முதலில் சின்னதா ஒரு குறிப்பு:


நட்பா காதலா!!! ஆண் பெண் நட்புகள் பெரும்பாலும் ஒரு எல்லைக்கு மேல் விரிவடைவிதில்லை. அதையும் தாண்டி சில நட்பூக்கள் அழகாக இருக்கிறது. முதல் காரணம், நட்பு ஓரிடத்தில் காதலாக மலர்ந்து விடக் கூடும்.


“தெரியாத சாமிய விட தெரிஞ்ச பிசாசே மேல்” அப்டின்ற மாதிரி சில நட்புக்கள் அழகான வாழ்வில் இணைந்து விடுகிறார்கள்.


“என்னால உன்ன அப்படி நெனச்சி பாக்க முடியல”.. அப்படின்னு காதல் வெளிப்பட்ட நட்புக்கு தடையும். வருகிறது.


இவை இரண்டுமே ஓரிரு இழைகளில் வித்தியாசப்படும். காதலை சொல்லி ஆழமான நட்பை இழந்தவர்களும் உண்டு. நட்பு கெட்டு விடக் கூடாது என்று காதலை மறைத்து மறைந்தவர்களும் உண்டு, காமம் ஒன்று மட்டுமே நட்பையும் காதலையும் பிரிக்கிறது என்பது என்னுடைய எண்ணம்.


இந்த கதையும் அப்படி தான். ஆண் பெண் நட்பு சாத்தியம் இல்லைன்னு கண்டிப்பா நான் சொல்லல. ஆண்களுடன் அழகான நட்பு எனக்கும் இருக்கிறது. நட்பையும் தாண்டி ஒரு ஈர்ப்பு தோழன் அல்லது தோழி மீது வருவது காதலாகிறது. அப்படியான ஒரு காதல் கதை, அல்லது காதல் இல்லாத கதை.


இந்த கதையில் வரது எல்லாமே நிஜம் இல்ல. கற்பனைகளூடே ஒரு சில இடங்களில் நிஜங்கள் உண்டு. முழுக்க முழுக்க யாராலும் கற்பனைக் கதையை உருவாக்க முடியாது, அதே போல முழுக்க முழுக்க நிஜம்.


இந்த கதையில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில நிகழ்வுகள் சில சாயல்கள் மட்டுமே நிஜம்.

---------


ஹரி பிசினஸ் விஷயமாக பெங்களூரில் ஒரு அலுவலகத்திற்கு சென்ற போது அங்கே மதுவை பார்த்து அதிர்ச்சி அடைந்தான். அதிர்ச்சி என்றால் நீங்க நினைக்கற மாதிரி இல்ல, இல்ல நீங்க நினைக்கற மாதிரியும் இருக்கலாம். சந்தோஷம். கோபம். ஆச்சர்யம். எல்லாம் சேர்ந்த கலவை.


இவனை பார்த்து ஓடி வந்து கைகளை பிடித்துக்கொண்டாள். இல்லை. வழக்கம் போலவே நுனி விரல்களை பற்றினாள். கண்கள் கலங்கியது போல இருந்தது அவளுக்கு. சில வினாடிகள், ரெண்டு பேருக்குமே பேச்சு வரவில்லை.


"அவள் விரல் பிடித்து நடக்கும் போது விரல்களின் மேற்பாதியை அல்லது நுனி விரல்களை மட்டுமே, பட்டும் படாமல் பற்றிக் கொள்வாள். என் விரல்களுக்கு வலிக்குமா அல்லது அவளுக்கா என்று தெரியவில்லை. சில சமயங்களில் என் ஆட்காட்டி விரலை மட்டும் கெட்டியாய் பற்றிக் கொள்வாள்." - ஹரி நினைத்துக் கொள்வான்


சட்டென்று அவளை அணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது . அவனுக்கு தோன்ற மட்டுமே செய்தது. அவள் அணைத்துக்கொண்டாள். ஹரிக்கு கொஞ்சம் டென்ஷன். சுற்றும் முற்றும் பார்த்தன். பன்னாட்டு நிறுவனத்தில் இதெல்லாம் ஒண்ணுமே இல்ல அப்டின்னு எல்லாரும் கம்ப்யூட்டருக்குள்ளும் மொபைலுக்குள்ளும் தலையை விட்டுக் கொண்டு.


முழுதாய் ஒரு நிமிடம் சென்றிருக்கும்.


“மது.... வாட் எ சர்ப்ரைஸ்!!”


“எனக்கும் தான்டா. வாயேன்.. இங்க கீழ காபிஷாப் இருக்கு. அங்க போலாம்.“ என்று அவன் கையைப் பற்க்றி கொண்டு செல்ல முயன்றாள்.


“ஹே எஸ்.எம். இஸ் தட் யுவர் பாய்ஃபிரெண்ட்?” – அவளுடன் வேலை செய்பவன் போல. இவனும் மீட்டிங்கில் இருந்தான்.


“ஹாஹஹா. யெஸ் கிஷோர் . ஹி இஸ் மை எக்ஸ்..” -


“ஒ.. மை காட். மது.. என்னது இது? மிஸ்டர்.. ஐயாம் நாட் ஹெர் எக்ஸ்..”


மது அவனை இழுத்துக்கொண்டு சென்றாள். காபிஷாப்பில் அமர்ந்து, அவனை இரண்டு நிமிடம் முழுவதுமாய் பார்த்தாள்.


“நம்பவே முடிலடா. நீ எங்க இங்க?” – சந்தோஷமாய் கூறினாள். கண்கள் மின்னியது. கவனித்தான்.


“ஜஸ்ட் ஒரு பிசினஸ் டீல்.” – சொன்னான் வேறு எங்கோ பார்த்துக் கொண்டு. ச்சே.. இவள பாத்து எவ்ளோ நாளாகுது. கோபம் ஒரு பக்கம். சந்தோஷம் ஒரு பக்கம். அவனைக் கொன்றது.


“என்ன எங்கயோ பாக்கற. மை காட். எனக்கு இன்னுமும் நம்ப முடியல. ரொம்ப ஹேப்பியா இருக்கு.” அவனைக் கிள்ளினாள். லேசாக குரல் கம்மியது. அவன் பதில் சொல்லவில்லை.


அவளே தொடர்ந்தாள். அதற்குள் அவன்..


“மது.. எனக்கு ஃப்ளைட்டுக்கு டைம் ஆகுது. நான் ஊருக்கு உடனே கெளம்பனும். நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம். ஃப்ரீயா வரேன். இல்லன்னா நீ சென்னைக்கு வரும் போது வா.” அவன் கார்டை எடுத்து குடுத்தான்.


