இன்று விரைவாகவே வேலைக்குக் கிளம்பி விட்டார் முனியன். ஆடி மாதம் ஆகையால், கட்டிட வேலையை அவ்வளவு சீக்கிரம் யாரும் ஆரம்பித்து விடமாட்டார்கள்.எப்பாடுபட்டாலும் வேலைக்குப் போய்தான் தீரவேண்டும். என்ன செய்வது, எல்லாம் அவரவர் வயிற்றுக்காக.கடந்த ஐந்து நாட்கள் எந்த வேலையும் கிடைக்காமல், வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டார்.இன்று எப்படியாவது வேலை கிடைத்து விட்டால் போதும். அந்த நம்பிக்கையில் இந்த வாரம் நகர்த்தி விடுவார். ஏழையாய்ப் பிறப்பெடுத்தால் உழைப்பதற்கே நேரம் பத்தாது.

விரைவான எண்ண ஓட்டங்களுடன்,நடை போட்டு அந்த மார்க்கெட் சந்தையை அடைந்தார்.அங்குதான் கட்டிட வேலைக்குத் தேவைப்படும் ஆட்களை,மேஸ்திரியோ,என்ஜினியரோ,சூப்பர்வைசரோ வந்து கூட்டிச் செல்வார்கள். அருகிலிருந்த சிறு கைப்பிடிச் சுவரில் அமர்ந்தபடி அவர்களை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தார்,சாலையை வேடிக்கை பார்த்தபடி.

பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.அவரவர் வயிற்றுப் பிழைப்பைப் பார்ப்பதற்கு, எங்கெங்கோ வேலைக்குச் செல்லும் கூட்டம்.

கூட்டத்தின் பிடியில் பள்ளிக் குழந்தைககளும்,பெண்களும் இடிபட்டுப் பிதுங்கினர். வாகனங்கள் ஒலி எழுப்பி,இருப்பைக் காட்டி கடந்து சென்றன.

நேரம் ஆகஆக தொழிலாளிகள் வந்து சேர்ந்த வண்ணம் இருந்தனர். ஒருசிலர் தெரிந்தவர்களிடம் பேசிக் கொண்டும், அறிமுகம் இல்லாதவர்களிடம் "எந்த ஏரியா,யாராண்ட வேல செஞ்ச, பெரியாளா, சித்தாளா,மேஸ்திரியா"என்று விசாரணை செய்து கொண்டிருந்தனர்.

அவரும் தெரிந்தவர்களைப் பார்த்ததும், புன்னகைத்து தலையாட்டினார். உதடால் சிரிப்பை வெளிப்படுத்தினாலும், உள்ளுக்குள் "யாராவது என்ன வேலைக்கு இட்டுனு போயிரணூ"என்று வேண்டிக் கொண்டார்.

கதிரவன் தன் கதிரை சுருக்கி, மேகத்தினுள் மறைந்தான். அண்ணாந்து பார்த்தார் முனியன்."மேகமாக் கீது,மய வருமோ?"என்று எண்ணம் ஏற்பட,பகீரென்றது அவருக்கு.

குளித்தும் சரியாய் வாராத தலைகள், நேற்றுக் குடித்த மயக்கம் தெளியாதவர்கள்,தள்ளாத வயதிலும் வேலைக்கு வருபவர்கள், பட்டை தீட்டிப் பக்தியுடன் நிற்பவர்களும் அங்கே கூட்டமாக பேசிச் சிரித்தபடி நின்று கொண்டிருந்தனர்.கூட்டத்தின் பேச்சுக்குரல்களுக்கிடையே ஒரு பூனையைப் போல அமைதியாய் சென்று,திரும்பியது அவரின் மனம்.

"இன்னா பெருமாளு,ஊட்டாண்டே நேத்து சில்ர வேல போல.செம சில்ரயா?"

"நைனா,அந்த சித்தாளக் கூப்டு.அதான் கரீகிட்டா கைக்கு கலவ கொடுக்கும்,எனக்கோசரம்."
இன்னும் என்னென்னவோ பேச்சுக்கள் அங்கே.

அங்கு எல்லோருக்கும் ஒரே எண்ணம்தான் அப்போது .அது மழையைப் பற்றி தான். மழை பெய்தால் வீட்டில் உலை கொதிக்காது, அவர்களின் வயிற்றில் தான்.

எல்லோரும் கழுகுப் பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நேரம் கரைந்து கொண்டிருக்க வேலைக்குக் கூட்டிச் செல்பவர்களை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். கடந்து செல்பவர்களை ஊடுருவிப் பார்த்து

"நா வரவா?".

"அவெனயா,,இட்டுனு போற.கரீக்கிட்டா செய்ய மாட்டான். மத்தானம்துன்ன போனானூ வெய்யி,சரெக்க போட்டுகினு ஆப் ஆயிருவான்".

