காகித கப்பல்

இன்று விடுமுறை... அந்த இரண்டு மாடி வீட்டின் மாடியில் இருக்கும் எங்களுக்கு என்றுமே காற்றுக்கு பஞ்சமில்லை... மனைவியின் கைப்பக்குவத்தில் மத்தியானம் சாப்பிட்ட சுவையான உணவும் கருணையாய் வரும் கடல்காற்றும் கண்களை அசத்ததியது...


திடீரென கேட்ட இடியோசை தூக்கத்தை கலைத்திருந்தது... இப்பொழுதெல்லாம் மழையை பற்றி அறிந்து கொள்ள பேஸ்புக்கே போதுமென்பதால் சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டு மொபைலில் பேஸ்புக்கில் மழை நிச்சயம் பெய்யும் எனப்படித்தவுடன் மனைவியிடம் கெஞ்சி சூடாய் பஜ்ஜியும் இஞ்சி டீயும் கேட்டு பஜ்ஜியை நானும் டீயை அவரும் தயாரிப்பதாய் ஒப்பந்தம் போட்டோம்....

பஜ்ஜிக்கான பொருட்களை ரெடி செய்தேன்... டீ இஞ்சி ஏலக்காய் எல்லாம் போட்டு.. நினைக்கும் போதே நாவில் சுவை பரவியது.


மேகம் சேர்ந்து சூரியனை மறைந்திருந்தது... இருளுடன் குளிர் சேர மழை பலத்த காற்றுடன் ஆரம்பித்திருந்தது.


கடலைமாவும் அதனுள் பொதிந்துள்ள வாழைக்காயும் மரச்செக்கில் ஆட்டி எடுத்த சூடான அந்த கடலையெண்ணையில் உள்நீச்சல் அடிக்கும் போது அந்த அருமையான முறுகும் மணம் அந்த குளிருக்கு யார் நாவிலும் மழை பொழியும்....


இந்த பக்க பர்னரில் டீ ஸ்பெஸலிஸ்ட்டின் சரியான அளவில் தட்டிப் போடப்பட்ட இஞ்சியும் ஏலக்காயும் பால் டீத்தூள் சர்க்கரை சேர்ந்த அந்த அமிர்த கரைசலின் மணம் சாதாரண மழையையும் பெருமழை ஆக்கிவிடும்...


வராண்டாவின் கம்பி வலைகளுக்கப்பால் ஆர்ப்பரிக்கும் மழையும் காற்றினால் வரும் அதன் பூஞ்சிதறல்களும் அருவிக்கரையிலோ அல்லது அலைச்சிதறல் பறக்கும் கடற்கரையையோ நினைவு படுத்தியது...


அளவாய் முறுகிய சூடான பஜ்ஜிகளும் கப் நிறைந்த இஞ்சி ஏலக்காய் டீயும் மேலும் சூழலை இரம்மியமாக்கியது.


ஒரு கடி ஒரு குடி என்ற சுவையான இலக்கணப்படி ருசித்து கொண்டிருந்தோம்... இடையிடையே காதை எட்டும் இடியும் தூரமாய் தெரியும் மின்னலும் என்ன ஒரு அழகு...


காற்று சற்று குறைந்தது மழையின் வேகம் கூடியிருந்தது... குளிரும் சற்றே கூட எழுந்து இன்னுமொரு கப் டீ எடுத்து வர சென்றேன். மழைச்சாரலில் நானும் சற்றே நனைந்திருந்தேன்.


மொபைலில் பாரதியின் பாடல்களை போட்டு விட்டு டீயை சற்று சூடாக்கி கப்பில் நிறைத்தேன்...


வரும் வழியில் பெட்ரூம் நோக்கி பார்வை செல்லவே தண்ணீர் கண்ணில் பட்டது.. சன்னல் திறந்திருக்குமோ என ஓடிச்சென்று பார்த்தேன் எல்லாம் மூடியேயிருந்தது...


சன்னலின் அருகே ஏற்பட்டிருந்த சிறு சிறு கீரல்களின் வழியாக நீர் கசிந்து கொண்டிருந்தது...

கட்டிலை சுற்றி சிறிய குளமே உருவாகியிருந்தது...


"கேணி அருகினிலே" ....பாரதியின் வரிகள் காதில் விழுந்தது... "கட்டில் அருகிணிலே சிறு கேணியை காணீரோ" ..... மனம் பாட ஆரம்பித்தது....


நீர்வரத்து அதிகமாக அது ரூமிலிருந்து ஹாலுக்குள் பிரவேசித்தது.... ஏதோ காவிரியே தமிழகத்திற்குள் நுழைந்தால் போன்ற மகிழ்ச்சி....


பழைய நோட் ஒன்றிலுருந்து பேப்பரை கிழித்து ஆறேழு கப்பல் செய்து ரூமிலிருந்து ஹாலுக்கு ஓட்டி மகிழ்ந்தேன்.... இப்போது " மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் " என காதில் விழ நானும் " ஹாலின் கடல் முழுதும் கப்பல் விடுவேன்" என சத்தமாகவே பாடினேன்...


பிறகென்ன ..... கோல நோட்டை கிழித்து கப்பல் விட்டதற்காக அன்பாய் கிடைத்த பரிசு தனிஒருவனாய் நான்கு பக்கெட் தண்ணீர் எடுத்தேன்(துடைத்தேன்!) அப்போதும் "தனி ஒருவனுக்கு மோப் இல்லையெனில் துணியினில் துடைத்திடுவோம்" என பாடிய மனதை திட்டிக்கொண்டே....


tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.