மதுவின் முகம் வாடி விட்டது. அவள் முறைத்துக் கொண்டு, கோபித்துக் கொண்டு பேசவே வேண்டாம் என்று சைகை செய்து போய்விட்டாள். தன்னுடன் ஏர்போர்ட் வரைக்கும் வருவாள் என எதிர்பார்த்தான்.

---------


இவர்கள் காதலர்கள் இல்லை. ஆனால் இவர்களுக்குள் காதல் இருக்கிறதா என்று இவர்களுக்கே தெரியவில்லை.


மதுமிதா என்னும் மதுவும், ஹரிகிருஷ்ணா என்னும் ஹரியும் ஒன்றாய் படித்தவர்கள். பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ். கேம்பஸ் இண்டர்வ்யூவில் வேலை கிடைத்து கிட்ட தட்ட ஒரு வருட ட்ரைனிங் பீரியடில் ஒரே ப்ரான்ச்சில் ஒன்றாக வேலை செய்தவர்கள்.


பிறகு இவன் மேல்படிப்பு படிக்க முடிவெடுக்கவும் , அவள் ஆறு மாத ஆன்சைட்டிலும் காணாமல் போனவள். இப்பொழுது மொத்தமாக ஐந்து வருடங்கள் கழித்து பார்க்கிறான். இவள் ஆன்சைட் சென்ற சில வாரங்கள் தொடர்பு கொண்டு பேசினாள். வாரம் ஒரு முறை என ஆனது. ஒரு கட்டத்தில் ஒன்றும் இல்லாமலே போய் விட்டது.


மதுவை பற்றி ஹரி - அவனின் நினைவுகள்

அழகான நேசம் அது. ஆழமான நட்பு. இந்த அளவுக்கு ஒருவர் மேல் அன்பு செலுத்த முடியுமா என்று அவனுக்கு பயம். அவன் மேல மதுவுக்கு அவ்ளோ ப்ரியம். அவனுக்கும் மது மேல. ஆனால் எப்போதுமே சொன்னதில்லை. அவள் எங்கோ தஞ்சாவூர் பக்கத்தில் இருந்து சென்னையில் படிக்க வந்தாள். பேரழகி இல்லையென்றாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு. காலேஜ் ஹாஸ்டலில் தங்கி படித்தாள்.


மதுகிட்ட அவனுக்கு புடிச்சது அழகான ட்ரஸ் சென்ஸ். எல்லாரும் பண்ற மாதிரி இருக்காது. அவளுக்கு எது பொருந்துமோ அதை அழகாக உடுத்துவாள். ரொம்ப அட்ட்ராக்டிவ்வா டிரஸ் பண்ணுவா. அழகா இருக்கும் பாக்கறதுக்கு. இது எல்லாமே வந்த நாள்லேந்து ஹரி பாத்துட்டே வந்தான்.


எல்லாரிடமும் எளிதாக பழகும் தன்மை மது கிட்ட நிறையவே இருக்கு. ரொம்ப வாயாடி. ஹரி கிட்ட ஆரம்பத்துல அவ்வளவு ஈசியா மது பழகல. அதனால அவனுக்குள் சின்ன குழப்பம். அவளுக்கு புடிக்கல போலன்னு. ஆனால் எல்லாமே மாறி போச்சு. ஒரு வருஷம் முடியறதுக்குள்ள இவங்க ரெண்டு பேருக்குள்ள அவ்ளோ நெருக்கமான நட்பு வளர்ந்தது.


ஆரம்ப நாட்கள்ல எல்லாரும் அவங்க ரெண்டு பேரும் காதலிக்கறாங்கன்னு நிறைய பேச்சு. மது பெரிசா அத கண்டுக்கல. ஆனா ஹரிக்கு லேசான நெருடல். மூன்றாம் ஆண்டு முடிக்கும் போது அந்த பேச்சு எல்லாமே மாறி போச்சு. இவங்கள மாதிரி ஃபிரண்ட்ஸ் இல்லன்னு காலேஜே அவ்ளோ பொறமை பட்டது .


நிறைய பேர் அவன் கிட்ட கேட்ருக்காங்க. “என்னடா நீ. அவள போயா புடிச்சிருக்கு?” டேய் லூசு உங்கள மாதிரி தாண்டா அவ.. என்று சொல்லி இருக்கிறான்.


“இதோ பாரு மனோஜும் நானும் பத்து வருஷம் ஒண்ணா படிச்சோம். எனக்கு மனோஜ் எப்டியோ அப்டி தான் மதுவும்” – என்றான்.


“மது பாக்க தான் ஜாலி. தப்பா எதாவது பேசினா... மெக்ல ஒருத்தன் செம்மையா வாங்கி கட்டிருக்கான்.” – “ஒழுங்கா பேசு. "வன் எதாவது பேசி இருப்பான். அதான் இவளும் திருப்பி பேசி இருக்கா.” ஹரி எப்போவும் அவளுக்கு சப்போர்ட்


“நல்லா தான்டா இருக்கா. ஆனா..” – மூடிட்டு போ.. உன்ன எவனும் ஒபினியன் கேக்கல.


“மதுலாம் நல்ல ஃபிரண்ட் டா. அவள அதுக்கு மேல நீ எப்படி நெனச்சி பாக்கற?” – என்ன நெனச்சி பாக்க சொல்ற. உன்ன எதாவது நெனச்சி பாக்கட்டா?


இப்படி அவன் நண்பர்கள் ஒவ்வொருவரும் மதுவைப் பற்றி ஒவ்வொரு கருத்து, அபிப்ராயம் இருக்கும். இது மதுவுக்கும் தெரியும். எதையும் காதில் வாங்கிக் கொள்ள மாட்டாள்.


“அவன என் கிட்ட வந்து பேச சொல்லு. நான் பதில் சொல்லிக்கறேன்” - இது தான் அவளோட பதில்.


"நீ ஏண்டி என்கிட்டே மட்டும் இவ்ளோ க்ளோசா இருக்க?" அவளை பல முறை சீண்டி இருக்கிறான்.


அலட்டிக்கொள்ளாமல் பதில் சொல்வாள். " நீ பெரிசா சீன்லாம் போடல. நேச்சுரலா இருக்க. அதான்."


எத்தனை முறை கேட்டாலும் இதே பதில்.


*****

நான்காம் ஆண்டு தொடக்கம் - ஹரி நான்கு நாட்களாக கல்லூரிக்கு வரல. நான்காம் ஆண்டு. பெரிசா லீவ்லாம் போட்டது இல்ல. ஹரிய பத்தி யாருக்குமே தெரியல. ஒரு நாள் ஹரியின் வீட்டில்...


ஹாலில் டிவியில் ஏதோ கவனமில்லாமல் இருந்தான். வாசலில் மதுவைப் பார்த்து கொஞ்சம் அதிர்ச்சி. உள்ளே அழைத்தான்.


