அழகாய் பூத்ததே…!

பண்டிகைகளும் வீட்டு விசேசங்களும் சிறுவயதில் தந்த உற்சாகம் வளர்ந்தபின் இருப்பதில்லை, கண்டிப்பாக ஒரு குடும்பத்தலைவன்தான் சொல்லிருக்க கூடும். எனக்கும் அப்படித்தான். பொருளாதாரம் காரணமோ என்று நினைத்து விடாதீர்கள். என்னை பயமுறுத்துவது பண்டிகைகள் இல்லை.

நான் ஒரு காலத்தில் அதிகம் எதிர்பார்த்த நாளும், இப்போது நான் பயந்து ஓட, ஓட துரத்தும் நாள்தான்.

பிப்ரவரி-வேறெந்த மாதத்திற்கும் இவ்வளவு சிறப்பு கிடையாது. இந்த குறை பிரசவத்தில் பிறந்த மாதத்திற்கு மட்டும்தான். வயது வந்த யாரிடமும் பிப்ரவரி என்றால் அவர்களது எண்ணத்தின் ஓரு ஓரத்தில் “பிப்ரவரி 14” என்ற வார்த்தைகள் வந்து போகும்.

சேலத்தில் சரவணா ஐஸ்கிரீம் பார்லரில் பிப்ரவரிக்கென சிறப்பு ஆஃபர் உண்டு. எந்த ஃபிளேவராய் இருந்தாலும் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம். மற்ற நேரங்களில் உஙகள் தோழி/தோழனை ஐஸ்கிரிம் சாப்பிட அழைப்பதற்கும் பிப்ரவரியில் சரவணாவிற்கு சாப்பிட அழைப்பதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. குங்குமம் வைத்து விட சொல்வது போல் புரபோஸ் செய்வதற்கு சமம்.

நான் கூட அவளிடம் அப்படித்தான் என் காதலை வெளிப்படுத்தினேன். அப்போது நாங்கள் 5 பேர், நானும் சிவாவும் மட்டும்தான் ஆண்கள். ஒன்றாய் சுற்றுவோம். அதிகம் மல்டிபிளக்ஸ்ம் ஏற்காடும்தான் எங்களிடம் நலம் விசாரிக்கும். அந்த வருடத்தில் நான் காதலனாக புரோமோட் ஆவேன் என்று நியு இயர் பிறக்கையில் யாராவது சொல்லியிருந்தால் அவர்கள் முகத்தில் குடித்த பீரை சிரித்தே வாந்தி எடுத்திருப்பேன்.

இரண்டு வருடங்களாக பழகிய 3 பெண்களில் யாரையும் காதலிக்கும் எண்ணமே வராமல் இருந்தேன். “வரவழைத்தாள்”. ஒருநாள் ஐவரும் சிவா வீட்டில் பேசிக் கொண்டிருக்கையில் அவள் அடிக்கடி என்னை பார்ப்பதாக உள்ளுணர்வு கூறியது. அது உண்மைதான் என்பதையும் நானே உறுதி செய்து கொண்டேன். பார்க்கிறாள். சிரிக்கிறாள். என்னை பார்த்துக் கொண்டே சிரிக்கிறாள். சிரித்துக் கொண்டே பார்க்கிறாள். அவளிடம் அது பற்றி வினவ தைரியமில்லை. சிவாவிடம் சொல்ல விருப்பமில்லை.

முதலில் தனிமையில் இருக்கையில் அவள் செய்கையின் காரணத்தை பற்றி சிந்திக்க துவங்கினேன். பின் அவளை பற்றி சிந்திக்க துவங்கினேன். இறுதியில் அவளை பற்றி மட்டுமே சிந்தித்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவள் பார்வையையும் சிரிப்பையும் விரும்ப துவங்கினேன். இரண்டையும் எதிர்பார்க்க துவங்கினேன் . இது எனக்கு பிடித்திருந்தது. நாளின் 24 மணிநேரமும் அவளால் உற்சாகமாய் திரிந்தேன்.

கொஞ்சம் நேர்ததியாய் உடை அணிய துவங்கினேன். அவளுக்கானவன் குறித்த அவளது எதிர்பார்ப்பை எங்களிடையே பொதுவில் சொன்னதை ஞாபகபடுத்தி அதே போல் மாற துவங்கினேன் அவளுக்கானவனாய்…

எனக்கானவளுக்கென எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இருந்தது, இப்போது எனக்கானவள் குறித்து யோசித்தால் அவள்தான் வந்தாள்.