"அய்யே..ஙோத்தா இவூரூ ஒய்க்கந்தா"

"வாத்தியாரே எத்தன சித்தாள் வோணும்?".

"மேஸ்திரிலாம் அந்தாண்ட இருக்காங்க" என வார்த்தைகள் சிதறி, ஆங்காங்கே ஒலித்தபடி இருந்தன.

சாலைகளில் போவோர்,வருவோர் ஒரு கேலிப் புன்னகையை, சரியாக அவர்கள் மீது வீசிச் சென்றனர். அவர் ஏதும் பெரிதாய்க் குரல் கொடுக்காமல் வேலைக்கு அழைப்பு விடுப்பவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் முனியன்.

நடுத்தர வயதை யொத்தவன் மோட்டார் சைக்கிளை அவரருகே நிறுத்தி "கொத்தனாரா?" என்றான்.

"ச்சே.சக்கரத்த பாக்கானே ஒசரம்,கடையாணிய கண்டுக்க மாட்டேனுறாவனுங்களே" என்று அவர் எண்ணியபடி "இல்லேத் தம்பிப் பெரியாளு" என்றார்.

"ரண்டு மேஸ்திரிங்க வோணும்"-அவன்.

அவருடன் அவன் பேசிக் கொண்டிருக்கையிலேயே தொழிலாளிகள் அவனைச் சுற்றி நின்று, "எத்தன பெரியாளு,எத்தன சித்தாளு வோணும் ஒனக்கு?"என்று சத்தம் போட்டுக் கேட்டனர்.

"ஏற்கெனவே என்னான்ட ரண்டு இந்திப் பசங்கோ,ரண்டு தெலுங்குப் பசங்கோ இருக்கான். ரண்டு மேஸ்திரி மட்டும் தான் வோணும்" என்றான் வேலைக்கு அழைக்க வந்தவன்.
"ஙோத்தா..மொதோல இந்திக்காரனோயும், தெலுங்குக்காரனோயும் அட்ச்சு வெரட்டெனுதான் நம்மாளுங்கக்கலாம் ஒயூங்கா வேல இருக்கூம்" என்று தனது இயலாமையால் கத்திக் கொண்டிருந்தான் ஒரு தொழிலாளி.

இரண்டு கொத்தனார்களை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டுக் கடந்திருந்தான் சூப்பர் வைசர்.
இவற்றையெல்லாம் சித்தாள் பெண்களும் கவனித்தபடி நின்று கொண்டிருந்தனர். இந்த நேரம் வரை, எவரும் சித்தாள் வேலைக்கு ஒருவரையும் கூப்பிடவில்லை.இளம் விதவைகள்தாம் அவர் கண்ணில் முதலில் தென்பட்டனர். அதுவே முனியன் மனதை அழுத்தி,ஏதேதோ நினைக்கத் தோன்றியது.

பள்ளி செல்ல இயலாத பருவத்துப் பெண்கள், இளம் விதவைகள், நாற்பதைத் தொட்டுக் கொண்டிருக்கும் அம்மாக்கள்,சுருக்குப் பையின் சுருக்கங்களை வாங்கிக் கொண்ட பாட்டிகள் என சித்தாள் கூட்டம் தெரிந்தது.

வேலை செய்த களைப்பைப் போக்க, தினம்தினம் குடித்து, சம்பளத்தையும், உயிரையும் தொலைத்து விடுகின்றனர்.

"வேலை செய்த கூலி வீட்டிற்கு செல்லும் முன் வழியிலேயே வழிப்பறி செய்து குடிக்க வைக்கும் அரசு இருக்கும் வரை,இளம் விதவைகள் அதிகரிக்கத்தான் செய்வார்கள் என்பதில் ஐயமில்லை,ஏழைகளும் முன்னேறுவார்களா? எனத் தெரியவில்லை" என்று இதுகாறும் கண்டித்து வரும் தலைவர்களுக்கு மத்தியில்,வேறு எவர் சொல்லி கேட்கப் போகிறது.

நேரம் கடந்து கொண்டிருந்தது.

சத்தங்களுக்கும், செல்லச் சண்டைகளுக்கும் மத்தியில் இன்னோர் இளைஞன் மோட்டார் சைக்கிளை நிறுத்தியது தான் தாமதம், ஓடிப் போய் வண்டியில் முனியன் ஏறிக் கொண்டார்.

மோட்டார் சைக்கிள் இளைஞன் திரும்பிப் பார்க்குமுன்னரே, ஒருவன் முனியனைக் கீழே தள்ளிவிட்டான். ஆள் நல்ல வாட்ட சாட்டமுடன் இருந்தான். அங்கு கூடியிருந்தவர்கள் எவரும் வாய் திறக்கவில்ல வண்டியில் ஏற நினைத்தவன். திரும்பி அவரை இரண்டோர் உதை விட்டான். "ஙோத்தா.. நேத்தேதான அவருகூட நா போனதப் பாத்த. அப்பொற என்னா ....க்கு வண்டீல ஏர்ற?.என்னதா இட்னூ போவாரு.இன்னா சார் கரீக்ட்டா?" என்று மிரட்டும் தொனியில் கேட்டான்.