"ஹரி.. என் மேல என்ன கோவம்? வெளியில் இருந்தே கேட்டாள்" - மதுவின் கேள்விக்கு பதில் இல்லை அவனிடம்.


உள்ள வரியா.. – கேட்டான்


"சரி... உன்கிட்ட விளக்கம் கேட்டுத் தான் தெரிஞ்சிக்கணும்னு அவசியம் இல்ல ஹரி. ஆனா ஏதோ கஷ்டமா இருக்கு. அப்படியே நீ விலகி போனாலும் எதாவது ஒரு காரணம் இருக்கும். எப்படி இருந்தாலும் நீ எனக்கு எப்போவும் போல தான். நான் போறேன்" என்றாள்.


"ஏன் இப்போ எதையோ ஒளர்ற? மொதல்ல உள்ளா வா" – ஹரி பதறினான். அவள் ஏதும் பதில் சொல்லல. இழுத்துக் கொண்டு வந்தான். ஹாலில் அமர்ந்து..


"சொல்லுட மது. என்ன சாப்படற" என்றான்.


கொஞ்ச நேரம் கழிச்சி "நீ வேற ப்ராஜக்ட் செலக்ட் பண்ணிருக்கேன்னு எனக்கு தெரியும். ஆனா ரீசன் தெரியல. நம்ம ப்ரொபசர் கூட நம்மள ஒரே ப்ராஜக்ட், ஒரே டீம்ல தான வொர்க் பண்ண சொன்னார். நீ தான் வேணாம்னு சொன்னியாமே." மது சொன்னாள். அவன் பேசவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


"எல்லாம் சரி ஹரி. நீ ஏன் நித்யா டீம்ல ஜாயின் பண்ண?"


"என்னடி பொறாமையா இருக்கா?" – சிரித்துக்கொண்டே கேட்டான்


"“மண்ணாங்கட்டி. எனக்கு ஒரு மண்ணும் இல்ல. ஆனா காரணம் புரிஞ்சிக்க முடியல. சட்டுன்னு நீ ரொம்ப தள்ளி போய்ட்டா மாதிரி இருக்கு. அதுவும் நித்யா.. உங்களுக்குலாம் ஆகவே ஆகாதே. அவ கூட போய்..” – மது


"ஏன். உன் கூட மட்டும் தான் இருக்கணுமா? அப்படி எதாவது ரூல் இருக்கா என்ன?" – ஹரி


"ஹரி.. எனக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணனும்னு அவசியம் இல்ல." - குரலில் உயிர் இல்லை.


அவளைத் தவிர்க்கவே முயன்றான் ஹரி. காரணம்!!!


அவர்களின் மூன்றாம் ஆண்டு பரீட்சை முடிந்ததும், சில தினங்களில் அவர்களின் வகுப்புத் தோழனின் அக்காவிற்கு திருமணம். மதுவை கேட்டதற்கு ஊருக்குப் போனால் வரமாட்டாள் என்று கூறி விட்டாள். ஆனால் திருமண வரவேற்பில் அவனுக்கு அதிர்ச்சி. எப்படி நீங்க முதல் வரியில் ஹரி அதிர்ச்சி ஆனதை படிச்சிங்களோ அதே போல.


இவன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவன் அறியாமல் அருகில் வந்து நின்றுக் கொண்டு, விரல்களைப் பிடித்துக் கொண்டாள். ஒரு கணம் அவனுக்கு புரியவில்லை. அதிர்ச்சி. கேலி செய்து சிரித்தாள்.


பெண்கள் இயல்பாகவே அழகு. அன்று அவள் பேரழகியாக இவன் கண்களுக்கு தெரிந்தாள். இன்னும் அவனால் அன்று வந்த அவள் பிம்பத்தை மறக்கவே முடியாது. கருநீல புடவையில் தேவதையாய் தெரிந்தாள். மதுவை முதல் முறை வேறு ஒரு கண்ணோட்டத்தில் பார்த்தான்.


ஆமாம். அவனின் தோழனாக இல்லாமல் சாலையைக் கடந்து செல்லும் ஒருவனாய், பயணத்தில் சந்தக்க நேரும் ஒருவனாய் புதிய பார்வையுடன் அவளைப் பார்த்தான். மது வேறொரு பெண்ணாய் தெரிந்தாள். முதல் முறையாக மதுவை வேறு கண்ணில், அல்லது உண்மையான கண்கள் கொண்டு பார்க்கிறான்.


அது ஒரு ஆணுக்கான உணர்ச்சியா அல்ல அவளிடம் மட்டும் உண்டானதா என்று அவனால் பிரித்து உணர முடியவில்லை. பல பெண்களை எதார்த்தமாக கடந்து சென்றிருக்கிறான். பலரை காணும் போது கடந்து செல்லும் போது அவனுள் ஹார்மோன்கள் ஊஞ்சல் ஆடி இருக்கின்றன. அவளிடம் அன்று அப்படி உணர்ந்தான். ஆனால் எல்லாம் சேர்ந்த கலவையான ஒரு உணர்ச்சி. இது சரி இல்லை, அவ எதாவது கண்டு பிடிச்சிருவா. என்று பயந்து சரியாக பேசாமலே சென்று விட்டான்.


அதன் பிறகு மதுவை எப்ப பாத்தாலும் அவனுக்குள் வேற மாதிரி உணர்வுகள். அதனாலே விலகிப் போக நினைத்தான். லவ் பண்றேன்னு போய் சொன்னா என்ன சொல்லுவான்னு அவனுக்கு தெரியும்.


அவன் அவளை அந்த கோலத்தில் நினைத்துக் கொண்டிருக்க. மதுவின் குரலால் மீண்டும் சுய நினைவுக்கு வந்தான்.


"சரி. அதெல்லாம் விடு. நீ என்ன வேணா பண்ணு. என்னாச்சு உனக்கு? சொல்லாம கொள்ளாம ஏன் லீவ் போட்டுட்ட. எல்லாரும் என்ன தான் கேக்கறாங்க. ஏதாவது பிரச்சனையா? என் கிட்ட கூட சொல்ல முடியாத மாதிரி?"


ஒண்ணுமில்ல என்று முகத்தை திருப்பிக் கொண்டான். அவன் பக்கம் சென்று முகத்தை நிமிர்த்தினாள். அவள் கண்களை பார்ப்பதை தவிர்த்தான். அவள் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.


"டேய். நெஜமாவே என் மேல எதாவது கோபமா? எதாவது இருந்தா சொல்லிடு."


