கடலலை...

ஈரம் தோய்ந்திருந்த மணலும் உப்பை சுமந்து வந்த காற்றும் அரைச்சந்திர நிலவும் தன் இரண்டு குழந்தைகளும் மனைவி மற்றும் அதேபோன்ற நண்பணின் குடும்பம் மட்டுமாய் அந்த கடற்கரை மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும் மாறாக அனைவரது கண்களிலும் பயம் படர்ந்திருந்து....
சலசலக்கும் கடலலையில் படகில் வந்த போது அந்த படகோட்டி வாங்கிக்கொண்ட தலைக்கு பத்தாயிரம் ரூபாயும் இறக்குவதற்கு முன்பே படகை ஓட்டி சென்றதில் இழந்த உணவுப்​பையும் சற்றே வலித்தது....


கடற்படை ரோந்துப் படகுகளை பார்த்துவிட்டதாகவும் இந்தியாவின் அரிச்சல்முனை இதுதானென்றும் கூறி அந்த படகோட்டி சென்றதும் அது அவர்களுக்கு அருகிலேயே வந்து கொண்டிருந்த மற்றுமொரு படகுதான் என்பது நாங்கள் வந்த படகு சென்றபிறகுதான் தெரிந்தது...


அந்த இருட்டில் வழி தெரியாமல் குழந்தைகளுடன் செல்வது நல்லது இல்லை இங்கேயே தங்கி இருந்துவிட்டு காலையில் விடிந்ததும் போகலாம் -நான் .... ம்ம் நான் பாதி நீ பாதி யாரும் வாராங்களான்னு பார்த்துக்கலாம்... அவன்


காற்றின் சப்தம் பழக ஆரம்பித்தது .... ஈரம் சற்று அதிகமாக ஆரம்பித்ததாய் தோன்றியது. நேரம் ஆக ஆக எங்களைச் சுற்றி நீரின் அருகாமை அதிகரித்ததை மங்களான நிலவொளியில் பார்க்க முடிந்தது.. ஏதோ தவறு நடந்துவிட்டதாய் தோன்றவே நான் சற்று நடந்து பார்க்க ஆரம்பித்தேன் ..... சுற்றிலும் கடல் நாங்கள் இருந்த இடம் ஒரு மணல்மேடு போல இருந்தது கொஞ்சம் கொஞ்சமாக கடல் உயர்வதை பார்க்க முடிந்தது.... விபரீதம் புரிந்தது .... ஓடிச்சென்று அவர்களுக்கும் சொல்லவே பயம் அதிகமானது...


சில நிமிடங்களிலேயே கடலின் மட்டம் தொடைவரை உயர்ந்து விட்டிருந்தது.... பிள்ளைகள் பயத்திலும் குளிருக்கும் நடுங்க ஆரம்பித்தன.... அவர்களை எங்கள் கைகளில் தூக்கிக் கொண்டோம் ..... கடல் வயிரையும் நனைத்தது .... நெஞ்சுக்கும் உயர்ந்தது .....

பிள்ளைகளை பின்கழுத்தில் அமர்த்திக்கொண்டோம் நால்வரும் ஒருவரையொருவர் பிடித்துக்கொண்டோம் அலையில் தூரமாய் நகராதபடி ஒன்றாய் இருக்க.... பயத்தில் நாங்கள் கண்ணீர்விட குழந்தைகள் பயத்தில் எங்களை அழுத்திக் பிடித்துக்கொண்டு சத்தம் வராமல் அலறின.... ஆம் சத்தமில்லால் அழவும் அலறவும் எங்கள் குழந்தைகளும் பழகிப்போயிருந்தன.....


கடல் கழுத்தையும் தொட்டே விட்டது பயம் வானத்தையே கடந்திருந்தது...


