பகுதி 1

#வேங்கியின் மோகினி


கோட்டைவாசலில் கேட்ட சத்தத்தால் கவனம் கலைந்த மழவராயர் அங்கே விரைந்தார்.தலை தாழ்த்திய கோட்டை காவலர்களில் ஒருவன் “தளபதியாரே இவர்கள் இருவரும் எங்களிடம் வம்பு வளர்க்கிறார்கள்! “என்றான்.

அஜானுபாகுவான தோற்றத்தில் நின்ற இருவரில் இளையவன் “ஓ! இந்த கிழடுதான் உங்களின் தளபதியா? “என்றான்.அவனருகே நின்ற மூத்தவன் “பார்த்தால் தளபதி போல் தெரியவில்லை.கிழபதி போல் இருக்கிறார்! “என்றான்.மழவராயர் கோபத்தை கட்டுப்படுத்தியபடி “துடுக்குகாரனே! என்னையே பகடி செய்கிறாயா? “என்று மீசையை முறுக்கினார்.

“இவர் நமக்கு அத்தை மகளா என்ன? பகடி செய்து விளையாட? “என்றான் இளையவன்.

கோபம் எல்லை கடந்து மழவராயர் வாளை உருவினார்.

“சிறுவனே! வந்து மோது என்னுடன்! “என்றார்.

“அண்ணா! அவரது கையில் இருப்பது கைத்தடி இல்லையா? “என்றான் இளையவன்.

“இல்லை ஆதித்தா! வாள் போல் தெரிகிறது.!”

“ஒருவேளை கிழபதிக்கு காக்காய் வலிப்பு இருக்குமோ? குணப்படுத்த கத்தியை கையில் வைத்து கொண்டு அலைகிறாரோ? “

மழவராயர் கோபத்துடன் தன் வாளை நிராயுதபாணிகளின் மீது வீசினார்.இளையவனின் கையில் கண்ணிமைக்கும் நேரத்தில் தோன்றிய குறுவாள் அவரது வாளை இடையிட்டு தடுத்தது.

“சரிக்கு சரியாக போரிட வாள் வேண்டுமா பொடியனே? வீரர்களை தர சொல்லவா? “என்றார் மழவராயர்.

“நான் கத்தியை நம்பவில்லை கிழபதியாரே! என்னை என் திறமையை நம்புகிறேன்.!”

“அப்படியானால் மரணத்தை எதிர் கொள்ள தயாராகு! “

“அதை நாளை சாகப்போகும் நீர் சொல்வதுதான் முரண்! “

இருவருக்குமான யுத்தம் தொடங்கிய சில நிமிடங்களில் மழவராயருக்கு ஆதித்தனின் போர்திறமை புரியலாயிற்று.சின்னஞ்சிறு குறுவாளை கொண்டு லாவகமாக வாளைத்தடுத்த ஆதித்தன் சில நேரங்களில் முன்னேறி தாக்கவும் செய்தான்.மழவராயர் மெல்ல களைப்பால் தளர்ந்த போது உப்பரிகையிலிருந்து மன்னன் மார்த்தாண்டவர்மனின் குரல் தலையிட்டது.

“சண்டையை நிறுத்துங்கள்! “

மழவராயர் சட்டென்று வாளை தணித்து வணங்கினார்.

“வழிப்போக்கர்களே! யார் நீங்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? “என்றான் மார்த்தாண்டவர்மன்.

“கள்வர் புரத்திலிருந்து வருகிறோம் மன்னரே! “என்றான் ஆதித்தன்.

“களவுக்கு பெயர் போன ஊராயிற்றே அது.?இவர்கள் கள்வர்களா? வீரர்களே கைது செய்யுங்கள் இவர்களை! “மழவராயர் ஓங்கிய குரலில் கத்தினார்.

சகோதரர்கள் இருவரையும் காவற்படை வாள் முனையில் சுற்றி வளைத்தது.

“மன்னர் ஓலை அனுப்பியதாலேயே இங்கு வந்தோம்.எங்களை கைது செய்வது முறையல்ல.!”என்றான் ஆதித்தன்.

“ஆம்! நான்தான் ஓலை அனுப்பினேன்.கள்வர் புரத்தின் தலை சிறந்த இரண்டு கள்வர்களை அனுப்பும்படி! “என்றான் மார்த்தாண்டவர்மன்.

“அது நாங்கள் இருவரும்தான்.இதோ எங்கள் கிராம தலைவர் எழுதிய அறிமுக கடிதம்! “ஆதித்தன் இடுப்பிலிருந்த ஓலை சுருளை நீட்டினான்.வாங்கி படித்த மார்த்தாண்டவர்மன் “உங்களின் களவுதிறமையை எப்படி நான் நம்புவது? “என்றான்.

“இதோ நமது தளபதியாரின் கங்கணம், மோதிரம்! அது சொல்லும் எங்களின் திறமையை! “என்றான்.ஆதித்தனின் கையில் மழவராயரின் மோதிரமும் கை கங்கணமும் மின்னியது.மழவராயர் அப்போதுதான் தன் ஆபரணங்களை கவனிக்க ஆரம்பித்தார்.சண்டையின் போது ஆதித்தன் லாவகமாக அவற்றை கழற்றியிருந்தான்.”இதோ என் திறமைக்கு அத்தாட்சி! “என்ற அரிஞ்சயன் கூடி நின்ற காவலர்களின் திருடப்பட்ட ஆபரணங்களை உதிர்த்தான்.காவலர்கள் பரபரப்புடன் தங்களுடையதை தேட ஆரம்பித்தனர்.

“நல்லது! “என்ற மார்த்தாண்டன் கையிலிருந்த குறுவாளை வீசி எரிந்தான்.அரண்மனை தூண் ஒன்றில் அது குத்திட்டு நின்றது.”இப்போது உன் குறி வைக்கும் திறமையை காட்டு! “என்றான் மார்த்தாண்ட வர்மன்.ஆதித்தன் தன் குறுவாளை விசையோடு வீசினான்.அது சரியாக மார்த்தாண்டவர்மனின் குறுவாளின் கைப்பிடியில் குத்தி நின்றது.”சபாஷ்! “என்றான் மார்த்தாண்டவர்மன்.”அண்ணா!இப்போது உன் முறை! “என்றான் ஆதித்தன்.அரிஞ்சயன் பின்புறமாக நின்று வீசிய குறுவாள் ஆதித்தனின் குறுவாளின் கைப்பிடி வட்டத்தில் குத்தி நின்றது.

“இருவரும் குறி வைப்பதில் திறமைசாலிகள்தான்! “

“நாங்கள் எதை திருட வேண்டும் மன்னரே? “என்றான் ஆதித்தன்.

“ஒரு குதிரையை திருட வேண்டும்.வேங்கி நாட்டின் மோகினி! “

“அபூர்வ இரட்டை சுழி கொண்ட குதிரையாயிற்றே? “

“ஆம்! அதை களவாடி கொண்டு வர வேண்டும்.முடியுமா உங்களால்? “

“அதற்கு பலத்த காவல் உண்டு.ஒரு நொடி குதிரை காணவில்லை என்றாலும் தேடல் துவங்கி விடும்.மரணத்தை வரவேற்பதற்கு சமம்.அந்த குதிரையை தொடுவது.யோசிக்க வேண்டும்! “என்றான் அரிஞ்சயன்.

“அந்த குதிரையை என்னால் திருடி கொண்டு வர முடியும்! “என்றான் ஆதித்தன் உறுதியான குரலில்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.