அல்டாப்பு அழகுராஜாவின் காதல் கதை

அல்லாருக்கும் வணக்கோம்...நான் தான் அல்டாப்பு அழகு ராஜா. ஏன்னா பாக்குறீங்க இவன் இன்னாடா திடீர்ன்னு இங்க வந்து குந்துகின்னு நம்மளாண்ட வணக்கோம் சொல்லிக்கிறான்னு பாக்குறீங்களா? அது ஒன்னும்மில்ல என்னோட காதல் கதைய யாராண்டவாவது சொல்லிகினும்ன்னு ஆசை வந்துச்சு சரின்னு ரோசிச்சு உங்களாண்ட சொல்லிகிலாம்ன்னு முடிவு பண்ணிகின்னே.

எனுக்கு இந்த பொட்டில எப்புடி எலுதனும்ன்னு தெரில அதால நம்ம சென்னைல கீற வகீதா அக்கா கிட்ட போய் யக்கோவ் நான் கதைய சொல்றேன் நீ அந்தால உள்ள பொட்டில எலுதி போடுன்னேன். சரி சரி தம்பி உட்கார்ந்து சொல்லுன்னுச்சு அக்கா.

“யக்கா எனுக்கு நமீதான்னா ரொம்ப இஷ்டம்னேன்.”

“இரு இரு முதல்ல நமீதாவுக்கு எத்தினி எலுத்து வரும்ன்னுச்சு?”

“நான் பள்ளிகொடம் பக்கம் போனதில்லக்கா அப்படின்னேன்.”

“சரி விடு நீ மேல சொல்லுன்னுச்சு.”

“எனுக்கு நமீதா மாதிரி ஒரு பொண்ணை கட்டிகனும்ன்னு ஆசைன்னு சொன்னேன்.”

“நமீதாவோட எடை என்னான்னு தெரியுமா?”

“அதெல்லாம் தெரியாதுக்கா ஆனா அத்த எனுக்கு பிடிக்கும்ன்னேன்.”

“நமீதா மாதிரி செவத்த குட்டியா கட்டிகினும்ன்னு ஆசைன்னேன்.”

“இங்க பாரு அழகு நமீதாவோ இல்ல நமீதா மாதிரி உள்ள பொண்ணை கட்டிக்கனும்ன்னு ஆசை பட்டா மட்டும் போதாது அதுக்கு முன்னாடி எல்லா விஷயத்தையும் தெளிவா தெரிஞ்சுக்கணும். இப்போ பாரு நான் கேட்ட ரெண்டு கேள்விக்கு கூட உன்னால பதில் சொல்ல முடியல அப்புறம் எப்படி நீ நமீதாவை கட்ட முடியும் சொல்லு.”

‘இன்னாடா இது இந்த அக்கா கிட்டே என் கதைய தானே சொல்ல வந்தேன் இது ஏன் இத்தினி கேள்வி கேக்குது ஷ்..ஷ்..ஷப்பா என் காதல் கதியே மறந்து பூடும் போல கீதே...இப்போ இன்னாடா பண்ணுறது...பேசாம அக்கா கால்ல ஊந்து மன்னிச்சு வுட்ருக்கா நான் போய் பதில் கண்டு புச்சு கொண்டாறேன் அது பின்னாடி கதைய எலுதிக்கலாம்ன்னு சொல்லிபோட்டு எஸ் ஆயிட வேண்டியது தான்.’

“யக்கா நீ சொல்றது சரி தான் நான் போய் பதில் கொண்டாறேன் அப்பால எலுதிக்கலாம் .”

“சரி அடுத்த முறை வரும் போது என் கேள்விக்கெல்லாம் சரியான பதிலோட வந்தா நான் நல்லா எழுதி தரேன்.”