நேரம் ஆக ஆக கடலும் இறங்கிவிட்டிருந்தது சூரியனின் கதிர்கள் தெரிவதற்கான நேரம் வந்திருந்தது... வெளிச்சம் வரவர கடலும் குறைந்தது.... சுற்றிலும் கடல் மட்டுமே வேறு நிலற்பரப்பே கண்களுக்கெட்டவில்லை எந்த இடம் தெரியவில்லை பயம் மட்டுமே உடனிருந்தது .....குழந்தைகள் பசிப்பதாய் அழுதன .. தூரத்தில் ஒரு படகு ..... ஒருவேளை இலங்கை கடற்படையாயிருந்தால் பட்ட கஷ்டமெல்லாம் வீண்.... எல்லோரும் படுத்துக்கொண்டோம்.... பக்கம் வரவர அது இந்திய மீனவப் படகு என்பது கண்ணில் பட தைரியமாய் கையை காட்டினோம்.... பார்த்தும் பார்க்காததாய் போய் விட்டனர்.... ஒரு விசயம் மனதில் பட்டது இந்தியா அருகாமைதான் இது இலங்கை கடற்படை வராது... ஆனால் நாங்கள் வந்த படகு கூட இந்தியப்படகுதான் பயம் மீண்டும் உயர்ந்தது... பசிக்கும் குழந்தைகளை சமாதானப்படுத்தி விட்டு அடுத்த படகிற்காய் காத்திருந்தோம்....... சூரியனும் நடுவிற்கு வந்திருந்தது...


மீண்டும் கடலின் உயர ஆரம்பித்தது ..... இருப்பதிலேயே உயரமான பகுதியில் இரவைப்போலவே ஒடுங்கி நின்றோம் மீண்டும் கழுத்துவரை உயர்ந்துவிட்டு குறைய ஆரம்பித்தது..... எங்களுக்கும் பசி .... மயக்கமாய் வந்தது....


இரவு நெருங்கும் நேரத்தில் மீண்டும் ஒரு முறை அப்படி கடலை நினைத்தால்​ நடுங்க ஆரம்பித்தது ...


அந்த இரவும் அதேபோன்ற கொடுமையான இரவாகவே அமைந்தது.... பசியும் தாகமும் ஈரமும் பயமும் சேர்ந்து எங்களை நடுக்கிக் கொண்டிருந்தது.... களைப்பும் கவலையும் ஈரத்தை அதிகப்படுத்தியது...


சற்றே விடிவதற்கான நேரம் நெருங்கவே ஒரு பெரிய முடிவை எடுத்திருந்தோம். எங்களிருவரில் யாரேனும் ஒருவர் கரை நோக்கி சென்று உதவி நாடுவது....


ஆனால் கரை எந்தப் பக்கம் ...எவ்வளவு தூரம்.... என்னால் முடியுமா ...ஒருவேளை எனக்கு வழியில் ஏதேனும் அசம்பாவிதம் சேர்ந்துவிட்டால் இவர்களது நிலை என்னவாகும்... அல்லது நானில்லாத போது இவர்களுக்கு ஏதேனும் நடந்துவிட்டால்.... பல குழப்பமான கேள்விகள்... குழந்தைகளின் பசி அழுகை எங்கிருந்தோ தைரியத்தை வரவழைத்தது.


வழியில் ஏதேனும் மீனவர்கள் கண்களில் பட்டால் கூட போதுமே என்ற நம்பிக்கையில் நடந்து சென்று கடலில் இறங்கினேன் முடிந்தவரை நடந்தும் ஆழத்தில் நீந்தியும் செல்லலாம் என்று எண்ணிக்கொண்டு நடக்க ஆரம்பித்தேன்....


வெகுதூரம் வந்தும் கூட கழுத்தளவே இருந்தது ... நீந்த ஆரம்பித்தேன் வேகமாக சென்றுவிடலாம் நடப்பதை விட ... ஐந்தாறு நிமிடம் கழித்து சற்றே சோர்ந்தபோது நிற்க முயன்றால் ஆழம் அதிகமாயிருந்தது .... குழந்தைகளை நினைத்துக்கொண்டு மீண்டும் நீந்தலானேன்... இப்போது உடலின் சக்தி முழுதும் உபயோகிக்க ஆரம்பித்தேன்... சோர்வு விரைந்தது ..... மேலும் பத்து நிமிடமாவது இருக்கும் நீக்கவே முடியாத நிலையில் கடலினுள் அமிழ்ந்தேன்.... கடல் எப்போதும் போல் கருணையாய் ஆழத்தை குறைந்திருந்தது.... நின்றேன் ... நிற்கவும் முடியவில்லை .... தலை சுற்றியது ..... மனது குழந்தைகளை நினைக்க ஆணையிட்டது ஆனாலும் சோர்வு வெற்றி கொண்டது.... நடக்க முயன்றேன் முடியாது விழுந்தேன் .... எழுந்தேன் .... விழும்போது தான் பார்த்தேன் அங்கே இரண்டு பேர் நின்று கொண்டிருந்தனர் ..... எனக்கும் அவர்களுக்கும் கண்களில் மிகுந்த மகிழ்ச்சி .... ஓடிச்சென்று அவர்களிடம் சேர்ந்தேன்.... அவர்களது மூன்றாவது நாள் அன்று என்பது அதிர்ச்சியை​மும் அயர்ச்சியையும் தந்தது.நான் கிளம்பி இரண்டு மணிநேரம் ஆகி இருக்கும் இன்னும் சற்று நேரத்திற்கெல்லாம் அவர்களிருக்கும் இடத்தில் கடல் மட்டம் உயர்ந்து விடும்....


