தொலைதல்.... by தர்ஷிணிமாயா

ஆழ்ந்த இருள்தான் அது...

ஆனால் என் பார்வைக்கு அந்த இருள் மட்டும் புலனாகிறது.... நான் ஓட்டமும் நடையுமாய் விரைந்து கொண்டிருக்கிறேன்...

சட்டென நின்றேன்... என் கூடவே யாரோ வருவதுபோல் உள்ளதே...

"யாரு... யாரு..." கொஞ்சம் பயத்தோடுதான் கேட்டேன்... என் உடலோ  ஓடுவதற்கு தயாராக இருந்தது...

நான்தான் உன்னை இங்கே வரச்சொன்னேன்...

ஓ... என் பக்க வாட்டிலிருந்து அந்தக் குரல் மட்டும் வருகிறது... யாரையும் பார்க்க முடியவில்லை... இருட்டு மட்டும் காரணம் அல்ல... என்னால் என் பக்க வாட்டில் திரும்பிப் பார்க்க முடியவில்லை...

நான்.... நேராகப் பார்க்க மட்டுமே முடியும் போலிருக்கிறது... ஆன மட்டும் முயற்சித்து என் தலையை பக்க வாட்டில் திருப்ப முனைந்தேன்.

ம்...ம்...ம்...

ம்ஹீம் முடியவில்லை...

ஏன் இங்கு என்னை வரச் சொன்னாய்... யார் நீ...?

உன் கேள்விகளுக்கெல்லாம் பதில் கூற முடியாது... நீ எதையோ தேடுகிறாயா..?

ஆமாம் ... மிக நீண்ட காலமாகவே.... நிறைய வருடங்களாகவே .....நான் எதையோத் தேடிக் கொண்டுதான்  இருக்கிறேன்...உண்மையை ஒப்புக் கொண்டேன்...

"எதை ...? " அந்தக் குரல் கேட்டது...

ம்... என்றேன்... சட்டென என் நடை ஓட்டத்தை நிறுத்தி நின்றேன் மீண்டும்... ம் ?? என்ன ? என்றேன்...

எதைத் தேடி ஓடி வந்து கொண்டிருக்கிறாய் இத்தனை காலமும்...

கண்களை மூடி யோசித்தேன்... வெளிப்புற இருளை விட , மூடிய என் கண்களுக்குள் இன்னும் அதீத இருள்... அந்த இருளுக்குள்ளும் ஏதும் புலனாக வில்லை.

தெரிய வில்லையே... இயலாமையுடன் முனகினேன்... ஆமாம்... இத்தனை வருடங்களாக எதைத் தேடுகிறேன் எனத் தெரிய வில்லை, ஆனால் , எதையோத் தேடுகிறேன் என்பது நிஜம்தான்...

மௌன குழப்பத்துடன் இருந்த என்னை கேள்வி கேட்க ஆரம்பித்தது அந்தக் குரல்...

உன் சிறு வயதில் நீ தேடி ஓடியதன் பெயரை ஞாபகப் படுத்திப் பார்...

பள்ளி, கல்லூரி நாட்களில் சந்தேகமென்ன ...படிப்பை நோக்கிதான் ஓடினேன்...

படித்து முடித்து விட்டாயா... உன் தேடல் அதுவெனில் மீண்டும் ஏன் தேடல்..

ஆமாம், சில பட்டங்கள் வாங்கினேன் ஆனால் படித்து முடித்து விட்டதாக நினைக்க வில்லை... அதில் நிறைவும் இல்லை..ஆனால், பட்டங்கள் வாங்குவது என் தேடல் இல்லை என்பது புரிந்து விட்டது.... நான் தேடாமலேயே யாரோ ஒருவனுடன் திருமணம்... சில நாட்களில் என் தேடல் குழந்தையை நோக்கி இருந்தது...

குழந்தைகள் பிறந்து வளர்ந்த போது, என் தேடல் எனக்கொரு அரசாங்க உத்தியோகம் என்றிருந்தது.

