தீண்ட மறுக்கும் திருநங்கை காதல்கள்

 

தீட்டிய புருவங்கள்

மையிட்ட விழிகள்

ரோஜாப்பூ இதழ்கள்

கார்கூந்தல் காற்றில் அசைய

ஊதா நிறப் புடவையில்

என்னவள் பதுமையாய் நிற்க

பக்கத்தில் நின்றிருந்த நான்

பரவசத்தில் மிதக்க

மாநகரப் பேருந்தோ

சதி செய்தது

ஆம்

அவள் இறங்கும் இடத்தை நினைவுபடுத்திவிட்டது

இறங்கிவிட்டாள் என் காதலி

இறங்கினேன் நானும் வேறுவழியின்றி

பின் தொடர்கிறேன் பதட்டத்துடன்

ஏற்பாளா? என் காதலை?

ஏங்கிக் கதறுகிறது மனம்.

 

நின்று திரும்புகிறாள்

கடிதமொன்றைக் கையில் திணித்து

தலையசைத்துச் செல்கிறாள்

ஆர்வமாய் கடிதம் திறக்கிறேன்

அவளும் என்னை நேசிக்கிறாளென

அறிந்ததும் ஆயிரம் பட்டாம்பூச்சிகள்

வட்டமிடுகின்றன என்னைச் சுற்றி

உற்சாகம் உச்சந்தலையை எட்டிய மறுகணம்

பிடறியைப் பிடித்து தள்ளியது பின்குறிப்பு

அழகாய் கையொப்பமிட்டிருந்தாள்

திருநங்கை உஷா என்று….

பட்டாம்பூச்சிகள் மரங்கொத்திகளாய் மாறி

என் உடல் துளைத்தன

நிமிர்கிறேன் அதிர்ச்சியில்

எதிரிலோ புன்னகையுடன் அவள் !!

 

இதழ் திறக்கிறாள் ……

காதலில் திளைத்த மனதை

காலடியில் வீசிவிட்டாயா இளைஞனே?

 

அவள் கேள்விக்கு மௌன பதில் கொடுத்து

சிலையாகத் தொடங்கியிருந்தேன்

பதுமையென வர்ணித்தவளை

புதுமையாகப் பார்க்கிறாய் அல்லவா?

 

வார்த்தைகளில்லை என்னிடம் ……….. தொடர்கிறாள்

கலங்குகிறாய் காதலித்த பெண் கிடைக்கவில்லையென

காதலிக்கவே ஆணினம் இன்றி தவிக்கும் எங்கள்

அவல நிலை அறிவாயா?

 

பெருமூச்சு இடைவெளிக்குப் பின்

பேதையவள் பேசுகிறாள்

இல்லை… இல்லை…. புலம்புகிறாள்…

 

உருவமே கல்லடிபடுகையில்

உள்ளக் காதலை உரைப்பது எப்படி?

சொன்னால் களங்கம் சுமப்பது பிறப்பு மட்டுமல்ல காதலும்தான்

சுடுகாடாய் மாற்றியிருக்கிறோம் மனதை

அவ்வப்போது அரும்பும் காதல்களை தகனம் செய்ய

காதல் கொன்று உணர்வைத் தின்று

உயிர் வாழ வருகிறோம் உங்கள் நடுவே!

விரட்டியடிக்கும் நீங்களோ தோற்றுப்போன

காதல்களுக்காக தற்கொலைகளைத் தத்தெடுக்கிறீர்கள்.

ஊமைக் காதல்களுடன் உயிர் வாழ்கிறோம் நாங்கள்

தூக்குக் கயிறுகளைத் தூர எறிந்து

 

நிறுத்திவிட்டு முகம்பார்த்தவளிடம் நிரூபிக்கிறேன்

சிலை பேசுவதில்லையென !

 

கலங்கிய கண்களுடன் உதிர்க்கிறாள்

கலங்கா வார்த்தைகளை ……. நண்பனே!

பொய்ப்பது பருவக் காதல் மட்டுமல்ல

பள்ளிக் காதலும்தான்

ஆம். தீண்டத்தகாதவர்களாகி விடுகிறோம்

கல்விக் கட்டிடங்களுக்கும் கூட !!

 

தாய் தகப்பன் அறியாப் பிள்ளைகள் கடவுளின் குழந்தைகளாம்

தாயும் தகப்பனுமே விரட்டியடிக்கும் நாங்கள் யாருடைய குழந்தைகள் ?

பாதியிலேயே பரிதவிக்க விடுவதுதான் எங்கள்

பந்தபாசங்களின் காதல் !!

 

கழிவறையின் கதவுகளே தாழ் திறவா நிலையில்

எங்களுக்கு கடவுளின் கதவுகளா வாசல் திறக்கப்போகின்றன?

கூத்தாண்டவரில் தொடங்கி

கூத்தாண்டவரிலேயே முடிகிறது

எங்களின் இறைக் காதல் !!

 

விரக்தியில் விழுவது அவள் வார்த்தையல்ல

வாழ்க்கையென அறிகிறேன்

கற்சிலையும் கண்ணீர் வடிக்குமென

உணர்கிறேன் நான் இப்போது …..

பேச முற்பட்டவனை ஊமையாக்குகிறாள் மீண்டும்

 

கல்வியோ உங்களுக்கு தாராளம்

பணம் கொழிக்கும் தொழில்களோ ஏராளம்

ஆனால்

கையேந்தும் யாசகமே எங்கள்

கடைசி அடையாளம்

இருப்பினும் வாழ்கிறோம் பட்டினிச் சாவுகளின்றி

தொலைத்துப் பிழைக்கிறோம்

எங்கள் உழைப்பின் காதலை !!

 

இறுதி வார்த்தைகள் என் நண்பனே …..

உறுதியுடன் கூறியவளை இமைக்காமல் பார்க்கிறேன்

 

நேசிக்கும் பெண்ணினத்திற்கு, ஆணினம் தரும்

உன்னதப்பரிசு பாலியல் வன்முறைகள்

நேசிக்கும் ஆணினத்திற்கு, பெண்ணினம் தரும்

அன்புப்பரிசு ஆணை எதிர்க்கும் பெண்ணியப் போர்கள்

 

நிறைவாய்ப் பிறந்தவர்களாம் நீங்கள் !!

குறையுடன் பிறந்தவர்களாம் நாங்கள் !!

சக பெண்ணை சித்ரவதை செய்வதும்,

சக ஆணை வெறுப்பதும் தான் நிறை எனில்

வாழ்கிறோம் என்றுமே குறையுடையவர்களாய் !!

 

காதல்கள் அனைத்தும்

கானல் நீரானபின்பும்

வாழ முயற்சிக்கிறோம் பிறரைத் துன்புறுத்தாமல் ….!!

பிறரால் துன்புறாமல் !!

 

கண்ணீர் மல்கினாள் …… கைகூப்பி

மன்னித்துவிடு நண்பனே !!

வார்த்தைகள் தந்த வலிகளுக்காக

வலிகளின் வீரியம் அறிவேன்

வாழ்வே வலியாய்ப் போனதால் …

 

இறைஞ்சுகிறேன் ….. உன்னிடம்

வாழ்க்கை தரச் சொல்லி அல்ல …..

வாழ விடச் சொல்லி !!

 

நகர்கிறாள் எனைக் கடந்து ….

புரிகிறேன் முதன் முறையாய் அவளை …..

வணங்குவேன் ……  இனி ஒவ்வொரு முறையும்

அவள் செல்லும் திசைநோக்கி…..!!

                           ---- இரா. சைலஜா சக்தி

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.