அந்த இருவரும் என்னுடன் நீந்த சம்மதித்தனர் மூவருமாய் நடந்தும் நீந்தியும் பயணித்தோம் .... ஒரு மணல் திட்டு கண்ணில் பட்டது .... இறைவா இன்னும் எத்தனை மணல் திட்டுகளோ என்று எண்ணிக்கொண்டு அதனை நோக்கி நகர்ந்தோம்....


அது சற்றே பெரிய மணல்திட்டாயிருந்தது.... தூரத்தில் ஒரு உயரமான கம்பும் அதன்கீழ் ஒரு குடிசையும் கண்ணில் பட பயம் மீண்டும் உயர்ந்தது.... எந்நாட்டு கொடியும் இல்லை ஆனால் இது இராணுவ முகாமாகவே இருக்கும் எனப்பட்டது... இந்தியா என்றால் பரவாயில்லை இலங்கையாயிருந்தால் உயிர் போவது நிச்சயம்.....


எங்களை ஒருவர் பார்த்துவிட்டு குடிசைக்குள் ஓடி துப்பாக்கியுடன் எங்களை நோக்கி ஓடி வந்தார் அவர் பின்னாள் மேலும் இருவர் அதேபோல ..... செய்வதறியாது சிலையாகி நின்றோம்.....


அவர் ஏதோ கத்தியவாறே ஓடிவந்தார் தெளிவாக கேட்காத தூரம் .... நாங்கள் நிராயுதபாணியாக நிற்பதை பார்த்ததும் இன்னும் வேகமாக ஓடிவந்தார்.... பின்னால் வருவோருக்கு திரும்பி ஏதோ சொல்லிக்கொண்டே வந்தார் ....


கேட்கும் தூரத்தில் வந்திருந்த அவரது வாயிலிருந்து வந்த வார்த்தை சிங்களம் இல்லை .... கடவுளே இது இலங்கை இல்லை ......... மனதில் பயம் நீங்கி கண்கள் ஊற்று நீராய் கண்ணீரைக் கொட்டியது.....


அருகிலேயே வந்துவிட்டார்... அவர்கேட்ட எந்த கேள்வியும் புரியவில்லை ஆங்கிலமும் தெரியாத எங்களுக்கு தெரிந்த தமிழ் இவர்களுக்கு புரியவில்லை....


அவரது கால்களில் விழுந்து செய்கையால் உணர்த்த முயன்றோம்.... குடும்பத்தை காப்பாற்றுங்கள் என்று கதறிக்கொண்டிந்தேன்.... ஒருவர் எங்களை சோதனை போட்டார் பிறகு எங்களை குடிசைக்கு அருகில் அமர வைத்தனர் குடிக்க தண்ணீர் கொடுத்தனர் ..... தெய்வங்களாய்ப் பட்டனர் எங்களுக்கு....உள்ளேயிருந்து ஒருவர் ரேடியோ செட் ஒன்றை எடுத்து வந்தார்... மறுமுனையில் ஒரு தமிழ்க் குரல் ... ரேடியோவும் தெய்வமானது.....


உடைந்த குரலில் முழு வேகமாய் ஒப்பித்தேன் நடந்ததை .... எல்லாம் கேட்டுக்கொண்டு அவர் நிச்சயம் காப்பாற்றுவதாய் கூறிவிட்டு பிற தெய்வங்களிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்..... என் கைகள் கடவுளைக்கண்டதாய் கூப்பியவாறே இருந்தது....