ஒரு மாதம் கடந்தது. எங்களுக்குள் ரகசிய சமிஞ்சைகள் கூட நடக்கின்றன. இடையில் இரவுகளில் பலராய் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம் என் கனவுகளில். கொஞ்சம் கொஞ்சமாய் முற்ற துவங்கியதை உணர்ந்தேன். பிப்ரவரி 14 எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தது. மிகுந்த சந்தோஷத்தை கண்டு எனக்கே பயம் வந்தது. திடிரென அப்படியெல்லாம் எதுவுமில்லை என்றால் தாங்குவேனா என்று எனக்குள் எழுந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

மிக தைரியமாய் , எந்த நண்பனின் உந்துதலும் இல்லாமல் காதலை சொல்ல முடிவெடுத்தேன்.

பிப்ரவரி 14- விடிவதற்காக எனது அறையில் காத்திருந்தேன். விடிந்ததும் பல ஒத்திகைகளுக்கு பின்னர் அவளுக்கு கால் செய்தேன். முதல் ரிங்கிலேயே எடுத்தாள்.

“ஹலோ”

“ஹலோ”

“உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லனும்”

“சொல்லுடா”

“போன்ல இல்லை நேர்ல”

“வீட்டுக்கு வர்றியா?”

“இல்லை அங்கே வேண்டாம்”

“அப்புறம்?”

“… சரவணா போலாமா?”

அடுத்து வந்த அந்த 10 நொடி மௌனம் மேற்கொண்டு நீடித்திருந்தால் மாரடைப்பில் நான் இறந்திருக்க 80% வாய்ப்பு இருந்ததை நான் உறுதியாக நம்புகிறேன்.

“சிகரெட்டை விட்டுடறியா? வரேன்” என்றாள்.

பதில் பேசாமல் அப்படியே எகிறி மெதுவாக மெத்தையில் தரையிறங்கினேன்

“வா, உனக்காக காத்துட்டுருக்கேன்”

“வரேன்”

என்னால் நம்பமுடியவில்லை. கிள்ளி பார்க்கவில்லை. போனில் கால் லாக்கை ஒருமுறை சரிபார்த்து கொண்டேன். கிளம்பினேன். சரவணா முன்பாக அவளுக்கு காத்திருந்தேன். வந்தாள் வழக்கத்தை விட அழகாக. அவளை உள்ளே கூட்டி செல்லவில்லை.

“உட்காரு போலாம்” என்றவாறே எனது பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.

“ஏற்காடு எங்களை அன்புடன் வரவேற்றது”


“எங்கே போறோம்?” என்று கேட்பாள் என எதிர்பார்த்தேன். எதுவும் பேசாமல் வந்தாள். மிதமான வேகத்தில் அவளுடன் பறந்து சென்றேன்.

ஏற்காட்டில் பாதி மலையில் மூங்கில் தோட்டம் இருக்கிறது. அங்கு நிறுத்தினேன். இறங்கினாள். வண்டியை ஓரமாக நிறுத்தினேன். இறங்கி அங்கிருந்த திட்டில் அமர்ந்தேன். என்னருகே வந்து நின்றாள். நிமிர்ந்து பார்த்தேன். கைகளை கட்டிக் கொண்டு என்னையே பார்த்தாள்.

உண்மையில் எனக்குத்தான் கூச்சமாய் இருந்தது. சமாளித்து பாக்கெட்டில் இருந்து சிகரெட்டை எடுத்தேன். பார்த்தாள். என் உதட்டருகே கொண்டு சென்றேன். முறைத்தாள். அப்படியே என் தலையை சுற்றி பள்ளத்தில் எறிந்தேன். உதடுகளில் சிரித்தாள். என்னருகே அமர்ந்தாள்.

