திருடிய இதயத்தை திருப்பிக்கொடு..!! நிதனிபிரபு

அத்தியாயம் 1


“நான் காலிக்கு போறது உறுதி! உறுதி! உறுதி!” சத்தமாக அறிவித்தாள் ஜீவனிதா.

பெரிய தொண்டையில் கத்திய மக்களை முறைத்தார் அன்னை புஷ்பராணி.

“இப்படி கத்தி கதைச்சு பழகாத எண்டு எத்தனை தடவை சொல்லிப்போட்டன்? ஒரு பொம்புள பிள்ளையா அடக்கமா கதைக்கத் தெரியேல்ல. இந்த சீத்துவத்துல காலிக்கு போகபோறாளாம் காலிக்கு! ஏன், அங்கயும் ஏதாவது சண்டையை இழுத்து வைக்கவா?” என்ற அன்னையின் பேச்சில், ‘இது எப்படி அம்மாவுக்கு தெரியும்?’ என்று அதிர்ந்து விழித்தாள் மகள்!

பின்னே, அன்னை சொன்னதுபோல ஒரு பழி தீர்க்கும் படலத்துக்குத்தானே அவள் தயாராகிக் கொண்டிருக்கிறாள்!

அதுவும் ஒருநாள் இருநாள் பழியில்லை! பத்து வருடப் பழி!

‘யாருக்குமே தெரியாத விசயத்த அம்மா எப்படி கண்டுபிடிச்சா?’


‘அதை பிறகு யோசி ஜீவனி! இப்ப எதையாவது சொல்லி சாமாளி. இல்ல கண்டு பிடிச்சிடுவா… உனக்கு அம்மாவா வந்து வாச்சிருக்கிறது ஒரு எமகாதகி!‘ சட்டென்று உசாரானவள் தன் களவை மறைத்துக்கொண்டு அன்னையை முறைத்தாள்.

“என்ன பார்த்தா எப்படித் தெரியுது உங்களுக்கு? சண்டைக்காரி மாதிரியா? ஓரு அம்மா மகளை பார்த்து இப்படியெல்லாம் கதைக்களாமா?“ என்று அவர் மேலேயே பழியை தூக்கி போட்டாள்.

“எதுக்கெடுத்தாலும் கடுகு மாதிரி துள்ளுற உன்ன வேற எப்படி சொல்ல? இந்தா இப்ப என்னோட சண்டை பிடிக்கிறியே? இது என்ன? அன்றைக்கு பக்கத்து தெருவில இருக்கிற பெடியண்ட(பையன்) மண்டைய கல்லால உடைச்சிட்டு வந்து நிக்கிறாய். போன கிழமை கோயிலுக்கு போறன் எண்டு சொல்லி ஐயருக்கு வாய் காட்டிப்போட்டு வந்திருக்கிறியே.. எப்ப பார்த்தாலும் வம்பு வளக்கிறதும் வாய் காட்டுறதும்! நீ சண்டை பிடிக்காத ஒரு ஆளக்காட்டு பார்ப்போம் இந்த ஊருல?” என்று அவர் கேட்கவும்,

‘அப்படியா ஒருத்தர விடாம சண்டை பிடிச்சிருக்கிறன்..’ என்று நினைத்தவளுக்கு, தன்னை நினைத்தே சற்றுப் பெருமையாக இருந்தது!

ஊரில் ஒருவர் விடாமல் சண்டை இழுப்பது சாதாரண காரியமா என்ன?!

‘அடியே ஜீவனி! பெருமையை பிறகு படுடி. இப்ப அம்மாவை கவனி..’

