அந்தக்கூடத்தில் கூட்டம் மெதுவாகச்சேர்ந்து கொண்டிருந்தது வாசலில் அசட்டையாக இங்கொன்றும் அங்கொன்றுமாக சிதறிக்கிடந்த சின்ன சின்ன காலணிகள், சேர்ந்த கூட்டத்தில் நிறைய குழந்தைகள் இருந்ததை உணர்த்தியது. முதல்முறையாக இது போன்ற கூட்டத்திற்கு வந்ததால் அவள் லேசாக அசெளகர்யமாக உணர்ந்தாள்..வரவேண்டும் என்று நினைக்கவில்லை,ஆனாலும் வந்துவிட்டாள்.

அது ஒரு சத்சங்க கூட்டம். மறைந்த ஏதோ ஒரு மகாபுண்ணிய ஆத்மாவிற்காக மாதம் தோறும் முதல் ஞாயிறு அன்றுஅந்த வீட்டில் நடத்தப்படும். அந்த அமைப்பின் தலைவரின் வீடு. இதற்கு முன் ஒரு முறை அங்கே வந்திருந்தாள்....தான் கீழ்ப்ளாட்டிற்க்கு குடி வந்திருப்பதைத் தெரிவிக்க.

அப்போதும் அந்த வீட்டின் உள்ளிருந்து ஏதோ ஒரு அற்புதமானவாசம்.மலரா, ப்ரெஷ்னரா, ஊதுபற்றியா .... எது என்று சொல்ல முடியாத மயக்கக்கலவை.தாங்களும் வாருங்களேன் என்றுஅவர் அழைத்தபோது மறுத்துப்பேச இயலாமல் இன்றும் வந்திருக்கிறாள்.

ஓர் ஓரமாகச்சென்று அமர்ந்தாள். அந்த இடத்திலிருந்து அனைத்தும் நன்றாகப் பார்க்க முடிந்தது.

மறைந்த ஆத்மாவின் பெயரில் நாமாவளி பாடப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பம் ஆகியது. ஒவ்வொருவராக ஏதேதோ பேசினார்கள். நல்லொழுக்கக்கதைகள், நடந்தவை,நடக்கப்போவற்றை பற்றிய அனுமானங்கள், சுயபுராணங்கள்.... நீண்டுகொண்டேபோனது.

அறையின் ஒரு மூலையில் வரிசையாக சிறு பாலர்கள் அமர்த்திருந்தனர்.

மூன்று மூன்றாக அமைந்த வரிசை,மெதுவாககலையத்தொடங்கி இருந்தது. ஒரு பத்துக்குழந்தைகள் கொண்ட ஒரு சிறு கூட்டம், தன்னியாகச்சில

வாண்டுகள், நண்பருடன் பக்கத்தில் இருந்த பொருள்களில் விஷமம்

செய்தபடி சில குழந்தைகளும், அம்மா மடியாக நினைத்து, கையில்இருந்த

புத்தகங்களின் மேல் தூங்கியபடி சில பிள்ளைகள்.....

ஓரமாக அமர்ந்தபடி தன் நினைவுகளில் மூழ்கி இருந்த அவள் அழைக்கப்பட்டாள்.

புதிதாக சேர்ந்திருல்கிறீர்கள். இப்போது குழந்தைகளுக்கான நேரம். நீங்கள் நடத்திக்கொடுத்தால் சந்தோஷப்படுவேன்.

அவளுக்குத்தயக்கமாக இருந்தது. மகானைப்பற்றி லேசாக கேள்விப்பட்டதைத்தவிர வேறு ஒன்றும் தெரியாமல்என்னப்பண்ணுவது.

அவள் தயக்கத்தைக்கண்டு....அவர் புன்னகைப்புரிந்தார்.

தயக்கம் வேண்டாம். இது குழந்தைகளுக்கு நடத்தப்படும் கேள்வி நேரம். போன வாரம் சில பால பாடங்கள் இவர்களுக்குகொடுக்கப்பட்டது. அதில் இருந்து சில கேள்விகள். கு்ழந்தைகளுக்கு சேர்ந்த உடனேயே ஒரு புத்தகம் கொடுக்கப்படும். வாரம் தோறும் இப்படி சில கேள்விகள் கேட்கப்படும்.

இதற்குப்பரிசும் உண்டு. இதன் காரணமாக நாம்.குழந்தைகளுக்கு நம்வாயினால் சொல்லப்படுவது மறந்தாலும், படிப்பது மனதில் பதிந்து நல்லொழுக்கம் ஏற்படக்கூடும் என்ற நம்பிக்கைதான்.... கேள்விகள் இந்தத்தாளில் உள்ளன. நீங்கள் உரக்கப்படித்தால் போதும். கேள்விகளுக்கு நடுவில் பதில் எழுத நேரம்தாருங்கள்...

அவள் செருமிக்கொண்டு கேள்விகளைப்படிக்க ஆரம்பித்தாள்.

குழந்தைகளின் முகங்களைப்பார்ப்பது ஒரு புது அனுபவமாக இருந்தது.