அதெல்லாம் ஒண்ணும் இல்ல.. சோபாவில் இருந்து எழுந்து ஜன்னல் அருகில் சென்றான். சில நிமிடங்கள் கழித்து, அவன் அருகில் சென்று தோளில் கை வைத்தாள். இங்க பாரேன் என்று அவனை அணைத்துக்கொண்டாள்.


"யார் அந்த பொண்ணு. என்கிட்டே சொல்ல மாட்டியா?"


சில நொடிகள் தடுமாறி, பிறகு எதுவும் பேசாமல் அவள் தோளில் முகம் புதைத்தான். சில நிமிடங்களில் இறுக்கம் தளர்ந்தது. அவள் விடுவித்துக்கொண்டாள். அவளை பார்த்து சிரித்தான்.


"நீ நித்யா டீம்லேயே இரு. நார்மலா இரு. ஏன் இப்படி மூஞ்சிய வெச்சிருக்க. நா வேணும்னா இனிமே உன்கிட்ட பேசல. இதோட கெளம்பறேன்." – சிரித்துக்கொண்டே கூறினாள்.


முறைத்துக் கொண்டே கொன்றுவேன் என்று சைகை செய்தான்.


வெறுமையாய் ஒரு பார்வையை வீசினாள்.


“சரி நீ சாப்டியா? எனக்கும் பசிக்குது. எங்கயாவது சாப்ட போலாமா?” - கேட்டான்


கிளம்பினார்கள். அவனால் எதுவும் பேச முடியவில்லை.

******


மதுவின் மேல் என்ன விதமான உணர்வு என்று தெரியாத நிலையில் கல்லூரி முடிந்தது. ரெண்டு பபே ரும் ஒரே கம்பெனியில் கேம்பஸ்ஸில் வேலை. ஆனால் இவையெல்லாம் தாண்டி, ஹரிக்கு வெளிநாட்டு படிப்புக் கனவு இருந்தது. அதுவும் பெரிய காரணம். அந்த ஒரு காரணத்தினாலே மதுவிடம் எதுவும் சொல்லவில்லை.


எப்படியும் படிச்சி முடிச்சு ரெண்டு வருஷத்துல வந்துறலாம். அப்புறம் பாக்கலாம் அப்டின்னு எல்லாமே அவனுக்குள்ளே புதைத்துக் கொண்டான்.


அவன் எம் எஸ் படிப்பதற்கு எல்லாம் தயாராகி விட்டது. வேலையை ரிசைன் செய்து விட்டு கிளம்பத் தயாரானான். அதே சமயம் மதுவிற்கும் வேலை பெர்மனென்ட் ஆனது. அதோடு ஆறுமாத ஆன்சைட் ட்ரைனிங்கும்.


அதுவரைக்கும் பிரியப் போகிறோம்னு பெரிசா ஒண்ணுமே தெரியல. அவள் முதலில் கிளம்பினாள். அவன் சில வாரங்கள் கழித்து. கிளம்புவதற்கு முதல் நாள் மாலை கடற்கரையில் சிறிது நேரம் எதுவும் பேசமால் இருந்தார்கள். உயிரே இல்லாமல், ஏதேதோ உளறி, சம்மந்தமே இல்லாமல் பேசி. கொஞ்சம் நேரம் அலையில் நின்று, கொஞ்ச நேரம் மணலில் உலாவி விட்டு கிளம்பினாள்.


ஹரி மதுவிற்கு ஒரு கிஃப்ட் குடுத்தான். பிரித்துப் பார்த்தாள். மொபைல் ஸ்டாண்ட், விரல்களின் வடிவில். மெலிதாய் சிரித்துக் கொண்டாள்.


அவ்வளவு தான். அதோடு இப்போ தான் அவளை பார்த்தான். மது கிட்ட காதலிக்கறேன்னு சொன்னா எப்படி எடுத்துப்பா அப்படின்ற நினைப்பே அவனை ரொம்பத் தள்ளி வெச்சது .


பேசும் போது விரல்களை ஒரு மாதிரி அவளின் நுனி விரல்களை நீவி விடுகிற, ஒவ்வொரு விரலாய், லேசாய் நீவிக் கொண்டே பேசுவாள். அந்த பழக்கம் மாறவே இல்லை.


-------------


பெங்களூர் வந்து சென்ற சில நாட்களுக்கு பிறகு... ஹரிக்கு தெரியும், மது அழைக்க மாட்டாள் என்று. அவனும் எதுவும் பேசவில்லை. ஒரு மாதம் கழித்து, அன்று பெங்களூரில் சந்தித்த பிறகு, இப்பொழுது சென்னையில். அவள் சென்னை பிரான்ச்சில் ஒரு வேலையாய் வந்திருக்கிறாள். மதுவே ஹரியை அழைத்து அவள் வருவதை சொன்னாள். இதோ அவன் வந்து காத்திருக்கிறான். ஹரி மதுவை மொபைலில் அழைத்தான்.


உன் வேலை எல்லாம் முடிஞ்சதா? – ஹரி கேட்டான்


இன்னும் இல்ல.. – மது


எவ்ளோ நேரம் ஆகும்


இன்னும் ஒரு ஒன் ஹவர்.


இவ்ளோ நேரம் ஆகும்னு முன்னாடியே சொல்லலாம்ல


நான் தான் வொர்க் முடிச்சிட்டு கால் பண்றேன்னு சொன்னேன்ல. நீ தான் அவசரப்பட்ட.. ஏன் இப்போ என்ன?


ஒண்ணும் இல்ல.


சரி. உனக்கு வேலை இருக்குன்னா நீ கெளம்பு. அப்றோம் ஒரு நாள் பாத்துக்கலாம், என்றாள். பதில் இல்லை.


ஹலோ.. இருக்கியா? இல்ல கால் கட் பண்ணிட்டயா?


இருக்கேன் சொல்லு. – கொஞ்சம் கடுப்பா சொன்னான்.


என்ன ஆச்சு. இஷ்டம் இல்லன்னா மொதல்லையே சொல்லிருக்கலாமே. இவ்ளோ கடுப்பா ஏன் பேசற. கொஞ்சம் திரும்பி பாரு. நான் வந்து பத்து நிமிஷம் மேல ஆகுது.


லூஸு நீ. எதுவும் தெளிவா சொல்ல மாட்டியா.


நீ கூட தான் சொல்லவே இல்ல.


சில நொடிகள் இருவரும் தடுமாறினார்கள். சேர்ந்து புன்னகைத்தனர்.

சரி... சாப்டியா நீ?


நீ இன்னுமும் அப்டியே தான் இருக்க, அதே மாதிரி பெரிய மனுஷன் மாதிரி.. - அவனை பார்த்து சிரித்தாள்


நீயும் தான். (ஆனா இன்னும் அழகா. ஏதோ கேட்க நினைத்தான். ஆனால் இல்லை)


இன்னுமும் என்னடா அப்படி ஒரு யோசன? நா அப்ராட் போறதுக்கு முன்னாடி பாத்த அதே மூஞ்சு.. அதே கொழப்பம்.