நான் எழுந்து சென்று வண்டி கவரிலிருந்து வாங்கி வைத்திருந்த ரோஜாவை கவனமாய் முதுகு பின்னால் மறைத்து அவளருகே சென்றேன். என்ன இருக்கிறது என ஆர்வமாய் எட்டி பார்ப்பாள் என் நினைத்தேன். ம்கூம். என் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

மண்டியிடலாம் என நினைத்தேன். செய்யவில்லை. அவளருகே அமர்ந்தேன். ரோஜாவை நீட்டினேன். நான் ஏதாவது சொல்வேன் என்று எதிர்பார்த்தாள். நானும் நிறைய யோசித்து வைத்திருந்தேன். வெட்கத்தில் ஏதும் வரவில்லை. நான் கடைசியாக வெட்கப்பட்ட தருணம் அதுதான் என நினைக்கிறேன்.

ரோஜாவை வாங்கிக் கொண்டு, ஏதும் சொல்லாமல் மெதுவாக என் தோளில் சாய்ந்து கொண்டாள். அவளை ஆதரவாக அனைத்து கொண்டிருந்தேன். அவளின் மொத்த எடையும் என் மீதுதான் இருந்தது. சிறிது நேரம் கழித்து கையை கண்ணருகே கொண்டு சென்றதை கவனித்து விட்டு, அவளை விலக்கி பார்த்தேன்.

கண்ணீர்.

அழுதிருக்கிறாள்.

“ஹேய், என்னாச்சு?”

“இல்லை, ஒன்னுமில்லை” என்று கண்ணீருடன் சிரித்துக் கொண்டே மீண்டும் என் மீது சாய்ந்தாள். நான் தடுத்து நெற்றியில் முத்தமிட்டேன். கண்களை மூடிக் கொண்டாள். என் மீது சாய்த்து கொண்டேன். எவ்வளவு நேரம் கடந்தது என்று கவனிக்கவில்லை. ஒரு பேருந்து எங்களை கடக்கையில்தான் உணர்வுகளை திரும்ப பெற்றோம்.

ஏதோ ஒரு எண்ணத்தில் அழைத்து வந்து விட்டேன். மலை ஏறும் எண்ணமில்லை. இறங்க துவங்கினோம். இம்முறை இறுக்கி அணைத்தவாறு, என் தோள்களில் முகம் புதைத்து, கண்களை மூடியவாறு இருந்தாள்.

“ஹேய் தூங்கறியா?”

“ம்கூம்” என்றாள்.

மீண்டும் சரவணா. ஐஸ்கிரிம். இன்று ஒரு நாளில் மட்டும் அவள் முகத்தில் பல முகங்களை பார்த்தேன். சிரிக்கையில், முறைக்கையில், அழுகையில், அணைக்கையில் ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு முகம். வருடகணக்கில் பார்த்திருந்தாலும் இன்று புதிதாய் தெரிந்தாள். வியப்போடு அவளை, என்னை, எனக்குள் புதிதாய் நான் உணரும் உணர்வுகளை கவனித்து கொண்டிருந்தேன்.

அங்கிருந்து வெளியே வந்ததும் கேட்டேன்.
“அடுத்து?”

“இன்னைக்கு முழுக்க உன் கூட எங்க வேணும்னாலும்”

மனதிற்குள் பல இடங்கள் வந்து போயின. இறுதியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்றேன்.

என் வீட்டிற்கு

என் அறைக்கு

மற்ற தோழிகளுடன்தான் வந்திருக்கிறாள். தனியாக வருவது இது முதல்முறை. அறைக்கு உள்ளே நுழைகையில் கையை நீட்டி, அவள் கையை பெற்று, கைக்கோர்த்து உள்ளே அழைத்து செல்கையில் எப்படி உணர்ந்தேன் தெரியுமா?

உண்மையில் அவள் அருகாமையில் அதிக பதட்டத்தை உணர்ந்தேன். பெண்ணுடனான நெருக்கம் முதல்முறையாதலால். என் மேஜையில் இருந்த ஆஷ்ட்ரேயை பார்த்தாள். எடுத்து குப்பை கூடையில் போட்டாள். போட்டுவிட்டு திரும்புகையில் நான் டேபிள்டிராயரை திறந்து சிகரம் பெட்டியை எடுத்து நீட்டினேன்.

என்னருகே வந்தவள் அதை வாங்காமல் இறுக்கி அணைத்து கொண்டாள். சிகரெட்டை நழுவ விட்டு அவளை அணைத்தேன். அவள் முகத்தை நிமிர்த்தியதும் சடாரென என் இதழோடு இதழ் பதித்தாள். அவள் இமைகள் மூடியிருந்ததை பார்த்துக் கொண்டிருந்தேன்.