சாப்பிட ரொட்டி கொடுத்தனர் மற்ற இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.... என்னால் முடியவில்லை அங்கிருக்கும் குழந்தைகளையும் பிறரையும் நினைத்து அழுகை பீறிட்டெழுந்தது.....


இரண்டு மணிநேரம் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை பயத்தில் அவர்களிடம் கேட்கவும் தைரியமில்லை .... அழுகை நின்றபாடில்லை.....


சற்று தூரத்தில் ஒரு ஜூப் வந்துகொண்டிருந்தது .... போலிஸ் ஜீப் அது என்பது புரிந்தது.... அவர்கள் என்ன செய்வார்கள் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளிவிடுவார்களோ.... அய்யோ என் குடும்பம் என்னாவது .....


இரண்டு சீறுடை காவலர்களும் வேறு இருவரும் இறங்கினர் எங்களை நோக்கி வந்தபோதே ஒருவர் யாருடைய குடும்பம் மணல்திட்டில் இருக்கு என்றார் அவரது கால்களை நோக்கி ஏறக்குறைய பாய்ந்தேன்


கைத்தாங்கலாக எழுப்பி உங்களோட விவரங்கள் எல்லாம் இவர்கிட்ட குடுங்க நாம கிளம்பனும் அவங்கள​ கூப்பிட்டு வர என்ற போதுதான் உயிர் வந்ததுபோல் இருந்தது....


ஒரு பெரிய படகில் ஏறி​ பயணமானோம்.... என்னிடம் கேட்டறிந்த​ தகவல்கள் படி படகு செல்வதாக கூறினார். படகில் எங்களுடன் ஒரு டாக்டர் அவரின் உதவியாளர் மற்றும் இரண்டு சீறுடை காவலர்களும் படகில் இருந்த நான்கைந்து கடற்படை வீரர்களும் இருந்தனர்.


உணவை உண்ணும்படி நிர்பந்திக்கவே நானும் சற்று சாப்பிட்டேன். கடலைப் பார்த்தபடி நின்றிருந்தேன் மனதினுள் ஒரு சிறிய வலி இருந்தாலும் வெற்றிகரமாக காப்பாற்ற போகிறோம் என்ற நினைப்பே நிம்மதியைத் தந்தது.


பலத்த சத்தத்துடன் ஒரு பெரிய படகு வெகு வேகமாக எங்களைக் கடந்தது. அது சராசரி படகு போலல்லாமல் மேற்புறத்தில் இரண்டு காற்றாடியைக் கொண்டிருந்தது... இது ஹோவர்கிராப்ட் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.


நாங்கள் இரண்டு மணல் திட்டுகளைக் கடந்து மூன்றாவது கடல்திட்டிற்கு நெருங்கிக் கொண்டிருந்தோம் நான் கூறிய தகவலின்படி இதுவாகத்தான் இருக்கும் என்றார்கள் வழக்கமாகவே அகதிகளை மூன்றாம் திட்டிலோ அல்லது நான்கிலோதான் இறக்கி விடுவார்களாம்


மூன்று கடற்படை வீரர்களும் எல்லாப் பக்கமும் பார்த்தாயிற்று யாரும் இல்லை என்றனர் .... அடிவயிற்றில் தீவைத்தது போல் இருந்தது மீண்டும் பயம் தொற்றிக் கொண்டது. உடைந்து அழழானேன்.... காவலர் ஒருவர் - ஒருவேளை இரண்டாம் திட்டில் இறக்கிட்டாங்களோ என்ற போது கலவரமானேன் இரண்டாம் திட்டு இலங்கைக்கு சொந்தமாம்.. பேசிக்கொண்டார்கள்.


அவர்களுக்குள் பேசிக் கொண்டார்கள் பிறகு என்னிடம் ஏதேதோ கேள்விகளைக் கேட்டனர் பின்னர் வருத்தமான முகத்துடன் பேசிக்கொண்டார்கள்....


