யாதுமாகி நின்றாள்

ஜனித்த கணத்திலிருந்தே

பெண்பிள்ளையென்று

வசைச் சொற்களையும்

வாழ்த்துக்களையும் பெற்றுக்

குழம்பிய மனதோடு

வாழ்க்கையை எதிர்கொள்ளத் துணிந்தவள்…

வளரும் பருவத்திலோ

பேச்சில் திறனை வெளிப்படுத்தினால்

வாயாடியென்றும்

செயலில் வெளிப்படுத்தினால்

அடங்காப்பிடாரியென்றும்

புரிந்தும் புரியாமலும்

ஆயிரம் பேசுபவர்களின்

தரச்சான்றிதழ்களைக்

கண்டுகொள்ளாமல்

புன்னகையோடு படர்ந்து செல்பவள்…

பருவம் வந்த பின்பு

எட்டு முழச் சேலையிலும்

கரங்களைக் கட்டிப்போடும் வளையலிலும்

மோகம் கொண்டு தன்னைப்

பிறர் பார்க்கிறார் என்பதை

மறந்து அழகெனும் மாலையில்

அடிமைப்பட்டுக் கிடந்தவள்…

மயக்கம் தெளிந்து

மறுமலர்ச்சி பெற்று மலர்கையில்

ஏராளமானோரின் ஏளனத்திற்கு

ஆளாக்கப் பட்டவள்…

புதுமைப் பெண்ணாய்ப்

பொங்கியெழத் துடித்துக் கொண்டிருப்பவள்

கௌரவம் என்கிற

பொய்மை முத்திரைக்கு அஞ்சித்

தன் ஆசைகளையும்

காதலையும் தியாகிப்பவள்…

பயிர் விளையாததற்கு

ஆயிரம் காரணங்கள் இருந்தும்

விளையாத பயிரென்று இவளையே

பழிப்பவரிடமும் தன் கணவனுக்காக

அனைத்தையும் பொறுத்துக்கொள்பவள்…

தாயான பின்பும்

தன் சிறு சிறுஇன்பங்களையும்

குழந்தைகளுக்காக

விட்டுக் கொடுப்பவள்…

கணவனின்

ஒவ்வொரு செயலிலும்

தன் தந்தையின்

தூய்மையான அன்பை

எதிர்பார்த்து ஏமாந்து போனவள்…

கணவனிடம்

குடும்பத்திற்காகப்

பொருளை வேண்டினாலும்

தன் ஆறுதலுக்குச்

சிறிது நேரத்தை வேண்டினாலும்

அதைப் புரிந்துகொள்ளாத

கணவனைப் பிறர்முன்

விட்டுக்கொடுக்காத நிலையிலும்

தான் தலைகுனிந்தாயினும்

அவனை உயர்த்தி நிறுத்துபவள்…

தள்ளாடித் தடி ஊன்றும்

காலத்திலும்

விடுமுறையில் மட்டுமே காணவரும்

மக்களுக்காகத்

திண்பன்டங்களைச் சேகரிக்கக்

காத்துக் கொண்டிருக்கும்

அன்பின் ஆணிவேராய் நின்றவள்…

இலையல்ல கிள்ளி எரிவற்கு

அனைத்தையும் தாங்கி நிற்கும்

வேர் போன்றவள்…

பேரிடர் ஆயிரம் வரினும்

அதைத் தாண்டிச் செல்லும்

நதி போன்றவள்…

இவள் வெறும் துளிரல்ல

ஆயிரம் நன்மைகள் பயக்கும்

விருட்சம்…

வாழ்வின் அனைத்து இன்ப

துன்பங்களையும் கடந்து

யாதுமாகி நின்றவள்…

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.