“அது.. அது.. அவன் என்னை காதலிக்கிறானாம். எனக்கு பின்னாலேயே சுத்திக்கொண்டு திரிஞ்சவன்; அந்தக் கரிமூஞ்சிக்கு நான் கேக்குதாமா? அதுதான் மண்டைய உடச்சனான். இனி என்ட பக்கமும் தல வச்சு படுக்கமாட்டான். அந்தக் கிழட்டு அய்யர்.. கோயிலுக்கு போன என்ன கூப்பிட்டு வச்சு புத்தி சொல்றான். நான் கேட்டனானே புத்தி சொல்லு எண்டு.. அதுதான் நல்லா குடுத்திட்டு வந்தனான். நானா சும்மா யாரோடையும் சண்டைக்கு போகேல்ல..” ரோசத்தோடு தலையை சிலுப்பினாள்.

மகளின் விளக்கத்தில் தலையில் அடித்துக்கொண்டார் அன்னை.

“நீயும் உன்ர விளக்கமும்!“ என்றவரை முறைத்தாள் அவள்.

“நீங்கதான் எப்ப பார்த்தாலும் என்னோட சண்டை பிடிக்கிறீங்க. மகள் ஆசைப்பட்டுக் கேக்கிறாளே.. அவளை அனுப்பி வைப்போமே எண்டு இல்லாம மல்லுக்கட்டிக்கொண்டு நிக்கிறது நீங்கதான். என்ன எங்கதான் விட்டு இருக்கிறீங்க சொல்லுங்கோ பாப்பம்? வேலைக்கு போக கேட்டா வேண்டாம்! ஏதாவது கோர்ஸ் போகட்டா என்று கேட்டா வேண்டாம்! பிரெண்ட்ஸ்சோடா எங்கேயாவது போகவா என்று கேட்டா வேண்டாம். அப்ப நான் என்னதான் செய்றது? எவ்வளவு நாளைக்குத்தான் உங்கட முகத்தையே பாத்துக்கொண்டு இருக்கிறது? இந்த முறை நீங்க என்ன சொன்னாலும் கேக்க மாட்டான். சித்தி வீட்டுக்கு போயே தீருவன்.” என்று அறிவித்தாள்.

அவளின் பேச்சில் உண்மை இல்லாமலும் இல்லை!

சிட்டுக்குருவி போல் உற்சாகமாக சுற்றித் திரியும் மகளை பார்க்கையில் எந்தளவுக்கு அவர் மனம் குளிருமோ அந்தளவுக்கு நடுங்குவார் அவளின் துணிச்சலையும் துடுக்குத் தனத்தையும் எண்ணி. அதுவும் வாய்.. படபட பட்டாசுதான்! அதனாலேயே அவளை முடிந்தவரை எங்கும் விடாமல் கைக்குள்ளேயே வைத்திருந்தார். அதற்காக அவள் ஒன்றும் சின்னப்ப பெண்ணில்லை. இருபத்தியிரண்டு முடிந்து இரண்டு மாதமாகிறது.

எத்தனை வயதானால் என்ன? எங்கு எப்படி நடக்கவேண்டும் என்கிற நெழிவு சுழிவு தெரியவேண்டுமே? எங்கு சின்னப் பிழையைக் கண்டாலும் பொங்கிவிடுவாள் ஜீவனிதா.

காலி வேறு சிங்களவர் அதிகமாய் வாழும் பகுதி. அவளோ அன்றலர்ந்த மலரை விடவும் மனதை கொள்ளை கொள்ளும் அழகுக்குச் சொந்தக்காரி. அந்தப் பயத்தில், “எப்படி போகிறாய் எண்டு நானும் பாக்கிறன். அவ்வளவு தூரத்துக்கு உன்னை அனுப்பிப்போட்டு நான் ஒவ்வொரு நாளும் மடியில நெருப்பைத்தான் கட்டிக்கொண்டு அலையவேணும். உன்ன நம்பி ஒரு இடத்துக்கும் அனுப்பமுடியாது!” என்றார் அழுத்தமாக.

“ஏன் நம்பேலாது? பெத்த தாயே என்ன நம்பாட்டி வேறயார் நம்புவீனம்? ஆனா ஒண்டு சொல்றன், நல்லா கேட்டுகொள்ளூங்கோ, இந்தமுறை காலிக்கு நீங்க என்னை விடேல்லையோ, கட்டாயம் நான் இங்க எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடிப்போயிடுவன் சொல்லிப்போட்டன்! அதுக்குப்பிறகு பொறுப்பா இருப்பியள்!” என்று விரல் நீட்டி எச்சரித்தாள் பெண்.