பென்சிலைக்கடித்தபடி யோசிக்கும் பெண், தலையை சொரிந்தபடி விழிக்கும் ஒரு குழந்தை, நிமிடத்தில் பதிலை எழுதிவிட்டு மற்றவர்களை அலட்சியமாக பார்க்கும்ஒன்று.

அட..... இது என்ன, ஐந்து வயது கூட நிரம்பாத அந்தக்குழந்தை எட்டிப்பார்த்து முன் அமர்ந்திருந்த குழந்தையைப்பார்த்துகாப்பி அடித்துக்கொண்டிருந்தது.சரி , ஏதோ ஒரு கேள்விக்கு தானே என்று நினைத்தபடி அடுத்த கேள்விக்குச்சென்றாள். அதற்கும் அந்தக்குழந்தை எட்டிப்பார்த்து எழுதியது.

கேள்விகள் தொடர, எட்டிப்பார்த்து எழுதுவதும் தொடர்ந்தது.

கேள்விகள் கேட்டு முடிக்கப்பட்டு, குழந்தைகளு எழுதியவற்றை மேஜையில் வைத்துச்சென்றது.

அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். சத்சங்கத்தின் தலைவர் எல்லாவற்றையும் திருத்தி முடித்து, பரிசுகள் வழங்கமுறையே குழந்தைகளைக்கூப்பிட....அவள் திகைத்துப்போனாள்... எந்தக்குழந்தை ஒரு கேள்விக்கும் விடை தெரியாமல் மற்றவரைப்பார்த்து எழுதியதோ அந்தக்குழந்தைக்கு ஆறுதல் பரிசு.

கூட்டம் மெதுவாகக் கலைந்து சென்றது. அவளைத்தவிர அனைவரும் சென்றுவிட்டனர். அங்கு நடந்த தவறைசுட்டிக்காட்டாமல் செல்ல அவளுக்கு விருப்பமில்லை. மெல்ல தலைவர் அருகில் சென்று செருமினாள்....

மிகவும் நன்றி தாங்கள் என் அழைப்பை ஏற்றமைக்கு. என் அடுத்த வீட்டுக்காரர் ஆகிவிட்டீர்கள்...கேஸ் ,பால்பாக்கெட், வேலை செய்பவர்...

இப்படிப் பல விஷயங்களுக்காக நாம் இனி நிறையச் சந்திப்போம். இந்தச்

சந்திப்பில்இன்றைய நிகழ்ச்சி போன்றவையும் இருக்கவேண்டும் என்பது

என் விருப்பம்.

மேடம்.... மேலே சொல்வதற்க்குத்தயங்கினாள். பின் தயக்கத்தைப்பின்

வைத்து... இன்று ஆறுதல் பரிசுப்பெற்ற குழந்தைக்குஎந்தப் பதிலும்

தெரியவில்லை.. முன் இருக்கும் குழந்தைப்பார்த்து எழுதியது. நீங்கள் அதை கவனிக்கவில்லை என்றுநினைக்கிறேன்

புன்முறுவலுடன் பதில் வந்ததது...

தெரியும்....பார்த்தேன்....

பின்..... சத்சங்கம் நல்லதை போதிக்கத்தானே.... தவறு கண்டிக்கப்பட

வேண்டாமா.... அது இல்லாமல் பாராட்ட அல்லவாபட்டிருக்கிறது. இது

தவறான போதனை இல்லையா.....

நியாயம், தவறு.... இது யோசிக்கத்தெரிந்த, உலகம் அறிந்த , நமக்குத்தான். ஐந்து வயது கூட நிரம்பாத அந்தக்குழந்தைக்கு தான் செய்வது தவறு என்று அறியும் வயதில்லை. இந்த நேரத்தில் தானும்

பரிசு வாங்கவேண்டும் எனும் எண்ணம்மட்டும்தான். இப்படி யோசியுங்கள்... நான் அந்தக்குழந்தையை எல்லோர் முன் வைத்து நீ செய்தது தவறு என்றுசொன்னால், அடுத்த முறை இங்கு வருவதற்கு மறுக்கும். ஆனால் இப்படி

காப்பி அடித்து எழுதி இருந்தாலும் ஏதாவது சிலநல்ல எண்ணங்கள் மனதில் கட்டாயம் பதிந்திருக்கும்.சத்சங்கத்தின் நோக்கமே உலகை குழந்தைகளு

அவர்களாகபுரிந்துக்கொள்ள வழி முறைகள் கொடுப்பதுதான். இன்று

வாங்கிய பரிசு அந்தக்குழந்தையை தானாகவே படித்து அடுத்தமுறை முதல்

பரிசு வாங்கத்தூண்டலாம். பார்க்கலாம், அடுத்த சில முறைகள் இந்தக்

குழந்தை என்ன செய்யப்போகிறதுஎன்று பார்க்கலாம். இங்கு கேள்விகள் கேட்கப்படுவது குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளந்து பார்க்க இல்லை. சிலநல் கருத்தை அவர்களின் மனதில் விதைக்க...மற்றும், தவறு என்பதை

தானே புரிந்துகொள்ளும்....அதுவரை நூலைவிட்டுப்பிடிப்போம்.

அங்கு அந்த மயக்கும் நறுமணம் வீசிக்கொண்டே இருந்தது.


லதா ரகுநாதன்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.