"எல்லாத்துக்கும் கவுன்டர் தராத. போலாம் வாடி" எதுவும் பேசாமல் அவன் கார் ஏறி, அவளுக்கு கதவு திறந்து விட்டான்.


"நீ இன்னிக்கே ஊருக்கு போறியா?" - கேட்டான். மது ஆமாம் என்றவுடன் அவன் முகம் கருத்தது. சட்டென்று ஒரு ஓரமாக காரை நிறுத்தினான்.


"இப்படி ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம் மீட் பண்றதுக்கா இவ்ளோ நேரம் வெய்ட் பண்ண வெச்ச?" – கோபமும் ஏமாற்றமும் அவனிடம்


"அன்னிக்கு ரெண்டு நிமிஷம் கூட நீ இல்ல. ஹரி.. பசிக்குது ஏதாவது ரெஸ்டாரன்ட் போலாமா? இன்னும் எதுவும் சாப்டல. இல்ல நீ சண்ட தான் போடணும்னா நான் ரெடி."


ஏதும் பேசாமல் வண்டியை எடுத்தான். ரெஸ்டாரன்ட்டில் நுழைந்தவுடன் சின்னதா ஒரு அதிர்ச்சி. சுற்றும் முற்றும் பார்த்தாள். அதிகமாக கூட்டம் இல்லை. மொத்தம் நான்கு பேர் மட்டுமே. ஆனால் அழகான அமைதியான இடம்.


"என்னடி பாக்கற. இந்த டைம்ல கூட்ட இருக்காது. ஈவினிங் தான் ரஷ் . இங்க கொஞ்சம் ப்ரீயா ரிலாக்ஸ்டா இருக்கும்" – என்றான்


"அப்போ நிறைய பொண்ணுங்கள கூட்டிட்டு வந்துருக்க போல" – கேட்டாள்


இது என்னோட ரெஸ்டாரண்ட் என்று அவன் சொன்னவுடன் சந்தோஷமாக அவனைப் பார்த்தாள். பதில் சொல்லாமல் மெனு கார்ட் அவளிடம் தந்தான்.


"ஹரி ரொம்ப பசிக்குது. உனக்கு தான் தெரியுமே. மெனு கார்ட் குடுத்தா நான் செலெக்ட் பண்றதுக்குள்ள விடிஞ்சிரும்னு. ப்ளீஸ் நீயே எதாவது ஆர்டர் பண்ணு. எனக்கு என்ன பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும்." – சிரித்தாள்.


"ம்ம்ம்ம்.. பண்றேன். ஆனா உனக்கு சில விஷயங்கள்ல என்ன பிடிக்கும்னே தெரியல மது."


“இதுக்கு ஒரு மூவி டையலாக் சொல்லட்டா?” என்று கேட்டு, அவன் பதிலுக்கு வெயிட் பண்ணாம “புடிச்சத மாத்திக்கற பழக்கம் எனக்கு இல்ல.” என்றாள்.


ஏன் இன்னுமும் கல்யாணம் பண்ணிக்கல? – ஹரி கேட்டான்


உனக்கு எப்படி தெரியும்? – மது சலனமில்லாமல் கேட்டாள்


அதான் உன் ஆபீஸ்ல கேட்டானே அந்த தாடிக்காரன்.


ஓ.. அது வெச்சு கல்யாணம் ஆகலன்னு முடிவு பண்ணிட்டயா? – கண்ணடித்தாள்.


ஹரி முகம் மாறியது. “என்னடி ஒளர்ற?”


“அதே கேள்வி உன்கிட்ட கேட்கட்டா?” – சிரித்துக்கொண்டே கேட்டாள்.


அதுக்கு அப்றோம் எதுவும் பேசாம சாப்ட்டு ஹாண்ட் வாஷ் பண்ண மது போனாள். அப்போ ஒரு பொண்ணு வந்து, “ரொம்ப ஹாப்பியா இருக்கு உங்கள பாக்க. ஹரி இஸ் எ ஜெம். நான் மிஸ் பண்ணிட்டேன். உங்கள ரொம்ப நல்லா பாத்துக்குவார்.” என்று ஏதேதோ சொலிட்டு போய் விட்டாள்.


ஹரி.. யார் அந்த பொண்ணு..


அவங்க பேர் சூர்யா.


“ஐயோ.. எனக்கு முடியல. ஓ மை காட்..” அடக்க முடியாமல் சிரித்தாள். “அந்த பொண்ணு.. நீயும் நானும்.. சத்தியமா என்னால முடியல.” கண்களில் நீர் வழிய சிரித்தாள். அவன் அமைதியாய் புன்னகைத்தபடி பார்த்துக் கொண்டிருந்தான். சட்டென்று நிறுத்தினாள்.


“நீ நெனச்சிட்டு இருந்தியே. எனக்கு மேரேஜ்க்கு பாத்த பொண்ணு தான். எல்லாம் ஒகே. என்ன வழக்கம் போல லவ். என்கிட்டே சொல்லி இருக்கலாம். நல்லா தான் பேசிட்டு இருந்தா. கல்யாணத்துக்கு ரெண்டு நாள் முன்னாடி ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு.... சரி விடு.” –


மதுவிற்கு அதிர்ச்சி.


“இப்போ தான் பாத்தியே. அம்மா அப்பாக்கு ரொம்ப அவமானமா போச்சு. அதுக்கப்றம் எனக்கும் பெரிசா இன்ட்ரஸ்ட் இல்ல. நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லல.” – ஹரி


“நான் ஒருத்தர லவ் பண்ணேன். ஆனா அது முடியல. அப்றோம் யாரையும் பிடிக்கல” – என்றாள் சாதாரணமாக. அவனுக்கு அதிர்ச்சி. முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.


“யார லவ் பண்றேன்னு கேக்க மாட்டியா ஹரி?”


அவனுக்கும் ஆசை. ஆனால்......


“என்ன மது சொல்ற. எனக்கு புரியல..”.


“நான் லவ் பண்ணது எனக்கே புரியல. சரி அதெல்லாம் விடு. ரொம்ப பழைய கதை. உன்ன போய் மிஸ் பண்ணிட்டாளே.. அன்லக்கி அந்த பொண்ணு.”


“ஆனா...” ஹரி ஏதோ சொல்ல வந்து நிறுத்தினான்


“என்ன ஹரி?”


“ஒண்ணுமில்ல விடு.”


அவளைப் பார்க்காமலே பதில் சொன்னான். தவிப்பும் தடுமாற்றமும்.