ஒருகணம் அதிர்ந்துதான் போனார் புஷ்பராணி!


பிறகோ, காதலை சொன்னவனையே கல்லால் துரத்தி துரத்தி அடித்தவளா எவனையாவது கூட்டிக்கொண்டு ஓடப்போகிறாள் என்று எண்ணியவருக்கு இப்போது சிரிப்புத்தான் வந்தது. ஓடுகிறவள் பெற்றவளிடம் சொல்லிக்கொண்டா இருப்பாள்?

வந்த சிரிப்பை அப்படியே மறைத்துக்கொண்டு, “என்னடி என்ன மிரட்டி பாக்கிறியா? ஓடுறதா இருந்தா இப்பவே ஓடிப் போயிடு. எங்களுக்கு உன்ர கல்யாண செலவு மிச்சம்.. நகை வாங்குற செலவு மிச்சம். எல்லாக் காசுக்கும் நகையும் பட்டுமா வாங்கி நான் போட்டுக்கொண்டு திரிவன்!” என்று சரியான இடம் பாத்து அடித்தார்.

“ஆ?” என்று விழித்தாள் ஜீவனி. ‘ஓடப்போறன் எண்டு சொல்லுறன் அப்பவும் அசறுதா பார் இந்த அம்மா. சரியான கல்லுளி மங்கி! இதுல நகையையும் சாரியையும் அவ மாட்டிக்கொண்டு திரியப் போறாவாம்! எல்லாத்தையும் இவவுக்கு தார வாரத்துக்கு குடுத்திட்டு நான் என்ன ஒன்றுமில்லாத பிச்சைக்காரியாவா இருக்கிறது? விடமாட்டன்!’

மகளை பார்த்தவருக்கோ அவள் எண்ணம் புரிந்து பொத்துக்கொண்டு வந்தது சிரிப்பு. ஆனாலும் அடக்கிக்கொண்டு நின்றார்.

தன்னையே பார்த்துக்கொண்டு அசராமல் நின்ற அன்னையை முறைத்தாள் ஜீவனி! “நீங்களெல்லாம் ஒரு அம்மா. பெத்த மகள் அதுவும் ஒரேயொரு மகள் வீட்டை விட்டு ஓடிப்போறன் எண்டு சொல்லுறன்.. கொஞ்சம் கூட பயப்படாம நகை வாங்கி போடுவன் நட்டு வாங்கி போடுவன் எண்டு சொல்றீங்க.. அப்படியே ஓடினாலும் பேங்க் புத்தகத்தை தூக்கிக்கொண்டுதான் ஓடுவன். இல்ல இல்ல.. பிறகு எனக்கென்று வாங்கின நகையெல்லாம் நீங்க மாட்டிக்கொண்டு திருவியல். கல்யாணம் முடிஞ்சு நகை காசு எல்லாம் வாங்கிக்கொண்டுதான் ஓடுவன்..” என்றாள் அவசரமாக.

‘கல்யாணம் முடிஞ்சா பிறகு ஏனடி நீ ஓட? எல்லாம் தந்து நாங்களே அனுப்பி வைப்போமே..’ என்று உள்ளே எண்ணம் ஓடினாலும், அதை மகளுக்கு மறைத்து, “நீ ஓடுற நேரம் ஓடு. அதைப்பற்றி எனக்கு கவலை இல்ல. ஆனா, காலிக்கு மட்டும் விடமாட்டன்!” என்றார் மீண்டும் உறுதியாக.

இவ்வளவு சொல்லியும், மிரட்டியும் கூட அம்மா விடுகிறார் இல்லையே என்று கவலையாய் போயிற்று ஜீவனிக்கு.

