நினைவுகள், வாழ்வின் நெடுஞ்சாலைகளில் எங்கும் இடம்பெறும் மைல்கற்களாய்த் தனித்துவம் பெறுகின்றன. முற்கால நிகழ்வுகள் இக்கால நினைவுகள். இன்றைய நிகழ்வுகளும் நாளைய நினைவுகளாய் வலம்வர இருக்கின்றன. அன்றாட வாழ்க்கையில் பிரச்சினை மூட்டைகளைத் தன் தோளில் தூக்கிச் சுமக்கும் மனிதனுக்கு இளைப்பின் வீச்சைக் குறைத்து மகிழ்ச்சி வானில் சிறகடிக்க வைக்கும் ஆற்றல் இந்நினைவுகளுக்கு உண்டு.

சிறு மழலை பருவத்தில் நாம் செய்த குறும்புகள் இன்று ஒரு கொஞ்சும் மழலை ஓடியாடித் தன் ஆன்றோரை அலைய வைக்கும் கணங்களில் நம் கண்ணெதிரில் வந்து போவதுண்டு. கையில் கிடைக்கும் பொருட்களை எல்லாம் தூக்கிக் கொண்டு ஓரிடம் விட்டு வேறிடம் ஓடிக்கொண்டிருக்கும் குறும்புக்காரப் பிள்ளைகளை நோக்கும் பொழுதுகள் நாமும் இவ்வாறுதானே நம் சார்ந்தோரை அன்று பாடாய்ப் படுத்தியிருப்போம் என்ற உணர்வினை ஊட்டிச் செல்கின்றனவே! நிலவினை மேலிட்டுப் பார்க்கையில் பருப்புணவு (செல்ல மொழியில் புவ்வா) ஊட்ட உன்னைப் பணயம் இட்ட என் தாயின் நினைவுகள் துள்ளி எழுகின்றன (பணயக் கைதியான நீ எப்போது விடுதலை அடைந்தாய் என வினவ மறந்தேனே!). தாயின் மடிதனில் தவழ்ந்திட்ட மழலையாய் இன்றும் மாறிட ஒருவரம் கிட்டாதோ என ஏங்கிடும் மானுடம் அல்லவா நாம்?

துள்ளித் திரிந்த, சற்று முதிர்ச்சி கூடிய அழகிய பருவம் பள்ளிப்பருவம். 'நான் போகமாட்டேன்' என்று பீறிட்ட அழுகைக்குரலில் ஆரம்பித்து 'இன்றோடு பள்ளி முடிந்துவிட்டதா' என ஏங்கிய வேளைகள் வரை பயணித்திட்ட ஒரு சகாப்தம், அப்பருவம். காலையில் எழுந்திருத்து நீராடி, தலைவாரி, சீவிச்சிங்காரித்து நம்மைப் பள்ளிக்கு அனுப்பி வைத்த அம்மா. நாளும் நம்முடன் நடைபயின்ற அண்டை வீட்டு நண்பன். காலைப் பொழுதினில் ஒலித்திடும் 'நீராடும் கடலுடுத்த' தொடங்கி ஒலித்திடும் தமிழ்த்தாய் வாழ்த்து, அரை நாளில் சரிபாதியில் அரவணைக்கும் இடைவேளைகள், தோழனின் வீட்டு உணவை நானும், என் வீட்டு உண்வை அவனும் பரிமாறி உண்ட மதிய உணவு வேளைகள், எப்போது உன் சத்தம் பீறிடும் என ஏங்கித் தவிக்கும் நான்கு மணியின் சாயல்கள், ஆசிரியர் தரும் வீட்டுப் பாடங்கள், மாலை நேர டியூசன் வகுப்புகள், முடித்துவிட்டு முகம் நிறைய பூரிப்புடன் வீடு தேடிச் சென்ற பொன் அந்தி மாலை வேளை... நினைக்கையிலே ஆனந்தம் பெருக்கெடுத்து வழிகிறதல்லவா!!!