சிலத் தேர்வுகளை கடந்து வேலைக் கிடைத்த பிறகு, என் தேடல் வசதியான வாழ்க்கைக்கானதாக மாறியது..

நான் ஆசைப் பட்டதை எல்லாம் வாங்கி விட்டேன்... ஆனால்... அவை எல்லாம் என் தேடல் இல்லைப் போலிருக்கிறது...

என் தேடல் எதுவென எனக்குப் புரியவில்லை.. தெரியவில்லை... புலப்படவில்லை...

ஓ... ' தேடலே' எதுவெனத் தெரியாத உன்னிடம் அதை எங்குத் தொலைத்தாய் என்று எப்படி கேட்பது... அந்தக் குரலிலும் இப்போதுக் குழப்பம்...

தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டுமா... எதைத் தொலைத்தேன் ? எங்குத் தொலைத்தேன் ? ... புதுக் குழப்பம் ஒன்று என்னைச் சூழ,... என்னைச் சூழ்ந்திருந்த இருள் இன்னும் கனமானதாக மாறுகிறது...

உ... உன்னால் கூற முடியுமா... நான் எதைத் தேடுகிறேன் என்று... அந்தக் குரலிடம் கேட்கிறேன்...

ம்... ம்... முடியும்...

ஆ ! ... வியப்பொலி என்னிடம் இருந்து... சொல்... சொல்... ஆர்வமும் பரபரப்புமாக நான் கேட்க....

ஆனால்.... அதைச் சொல்ல எனக்கு அனுமதி இல்லையே... என்ற அந்தக் குரலின் தொனி இன்னும் இருளாய்...

ம்... பிறகு எதற்கு என்னுடன் பேசுகிறாய்.... எரிச்சலாய் கேட்டேன்...

சொல்ல அனுமதி இல்லையாம்... என்னிடம் கேள்வி கேட்டு என் பதில்களை மட்டும் கேட்டுக் கொள்வாயா...? கோபம் வந்தது எனக்கு....

அமைதியாய் இருந்தது அந்தக் குரல்...

எனக்கு அலுப்பும், எரிச்சலும் வந்தது... என்னைச் சுற்றி வாழ்ந்த சில மனிதர்களும் கூட இப்படித்தான்... தங்களுக்கு வேண்டியதை என்னிடம் இருந்து பிடுங்கிக் கொண்டனர்... அதுபற்றி எனக்கு வருத்தம் இல்லை... ஆனால் நான் ஏதாவது கேட்டால் பிறகு சொல்கிறேன் என்று நழுவி விடுவார்கள்...

அந்தப் ' பிறகு ' வந்ததே இல்லை... அதுதானா என் தேடல்....? என் ஏமாற்றத்திற்கான தேடலா ? அதை எதைக் கொண்டு நிரப்புவது...

சட்டென எனக்கு ஒன்று புரிந்தது... என்னிடம் இருக்கும் எதையோ நான் இழக்க வேண்டும்... ஓ... அதுதான் என் தேடல்...

நான் அமைதியாய்த் திரும்பி நடக்கத் துவங்கினேன்...

ஆமாம்... என் மனம் இப்போது என் தேடலை நிறுத்தி இருந்தது...

மெல்லப் புன்னகைத்துக் கொண்டேன்... என் பயம், பதட்டம்,தேடல்,எல்லாமே மெல்ல.. மெல்ல... சமனாக ஆரம்பித்தது...

என்னை சூழ்ந்திருந்த இருள் மெல்ல மெல்ல கரைந்து மெல்லிய வெளிச்சம் பரவ ஆரம்பித்தது...

ஆ... இதோ நான் தேடியதைக் கண்டு விட்டேன்....

தூரத்தில்... வெகு தூரத்தில் யாரோ அழும் சப்தம் கேட்கிறது...

அந்த அழுகை எனக்காகத்தான்.

By..தர்ஷிணிமாயா

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.