“ஹரி உனக்கு வேலை ஒண்ணும் இல்லையே?” – மது கேட்டாள்


“அது பத்தி உனக்கு என்ன?” – வெறுமையாய் பதில் சொன்னான்


“நான் உன்ன மீட் வந்தது பிடிக்கலையா? நா வேணும்னா கெளம்பறேன்.”


அவனுக்குள் குழப்பமாய் பல உணர்வுகள். எழுந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான். “ஹே மது, (அவள் தலையில் தட்டி) ப்ராமிஸா அப்டிலாம் ஒண்ணும் இல்ல”


அவனையே பார்த்தாள். “ஏன் என்ன பாத்தா ஓடி ஒளியற? அன்னிக்கு கூட அப்டி தான். இன்ஃபாக்ட் உன்னோட ஏர்போர்ட் வரைக்கும் வரலாம்னு நெனச்சேன்.” அவனுக்கு லேசான அதிர்ச்சி. ஆனால் பதில் சொல்லவில்லை. அவளிடம் மாட்டி தவிப்பது போல உணர்ந்தான்.


“சரி. கொஞ்ச நேரம் பீச்க்கு போலாமா. உனக்கு வேற ஒண்ணும் வேல இல்லன்னா. இருந்தா கிளம்பலாம்.” – மது


போலாம்.. கிளம்பினார்கள்.


கொஞ்ச நேரம் அலைகளை வெறித்துக் கொண்டு இருந்தார்கள். தர்மசங்கடமான மௌனம்.


“ஹரி நான் அங்க இருக்கும் போதே வேற ஜாப்ல மாறிட்டேன். வீட்ல நிறைய பிரச்சனை. இப்போ தான் ஆறு மாசம் முன்னாடி தான் இங்க வந்தேன். உன்ன தேடினேன். அப்போ தான் உனக்கு மேரேஜ் ஆகிருச்சுன்னு சொன்னாங்க.” – மது விரல்களை பார்த்தபடியே பேசினாள்.


“வீட்ல எல்லாரும் எப்டி இருக்காங்க மது? அப்பா, அண்ணன்?” – ஹரி கேட்டான்.


“அப்பாக்கு கொஞ்சம் முடியல. அண்ணன் அண்ணி குழந்த எல்லாம் ரொம்ப நல்லா இருக்காங்க. நேத்து பாத்துட்டு தான் வந்தேன்.”


ஹரிக்கு ஒரு போன்கால்.. அவசரம் போலும்.


சிரித்துக்கொண்டே கேட்டாள். “எங்கயாவது போகனுமா?”


“ஆமா மது. உன்ன எங்க டிராப் பண்ணனும்?”


“நான் நாளைக்கு தான் போறேன்.” – சொன்னாள்


“எதையுமே ஒழுங்கா சொல்ல மாட்டியா நீ? “– கோபமாக கேட்டான். “நா ஊர்ல இல்ல. விடிகாலைல பிளைட். இப்போ தான் கன்ஃபார்ம் ஆச்சு.”


பெரிய ஏமாற்றம் அவள் முகத்தில்.


“சரி. அது பத்தி அப்றோம் பேசலாம். இப்போ நீ எங்க தங்க போற?”


“தெரியல. ஹரி! நான் எந்த பிளானும் பண்ணல.”


“உன் பேக் எதுவும் எடுத்துட்டு வரல?”


“சரி விடு. நான் இன்னிக்கே கிளம்பறேன்.” – பெரிய ஏமாற்றம் மதுவிடம்.


“ஸாரி மது. இது ரொம்ப இம்பார்டன்ட். என்னால மிஸ் பண்ண முடியாது.”


“நீ கொஞ்சம் கூட மாறவே இல்ல ஹரி. பரவால்ல. நா திரும்ப போறதுக்கு முன்னாடி வரேன். அப்போ கொஞ்சம் அப்பயின்த்மென்ட் குடுங்க. ஒகே வா?” – இயல்பாய் கேட்டாள்..


“எங்க போகணும்? நான் டிராப் பண்றேன்.” – ஹரி. அவன் கண்களை உற்றுப் பார்த்தாள். அதில்

கவலை, அன்பு, துக்கம், ஆதங்கம் எல்லாமே இருந்தது.


“ம்ம்.. வேணாம்.. யு கேரி ஆன். நான் பாத்துக்கறேன் ஹரி.”


மீண்டும் மௌனம். மது... அவன் குரலுக்கு நிமிர்ந்து பார்த்தாள். கண்கள் லேசாக கலங்கி இருந்தது.


“வீட்டுக்கு போலாம் வா. உன் பேக்ஸ் எங்க இருக்கு?


இல்ல ஹரி. நீ.. கெளம்பு. நான்...


அவள் அருகிலே அமர்ந்து அவளைப் பார்த்தான். காற்றில் ஆடிய முடியை ஒதுக்கி விட்டான். மது.. ஏன் மது இவ்ளோ பொய்சொல்ற? – நிதானாமாக கேட்டான்.


சட்டென்று எழுந்து தூரத்தில் ஆர்பரிக்கும் கடலையும் அலைகளையும் பார்த்தாள்.


“உன் அப்பா போனது..” – ஹரி கேட்டான்.


அவள் கண்களில் கண்ணீர். “ஸாரிடி. உன்ன ஹர்ட் பண்ணனும்னு கேக்கல.” போலாம் என்று காரை நோக்கி சென்றாள். பின்னாடியே இவனும். காரில் அமர்ந்தவுடன்,


“நீ ஏன் அப்போ இல்லாம போன? நீ இருந்திருந்தா..” அவள் பேச முடியாமல் மடங்கி அழுதாள்.


“என்ன ஆச்சு. சொல்லு மது. யு வில் ஃபீல் பெட்டர்.”


“திடீர்னு அப்பா போய்ட்டார்னு நியூஸ் வந்துது. உனக்கு தான் மொதல்ல காண்டாக்ட் பண்ணேன். ஆனா நீ எங்கயோ டூர் போய்ட்டேன்னு சொன்னாங்க. கெஞ்சி கூத்தாடி வந்தேன். அந்த டைம்ல அண்ணன் ஏதோ பொண்ண லவ் பண்றேன்னு, அவங்கள எப்போவோ கல்யாணம் பண்ணிட்டேன்னு ஒரே தகராறு. அப்பா செத்து போன அஞ்சாவது நாள்ல அவன் போய்ட்டான். அப்பாவோட காரியம் கூட ஒழுங்கா பண்ண முடியல. பிசினஸ், அண்ணாவோட வேலைன்னு நிறைய விஷயத்துக்கு அப்பா நிறைய கடன் வாங்கி இருந்தார். லோன்ல இருந்த வீடு மீட்கணும்னு அப்பா சொல்லிட்டே இருந்தார். அவன ரொம்ப நம்பினார். நான் அனுப்பின காசுல கொஞ்ச கொஞ்சமா எல்லாம் சரி பண்ணிட்டு வந்தார் போல. அண்ணன் பாதி காசுக்கு மேல ஏமாத்தி இருக்கான். அத கேக்க போய் தான் சண்ட வந்து அப்பா....” அழட்டும் என்று அமைதியாக விட்டான். பத்து நிமிடங்கள் கழித்து அமைதியானாள்.