“அங்கே இருந்து துண்டை காணும் துணிய காணும்ன்னு வெளில வந்து ரோசிச்சேன் இனி ஆர வச்சு என் கதைய எளுத சொல்லலாம்ன்னு பார்தா. மும்பைல கீற சுசித்ராக்கா ஞாபகம் வந்துடுச்சு, அவங்களை எலுத சொல்லி கேக்கலாமின்னு போனை போட்டேன்.

“ஹலோ மே ஐ நோ ஹூ இஸ் ஸ்பீகிங் ?”

“யக்கோவ் நான் தான் கா அல்டாப்பு அழகு பேசுறேன்.நான் தான் பேசுறேன் உனுக்கு எப்படிக்கா தெரியும் எடுத்தவுடனே திட்டிகினு கீற.”

போனை கீழே வைத்து விட்டு ‘இன்னைக்கு யார் முகத்தில முழிச்சேன் காலையிலேயே இவன் கிட்ட மாட்டிகிட்டேனே.’

“அல்லோ அல்லோ யக்கா லைன்ல தான் கீறியா?”

‘இருக்கேன் இருக்கேன் சொல்லு எதுக்கு போன் பண்ணினே.”

‘ஒன்னியுமிள்ளக்கா என்னோட காதல் கதைய எலுதனும்ன்னு முடிவு பண்ணி வகீதாக்கா வூட்டுக்கு போனேன் அது கேள்வியா கேட்டு தொரத்தி வுட்ருச்சு...அதான் உன்னாண்ட கேக்கலாமின்னு போனை போட்டேன்.”

“என்னது காதல் கதையா? அதுவும் உன் கதை அதை நான் எழுதி தரணுமா? என்னை என்னன்னு நினைச்சே? அதுவும் காதல் கதை என்னை பார்த்து மரியாதையா போனை வச்சிட்டு ஓடி போய்டு.”

“அட என்னாங்கடா இது! இந்த அக்கா இப்படி பாயுது.யக்கா காதல் கதைக்கா நல்லா வரும் எலுதுக்கா.”

“இங்க பாரு அழகு கதைகளிலே எனக்கு பிடிக்காதது காதல். பக்கம் பக்கமா அதையே கொட்டி எழுதுவது. கதை எழுதுறதை பத்தி பேசுறதா இருந்தா எனக்கு போன் பண்றதா இருந்தா பண்ணாத.”

“ஸ்...ஸ்.....அப்பா காதே வலிச்சு போச்சு இப்போ என்னா சொல்லிபுட்டேன்னு இந்த அக்கா இப்படி கோவப்படுது.”

இனி ஆர வச்சு எலுதுறதுன்னு ரோசனை பண்ணிட்டே ரோட்டிலே நடந்து போய்கினு இருக்கும் போது அங்கால இந்த கம்பூட்டர் பொட்டி நிறைய வச்சு கடை ஒன்னு இருக்குமே, அதான்பா ஊர் நாட்டுல உள்ளவன் கிட்டே எல்லாம் பேசுவாங்களே அந்த கடை தான். அத்த பாத்தவுடனே பேரிக்கால கீற தனு தங்கச்சி நனவு வந்துச்சு. சரி இந்த பொட்டி கடைல போய் அதாண்ட பேசி பாப்போம்ன்னு உள்ளே போனேன்.

கடைக்காரன்கிட்ட தங்கச்சி எதாவது பேசணும்னா இதுல பேசு என்று ஒரு சீட்டுல எழுதி கொடுத்ததை காட்டினவுடனே ஒரு பொட்டி முன்னாடி உக்கார வச்சி கோயில கலர் பல்பு போட்ட மரம் கணக்கா என்னை சுத்தி ஒயரை போட்டு மண்டைல கொம்பை மாட்டி பேசுன்னு சொன்னான் . அந்த பொட்டில மணி அடிச்சுது.

“ஹலோ..”

“அல்லோ தங்கச்சி நான் அல்டாப்பு அழகு பேசுறேன்.”

“அண்ணே நீங்களான்னே நல்லா இருக்கீங்களா? பூங்கொடி அக்கா நல்லா இருக்கா?”