“ஏனம்மா? நான் என்ன யாரும் இல்லாத ஊருக்கா போறன்?அங்க சித்தி இருக்கிறா தானே. சித்தப்பா இருக்கிறார். போதாக்குறைக்கு ரதனும் இருக்கிறான். எந்தக் குழப்படியும் செய்யாம நல்ல பிள்ளையா இருந்திட்டு வருவன். விடுங்கம்மா.. என்னை சித்தி பாத்துக்கொள்ளுவா..” என்று கெஞ்சலில் இறங்கினாள்.

அப்போதும் அசையாமல், “மாட்டேன்!“ என்று மறுத்தார் அன்னை.
மகள் மீண்டும் என்னவோ சொல்ல வரவும், “நீ என்ன சொன்னாலும் சரிதான். நான் விடமாட்டன் ஜீவி. போய்ப் பாக்கிற வேலையை பார்!” என்றார் அதட்டலாக.

தன் கெஞ்சலும் எடுபடவில்லை என்றதும், சினம் பொங்கியது அவளுக்கு. “ஒரு குடும்பப் பொம்புளைக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது! எல்லாம் அப்பா குடுக்கிற இடம். அப்பா வரட்டும்! உங்கள மாட்டி விடுறானா இல்லையா பாருங்கோ. நீங்களெல்லாம் ஒரு அம்மா. போயும் போயும் உங்களுக்கு மகளா வந்து பிறந்தன் பாருங்கோ.. என்ன சொல்லோணும்! ஆனா, நீங்க சம்மதிக்கிற வரைக்கும் இந்த வீட்டுல ஒரு பருக்க சோறு சாப்பிடமாட்டன் நான்!” என்று அறிவித்தாள்.

“நல்ல விஷயம்! நான் இண்டைக்கு கோழிக்கறியும் வச்சு, நிறைய வெங்காயத்துக்கு பெரிய றால் போட்டு ஒரு பிரட்டு பிரட்டுவம் எண்டு இருக்கிறன். நீ சாப்பிடாததுதான் நல்லது. இல்லாட்டி உனக்கு போட்டுக் காட்டாது.” என்றுவிட்டு அவர் உள்ளே சென்றுவிடவும், அவர் சொல்லிய விதத்திலேயே இவளுக்கு நாக்கில் உமிழ்நீர் சுரந்தது.

‘அடியே ஜீவி, அவசரப்பட்டு வாய விட்டுட்டியோ.. கோழிக்கறி போச்சே…! அதோட றால் பிரட்டலும் போச்சே..! ம்ம்.. என்ன செய்யலாம்.. அப்பா வரட்டும். இந்த அம்மாவுக்கு ஒரு வழி செய்வம்.’ என்று கருவியவள், முகத்தை தூக்கிக்கொண்டு போய் வாசல் படியில் பொத்தென்று அமர்ந்துகொண்டாள்.

அவள் அமர்ந்திருந்த விதத்திலேயே இன்று பெரிய நாடகமொன்றை அரங்கேற்றப் போகிறாள் என்பதை அறிந்துகொண்டார் அன்னை!
அதோடு, மகள் கெஞ்சியபோதே அவர் மனம் இரங்கிவிட்டது. அதுவுமல்லாது ஜீவனி சொன்னதுபோல் வீட்டுக்குள்ளேயே இருந்து அவள் சோர்ந்துபோவதும் அவர் அறிந்ததுதான்.

‘பெண் பிள்ளைகளை பயமில்லாமல் வெளியில் விடும் நிலையிலா இன்றய காலம் இருக்கிறது?’ என்றெண்ணி பெருமூச்செறிந்தவர், வீட்டு தொலைபேசியை எடுத்துக்கொண்டு அவளுக்கு கேளாத தூரம் சென்று தன் தங்கைக்கு அழைத்தார். ஜீவனி விரைவில் அங்கு வருவாள் என்றும், அவளை கவனமாக பார்த்துக்கொள்ளும் படியும் சொல்லிவிட்டு வைத்தார்.

மறந்தும் அதை மகளிடம் சொல்லவில்லை. தகப்பனிடம் அவள் என்ன நாடகமாடுகிறாள் என்று பார்க்க ஆவலோடு காத்திருந்தார்.

