மறதிக்குளம்

எல்லாரும் சூப்பர்வைசர் நாகசண்முகத்திற்காக காத்திருந்தார்கள். அவர் வந்தால் தான் யார்யார் எந்தெந்த ஏரியா என்று தெரியும். வரும் வாரத்திற்கான ஏரியாவை அவர் அறிவிப்பார். அந்த ஏரியாவில் எல்லாரும் வேலைபார்ப்பார்கள். இன்றைய ஒருதினம் மட்டும் சண்முகத்திற்கு எதிர்பார்ப்பு இருக்கும் மற்ற நாட்களில் அவரும் அங்கிருக்கும் வாட்டர் ஃபியூரிபையரும் ஒன்றுதான்... சரியாக சொன்ன நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் தாமதமாக வந்தார். வாசிக்க தொடங்கினார்.

இது ஒரு கீளினிங் சர்வீஸ் நிறுவனம். நகரின் துப்புரவு பணியை எடுத்திருக்கும் ஒரு நிறுவனம். ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒவ்வொருவரையும் ஏரியா மாற்றி பணி நியமன செய்வார்கள். சரவணனுக்கு எது வரக்கூடாது என வேண்டினானோ அந்த ஏரியா வந்துவிட்டது. பேருந்து நிலையம். குப்பைகள் அதிகம் சேருமிடம். ஆனாலும் மாற்றியெல்லாம் கேட்க முடியாது. தன்னுடைய குரூப் மக்கள் இருக்கும் இடத்திற்கு சென்றான். அவர்களுக்குள் பேசிக்கொண்டு கலைந்து போனார்கள்.

இரவு பதினொறு மணி.. ஒட்டுமொத்த கிளீனிங் வேலையாட்களுடன் வாகனம் வந்திரங்கியது. இறங்கியவர்கள் அனைவரும் டீக்கடையை நோக்கி நடக்க தொடங்கினர். சரவணன் மட்டும் வேறு திசை நோக்கி நடக்கதொடங்கினான். எங்கடா போறா...? என்ற குரலுக்கு செல்போனை எடுத்துக்காட்டிகொண்டு சென்றான். பஸ்நிலையம் ஆட்கள் மிககுறைவாக இருந்தனர். பேசிக்கொண்டே அங்கே இருந்த கல்பெஞ்சில் அமர்ந்தான். சிறிது நேரம் கொஞ்சியும்..சிறிது நேரம் கெஞ்சியும் யாரிடமோ பேசிக்கொண்டே இருந்தான். சைரன் ஒலியில்லாமல் போலீஸ் காவல் வாகனம் பஸ்நிலையம் உள்ளே நுழைந்தது. அவசரமாக போனை அணைத்துவிட்டு எழுந்துநின்றான்.

வாகனம் இவனை கடந்து சென்றுவிட்டு..மீண்டும் பின்னோக்கி வந்தது...

யார்ரா நீ ?....சார்.. கீளினீங் சார்.. பஸ்ஸடாண்ட் கீளினிங்சார்.. வண்டி அங்க நிக்குது..

ம்ம்ம் .. அது யாரு... யாரோ படுத்திருந்தார்கள்.. காட்டி கேட்டார்.

தெரியல சார்...போய் பாரு....அதட்டினார்

அருகில் நெருங்கினான்.. ஒரு பெரியவர்.. முகம் மட்டும் தெரிய முழுவதும் போர்த்தி படுத்திருந்தார்...

சார் யாரோ படுத்திருக்காங்க...எழுப்பு....

கொஞ்சம் தொட்டு எழுப்பினான். பெரியவர் மெதுவாக கண் திறந்து பார்த்தார்... போலீஸ் கூப்டுறாங்க...கைகாட்டினான். ஆனால் பெரியவர் அப்படியொன்றும் அசரவில்லை. மெதுவாக எழுந்தார்.

ரொம்ப நாள் ஷேவிங் செய்யவில்லை. குழிவிழுந்த கன்னம். என்ன கலரென்று தெரியாத ஒரு சட்டை. வெள்ளையென்று நம்பமுடியாத வேட்டி.. எழுந்து நடக்க முடியாமல் நடந்தார்... போலீஸ் வாகனத்தை நோக்கி...