“அல்லாரும் நல்லா கீறோம்.மாப்பிளே , பாப்பா அல்லாம் நல்லா இருக்காங்களா?”

“ இருக்காங்கன்னே..ஐயோ! இங்க பாப்பா தொல்லை பண்ணிட்டே இருக்கா.குட்டிமா ஓடாதடா.”

“தங்கச்சி என் காதல் கதைய எலுதலாமின்னு காலிலே இருந்து சுத்திகின்னு கீறேன் நீ எலுதி தரீயா?”

“ஷ்..ஆ....ஆ...ஐயோ அண்ணே பாப்பா சிஸ்டத்துல பால ஊத்திட்டா...ர்ர்ரர்ர்ர்.....டப்...”

“போச்சா..பாப்பா நீ கம்புட்டேர்ல மட்டும் பால ஊத்தல என் கதைக்கும் ஊத்திட்டே.”

ஒரு கதையை எலுத வைக்க காலையிலே இருந்து அலைஞ்சு நொந்து போய் ஒரு ஹோட்டல்குள்ளே போய் உக்காந்து புல் மீல்ஸ் உட்டுகட்டிட்டு மெதுவா நடந்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் பக்கமா வந்தேன்.

திருவண்ணாமலை பஸ் அதோ அங்க நிக்குது வாங்கப்பா போலாம்ன்னு பேசிட்டு போனாங்க ரெண்டு பேர். அதை கேட்டதும் நம்ம ஏன் அதுல போய் சக்தி தங்கச்சிய கேக்க கூடாதுன்னு தோணிச்சு. :ஆனா அடுத்த நிமிஷமே அது என்னா சொல்லும்ன்னு நினைச்சேன். ஏண்டா இந்த மாதிரி மொக்கை கதை எல்லாம் காதல் கதைன்னு சொன்னா எனக்கு பிடிக்காதுன்னு தெரியுமில்லைன்னு சொல்லி கையில கிடச்சதை எடுத்து நடு மண்டைல போடும். ஏன் வம்பு கத எலுத சொல்ல போன இடத்துல பொணமாக்கிட்டா என்ன பண்ண..

சரி அடுத்தது ஆருகிட்டே சொல்லலாம்ன்னு யோச்சிகினு இருக்கும்போது திருச்சு பஸ் போனிச்சி அதுல ஓடி போய் ஏறிகின்னேன். நம்ம வித்யாக்கா இருக்க சொல்ல இன்னாத்துக்கு கவலை.ரா மூச்சுடும் தூங்கி விடிய காலையில அது வீட்டு வாசலிலே போய் உட்கார்ந்தேன். இந்த நேரத்துக்கு கதவை தட்டலாமா வேணாமான்னு ஒரே ரோசனை.விடிய கால நேரமில்ல, ஒரே பனி சரின்னு கட்டிகினு இருந்த லுங்கிய அவுத்து போத்திகின்னு ஒரு கேட் ஓரமா படுத்து போட்டேன். பஸ்ல வந்ததுல ஒரே அசதி நல்ல உறக்கம். திடீர்ன்னு ஒரு வாலி தண்ணி எம்மேல ஊத்திச்சு. வாரி சுருட்டிகின்னு எழுந்து பாத்தா நம்ம வித்யாக்கா காளி அவதாரம் எடுத்து நிக்கிது.

“ஏண்டா நீ படுக்கிறதுக்கு என் வீட்டு கேட் தான் கிடைச்சுதா ?”

நான் அசந்து போய் பாத்துகின்னே நின்னேன். மறுபடியும் தண்ணிய எடுத்து எம் மூஞ்சி மேல ஊத்திச்சு. ’எனுக்கு அப்போ தான் தூக்கமே போய் எக்கோவ் என்ன நல்லா பாருக்கா! நான் தான் அல்டாப்பு! சென்னையில இருந்து உன்னைய பாக்க வந்த தம்பிய இப்படி குளிப்பாட்டி விட்டுடியேன்னேன்.”