சற்று நேரத்தில் அவரும் வந்துவிட, “அப்பா… இந்த அம்மா இருக்கிறாதானே..” என்றபடி தகப்பனிடம் விரைந்தாள் ஜீவனிதா.

அப்போதே அவருக்குப் புரிந்துவிட்டது தாய்க்கும் மகளுக்கும் ஏதோ பெரிய மல்யுத்தம் நடந்திருக்கிறது என்று.

கேட்டை திறந்துகொண்டே, “உன்ர அம்மாவுக்கு என்னவாம்?” என்று அவர் கேட்டதுதான் தாமதம், அவர் உள்ளே வந்து தன் மோட்டார் வண்டியை நிறுத்துவதற்குள் அனைத்தையும் சொல்லி, கண்ணை கசக்கி, மூக்கை உறிஞ்சி, “அம்மா எனக்கு இனி சாப்பாடு போடமாட்டாவாம். பட்டினி கிடக்கட்டுமாம்..” என்பதில் கொண்டுவந்து முடித்தாள். மறந்தும் தான் எவனையாவது இழுத்துக்கொண்டு ஓடப்போவதாக சொன்னதை சொல்லவில்லை. அதெல்லாம் எடிட்டிங்கில் வெட்டிங்!

என்ன நடந்திருக்கும் என்று அறியாதவரா அவர்? ஆனாலும், “என்னது? என்ர பிள்ளைக்கு சாப்பாடு போடமாட்டன் எண்டு சொன்னவளோ அம்மா? வா கேப்பம்?” என்றபடி மகளோடு வீட்டுக்குள் நுழைந்தார்.

எதிர்பட்ட மனைவியிடம், “நீ என்ன பிள்ளைக்கு சாப்பாடு போடமாட்டேன் என்றாயாம்?“ என்று கேட்டார்.

தாயை தகப்பன் கேள்வி கேட்டுவிட்டதில் அன்னையை சவாலாக நோக்கினாள் மகள். ‘யாருட்ட? அப்பா இருக்கிற வரைக்கும் என்னை அசைக்கேலாதாக்கும்!’ என்கிற மிரட்டல் இருந்தது அந்தப் பார்வையில்.

“பின்ன? சாப்பாடு வேண்டாம் என்றவளை நான் என்ன செய்றது? அதுதான் பட்டினி கிடக்கச் சொன்னனான்.” என்றார் தாய்.

“பாத்திங்களா அப்பா? ஒரு அம்மா கதைக்கிற கதையா இது? மகள் வேண்டாம் எண்டு சொன்னா கெஞ்சி கூத்தாடி பெத்த பிள்ளைக்கு தீத்தி(ஊட்டி) விடுறது தானே ஒரு அம்மாக்கு அழகு. இவ என்னடா என்றா பட்டினி கிடக்கட்டுமாம். எங்க இருந்துதான் இவவ பிடிச்சீங்களோ தெரியாது!” என்று தகப்பனிடம் தாயை போட்டுக் கொடுத்தாள்.

தகப்பனோ, “ப்ச்! விடம்மா. இனி அத கதைச்சு என்ன பிரயோசனம்? எல்லாம் எண்ட தலவிதி.” என்று அவளுக்கு மேலால் சலித்துக்கொண்டார்.

புஸ்பராணி முறைக்கவும் மகள் அறியாமல் கண்ணால் சிரித்தார் அவரிடம்!

“அதைவிட்டுட்டு நீ சொல்லு.. இப்ப என்ன வேணும் பிள்ளைக்கு?” என்று கேட்டார் அவளின் தலையை வருடிக்கொடுத்தபடி.