“அப்றோம் ஏன் எனக்கு பேசவே இல்ல? நான் இருக்கறது மறந்துட்டியா? இல்ல என்னையே மறந்துட்டியா” – ஹரியுன் குரலில் ஆதங்கம். வறண்ட சிரிப்பை உதிர்த்தாள்.


“இல்ல ஹரி. ஒரே நாள்ல அனாதை ஆகிட்ட மாதிரி பீலிங். என்ன பண்றதுன்னே தெரில. அம்மா செத்தப்போ கூட அவ்ளோ ஒரைக்கல டா. அப்பா இல்லன்ன உடனே எல்லாமே போயிருச்சு. யாரோ சொந்தம்னு வந்து போயிட்டு இருந்தாங்க. எல்லாம் யோசிச்சு யோசிச்சு அப்டியே சுருண்டு படுத்துட்டேன். யாரோ அப்பாவோட தூரத்து சொந்தம்னு வந்து பேசினார். திடீர்னு கிட்ட வந்து அசிங்கமா சிரிச்சிட்டே மேல கை வெச்சான், சமாதனம் பண்றேன்னு...”


கண்களை துடைத்துக் கொண்டு,


“என்ன இதுன்னு கோபமா கேட்டப்போ, அசிங்கமா சிரிச்சான். நீ ஏன் இவ்ளோ கஷ்டப்படற. உன் எல்லா கஷ்டமும் நான் தீத்து வெக்கறேன். என்னோட வந்துருன்னு. இருக்கறவங்கள கூப்டு நியாயம் கேட்டப்போ ஒருத்தர் கூட எனக்காக பேசல. நீ தான் பாரீன்ல இருக்கற. உனக்கு இதெல்லாம் புதுசு இல்லையே. ஏற்கெனவே எவனோ ஒரு பையன் கூட சுத்தினவ தானேன்னு.”


ஹரிக்கு அதிர்ச்சி.


ஹரி சற்று கோபமாக, “மது யார்வேணா என்ன வேணா சொல்லிட்டு போகட்டும். நீ..”


“போதும் ஹரி. என்னால யாருக்கும் கஷ்டம் வேணாம்னு நெனச்சேன். அதான். அதனால தான் ஒரேடியா போயிட்டேன். ஆனா இப்போ ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு. அட்லீஸ்ட் உன் கிட்டயாவது பேசி இருக்கணும். தப்பு பண்ணிட்டேன் ஹரி. ரொம்ப தனியா பீல் பண்றேன். அதான் திரும்ப ஓடிறலாம்னு பாக்கறேன்.”


“மறுபடியும் விட்டுட்டு போக போறியா?” – ஹரி அவனை அறியாமலே கேட்டான்


“இங்க என்ன இருக்கு?”


வெகு நேரம் அமைதி. ஏன் என்னால் இவளிடம் சொல்லமுடியவில்லை. நான் இவளை காதலிக்கிறேனா? – தனக்குள்ளே கேட்டுக்கொண்டான்.


நீ சென்னைக்கு வந்துறேன்.


நான் இந்தியாவே வேணாம்னு பாக்கறேன். நீ சென்னைக்கு சொல்ற.


அவன் சிறிது நேரம் மதுவையே பார்த்துக் கொண்டிருந்தான். மது.. நீ யாரையோ லவ் பண்ணேன்னு..


“வேணாம் ஹரி ப்ளீஸ்..” அப்புறம் பேச ஒன்றுமில்லை போல அவள் கார் சீட்டில் சாய்ந்தாள்.


அவளின் ஆபீசில் அவளை விட்டு, திரும்ப வந்து அழைத்துக் கொள்வதாக சொல்லிச் சென்றான். இரண்டு மணி நேரம் கழித்து வந்து, வீட்டுக்கு கூட்டிச் சென்றான்.


"மது... வீட்ல யாரும் இல்ல. அம்மா அப்பா ஊருக்கு போய் இருக்காங்க. உனக்கு பரவால்லையா?" – தயங்கிய குரலில் கேட்டான்.


வெடித்துச் சிரித்தாள். “பயப்பட வேணாம் ஹரி. நான் உன்ன ஒண்ணும் பண்ணிட மாட்டேன்”


வீட்டுக்கு போனார்கள். “ரொம்ப அழகா இருக்கு ஹரி.” என்றாள். நிறைய பேசவில்லை. ஹாலில் தூங்கிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டாள்.


காலையில் எட்டு மணிக்கு தான் எழுந்தாள்.


“ஹரி. ரொம்ப தேங்க்ஸ்..”


“எதுக்கு.” – காபியை நீட்டினான்


“ரொம்ப நாளக்கு அப்றம் ரொம்ப ரொம்ப நிம்மதியா தூங்கி இருக்கேன். அதுவும் ஒரு வீட்ல.” அவள் தலையை வருடினான்.


“மது.... உனக்கு இன்னும் நெயில் பாலிஷ் ஒழுங்கா வெக்க தெரிலையா?” – நக்கலா கேட்டான்

புரை ஏறியது. சிரித்தாள்.


மது... நான் ஆபீஸ் போயிட்டு வந்துடறேன். ரெண்டு மணிக்குள்ள வந்துடறேன். பிரேக்பாஸ்ட் ஒரு அம்மா கொண்டு வருவாங்க. எதாவது வேணும்னா கால் பண்ணு நீ ரிலாக்ஸ் பண்ணிக்கோ. ஒகே வா..


“நான் இங்க இருக்கறது ஒண்ணும் ப்ராப்ளம் இல்லையே உனக்கு?” என்று மது கேட்டதற்கு முறைத்துவிட்டு கிளம்பினான்..

-----

ஹரியை பற்றி மது அவளின் நினைவுகள்

அவன் சென்ற பிறகு அந்த வீடு முழுவதும் அவன் நிறைந்து இருந்தது போல மதுவுக்கு இருந்தது.

மதுவிற்கு ஹரியை நினைத்துப்பார்க்க பார்க்க அவ்வளோ சந்தோஷம். எவ்ளோ நாள் அவன் கிட்ட கோச்சிட்டு, சண்ட போட்டு .. ப்பா.. நெனச்சி பாத்தா எல்லாருக்கும் ரொம்ப சிரிப்பா இருக்கும். எல்லாத்தையும் ரொம்ப மெச்சூர்டா அழகா ஹாண்டில் பண்ண தெரியும்.