“அட! அல்டாப்பா நீ எங்கேடா இந்த நேரத்துக்கு. நான் எவனோ ராப்பிச்சைக்காரன் படுத்து கிடக்கான்னு நினைச்சு தண்ணிய ஊத்துனேன்.....ஒரு வாலி தண்ணி வேஸ்ட்டா போச்சு போ.”

“எக்கா முதல்ல காபி தண்ணி கொடுக்கா.நேத்திலே இருந்து சுத்திகினே கீறேன் ஒரே பசியா கீது.”

“ஏண்டா உன் பொண்டாட்டி உன்னை வீட்டை விட்டே ஒட்டி விட்டுட்டாளா?”

“அதெல்லாம் இல்லக்கா அவளுக்கு ஒரு ஆசை.”

“இன்னுமாடா உங்க ஆசை முடியல. அவளுக்கு ஒன்னு உனக்கு ஒன்னு உங்க ஆத்தாளுக்கு ஒரு ஆசைன்னு ஏற்கனவே மூணாகி போச்சு.”

“இந்தா கா சும்மா என்னைய ஒட்டாத.நாங்க காதல் பண்ணினோமில்லை அந்த கதைய அல்லாரும் படிக்கிறாங்களே அந்த பொட்டியில எலுதி போட சொன்னா . அதுக்கு தான் நானும் சரி நம்ம அக்கா கிட்டே எல்லாம் கேக்கலாமின்னு போய் சுத்திகினு கீறேன் ஒருத்தரும் எழுதல நீயாவது எலுதி தறியாக்கா.”

“என்னது காதல் பண்ணுணீங்களா ...ஹாஹா...என்னவோ கத்தரிக்காய் கறி பண்ண மாதிரி சொல்ற.ஏண்டா நீங்க பண்ணுனதுக்கு பேரு காதலா?”

“இன்னாக்கா நீயும் வகீதாக்கா மாதிரியே கேள்வி மேல கேள்வி கேட்டுகினு கீற.”

“சரி நீ சொல்லு உன் காதல் கதைல ரொமான்ஸ் இருந்துச்சா?”

“அப்படின்னா?”

“முதல் நாள் காதலை சொல்லி அடுத்த நாள் கட்டி புடிச்சு ஒரு பிரெஞ்சு கிஸ் அடிச்சு அடுத்த நாள் மேட்டர் முடிச்சு இருக்கணும்.”

“எக்கா இன்னமோ புச்சு புச்சா சொல்றே பிரெஞ்சு கிஸ்ன்றே மேட்டர்ன்றே.ஆமாம் மேட்டர்ன்னா இன்னாக்கா.”

“அடிங்க மூணு புள்ளை பெத்ததுக்கபுரம் மேட்டர் பத்தி கேக்குற..”

“ஒ...அதுவா....போ அக்கா எனுக்கு வெக்கம் வெக்கமா கீது.....எங்க கதைல அதெல்லாம் கிடையாதே .”

“அப்போ போ! உன் காதல் கதையை எழுதினா அது காதல் கதை என்று சொல்ல மாட்டாங்க, ஜனங்க ரசனை மாறுபட்டு பல காலம் ஆச்சு.”

“நீ ஒன்னு செய் நம்ம ரூபா கிட்ட கேளு எழுதி தராங்கலான்னு.”

“அது அல்லாரையும் ஓவரா நக்கல் அடிக்குமே அது எழுதுமா....”

“நீ சொல்ல போற கதைக்கு ரூபா போதும்.நீ என்னவோ ஓவர் பில்ட் அப் கொடுக்கிற உன் கதைய படிச்சிட்டு எத்தனை பேர் தலைவலியில் தவிக்க போறாங்களோ?”

“அவங்க தவிச்சா நமக்கென்ன எலுதி போட்டுட்டு ஓடி போய்ட வேண்டியது தான். அது அந்த அக்கா பாடு படிக்கிறவங்க பாடு.”

