் அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது .

`என்ன இதெல்லாம் ? `

` என்ன சார் .. பாஸ் ஒண்ணும் சொல்லலியா ? போங்க , பாஸ் கூப்பிடறார் `.

தொரை பாஸ் அறைக்குள் நுழைந்தான். அவர் ரிவால்விங் சேரில் அமர்ந்தவாறு , ரொனால்டோவின் விலையுயர்ந்த காலில் பந்து புரண்டுகொண்டிருக்கிற வண்ண சுவரோவியத்தை ரசித்துக்கொண்டிருந்தார்.

`ரீனாவைப் பார்த்து எல்லாம் வாங்கிட்டீங்களா ? `

` என்ன இப்படி ஊரே கொள்ளைபோகுதுன்னு அவசரப்படறீங்க ? ´

`எல்லாம் அப்பவே விளக்கியாச்சு ..இதுதான் டீல் . உனக்கு முப்பது லட்சம் ! நைட் லெவன் தேர்ட்டி லுப்த்தான்சா பிளைட் ..

உன்னையெ எதிர்ப்பாத்து பிராங்க்பர்ட் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்லே சூசன் கார்த்திட்டிருப்பா ...அவ இந்தியப் பொண்ணுதான் .. குழந்தையிலிருந்தே ஜெர்மனிக்குப்போனதுனாலே பாக்கறதுக்கு ஜெர்மன் கேர்ள் மாதிரியிருப்பாள் ...எல்லாம் அவ பிளான் பண்ணி எப்படிமுடிக்கணும்னு உனக்கு யோசனை சொல்லுவா .. ..உடனே கிளம்பு ..ஒன்பதரைக்கு செக்-இன் ...லெவன் தேர்ட்டிக்கு பிளைட் .!.`

அவன் , அவர் முகத்தைப் பார்ப்பதற்காக பக்கவாட்டில் போய் நின்றான்.

`அங்கே போயி ..?.`

`ஆளை முடிச்சிரு ! அதுக்கு நீதான் சரியான ஆள் ! `

பிராங்க்பர்ட் பன்னாட்டு விமான நிலையம் .

அவனை நன்கு தெரிந்துவைத்திருந்தவள்போல் , சூசன் தோன்றி `ஹல்லோ `என்றாள் .

பார்ப்பதற்கு ஸ்ட் ராபெர்ரி பழம் போல் டீக்காக இருந்தாள் .

ப்ளூ கலர் ஜீன்ஸ் பாண்ட் , லைட் க்ரே நிறத்தில் டீ ஷர்ட் அதற்கு மேல் கருப்பு கலர் ஜாக்கெட்.. கழுத்தில் ஸ்கார்ப் .

கொஞ்சம் சிலுசிலுவென்றுதான் இருந்தது. அவன் கோட் சூட் அணிந்திருந்ததால் தெரியவில்லை..

`வாங்க .. ஏதாவது சாப்பிடறீங்களா ,, கப்பச்சினோ ?`

அவன் தலையாட்டினான்.

`லஞ்சுக்கு வீட்டுக்குப் போயிரலாம்.. ஐஸ் ட்ரெயின் பிடிச்சு கொலோன் போகணும் .. அங்கதான் நமக்கு பிளாட் .,எஸ்செயர் ஸ்ட்றாஸ் ..`

`அது என்ன ஸ்ட்றாஸ் ? `

`ஸ்ட்ரீட் தான் ..இங்கு ஸ்ட்றாஸ் என்கிறார்கள் `

லஞ்ச் முடிந்து ,ஹாலில் உள்ள சோபாவில் அமரப்போன தொரையிடம் , ` இங்க வாங்க பால்கனிக்கு .. வந்த வேலையைப் பார்க்கலாம் `என்றாள் .

`அட .. வேலை பால்கனிலியே முடிஞ்சிருமா ? `

`பெரிய ஜோக்குன்னு நினைப்பு .. இங்கே வாங்க `

இருவரும் குறுகிய பால்கனிக்கு வந்து ஆரோகணிக்க..

`அங்கே பாரு.. எதிரே இருக்கிற அப்பார்ட்மெண்ட் ..

அங்கே செகண்ட் ப்ளோரிலே அவர் இருக்கிறார் `

` சரி..மேலே ..`

`தினமும் காலைலே சரியா எட்டு மணிக்கு வாக்கிங் ஸ்டிக்....