அவனும் எல்லா பசங்கள மாதிரி தான். ஆனால் கொஞ்சம் வித்தியாசமானவன். அவன் பேசறதுல அக்கறை தெரியும். உண்மையான அக்கறை. உண்மையான நட்பு. தப்பு பண்ணாலும் பேசினாலும் கோவப்பட்டாலும் எல்லாமே உண்மை. ரொம்ப இயல்பா இருப்பான். அதுவே மதுவை பெரிசா அட்ட்ராக்ட் பண்ணிச்சு.


முதல் முறை பேசினதே நெயில் பாலிஷ் தான். பிசிறு தட்டி இருந்தது. கிண்டல் செய்தான். அவள் கோபமாக வேணும்னா வெச்சி விடேன் என்றாள். சொன்னது போல செய்தான். அழகாக வைத்து விட்டான்.


மருதாணி தான் அவளுக்கு பிடிக்கும். "மருதாணி வெக்கும் போது விரல்களை யாரோ பத்திரமா பிடிச்சிட்டு இருக்கற மாதிரி இருக்கு" சொன்னாள். ஹரிக்கு வியப்பு.


மது தான் நிறைய முறை சண்டை போட்டிருக்கிறாள்.அவன் பெரிசா அலட்டிக்க மாட்டான். வெளில நக்கலா பேசினாலும் மது மேல ஹரிக்கு ரொம்பவே அக்கறை. ஒரு வாட்டி அவள கூட தப்பா பாத்தது இல்ல. பேசினது இல்ல. – அவளின் கல்லூரிக் காலங்களில் மூழ்கி போனாள்.


ஒரு கட்டத்துல ஹரியை நேசிக்கிறோமோன்னு பெரிய குழப்பம். ஆனா அவனோ படிக்கணும் அப்டின்ற ஒரே எய்ம்ல இருந்தான். அதனாலேயே அவன் கிட்ட எதுவும் சொல்ல முடியல. அவளால புரிஞ்சிக்க முடியல.


காலேஜ் பைனல் இயர்ல ரெண்டு வாரம், பிரண்ட்ஸ் கூட எங்கேயோ டூர் ஹரி இல்லாமையே போனாள். அப்போ தான் அவன் இல்லாத வெறுமை புரிந்தது. ஆனா ஹரி ரொம்ப சாதாரணமா தான் இருந்தான். அதே மாதிரி அவன் திடீர்னு அப்ராட் படிக்க போறேன்னு சொன்னப்போ அவளே கேட்டு வாங்கி வெளிநாடு போனாள்.


ஹரி கடைசி வருடத்தில் அவளிடம் விலகிச் சென்றது நன்றாக் புரிந்தது. அன்று பெங்களூரில் சந்தித்த போது கூட பெரிய தயக்கம் அவனிடம். அது மட்டும் அவளுக்கு புரியவில்லை. அதே மாதிரி இன்னிக்கும்..


இதை எல்லாம் நினைத்துக் கொண்டே... அவள் விரல்களை பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டு மணி இல்லை. அதற்கு முன்னாடியே வந்து விட்டான். பேசுவதற்கு ஒன்றுமே இல்ல என்பது போல ரெண்டு பேரும் அமைதியாய் இருந்தார்கள்.


"ஹரி. உன்கிட்ட ஒண்ணு கேக்கணும். என்ன புடிக்குமா ஹரி?"


"என்னடி லூஸு மாதிரி பேசற."


ஹரியின் பக்கத்தில் வந்து அமர்ந்தாள். அவன் தோளில் சாய்ந்து கொண்டு, "நீ சந்தோஷமா இருக்கியா. நீ ஆசைப்பட்டது உனக்கு கெடச்சிருச்சு . அது மாதிரி நா ஆசைப்பட்டதும் ." என்று சொன்னாள்


புரியல மது .


புன்னகைத்தவாறே, "நீ படிக்கணும், ஃபாரீன் போகணும் . பிசினஸ் பண்ணனும்னு எல்லாமே ஆசைப்பட்ட . எல்லாம் உன்கிட்ட இருக்கு . அட மாதிரி நானும் யாரும் வேணாம்னு போய்ட்டேன். அதே மாதிரி எனக்கு கெடச்சிருச்சு . இன்னும் நல்லா ஆசைப்பட்டிருக்கலாம் போல. "

ஹரி பேசாமல் இருந்தான் .


“ஆனா கடைசில நீ ரொம்ப தள்ளி போயிட்ட. வேணும்னே அவாய்ட் பண்ண மாதிரி.”

“சும்மா எதாவது நெனச்சிக்காத.” – மழுப்பினான் ஹரி


“நிஜமா தான் சொல்றேன். அதனால தான் ரீயூனியன் கூட வரல.”


“ஓ.. அப்போ அதெல்லாம் தெர்யுமா”. – லேசான அதிர்ச்சி அவனிடம்


"ம்ம்ம். தெரியும். யார் சொன்னது மறந்துட்டேன்."


“நான் உன்ன விட்டு போகல. நீ தான் ஓடி ஒளிஞ்சிட்ட” – ஹரி


“ஹரி.. உனக்கு என்ன பாத்தா ஒண்ணுமே தோணலையா? நாம தனியா வேற இருக்கோம்.” – கண்ணடித்தாள்


சிரித்தான். “என்னடி பண்ண சொல்ற?”


“ஹரி.. உனக்கு சூர்யாவ ரொம்ப புடிச்சதா? அவள லவ் பண்ணியா ? அதான் சரின்னு சொன்னியா? ஒரு வேள கல்யாணம் பண்ணி இருந்தா என்கிட்டே பேசி இருப்பியா?


“ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்” என்றான் கோவமாக.


சிறிது நேரம் எதுவும் பேசவில்லை.


“நான் ஈவ்னிங் கெளம்பறேன் ஹரி. புக் பண்ணிடறேன். “

ம்ம்ம் என்றான்


நீண்ட மௌனம்..


வெறுமையாய் இருந்த அவள் விரல்களை பற்றினான். அவன் நுனி விரல்களை பற்றிக்

கொள்ளாமல் கைகளோடு கோர்த்துக் கொண்டாள். முதல் முறையாய்.


சில நொடிகளில் "என்ன லவ் பண்ணனும்னு தோணவே இல்ல? இல்ல ஏன் என்கிட்டே சொல்லனும்னு தோணல?” – மது கேட்டு முடிப்பதற்க்குள், அவன் அவள் கைகளை இறுகப் பற்றி இருந்தான்..tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.