அதன் பின்னாடி அங்கேயிருந்து கிளம்பி சென்னையில இறங்கி வூட்டுக்கு போக மனசேயில்லாம ஏர்போர்ட்டில கார்கோவுல வேலை செய்ற மாசானத்தை பார்க்க போனா, பாதி நைட் முழுக்க அங்கேயே பேசி பேசி ரெண்டு நாளா அலைஞ்சதில் உடம்பு ரொம்ப டயார்டா போச்சு. அதனால அவன்கிட்டேயே கேட்டு ஒரு ஓரத்தில படுத்து தூங்கிட்டேன்...தூக்கத்துல மனசு பூராவும் எம் பொண்டாட்டி ஆசைப்பட்டு எதுவும் என்னாண்ட கேட்டது இல்லை. எவளோ சொன்னாலாம் எப்படி எப்படியோ கத எலுதுறாங்க உன்னோடதை எலுதி போடு நாலு பேர்க்கு தெரியுமுனு. அப்போல இருந்து மச்சான் நம்ம காதல் கதைய எதுலேயாவது எலுதி விடு அல்லாரும் படிச்சு சந்தோஷமாவட்டும்ன்னு தொணதொணப்பு. அவ சாதரணமா இருந்து கேட்டா பரவாயில்லை இப்போ எம் மூணாவது குட்டி அவ வயித்தில இருக்கு. மொத குட்டிக்கு நமீதா, ரெண்டாவது திரிஷா என்று பேர வைச்சு மூணாவது பொறக்க போறதுக்கு காசல்ன்னு வைக்கலாம் நினைச்சுகின்னு கீறோம்.இந்த மாதிரி இருக்கும் போது அவ ஆசைய நிறைவேத்தனும்ன்னு மனசு கிடந்து துடிக்குதே.

நல்ல தூக்கம் எம்புட்டு நேரம் தூங்குனேன்னு தெரில திடீர்ன்னு ஒரே சத்தம் யாரோ என்னை உலுக்குற மாதிரி இருந்துச்சு. எந்திரிச்சு பாக்குறேன் நிறைய சனம் நிக்குது .என்னைய சுத்தி பெரிய பெரிய அட்டை பொட்டியா கீது . அப்போ ஒரு வண்டி வந்து அங்க இருந்த சாமானை எல்லாம் ஏத்துச்சு. நானும் அந்த வண்டிக்குள்ள குதிச்சுபுட்டேன். வண்டி ஒரு பெரிய கட்டடத்துக்குள்ள போய் நின்னுச்சு ரெண்டு மூணு ஆளு வந்து அல்லா சாமானையும் இறக்குனாங்க. எனுக்கு ஒன்னியுமே புரில. அப்போ என்னை பாத்து மத்த ஆளுங்க ஏதோ சத்தம் போட்டாங்க. சரி நம்மளையும் அங்கே வேலை செய்யுறவன்னு நினைச்சு வேலை செய்ய சொல்றாங்க போலன்னு நானும் ரெண்டு பொட்டிய தூக்கி இறக்கி புட்டு அவங்க பின்னாடியே போயிட்டேன்.அப்பால அங்க வந்த ஒரு போலிஸ்கார் வந்து என்னவோ ஜாவ் ஜாவ்ன்னு சத்தம் போட்டாரு. அப்போ என் கூட வந்த ஆளுங்க எல்லாம் அந்த போலீஸ்காரர் கிட்டே சாரின்னு சொல்ட்டு என்னைய புச்சு தள்ளிகினே வெளில வந்து என்னையா நீ நான் போய் எம்புட்டு நேரமாச்சு அதே இடத்திலையா நிப்பேன்னு சொல்லிட்டு சரி சரி நீ கிளம்புன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

எங்க பாத்தாலும் மண்ணா கீது. எனுக்கு தலயும் புரில காலும் புரில சரி என்ன தான் நடக்குதுன்னு பாப்போம் வெளில வந்தா பெரிய பெரிய ரோடு ஒரே காரா போய்கினு இருந்துது. நடந்துகினே இருந்தேன் நிறைய ஆளுங்க நம்ம ஊரு பொம்பளைங்க போடுவாங்களே நைட்டி அதுலேயே வெள்ளையில் போட்டுகினு இருந்தாங்க. அப்பால தான் எனுக்கு புரிஞ்சு போச்சு நாம ஏதோ ஷேக் ஊருக்கு வந்துகினோம் போல கீதுன்னு.