அப்புறம் ....ஒரு கையிலே நாயையும் பிடிச்சிட்டு போவாரு ..எதிர்ப்புறம் ரோட்டெ கிராஸ் பண்ணி , வேலியேதாண்டினா பெரிய பார்க்.. திரும்பறதுக்கு எப்படியும் பத்து மணி ஆயிரும் `

` நீ .. வாட்ச் பண்ணினியா .? `

`ம்ம் ..`

` சரி .. உன்னோட பிளான்தான் என்ன ? `

` பார்க்லே வச்சு முடிச்சிருனும் . `

தொரை மெளனமாக அந்த ஏரியாவை நோட்டம் விட்டான் .

`ஏன் .. சூசன் .. பார்க்கைவிட வீடு வசதி இல்லையா ? `

`வீடு சாத்தியமில்லே தொரை .. பார்க்லே யாரும் நடமாட்டம் இல்லாத இடத்திலே முடிச்சிட்டு புதர்லே தள்ளிட்டு வந்துரலாம் `.

`ஓ.கே . நீ சொன்னா சரி `

`நாளைக்கு ட்ரையல் பார்த்துரலாம் `

அவள் பொம்மைமாதிரி சிரித்தாள்.

`ஒரு டீ சாப்பிட்டிட்டு , பார்க் போவோம். அப்பத்தான் நமக்கு ஒரு ஐடியா கிடைக்கும் `

பெரிய பூங்கா. என்னமோ பார்க். வாயில் நுழையாத ஜெர்மன் பெயர்.பச்சை அப்பிக்கிடந்தது. கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் . குறுக்கே நிறைய மண் பாதைகள். அதில்தான் வாக்கிங் ,
ஜாக்கிங் எல்லாம். ஆண்களும் பெண்களும் குறைந்த ஆடையில் .

சூசனும் அப்படித்தான் தோன்றினாள் . முழங்கால் வரை டைட் ஷார்ட். மேலே மெல்லிய டீ ஷர்ட் .

`என்ன ரசனை முடிலியா ..அந்த மனுஷன் வழக்கமா வர்ற ரூட் இதுதான்.. நாய் பின்னாலையே போயிட்டிருக்கும் ....நான் பத்து நாளா நோட் பண்ணிட்டேன்..`

`வெரி குட் சூசன் ! `

`அப்புறம் பாஸ் என்ன சொன்னார் ..கமிஷனைப்பத்திக் கேக்கறேன் ..`

தொரை அவளை வியந்தான் .

`ஏன் , உனக்குத் தெரியாதா ? எனக்கு முப்பது லட்சம் .

உனக்கு ? ´

`எனக்கும் அதேதான் .. திருப்தியில்லே , தொரை சார் `

`மொத்த சொத்து மதிப்பு பத்து கோடியாமே ..காரியத்தை முடிச்சிட்டு ரெண்டு பேருமா டிமாண்ட் பண்ணுவோம் ..

இந்த விஷயத்திலே உன்னோட ஒத்துழைப்பு வேணும் சூசன் ! ´

அவள் பதில் ஏதும் சொல்லாமல் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள் .

அவன் , அவளைவிட்டு சற்று தள்ளியே நடந்து வந்தான்.

`தொரை ! என்னை ஒட்டியே வா... இப்ப நாம ரெண்டுபேரும் கப்பிள்ஸ் ... மத்தவங்களுக்கு ! `

நடப்பவர்கள் கூட்டம் குறைந்துகொண்டே வந்தது . இரவு ஒன்பது மணியிருக்கும் .

`இருட்டறதுக்கு பத்துக்கு மேலாகும்....சரி ..நான் பெட்ரூமுக்குப் போறேன் ...நீயும் போய்ப் படு ..`

இரவு வெகுநேரம் நீடிக்கவில்லை .

`குட் மார்னிங் `

`கெட்டப் ! ´

`டீ ரெடி `கிச்சனில் ஒலித்த ஜெர்மன் குரல் அவனை எழுப்பியது .

`சரியா இன்னும் ஒரு மணிநேரம் இருக்கு .. அவனும் நாயும் ரோட்டை கிராஸ் பண்ணறப்போ நாம வீட்டைப் பூட்டறோம் !`

எல்லாமே கிரமமாக நடந்தது.

