உயிர்கொண்ட ரோஜாவே

அவள் என்மேல் மிகுந்த கோபத்தில் இருப்பாள்.இந்த பிரிவு அவளைவிட எனக்குத்தான் அதிக வேதனையை கொடுத்தது.திடீரென நான் வேலை பார்க்கும் கம்பெனியில் அவசர வேலை விஷயமாக என்னை சென்னை போக சொல்லியிருந்ததால் வீட்டிற்கு வந்த நான் அவளிடம் கூட சொல்லாமல் சென்னை புறப்பட்டுவிட்டேன்.அங்கு சென்றபின்தான் எனக்கு என் தவறு உரைத்தது.அவள் என்ன காரணம் கூறினாலும் ஏற்றுகொள்ளகூடியவள் இல்லை என தெரிந்ததால் அமைதியாகிவிட்டேன்.

நான் இல்லையென்று தெரிந்தவுடனே வாடிப்போய் இருந்திருப்பாள்.அதற்காகவே ஏழு நாட்களில் முடிக்க வேண்டிய வேலையை இரவு பகல் பாராமல் நான்கு நாட்களிலேயே முடித்துவிட்டு இப்பொழுது வந்துகொண்டுடிருக்கிறேன்.என் நினைவெல்லாம் அவள் ஞாபாகங்கள்.வரும் வழியில்தான் நாங்கள் முதன்முதலாய் சந்தித்த பூங்காவை பார்த்தேன்.அதை கண்டதும் ஒருமெல்லிய புன்முறுவல் என் உதட்டோரம்.இருக்காதா பின்னே? அங்கே கூத்துகுலுங்கும் மலர்கள்தான் எங்கள் முதல் சந்திப்பின் சாட்சி.அவையனைத்தும் எங்கள் தோழி எப்படியிருக்கிறாள்? என கேட்பது போல் இருந்தது.
நேற்றுதான் அவளை பார்த்ததுபோல் இருந்தது.அப்பப்பா என்ன ஒரு அழகு..இல்லை இல்லை பேரழகு என்றுதான் சொல்லவேண்டும்.இவ்வுலக பெண்கள் எல்லோரும் அவள்முன் மதிப்பிழந்து போவர்..அவளின் வருகையால் என்வீடு ஒவ்வொருநாளும் அழகாய் தெரிந்தது.தினமும் என்விடியல் அவள் முகத்தில்தான்.

அவளுடைய நினைவுகளை சுமந்து வீட்டிற்கு வந்த என்னை ஸ்தம்பித்துபோய் நிற்கவைத்தாள். அவள்மேல் இருந்து பார்வையை பிரிக்கவே முடியவில்லை. “உயிரெனும் நதியில் ஓடும் இலையாய்! அழகாய் கவிதைகளை! இதமாய் கிறுக்கிவிட்டது அவளின் தோற்றம் என் மனதில்”.நேற்று கொட்டிய மழைத்துளி மரகிளைகளில் மிச்சம் இருக்க அது கீழே நின்றிருந்த என்னவளின் மேல்பட்டு தெறித்து கொண்டிருந்தது.குளித்திருப்பாள் போலும்.பனித்துளியென நீர்த்துளிகள் அவள் இதழோரம் இளைப்பாற,அந்நேரம் கதிரவனின் ஒளிக்கற்றை என்னவளின் பூவுடலை தீண்டி செல்ல அழகாய் புன்னகைத்தாள்.அந்த ஓசையில்ல சிரிப்பினில் என் உயிரே உருகிபோனது.அதுபோதாதென அவளை தொட்ட தென்றல் என்னை தீண்டிச் சென்று பேரவஸ்தையை கொடுத்தது.அந்த தென்றலில் அவளின் வாசம் அவளுக்கே உண்டான வாசம் உயிரை தீண்டியது.யாரோ எழுதிய கவிதை நினைவில் வந்தது

“எந்த கவிஞனும் அவளை பாட்டில் வைப்பான்;எந்த கலைஞனும் அவளை சிலை வடிப்பான்;இந்த இயற்கையும் அவள்மேல் காதல் கொள்ளும்;அவள் நினைவாலே என் காலம் செல்லும்”

எங்கள் இருவருக்கும் இடையேயான தூரம் பாரமாகிவிட அவளை நெருங்கினேன்.நான் அவளை நோக்கி வருவதை பார்த்து அவள் முகம் கோபத்தில் சிவந்துவிட்டது.அவள் இமையோரம் நீர்த்துளி கூட எட்டிப்பார்த்தது.என் பிரிவு அவளை வருத்தியிருக்கிறது என புரிந்தது.அவளை சமாதானபடுத்த முயன்று அவளை தொட்டேன் சட்டென விலகிநின்றாள்.பின் என்ன நினைத்தளோ அவளே என் கைகளுக்குள் சரணடைந்தாள்.என் கைகளில் அவள் சிவந்த முகத்தினை ஏந்தி இதழ்களை மெல்ல வருடினேன்.அவளுடைய இதழ்கள் தான் எவ்வளவு மென்மையானது.இருவரின் பிரிவுத்துயர் நீங்கிட மெல்ல அவள் இதழ்களை சிறைசெய்திட நினைத்த அந்த நொடி யாரோ என் பின்னல் இருந்து அடித்தாற்போல் இருந்தது.யாரென பின்னால் திரும்பி பார்த்தால் என் அம்மா கோபமாக நின்று இருந்தார். “தோட்டத்து பக்கம் வந்தால் உலகத்தையே மறந்திடுவியே.வந்ததும் தோட்டத்துக்குள்ள நுழைஞ்சுட்டே.அப்பிடி என்னதான் இங்க இருக்குதோ” என்று கூறிவிட்டு என்பேக்கினை எடுத்துகொண்டு வீட்டிற்குள் சென்றார்.

அவரை முறைத்துவிட்டு என் தோட்டத்தில் பூத்திருந்த என் சிவப்பு நிற தேவதைக்கு முத்தமிட்டு எழுந்தேன்.அதில் தான் அவளுக்கு எவ்வளவு சந்தோசம்.வெட்கத்தில் அவள் முகம் மேலும் சிவந்துபோனது.அவளை மீண்டும் ஒருமுறை வருடியவாறு அந்த ரோஜா தோட்டத்தினைவிட்டு வெளியேறினேன்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.