“இங்கயேன் கூட்டிட்டு வந்திருக்க?” ஆறாம்விரலை நெருடிக்கொண்டே பின்தொடர்ந்தான் பிரசன்னா.

“அவதான் சொன்னா போறப்ப பிக்கப் பண்ணிக்க சொல்லி...” மதி வரவேற்பில் தேங்கிவிட, காத்திருப்பறையில் ஏற்கனவே இருவர் அமர்ந்திருந்தனர். மின்விசிறி சோம்பலுடன் ஓட, திரை சப்தமில்லாமல் ஏதோ விவாதத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

“மேடம் வெயிட் பண்ண சொன்னாங்க.. அரைமணில வந்துடுவாங்க...” தேநீரை நீட்டினார் சரளா சிஸ்டர். “ப்ச்...” சலிப்பாயிருந்தது. தன்னிடம் புன்னகைத்த மெடிக்கல்-ரெப் அருகிலமர்ந்தான்.

“நீங்க டாக்டரோட அக்கா ஹஸ்பண்ட் தானே. ஹாஸ்பிடல் ஃபங்ஷன்ல பார்த்திருக்கிறேன்..”

“ம்ம்...யெஸ்”

”ஃஎப்.பில நானும் உங்க பாலோயர்....”

“இஸிட்?” இது போதாதா!? பணமதிப்புநீக்கத்தில் துவங்கி, ஜிஎஸ்டியின் தாக்கத்தை அலசி, தக்காளி விலையேறியதை விளக்கி, பிக்பாஸின் உளவியலை ஆராய்ந்தபடியிருந்தபோது, “மேடம் கூப்பிடுறாங்க” குரலழைத்தது

“என்னையா?”

“உங்களைத்தான்”

“என்ன மாமா. நைட்டெல்லாம் தூங்காம சோசியல்-சர்வீஸ் பண்ணுறீங்க போல” கேலியாக வரவேற்றாள் நந்தினி.

“பின்ன...நான் யாரு?”

“ம்ஹ்ம்..அது சரி... ஊர்ல அங்கிள் ஆன்ட்டியெல்லாம் எப்படியிருக்காங்க?”

“யா...ஹோப் தெ ஷுட் பி பைன்”

“அப்பா எதுக்கு உங்களை கூப்டிருக்காரு தெரியுமா? என் கல்யாணத்தைப்பத்தி பேசத்தான். என் பிரெண்ட் சர்வேஷ்.. அதான் எப்பயும் ஜாதிப்பேரு சொல்லி திட்டுவீங்களே...” சட்டென்று சூடாகியவன் முறைக்க,

“எவ்ளோ முற்போக்கா காட்டிகிட்டாலும் உண்மைல முடிலல்ல?” சிரித்தவள், “வெளில செம அரட்டைப்போல..” கேமராத்திரையைக் காட்டி பேச்சை மாற்றினாள்.

“எல்லாத்தைப்பத்தியும் பேசுறீங்க.. இன்பர்மேஷன்-ஓவர்லோட் பத்தி சொல்லுங்களேன்?” அவன் எரிச்சலுடன் விளக்க, “அக்கா பிள்ளைங்களோட செலவழிக்க நேரமில்ல, வீடு எப்படி நடக்குதுன்னு தெரியாது. ஆனா உலகத்துலயிருக்கிற எல்லா விஷயமும் உள்ளங்கைல... விர்ட்சுவல் உலகத்திலேயே இருக்கீங்களே.. நிஜத்தில எப்ப வாழப்போறீங்க?”

புன்னகை கூட இப்படி துளைக்குமா!?

“நீங்கன்னு இல்ல.. சோசியல்-மீடியால விசாலமானவன்னு காட்டிக்க எல்லோருமே பிரயத்தனப்படுறோம். ஆனா மனசு? அளவுக்கதிகமான எதிர்பார்ப்பு, ஸ்ட்ரெஸ்னால இன்னுமின்னும் குறுகித்தான் போகுது. தேவையேயில்லாததை அறிஞ்சுக்க சபலப்படுறதும், தெரிஞ்சதை நினைச்சு பயப்படுறதும், குழப்பிக்கிறதும்.....!? ‘லைக்.....கமெண்ட்’ பொறுத்துதான் உறவே, இல்ல?”

மௌனம் மட்டும்...

“அறிவுங்குறது வெறும் தகவல்களை மூளையில் சேமிக்கிறதில்ல. புத்தியும் அகலமாகணும். இந்த அடிக்ஷன்க்கு பேரு ‘‘பிஐயு’... ‘ப்ராப்ளமேட்டிக் இன்டர்நெட் யூஸ்’’... ஹெராயின் எப்படியோ அதுமாதிரி இதுவுமொரு போதை. அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே”

தானிருப்பது மனநல கவுன்சிலிங்கில். புரிந்தது..

அரைமணி கழிய, ““நீங்க பேஸ்புக் போராளி மட்டுமில்ல.. அழகான குடும்பத்தோட தலைவரும் கூட.. பார்த்துக்குங்க...” நிமிர்ந்தவனின் கண்களிலொளிர்ந்த தீர்மானத்தையும் சிறுநன்றியையும் குறித்துக்கொண்ட நந்தினி, ‘இணைய அடிமைத்தனமும் தகவல் சுமையும்– இந்த யுகமனிதர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால்’ தன் வலைப்பதிவிற்கான டேக்-லைனை மனதில் இருத்தியபடி புன்னகைத்தாள்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.