“நான் காலிக்கு போகோணும் அப்பா. சித்திய பார்த்து எத்தனை வருசமாச்சு? ரதன் மட்டும் தானே இங்க வந்துட்டு போறவன். எனக்கு காலிக்கோட்டையை பார்க்க ஆசையா இருக்கு. கடற்கரையில விளையாடோணும். அங்க குளிக்கோணும். என்ர செல்ல அப்பாதானே.. சரியெண்டு சொல்லுங்கோ.. எனக்கு இங்க சும்மா இருந்து விசர்(பைத்தியம்) பிடிக்கும் போல இருக்கு.“ என்று தகப்பனின் தாடையை பற்றி செல்லம் கொஞ்சிக்கொண்டே கெஞ்சினாள்.

மனைவியை பார்த்தார். கண்கள் வழி சம்மதம் அறிந்து, “சரி போவம். அப்பாவும் அம்மாவும் பிள்ளையை கூட்டிக்கொண்டுபோய் விட்டுட்டு வாறம். கொஞ்ச நாளைக்கு அங்க இருந்திட்டு வா.“ என்றவர், “எப்ப போறது எண்டு சொல்லு, அப்பா ட்ரெயினுக்கு டிக்கெட் புக் பண்றன்.” என்றார்.

“ஹே… அப்பா எண்டா அப்பாதான்..” என்று துள்ளியவள், அன்னையிடம் திரும்பி வெற்றி பார்வை பார்த்தாள்.

தகப்பனிடம் திரும்பி, “காலிக்கு அடுத்த ட்ரெயின் எப்ப இருக்கோ அதிலேயே போற மாதிரி டிக்கெட் புக் பண்ணுங்கோ அப்பா. நான் பெட்டி அடுக்கப் போறேன்..” என்றவள் துள்ளிக்கொண்டு தன்னுடைய அறைக்கு ஓடவும், மகளின் சந்தோசத்தை பார்த்து ரசித்தனர் பெற்றவர்கள்.

அறைக்குள் போனவள் உடனேயே ரதனுக்கு அழைத்தாள். அவள் வருவதை சொல்லவும் அவனோ நம்பவே இல்லை.

அவனுக்குத்தான் அவனது பெரியன்னையை பற்றி நன்றாகத் தெரியுமே. கடைசியில், “உன் கண்முன்னால் வந்து நிக்கிறன். அப்ப பாருடா..” என்றுவிட்டு செல்லை அணைத்தவளுக்கு, சந்தோசம் அடங்குவதாய் இல்லை!

பின்னே, எத்தனை வருடப் போராட்டம் வெற்றியடைந்திருக்கிறது இன்று! அதைவிட… என்று நினைக்கும்போதே பல்லை நறநறவென்று கடித்தாள். கையோ தன் பாட்டுக்கு அவளின் முழங்கையை தொட்டுப் பார்த்தது. அவளை ஒருவன் தள்ளிவிட்டதில் உண்டான காயம் தழும்பாக மாறியிருந்தது அந்த இடத்தில். அவனுக்கு திரும்பவும் மண்டையை உடைத்தால் தான் அவளுடைய பழிவெறி அடங்கும்.

ஜீவனியிடமே விளையாட்டுக் காட்டிவிட்டானே! அவனை சும்மா விடுறதா?

இருடா.. வாறன்! வந்து இருக்குடா உனக்கு’

‘சிங்கம் ஒன்று புறப்பட்டதே..!
அவன் மண்டையை உடைக்க!
அதிலே ரத்தத்தை பார்க்க!
சிங்கமொன்று… சீ! சிங்கியொன்று புறப்பட்டதே..!’அவள் இதழ்கள் தன்பாட்டுக்கு பாட்டிசைத்தது!

ஒரு வழியாக ஜீவனிதா தன் காலிப் பயணத்தை நல்லபடியாகவே ஆரம்பித்து வைத்தாள்.

அவளுக்கு தெரியவில்லை தன் உயிரை தேடிப் போகிறோம் என்று!

காலியில் ஒரு பரந்து விரிந்த மாளிகையும், அங்கிருக்கும் ஒரு ஜீவனும் எத்தனையோ நாட்களாக அவளின் வரவுக்காக காத்திருப்பதை அறியாமல் புறப்பட்டாள் ஜீவனி !tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.