கண் திறந்தவள் மிக சிறிதாய் என்னிலிருந்து விலகி “love you” என்றாள். இப்போது என் முறை. இதழ் பதித்தேன். பின்னர் அவளை போலவே விலகி “love you” என்றேன்.

என்னுடன் இணைந்திருந்தவளை உதறலுடன் விலகியது எனது அலைபேசி. அவளை பார்த்தேன். தலையாட்டி மறுத்தாள். புரிந்து கொண்டு போனை தூக்கி படுக்கையில் எறிந்துவிட்டு விட்ட இடத்திலிருந்து துவங்கினோம்.

மதிய உணவிற்கு கூட எழாமல் படுக்கையில் படுத்து கிடந்தேன். என் மேல் அவள். எப்போது உறங்கினோம் என்று தெரியவில்லை. எதுவும் நடக்கவில்லை என்பது மகிழ்ச்சியாகவும் அதே நேரம் வருத்தமாகவும் இருந்தது.

அவளை வீட்டில் விட்டுவிட்டு வந்த பின் என் அறையில் கீழே போட்டிருந்த சிகரெட்டினை எடுத்தேன்.

கையில் எடுத்த சிகரெட்டை அவளை நினைத்தவாறும் புன்னகைத்தவாறும் தூக்கி எறிந்தேன். அடுத்த நொடி அவளிடமிருந்து அழைப்பு வந்தது. பேச துவங்கினோம். மற்றவர்களிடம் சொல்லாத பல ரகசியங்களை பகிர்ந்து கொண்டோம். அடுத்த வந்த நாட்களில் நண்பர்களிடம் எங்கள் காதலை தெரிவித்தோம்.

அவள் வராத போது மட்டும் சிவா என் வண்டியில் என்னுடன் பயணித்தான். எனக்கென சில நாட்கள் சமைஎங்கள் குழுவில் பெரிதாய் எதுவும் மாறவில்லை. முன்பு போல்தான். மாறிய விஷயங்களென்றால் கொஞ்சம்தான். படத்திற்கு செல்கையில் அருகருகே அமர்ந்தோம்.த்து வருவாள். நான் அவளுக்கென்று பல ஆச்சர்யங்களையும் பரிசுகளையும் கொடுத்து கொண்டிருந்தேன். உதாரணத்திற்கு இரவு 2 மணிக்கு அவளை அழைத்துக்கொண்டு ஏற்காடு மலையேறி, விடிவதற்குள் வீட்டில் கொண்டு வந்து விட்டுவிடுவதை போல்.

அடுத்த வாரம் அழிய போகும் உலகத்தில் இருப்பது போல் கொண்டாடினோம். திருமணம் என்றொரு விஷயத்தை மறந்து காதலித்தோம். அடுத்த வருடபிறப்பிற்கு முன்பு பிப்ரவரி 14 க்கான கொண்டாட்டத்தை திட்டமிட துவங்கினோம். அது எங்கள் முதுகலை படிப்பின் இறுதியாண்டு வேறு.

அந்த வருடம் முடிவதற்கு முன்பே எங்கள் கொண்டாட்டம் முடிந்தது. ஒரு வார இறுதியிலிருந்து அவளிடம் போன் வரவில்லை. அரை நாளுக்கு மேல் தாங்க முடியாமல் அவள் வீட்டிற்கு சென்று பார்த்தேன். பூட்டி இருந்தது.தொடர்ந்து ஒரு வாரம் அவளது போன் அணைத்து வைக்கப் பட்டிருந்தது. யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

என்னை விடுத்து மகிழ்வாய் இருக்கும் உலகை வெறுத்தேன். பின்னர் ஒரு புது எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அவள் குரலை கேட்ட பின்தான் உயிர் வந்தது. நடந்திருந்த விஷயங்களாக அவள் சொன்னது வித்தியாசமாய் வியப்பாய் இருந்தது.