தண்ணி தாகமா அடிக்க ஆரம்பிச்சுது இன்னா செய்யுறதுன்னு தெரில. அப்போ ஒரு கார் வந்து பக்கத்துல நின்னுச்சு. அதுலே இருந்து ஒருத்தர் இறங்கினார். அவரை பாத்தா நம்ம ஊர்காரர் மாதிரி இருந்தார். அவர் பக்கத்துல ஒரு குட்டி பொண்ணு இறங்குச்சு. அத்த பாத்தாலே நம்ம ஊர் குட்டின்னு தெரிஞ்சுச்சு. அது கையில நம்ம ஊர் சரவணபவன் சாப்பாட்டு பை வேற.

“சார் நீங்க தமிலா சார் என்னை காப்பாத்துங்க சார்.”

“ஹலோ! ஹலோ யாருப்பா நீ? எதுக்கு இப்படி வந்து காலில் விழுற.”

“சார்! நான் இங்க எப்படியோ வந்துப்புட்டேன் சார் நடந்து நடந்து காலெல்லாம் வலிக்குது தண்ணி கூட கிடைக்கல.”

“உன் பேரென்ன நீ எப்படி பாஸ்போர்ட் விசா எல்லாம் இல்லாம இங்கே வந்த.?”

“என் பேரு அல்டாப்பு அழகு சென்னைல மெக்கானிக் கடை வச்சு இருக்கேன் சார். எப்புடி இங்கே வந்தேன்னே தெரில.இது இன்னா ஊரு சார்?”

“அது கூட தெரியாம எப்படி இங்கே வந்தேன்னே புரியல. அதுவும் உன்னை எப்படி உள்ளே விட்டாங்க?....இந்த ஊர் பேரு தோஹா.”

“இன்னாது தோசாவா.”

“தோசா இல்லப்பா தோஹா.”

“ஏன் சார் அக்காவுக்கு உடம்புக்கு மிடிலையா சாப்பாடு எல்லாம் வெளில வாங்கியார.”

லிப்ட் பட்டனை அழுத்திக் கொண்டே நீண்ட பெருமூச்சுடன்...”அதெல்லாம் ஒன்னும் இல்ல நல்லா தான் இருக்கா” என்றார்.

லிப்ட் கதவு திறந்து வெளியில் வந்ததும் பார்த்தால் எதிரெதிர் திசையில் இரு கதவு இருந்தது. ஒரு கதவில் சாவியை போட்டு வீட்டை திறந்தார் “இவரு பொண்டாட்டி ஊருக்கு போய் இருக்கு போல அதான் மனுஷன் சோக கீதம் பாடிகினு கீறாரு. ஆனா, பொண்ணை இங்க விட்டுட்டு அந்த அக்கா எப்படி போச்சு....ஒன்னியும் புரியல...”

வீட்டை திறந்து உள்ளே போனதும் வீடு அமைதியாக இருந்தது. வரவேற்ப்பறையில் ஒரே ஒரு சிறிய லைட் மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

நட்ட நடு வீட்டில ஒரு மேசை மேல கம்பூட்டர் பொட்டிய வச்சிகினு அக்கா உட்கார்ந்துகின்னு இருந்துச்சு. சந்தோசத்துல தலகால் புரியலை, ரூபா கா சொகமா இருக்கீங்களா,எப்ப மெட்ராஸ்ல இருந்து வந்தீங்க, பார்த்தீங்களா என்னாண்ட கூட சொல்லாம வந்துட்டீங்க இல்ல..