யார் நீ... எதுக்கு இங்க படுத்துருக்கா...

...... பஸ் போய்டுச்சு...

எந்த ஊரு....

அது.....இந்த பக்கம்... அங்கிட்டு.. முறம்பு..

முறம்பா... எந்த ஊருக்கு போறா...

மேற்கு பக்கம்...

எந்த ஊருனா..

மேற்கு பக்கம் ஏதாச்சும் ஊருக்கு...போலீஸ் கடுப்பானர்.

அது என்ன மூட்டை மாதிரி.. கையிலிருக்கும் டார்ச்லைட் அடித்தார்...

அது என் பொஞ்சாதி.. உடம்பு சுகமில்ல படுத்திருக்கா...

பொஞ்சாதியா... எங்க கூப்டு... போலீஸ் வண்டியிலிருந்து இறங்கினார்....சில நொடிகள் நின்ற பெரியவர் திரும்பி நடந்தார்.... சரவணன் இதை அனைத்தும் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான்.

வந்து அந்த போர்வையை விளக்கினார்... குப்பென்று ஒரு கெட்ட வாடை அடித்தது. அது போலீஸ் வரை சென்றதும் .மூக்கை மூடினார்கள்.

என்னய்யா...?

உடம்பு சொகமில்ல சாமி.. அங்கனயே கொள்ளைக்கிபோய்ட்டா.. இப்ப ஒரே குளிர் அதான் சாமி அப்படியே விட்டுட்டேன்... போர்வைக்குள் இருக்கும் உருவம் அடையாளமே தெரியவில்லை.. சேலை இருப்பதால் பெண் என சொல்லலாம்... அவ்வளவுதான்

போலீஸ் அப்படியே வண்டி ஏறியது. நாளைக்கு காலைலே இங்க இருக்க கூடாது என்ன ?

தலையாட்டினர். தலைக்குமேலே கையெடுத்து கும்பிட்டார். மீண்டும் அங்கேயே அமர்ந்து கொண்டார். சரவணன் கொஞ்சம் தள்ளி நின்றான். குப்பை அள்ளும் பலர் சரக்கடிப்பார்கள். வாடை தெரியக்கூடாது என்று.. இவர் எப்படி..? இந்த கெட்ட வாடையிலே படுத்துக்கொண்டிருக்கிறார்.

மெதுவாக அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்தான். அவர் ஏதாவது பேசுவார் என நம்பினான். அவர் எந்த அசைவுமின்றிருந்தார். இங்கன டீக்கடை எதாச்சுமிருக்கா...?கேட்டார் அந்த பெரியவர் சரவணன் கைகாட்டினான். எவ்ளோ..? டீ எட்டுரூபா.... ஒரு பழைய பையில் காசு துழாவினார். மெதுவாக நடந்தார். டீகடைய நோக்கி..

கூட்டாளிகள் சரவணனை நெருங்கினர்.. ஏரியா பிரித்து யார் எங்கிருந்து பெருக்க வேண்டுமென பேசிக்கொண்டார்கள். சரவணன் பெரியவர் இருக்கும் இடத்தையே பெருக்க தொடங்கினான்.

பெரியவர் ஒரு டீயை கையில் கொண்டுவந்தார்... அந்த அம்மாவிடம் நெருங்கி பேசினார். பின்னர் அந்த அம்மாவின் வாயில் டீயை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றினார். காலி கோப்பையை தூக்கியெறிந்தார். சரவணனுக்கு கோபம் வரவில்லை பொறுமையாக அதை எடுத்தான்.

அய்யா எந்த ஊருக்கு போகனும்... சொன்னீங்கன்னா எப்ப பஸ்னு சொல்லுவேன்.

எந்த பதிலும் இல்லை.

இங்க பக்கத்துல தான் கவர்மெண்ட் ஆஸ்பித்திரி இருக்கு...கூப்ட்டு போறீங்களா..எந்த பதிலும் இல்லை.