ரேடியோவில் ஏதோ புரியாத மொழியில் பேசிக்கொண்டார்கள்.... டாக்டரும் பிறரும் என்னை ரொம்பவே பாவமாக பார்த்தனர்... எனக்கு வாழ்க்கையே விரக்தியாய் பட்டது இதற்காகத்தானா இத்தனை போராட்டம் இலங்கை இராணுவத்தின் பார்வையிலிருந்து தப்பி மொத்த பணத்தையும் கட்டி படகில் வந்து எங்கோ இறங்கி குழந்தைகளோடு பட்ட கஷ்டமெல்லாம் வீண் தானோ.... இனி நான் மட்டும் எதற்கு .... ஓடி கடலினுள் குதித்தேன் .....


இரண்டு பேர் எனை மீண்டும் படகில் ஏற்றி அமைதிப்படுத்தி அமரவைத்தனர். அவர்களை கெஞ்சி கூத்தாடி இரண்டாம் திட்டில் பார்க்க வைக்க போராடிக் கொண்டிருந்தேன் ... இயலாத கண்களோடு அவர்களின் பார்வையைத் தவிர்க்க​ முயன்றேன்... என்னை மட்டுமாவது அனுமதியுங்கள் அவர்களோடு சேர்ந்து வாழ்வோ சாவோ ஒன்றாகவே நடக்கட்டும் என்று கதறிக்கொண்டிந்தேன். அவர்கள் ரேடியோவில் பேசுவதும் எனை பார்ப்பது மாய் இருந்தனர். ரேடியோவில் பேசியவர் என்னருகில் வந்து ஒருவேளை நீங்கள் சென்றபிறகு வந்த படகு அவர்களை ஏற்றிச் சென்று இருக்கலாம் அல்லது அந்த ஹோவர்கிராப்ட் ஏற்றிச் சென்று இருக்கலாம் .... அதைத்தான் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் கொஞ்சம் பொறுமையாக​ இருங்கள் என்றபோது நேரிலேயே அவர்களைப் பார்த்த சந்தோஷம் வந்து போனது.....


அங்கிருந்து திரும்பலானோம் ... ஒரு பத்து மீட்டர் கூட வரவில்லை கடற்படை வீரர்களுள் ஒருவர் ஏதோ கத்தினார்.... அவர் கைகாட்டிய திசையில் உடல் ஒன்று மிதந்து கொண்டிருந்தது ......


என் கண்கள் மங்களாகி மயங்கி சரிந்தேன். கண்திறந்து பார்த்தபோது அருகில் இருந்த நண்பனை உயிருடன் பார்த்ததும் மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாது. மற்றவர்கள் எங்கே என்று கேட்கும் முன்பே அவன் கை காண்பித்த திசையில் தெரிந்த மண் திட்டில் காப்பாற்றுங்கள் என்று கைகாட்டும் அவர்களைப் பார்த்த பிறகு அழுகை பீறிட்டெழுந்தது எல்லோரையும் கும்பிட்டவாறே இருந்தேன்.


மண் திட்டில் இறங்கி அனைவரையும் அவசரமாய் ஏற்றிவிட்டு வேகமாக படகை திருப்பிக்கொண்டிருந்தனர் தூரத்தில் ஏதோ ஒரு படகு வருவது தெரிந்தது.... படகின் வேகம் அதிகமானது .... அனைவருக்கும் தண்ணீரும் உணவும் கொடுத்தார்கள். குழந்தைகள் பயத்தோடே அதை சாப்பிட்டார்கள் .... இராணுவ உடையில் அன்பான மனிதர்கள் குழந்தைகளுக்கு புதிது... மெல்ல மெல்ல சிரித்தன...


தெய்வங்களைக் கண்ட கண்களாய் எங்கள் கண்களில் நன்றி பக்தி என அனைத்தும் இருந்தது. ரேடியோவில் திரும்பவும் பேச ஆரம்பித்தனர் படகும் செல்ல ஆரம்பித்தது...


எங்கள் மண் எங்களுக்கு தூரத்தில் விடை கொடுத்தது .... அன்று கிளம்பியபோது அப்படி தோன்றவில்லை ஆனால் இன்று.... மீண்டும் ஒருமுறையேனும் பார்ப்போமா..... கடலலை படகினுள் வந்து என்னை நனைத்தது நானும் நனைந்திருந்தேன் என் கண்போன்றே.....


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.