வந்த இளைஞன் பயந்தவாறு,வேறொன்றும் பேசாமல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, விழுந்து கிடந்த அவரை பரிதாபத்தோடு பார்த்து விட்டு வண்டியைக் கிளப்பினான்.

யாரும் அவரைக் கண்டு கொண்டது மாதிரி தெரியவில்லை.

"ஜொரத்தில கெடக்குற சம்சாரத்துக்கு ஒரு வேள கஞ்சிகூட ஆக்கிக் கொடுக்க முடியாம கடப்படாதவனா கீறேனே. வேல கெடைக்கிறது குதிரக் கொம்பாக் கீற டயத்தில,ரண்டு வாரமா வேலயு இல்ல வெட்டியு இல்லெ.திருடக் கூட வக்கில்ல,மனசில்ல.எத்துக்கும் கடப்படாதவனா கீறனே." கதறி அழ,மூக்கிலிருந்தும் வாயிலிருந்தும் கோழை ஒழுகியது.

"மூணு போகமா வெளஞ்ச வயக்காட்ட வெச்சு ஊருக்கே சோத்த போட முடிஞ்ச என்னால,ஏஞ் சம்சாரத்துக்கு ஒரு வேளச் சோத்த போட முடியலயே.மானமும்,மனுசப் பயலும் ஏமாத்தீப் புட்ட நாள கயனீய கை மாத்திப் போட்டுட்டு இப்டிக் கட்ட மண்ணா,குட்டிச் சொகரா கெடக்கேனே"என்று வானம் பார்த்து அழுதபடியே கீழே வீழ்ந்தார்.

நெடுநேரமாய் கிடந்தவரைத் தூக்கி,அருகிலுள்ள சுவற்றில் சாய்த்து உட்கார வைத்தாள் ஒரு சித்தாள் பெண். ஓடி, டீயும் ரொட்டியும் வாங்கி வந்து கொடுத்து விட்டு அவர் அருகில் உட்கார்ந்துப் பேச்சுக் கொடுத்தாள்.

"இன்னா நைனா நீ, ஊருக்கே சோறு போட்ட வெவசாயி நீ அயுவலாமா?.ஊருநாட்டுல பொயப்ப பாத்துகினு கீந்திருக்கலா.இந்த மட்ராஸ்ல வந்து கஸ்டப்பட்டூனுகீறியே."

"இன்னா பண்றதுமா நானூ.தோளுமேல மம்பட்டிய போட்டுகினு,கயனில அண்டங்கயிப்பே. ஊருநாட்டுல வெவசாயம் பண்ணிகினு, நா வெவசாயினு துமுரா திரிஞ்சுகினு திரிஞ்ச,என்னால அந்த வெவசாயத்த மறக்க முட்ல.வெவசாய மொற மாறிப்போனனால அத்த விட முடியாத, பாங்குல, தண்டல்காரனாண்ட கடன வாங்கி கட்ட முட்யாம கயனிய வித்துப் போட்டேன்"என்று கண்ணீர் உகுத்த முனியன் தொடர்ந்தார்.

"கயனிய வித்தேலருந்து மனசு அத்துப்போச்சு.கயனிய கண்ணாரக் கண்டாத சோறு எறங்குச்சு. அத்துக்கு மேல அங்கருந்தா புத்தி மாறி பூச்சி மருந்த துன்னுட்டு செத்துப் போவேனு பயந்துகினு இந்தாண்ட வந்தோ.எங்களுக்குப் புள்ள குட்டினு ஏதுமில்லை. கயனியு,அங்க வேல பாக்க வர சனங்களுதா எங்களுக்கு ஒறவு தாயி.." கட்டுக்கடங்காத கண்ணீர் தரையை நனைத்தது.

அந்த சித்தாள் பெண்ணும் மூக்கைச் சிந்தி,கண்ணீரை முந்தானையால் துடைத்துக் கொண்டிருக்கும் போதே, நகரவாசி ஒருவன் வந்தான். "வீட்ல கக்கூஸ் லைன்ல அடைப்பாயிருச்சு போல.காம்பவுண்டே கலீஜாயிருச்சு.யாராவது வந்துப் பாத்துக் குடுத்தீங்கனா முன்னூரூவா தாரேன். கொஞ்சம் வந்து முட்ச்சு குடுத்தீங்கனா நல்லாருக்கும்." என்றான்.

ஒரு சிலர் தயங்கி நிற்க, முனியன் கண்ணைத் துடைத்துக் கொண்டார்.

முப்போகம் விளைவித்த விவசாயி,அந்த முந்நாறு ரூபாய்க்காக கழிவடைப்பெடுக்க,அவன் பின்னால் செல்ல, வானம் ஒரு சில துளிகளை உகுத்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.