எங்கோ நடக்கும் சிறு விஷயம், வேறெங்கோ இருப்பவரின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை விளைவிக்கும். கியாஸ் தியரி. எனக்கு நடந்ததும் அதுதான். அந்த வார இறுதியில் இவள் வீட்டிற்கு இவள் தந்தையின் அக்கா வந்திருக்கிறார். அடுத்த நாள் விடிந்த பொழுது காபி போடுகையில் கலவரம் துவங்கியிருக்கிறது. சாதரணமாக அந்த அத்தை அவளிடம் அவள் தாயை பற்றி குறை சொல்ல, பதிலுக்கு இவள் திட்ட, இருவரும் கத்த துவங்க, அனைவரும் கூட, வாக்குவாதம் முற்றி இவள் தந்தை இவளை அடித்த பின் தான் பல ரகசியங்கள் வெளிவந்தது. கடந்த சில நாட்களாக இவளது அத்தை எப்படியோ மூளைச்சலவை செய்து, சொத்தின் சில முக்கிய பகுதியை தன் பெயருக்கு எழுதி வாங்கியிருக்கிறார். சண்டையின் முடிவு “எங்கக்காதான் இந்த வீட்டுக்கு எல்லாம், அவ காலை படிச்சுட்டு கிடக்கறவங்க இருங்க, மத்தவங்க வெளியே போங்க” என்றாராம் அவள் தந்தை.

அவள் தாய் அரசு பணியாளர். தனது 3 மகள்களையும் 1 மகனையும் அழைத்து கொண்டு செருப்பை கூட அணியாமல் தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். எல்லோருடைய மொபைலும் அங்கேதான் மாட்டிக் கொண்டதாம்.

இவள் தான் மூத்தவள். அடுத்து 1 தம்பி, 2 தங்கைகள். இவளும் தம்பியும் மட்டும்தான் இளங்கலை முடித்தவர்கள். தங்கைகள் இருவரும் பள்ளி மாணவிகள். இவள் தனது இளங்கலை கணிணி படிப்பை வைத்து ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டாள். அவள் தம்பியும் அவசரமாக ஓரிடத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான். பொது சொந்தங்கள் சமாதானத்திற்கான செல்கையில் அவள் தந்தை “எங்கக்காகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு வரட்டும்” என்றிருக்கிறார். இவர்கள் பக்கம் “அவங்கக்கா வீட்டை விட்டு போனாத்தான் மத்த பேச்சு” என்றிருக்கிறார்கள்.

கையிலிருந்த சேமிப்பை கொண்டு வெளியூர் வந்து தனி வீடு பார்த்து தாயும் தம்பியும் இருக்கிறார்கள். பெண்கள் மூவரும் விடுதியில். இவள் தலைநகரில் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கு அருகாமையில் தங்கி இருக்கிறாள். இவையனைத்தும் ஒரு வாரத்திற்குள் நடந்து என்றால் நம்ப முடிகிறதா? நடந்தது. அவளது முதுகலை படிப்பினை போல் எங்கள் காதலும் அந்தரத்தில் தொங்கியது. பிரிந்து விடலாம் என்றெல்லாம் பேசிக் கொள்ளவில்லை, ஆனால் பிரிய துவங்கியதை உணர்ந்தேன். அவளுக்கு அதிகம் இரவு நேர பணி. முன்பு போல் எங்களுக்கு அதிகமாக பேசிக்கொள்ள நேரம் அமையவில்லை. ஒரு பறவை பறந்த பின் மற்ற பறவைகளும் கலைந்து ஒடுவதை போல், அவள் பிரிந்த பின் எங்கள் குழுவும் சுற்றவதை குறைத்து கொண்டது. நான் முற்றிலும் குறைத்து கொண்டேன்.

படிப்பு முடிந்து நல்ல வேலைக்கு சென்று அவளை திருமணம் செய்து அவளது குடும்பச்சுமையை குறைப்பேன் என நான் சொல்லும்போதெல்லாம் விரக்தியாய் சிரிப்பாள். மூத்த பெண். தந்தை துணை இல்லை. வேறு மார்க்கத்தில் மணந்தால் அவள் தங்கைகளின் எதிர்காலம் என்னாவது என்றாள். “அப்ப என் காதல்?” என்று கேட்டால் அழுதாள். அதுவும் கொஞ்ச நாள் தான். நான் வேலைக்கு செல்ல துவங்கினேன்.

