சொந்தமண்ணில் அன்னியனாய் - பாவலர் கருமலைத்தமிழாழன்

அன்பான அண்ணாநீ சொந்த மண்ணில்

---- அடிமையாக; தம்பிநானோ அகதி யாக

முன்நிற்கும் மூத்தகுடி தமிழன் என்ற

---- முதுபெருமை பொதுவாய்நம் இருவ ருக்கும்

என்னையங்கே சிங்களனாம் அன்னி யன்தான்

---- ஏளனமாய் ஏதிலியாய்த் துரத்து கின்றான்

உன்னையிங்கே உங்களுக்குள் பகைமை யாலே

---- உரிமையினைப் பிறர்பறித்தே துரத்து கின்றார் !

மலைகாட்டைப் பொன்விளையும் நிலமாய் ஆக்கி

---- மணக்கின்ற தேயிலையில் செழிக்கச் செய்து

அலைகடலால் சூழ்ந்திருக்கம் இலங்கைத் தீவை

---- அவனியிலே நிமிர்த்தியோனை அன்னிய னென்றே

தலைவெட்டி முள்ளிவாய்க்கால் வேலிக் குள்ளே

---- தளையிட்டு விலங்கைப்போல் அடைத்து வைத்தார்

தலையிருந்தும் தன்மானம் இல்லா மல்நீ

---- தரமிழந்து வீழ்ந்துள்ளாய் பிறரின் காலில் !

இனமொன்றே மொழியொன்றே இரண்டு நாட்டை

---- இனிதாக ஆட்சிசெய்த சோழன் ஒன்றே

மனத்தினிலே சங்கநூலில் உரைத்தி ருக்கும்

---- மாண்பெண்ணி மகிழ்வதிலும் இருவ ரொன்றே

புனஉரிமை காப்பதிலே உயிரை ஈந்தும்

---- புலிபோலப் பாய்ந்துவீர மானம் கொண்ட

இனஉணர்வில் மட்டும்நாம் வேறு வேறாய்

---- இருப்பதால்நீ சொந்தமண்ணில் அன்னிய னானாய் !

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.