சற்றுப் பொறுப்புகள் கூட, வாழ்க்கைப் பாதைகளில் நம் சுவடுகளை பதிக்க அச்சாரமிடக் கல்லூரி வாசல்தனில் வேண்டி அடியெடுத்து வைக்கின்றோம். கட்டுப்பாடுகள் இங்கு கட்டுப்பட்டுதான் இருக்க வேண்டும். சுதந்திரக் காற்றை நம் நாசியில் சுவாசிக்க வைத்த நறுமணத் தூரிகைகளாய்...கல்லூரிப் பொழுதுகள். ஆங்கிலம் ஒன்றிலே பாடம் எடுக்கும் பேராசிரியர்கள், ஒரு புது அத்தியாயத்தை நம் வாழ்க்கைப் புத்தகத்தில் பதிவிட்டுச் செல்கின்றனர். உள்ளூர் முகங்களையே கண்டு பழக்கம் கொண்ட நம் விழிகளுக்கு வெளியூர், வெளி மாநிலம் மட்டுமன்றி, வெளிநாட்டு நண்பர்களையும் கல்லூரி நமக்கு அறிமுகம் செய்து வைத்து வளர்ச்சிப் படிகளில் நம்மை ஏற்றிவிடத் தன் பங்கைத் திறம்படச் செய்கிறது. நம்முள் புதைகொண்ட அரிய ஆற்றலை மற்றவர்முன் வெளிப்படுத்தவும், தனித்துவம் பெறவும் உன்னால் முடியுமென ஊக்கமும் ஊட்டிய புத்துணர்ச்சி டானிக் நீ. அரவணைத்து வளர்த்த கல்லூரி விடுதி, நண்பர்களுடன் நீளும் நள்ளிரவு அரட்டைகள், தேர்வுக்கு முதல்நாள் பற்றிக் கொள்ளும் தேர்வுத்தீ, சுற்றித்திரிந்த நினைவுச் சின்னங்கள் (கல்லூரி கேன்டீன், நூலகம், உள்ளங்காடிகள், மரத்தடி நாற்காலிகள்...மற்றும் பல), நிறைவில் வாழ்வின் அடுத்தக்கட்ட நகர்வின் ஆரம்பப்புள்ளியாய், வளாகத் தேர்வுகள் (கேம்பஸ் இண்டர்வியூ)... கல்லூரி வாழ்வின் பக்கங்கள் எழுத எழுத நீண்டுவரும் அழகுக் கவிதை. உன் வரிகள் என்றும் இனிமை வாய்ந்தவை என்பதில் துளியும் ஐயமில்லை.

வாழ்க்கையெனும் ஓடம்தனில் நாம் கடந்துசெல்லும் நீரோட்டத்தில் சுகமான ராகங்களாய் நம் இதயங்களில் ஒலித்துக் கொண்டிருக்குப்பவைதான் இந்நினைவுகள். பலகாலம் கடந்த பின்னரும் மழலைப் பருவத்திலோ அல்லது கல்லூரிப் பருவத்திலோ நாம் கடந்து சென்றப் பாதைகள் என்றும் உள்ளத்தில் ஆனந்தப் பூங்காற்றை ஊற்றெடுக்க வைக்கும் அமுத கானங்கள். ஆண்டுகள் உருண்டோடிய பின் எதேர்சையாக சந்திக்கும் நண்பர்களுடன் உரையாடும் பொழுதுகளில் நினைவு கூறப்பெறும் ஞாபகங்கள் மீண்டும் அப்பருவத்திற்கே நம்மை கூட்டிக்கொண்டுச் செல்லும் வல்லமை கொண்டவை அல்லவா? நினைவுகளைச் சேர்த்து வையுங்கள். எதிர்காலத்தில் மீண்டும் நினைவுப்பாதைகளில் சுற்றிவரும் வாய்ப்புகள் நிச்சயம் நம்மைத் தேடிவரும். முகமலர்வுடன் அகமும் மலர அப்பாதைகளில் வலம் வருவோம்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.