இருவரும் பேசிக்கொள்ள வசதியாக நேரம் எப்போதாவதுதான் அமையும். அந்த நேரங்களில் முடிந்தவரை அவள் சிரித்து பேசுவதையே விரும்பினேன். அதனால் அவளிடம் சில கேள்விகள் கேட்பதை தவிர்த்தேன். அவள் பணியிடத்தில் பழகும் ஆண்கள் குறித்தும், வரும் காதல் விண்ணப்பங்கள் குறித்தும் கூறினாள். அவள் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருப்பதாக காட்டி கொண்டாள். அடிக்கடி என்னை யாரையாவது திருமணம் செய்து கொள்ள சொல்வாள்.

நாம் இருவரும் நண்பர்கள்தான், காதலர்களில்லை என்பாள். ஏதேனுமொரு கணத்தில் நான் கோபமாகி காதல் குறித்து பேசினால் அழுதாள். வாழ்க்கை மீண்டும் அவளை சோதித்தது. அவள் தம்பி தனது தாயிடமிருந்து விலகி தந்தையுடன் இணைந்து கொண்டான். இவளும் இவள் தாய் மட்டும்தான்.

பல சமயங்களில் வேறு வழியில்லை என்றால் மட்டும் என்னிடம் உதவிகள் கேட்பாள். 7 வருடங்கள் ஓடியது. இடையில் அவளை பார்க்க சென்று வருவேன். இருவரது வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பல துயரங்களை சகிக்க பழகிவிட்டோம். எளிதில் கடக்க முடியாதது எங்கள் காதல் துவங்கிய பிப்ரவரி 14 னைத்தான். அந்த நாளில் இருவருக்கும் பரிசு பொருட்கள் இருவரிடமிருந்தும் வந்து போய் கொண்டிருக்கும்.

நான் அவ்வப்போது யோசிப்பேன், ஒருவேளை அந்த பிப்ரவரி 14 அன்று காதலை சொல்லாமலிருந்தால் அவள் இப்போது குற்ற உணர்ச்சி இல்லாமல் இருந்திருப்பாளே என்று. இருவருக்குமிடையே நெருக்கம் குறைந்து கொண்டே வந்தது. இரண்டு மாதத்திருக்கொரு முறை மட்டும்தான் பேசிக் கொள்கிறோம்.

நேரில் எனக்கு திருமணம் நிச்சயமானதை கூறியபோது சிரித்துக் கொண்டே பேசினாள். “வருத்தமேயில்லையா?” என்று கேட்டபோது “எனக்குள்ள உனக்கான இடம் மாறாது, அதே மாதிரிதான் உனக்குள்ளயும்னு எனக்கு தெரியும், நீ முதல்ல எனக்குத்தான்” என்றவள் பல வருடங்களுக்கு பின் முத்தமிட்டாள். முதல்முறை அணைத்துக்கொண்ட போது சிந்திய கண்ணீரின் மீதம் அவள் கண்களில் தென்பட்டது. எனக்கு பிறகு 2 வருடங்கள் கழித்து தாய்வழி சொந்தத்தில் ஒருவனை மணந்து கொண்டாள். என் திருமணத்திற்கு அவள் எதனால் வராமல் இருந்தாளோ, அதற்காகவே நானும் அவள் திருமணத்திற்கு செல்லவில்லை. ஆனால் இருவரும் பொய் காரணங்களை சொல்லிக் கொண்டது இருவருக்குமே தெரியும்.

பிறகு ஆறு மாதங்களுக்கிடையேதான் பேசிக் கொண்டோம். என் வாழ்க்கையில் இருக்கும் பல பிரச்சனைகளில் அவளை குறித்து யோசிக்க சமயங்கள் அதிகமாக அமையாது. ஒரு விஷயம் மட்டும் இருவருக்குமிடையே மாறாமல் இருந்தது. பிப்ரவரி 14 பரிசு பரிமாற்றம்.

அவள் காதல் தோற்கடிக்க பட்டிருந்தாலும் சாகடிக்கப்பட விரும்பவில்லை. இப்போதெல்லாம் ஜனவரியிலேயே என்ன வேண்டும் என் கேட்க துவங்கிவிட்டாள். இந்த வருடத்திற்கு புடவை கேட்டாள். மனைவிக்கு வாங்கும் போது அவளுக்கும் ஒன்று வாங்கி அனுப்பினேன்.

இப்போது கதையின் துவக்கத்தில் வரும் முதல் இரண்டு பத்திகளை மீண்டும் வாசிக்கவும்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.