“அல்லாரையும் ஒரு பார்வை திரும்பி பாத்து போட்டு மறுபடியும் அந்த பொட்டியவே உத்து உத்து பாத்துகினு இருந்துச்சு. எனுக்கு பொறுக்க முடில இன்னா சார் அக்காக்கு என்னா பிரச்சனன்னு கேட்டேன்.”

“ஒன்னும் இல்லப்பா. மொதல்ல நீ வந்து சாப்பிடு. அப்புறம் அந்த கதைய கேட்கலாம்ன்னு சொன்னாரு. இன்னடா இது! நான் கதை சொல்ல கிளம்பி எங்கே இருந்து எங்கையோ வந்துகினேன் இப்போ அவரு கதை சொல்றேன்னு சொல்றாரேன்னு நினைச்சுகின்னு. சாப்பிட ஆரம்பிச்சேன். அப்பப்போ அக்காவ பாத்தேன் . பொட்டிய கொஞ்சம் நேரம் பாக்கும் அப்புறம் விட்டத்தை பாக்கும் தலையை இப்படிக்கா அப்படிக்கா ஆட்டும் விரலை வச்சு காத்துல டிசைன் போடும் இப்படியே பண்ணிகினு இருந்துச்சு. எனுக்கு சத்தியமா புரிஞ்சு போச்சு ரூபா கா மெண்டலா ஆகி போச்சு , பாவம் இந்த சாரும் அந்த குட்டி பொண்ணும்ன்னு நினைச்சுகினேன்.

சாப்பிட்டு முடிச்சதும் அவரே ஆரம்பிச்சார். ’நீ எப்படிப்பா இங்கே வந்த அப்படின்னு.”

“நானும் என் கதையை யாரையாவது எலுத வைக்கணும்ன்னு சொல்லி மொத நாள் பூர அலைஞ்சதை எல்லாம் சொல்லி அந்த அசதில பிளேன்ல ஏத்த வச்சு இருந்த பொட்டிங்க மேல தூங்க ஆரம்பிச்சேன். அப்படியே என்னையும் சேர்த்து ஏத்திபுட்டாங்க போல கீது சார் அதான் இங்கே வந்துட்டேன்னு சொன்னேன்.”

நான் இத்த சொல்லி முடிச்சதும் அப்பா பொண்ணு ரெண்டு பேரும் ஹேன்னு கத்துனாங்க. “அந்த குட்டி பொண்ணு அப்பா நாம தப்பிச்சோம். இந்த அங்கிள் நம்மள காப்பாத்திட்டங்கனு சொல்லி குதிச்சுது ”

“இன்னா சார் எனுக்கு ஒன்னியும் புரியலையே.”

“அழகு நீ எங்க சாப்பாட்டு பிரச்சனைக்கு முடிவு கொண்டு வந்துட்டே.ஒன்னும் புரியலையா..இரு சொல்றேன்.என் பொண்டாட்டி ஒரு கதை எழுத போறேன்னு சொல்லி உட்கார்ந்து யோசிக்க ஆரம்பிச்சா. ஆனா ,அவளுக்கு யோசனையே வரல அதுக்காக எடுத்ததை முடிக்காம விட மாட்டேன்னு சொல்லி அங்கேயே உட்கார்ந்து இருக்கா. அதுவும் இப்படியே பித்து பிடிச்ச மாதிரி.நானும் என் பொண்ணு தினமும் ஹோட்டல வாங்கி தான் சாப்பிடுறோம்.இப்போ நீ வந்துட்டே இல்ல நீ உன் கதைய அவ கிட்ட சொல்லு அவ எழுதிடுவா .“

இப்படி தாங்க இந்த அக்கா கிட்டே என் கதைய கொடுத்து எழுத சொல்லிகிறேன். இது எப்படி எழுதுச்சுன்னு நீங்க அல்லாரும் என்னாண்ட வந்து சொல்லணும் சரியா.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.