`நாம ரெண்டு பேரும் இயல்பா நடக்கிறோம்.. அவன் யாரையும் கண்டுக்கமாட்டான் ! `

`மத்தவுங்க ? `

`அதுதான் பிரச்சனை ! யாரும் பாக்காதபோதுதான் சுடமுடியும் `

`அப்புறம் , நாய் ? `

`அதையும்தான் `

` அநியாயம் ! `

`அப்ப, முப்பது லட்சம் ? `

`சரி ..கொல்லாதே ! ´

பின்தொடர்ந்தார்கள் . நிலைமை சரியில்லை.. யார்யாரோ ஓடிக்கொண்டிருந்தார்கள். ஸ்டிக் வைத்துக்கொண்டு நடந்தார்கள். ஸ்ட்ராலரில் குழந்தையை போட்டுக்கொண்டு நடந்தார்கள். லானில் புட்பால் விளையாடிக்கொண்டிருந்தனர் சிறுவர்கள். ஆங்காங்கே சில வாலிபர்கள் பீர் பாட்டிலை வைத்துக்கொண்டு ஆட்டம். .

`என்ன சூசன் ... நடக்கிற காரியமா ...`

`நடந்துட்டுதானே இருக்கிறோம் ! `

`அப்ப , எப்ப சுடறது ? `

எப்படியோ ஐந்து நாட்கள் இப்படியே ஓடிவிட்டது. துப்பாக்கி ரெடி. பேஷண்ட் இன்னும் சாகவில்லை: பாஸ் கோபித்துக் கொள்வார்.

`நேத்து பாஸ் கூப்பிட்டார் ..`

`என்ன சொன்னே , சூசன் .`

`ரெண்டு நாள் கெடு .. எப்படியும் நாளைக்கு `

`ஓ.கே ..படுக்கலாம் `

அன்று இரவு தூக்கம் வராமல் தொரை புரண்டான். சூசன் நைட்டியில் இருந்தாள் . பால்கனிக் கதவு மூடியிருந்தது .

தொரை மெல்ல எட்டிப் பார்த்தான் .

கையில் சிகரெட் சுருங்கிக்கொண்டிருந்தது.இன்னொரு கரத்தில் செல்போன் .அடுத்த அப்பார்ட்மென்ட் இரண்டாவது தளத்தில் விளக்கு எரிவதும், அணைவதும் ..தொரை கண்ணாடி சன்னலைத் தட்டினான்.

திடுக்கிட்டுத் திரும்பினாள் சூசன் .

`என்ன ,, தூக்கம் வரலியா ? `

உக்கும் ... நீ இங்கே என்ன பண்ணற ?

` அதேதான் .. ஸ்மோக்கிங்தான் வழி `

வெளியே வானம் நிர்மலமாயிருந்தது.

`நாளைக்கு வெயில் அடிக்கும், ...எப்படியும் நமக்கு சாதகமாயிருக்கும் `என்றாள் சூசன்.

வெளியே நல்ல வெளிச்சம் .இரவு வெகுநேரம் தூக்கம் வராததால் தொரை சற்று அசதியாய் இருந்தான்.

` குட்மார்னிங் தொரை ! கெட்டப் .. டீ ரெடி..`

அவன் எழுந்து ப்ரஷ்பண்ணிவிட்டு, டீ குடித்தான் .

`பிரட் ,பட்டர் ,ஜாம் ..போதுமா ? முடிச்சிட்டு உடனே பார்க் கெளம்பறோம் `

`ஓ.கே சூசன் `.

அப்போது , யாரோ காலிங் பெல்லை அடித்தார்கள்.

தொரை எழுந்தான் . தயங்கினான் .

`தொரை .. யாருன்னு பாருங்க ,, அதுக்குள்ளே டிஹெச்செல் கொரியர்காரன் வரமாட்டானே. மே பி .?..`

தொரை கதவை மெல்லத் திறக்க, அங்கே ...நின்றுகொண்டிருந்த அந்த ஆளுக்கு அகல வாய்ச் சிரிப்பு... அருகே புசுபுசுவென்று ஆளுயர நாய். ..கையில் வாக்கிங் ஸ்டிக் !

கண்ணிமைக்கும் நேரத்தில் அலண்டு போன தொரையின் முதுகுப்புறம் அழுந்திய பிஸ்டல் வெடித்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.