ஏன் தனியா இருக்கீங்க...எந்த பதிலும் இல்லை.

கொஞ்சம் அயர்ந்து போனான். நடக்க தொடங்கினான். உன் பேரு என்னா..? சரவணன் வேகமாக திரும்பி வந்து சொன்னான். சோழவந்தான் பக்கதுல கோள்வார் பட்டி.. இங்க வந்து மூணு வருஷம் ஆச்சு...எந்த அசைவுமின்றி கேட்டார்.

நீங்க... உங்க பேரு...? எங்க இருந்து வரீங்க...

மறந்துபோச்சு...

மறந்து போச்சா...

ம்ம்ம்ம்... நாளைக்கு சாப்பாடு.. தங்குற இடம்.. இது தான் தேடணும்.. அப்புறம் எங்கிட்டு மத்தத நியாபகம் வச்சுக்க... எதாச்சுமிருந்தா...தான் நியாபகம் வச்சுகனும்...எதும் இல்ல.. நியாபகமும் இல்லை...

சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை...

இது உங்க வீட்டம்மவா...

பெரியவர் திரும்பி பார்த்தார். நியாபகமில்லை... ஹோம்ல இருந்தோம்... இவளுக்கு இடுப்புக்கு கீழ போச்சு... பத்து எட்டு வச்சா... உக்காந்துடுவா... அதுனால பார்த்துக்க முடியாதுனு ரோட்ல போட்டுட்டாங்க...

சரவணனுக்கு ஒன்னும் புரியல... அப்படியா மறந்துபோகும்...கேட்டான். எல்லாமே மறந்துபோச்சா...?

நாளைக்கு சாப்பாடு இருக்கு... தங்க வீடிருக்குனா .. சரி..எதையாச்சும் நியாபகம் வச்சுக்கணும்.. எதுவுமே இல்லை... அன்னைக்கு பாட நகத்துறதே பிரச்சினை இதுல பழச எல்லாம் மறந்து போச்சு...அன்னைக்கு பொழுப்பு ஓடணும்... இவ என்னை கஷ்டப்படுத்தாம இருக்கணும்... ஒரு முப்பது ரூபா கிடைக்கணும்... ஏதாச்சும் கண்டெக்டர் ஃபிரியா கொண்டுபோய் இன்னொரு பஸ் ஸ்டான்டல விடணும்.. அதான் நியாபமிருக்கும்...மத்த எல்லாம் மறந்து போச்சு

சரவணனுக்கு தலைசுத்தியது. பிள்ளைகள் இல்லையா? இல்லை இவர்களை விரட்டி விட்டார்களா? இல்லை பிச்சை எடுப்பதற்காக சேர்ந்திருக்கிறார்க்ளா? எப்படி மறந்துவிட்டார்..? ஒருவேளை அவையெல்லாவற்றையும் விட... இவர் சொன்ன இப்போதைய வாழ்க்கையின் பிரச்சினையை இவரை மழுங்கடித்துவிட்டதா...?

அப்படியே நின்றான். பிறகு ஏதேதோ யோசித்தவாறு அவன் வேலையை கவனிக்க தொடங்கினான். கொஞ்சம் விடிந்தது. அன்றைய தின பேட்டாவான நூற்றிஐம்பது அவனுக்கு கிடைத்தது. எல்லாரும் கிளம்ப தயாரானார்கள். இவன் மட்டும் அந்த ரூபாயோடு அவரை நெருங்கினான்.

இந்தாங்க இந்த பணத்தை வச்சிக்கோங்க... பழச மறந்த மாதிரி ஒரு ஐஞ்சுநாள் கவலையும் மறந்துடுங்க...இன்னைக்கும் நைட் டூட்டி இங்கதான்... இருந்தா உங்களா பார்க்கிறேன்.. என்று சொல்லிபடி ஒடினான்... ஒடும் போது போது மறந்தும் இவருக்கு பழைய நியாபகங்கள் வந்து விடக்கூடாது.... வந்துவிட்டால் அது ஒரு கவலையாக மாறிவிடும்... மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும்.... என்று அவன் குலசாமியை வேண்டிக்கொண்டான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.