அம்பிகை இட்லி கடைக்கு சென்று கொண்டிருக்கிறேன்...

இங்கு தான்... கவுண்டம்பாளையத்தில்தான் இருக்கிறது. தெரியும் சூழலுக்குள் ஒரு வகை மாலை நேரம் என்னை ஆக்கிரமித்திருந்தது. வழக்கமாக நான் வந்து போகும் இடம்தான். ஏனோ இன்று வேறு மாதிரி இருந்தது. வேற்று மனிதனாக என்னை மாற்றும் ஒன்றுக்குள் நான் நுழைவதை நானே ஆங்காங்கே நின்று பார்க்கிறேன். வேடிக்கை ஒன்றுமில்லை எதிர் வினையே என்பதுதான் 'அம்பிகை இட்லி கடை'க்கான எனது நோக்கம்.

யாரிடம் கேட்பது.

இந்த மாதிரி எல்லாம் நான் கேட்டதே இல்லை. சுசீலா ரெஸ்டாரண்ட்டுக்குள் சென்று ரவா தோசை சாப்பிட்டு விட்டு நூறு ரூபாயை எடுத்து நீட்டி எத்தனை மிச்சம் வருகிறது என்று கூட பார்க்காமல் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு வரும் மிடில் கிளாஸ் மியாவ்- வாகிய நான் அம்பிகை இட்லிக் கடையை இத்தனை ஆர்வமாக வேர்த்து பூத்து தேடிக் கொண்டிருப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.

ஆச்சரியங்கள் பலதுக்குள் சருகொன்றும் இலையொன்றும் முன்னும் பின்னுமாக மூச்சிரைத்துக் கொண்டிருப்பதை உணர மட்டுமே முடியும். சுசீலா என்றதுமே எனக்கு எப்போதுமே நகுலன்தான் நினைவுக்கு வருவார். ஒவ்வொரு முறை சுசீலா ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைகையிலும் நான் நகுலனைக் கூட்டிக் கொண்டே நுழைவதாக நம்புவேன். அத்தனை நெருக்கம் நகுலனுக்கு எனக்கும். அவர் விட்டு சென்றார். நான் விட சென்று கொண்டிருக்கிறேன். அத்தனை இடைவெளி அவர் வயதுக்கும் என் வயதுக்கும். அத்தனை தொடர்வெளி அவர் வாழ்வுக்கும் என் வாழ்வுக்கும்.

நான் ஆரம்பிக்கும் எதுவுமே எனக்கு இயல்பாக பழைய புள்ளியில் இருந்தே தொடங்குதல் நலம். அதுவே என் நலமறியும் ஆவல். இதோ இட்லிக்கடையை தேடுவதற்கு முன் பூக்கடை பாட்டியின் அருகில்தான் என் "சீட்டா"வை கட்டிப் போட்டேன். தலைக் கவசத்தை கட்டிப் போடுதல் பெரும் தலைவலி. நுணுக்கமாக செருகி சாவியை திருக வேண்டும். ஏனோ அப்போதெல்லாம் சட்டென மனக்கண் சுற்றும் முற்றும் பார்த்துக் கொள்கிறது. இந்தப் பூக்கடை பாட்டியிடம் தேவையே இல்லாத போதும் பூ வாங்கிக் கொண்டு சிரிப்பாள் கவிதா. அந்த சிரிப்பில்... பாட்டியின் சுருக்கம் மலரும் முகத்தை கண்களுக்குள் கொண்டு வருவேன். என் பாட்டியின் ஆன்மா என்னை பிடித்தாட்டுகிறது. என் ஆன்மா கவிதாவை பிடித்தாட்டுகிறது. பூக்கடை பாட்டியின் ஆன்மா கவுண்டம்பாளைய சிக்கனலுக்கு அருகே வண்ண வண்ணமாய் பசி பிய்த்து போட்டுக் கொண்டிருக்கிறது. பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை என்று எவன் சொன்னது. கவிதா அவளுடன் பேசும் பக்கத்து வீட்டு பெண்கள்... பஸ் பிரண்டுகள்......ஆபிஸ் பிரண்டுகள் எல்லாருக்கும் பூ வேண்டுமென்றால் இந்த பாட்டியின் கடையை தான் சிபாரிசு செய்வாள்.

"ஓ வசந்த ராஜா பாடல் ஏனோ நொடிகளில் வந்து போகும்...." நான் அடிக்கடி காணும் இந்த உயரமான பெண்ணைக் கண்டால். கண்களில் சோடாபுட்டி கண்ணாடி. கூரும் இல்லாமல் மழுங்கவும் இல்லாத கொஞ்சம் தூக்கினாற் போல நாசி. தலையில் ஆங்காங்கே நரை முடியும்... பழுப்பு முடியும் தரித்திருப்பாள். சத்யராஜைப் போல நடக்கும் இந்தப் பெண் என்னை பார்க்கும் போதெல்லாம் வசீகரித்துக் கொண்டே இருப்பாள். நாற்பதைத்தாண்டியவளாகத்தான் இருக்கும். முகத்தில் அப்படி ஒரு சோகம் நிரம்பி வழியும். நான் பார்க்கும் போதெல்லாம் கெண்டைக்கால் வரை கட்டிய சிவப்பு புடவை தான். எப்போதாவது வந்து அவளை டிவிஎஸ்- ல் அழைத்துப் போகும் அவளின் கணவனைப் பார்க்க நேரிடும். அப்போதும் அவள் வேறு எங்கோ தான் பார்த்துக் கொண்டு போவாள். ஒரு நாள் ஒரே நாள் அவளின் குரல் கேட்க நேர்ந்தது. வெண்டைக்காய் வாங்க பேரம் பேசிக் கொண்டிருந்தாள். வெண்டைக்காய் பேசியதோ என்று தோன்றியது. தூங்கா வளையத்தை கண்களுக்கு கீழ் புது வண்ணத்தில் சுமந்து கொண்டிருந்தாள். வெட்கம் விட்டு அவள் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அற்று அவளும் பார்த்து விட்டாள். வெண்டைக்காய்காரனும்.. மற்றும் சிலரும்... பொசுக்கென்று முகம் திருப்ப, மறந்து போனேன். என்னை நான் நொந்து கொண்டு கவிதாவிடம் சொல்லி "நான் ஏன் இப்டி இருக்கேன்" என்று கேட்டேன்.

உனக்கு கொஞ்சம் "லூசு டா" என்று செல்லமாக தலையில் தட்டி விட்டு "ஆனா நீ உலக ரட்சகன்" என்று சொல்லி போனாள்.

"அம்பிகை இட்லிக்கடையா.........." இழுத்து யோசித்த சைக்கிள் கடைக்காரர் நொண்டி நொண்டி உட்காருவதும் எழுவதுமாக இருந்த நாயைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னார். அவரின் பதில் காதுக்குள் செல்லாமல் காற்றுக்குள் சென்றது. என் கண்கள் நொண்டிய காலுக்குள் சென்றன.

அந்த நாய் உலகத்தையே சுற்றுவது போல தன்னையே சுற்றிக் கொண்டிருந்தது. வாலை பார்க்க செய்யும் முயற்சியும் வாலையே பார்த்த முயற்சியும் வெளிப்படுகையில் அதன் காலில் அடி பட்டிருந்ததை நானும் கண்டேன். படக்கென "அட போங்கடா" என்பது போல நன்றாக சாய்ந்து முன்னங்கால்களை நீட்டி படுத்து.......இல்லையில்லை உட்கார்ந்து கொண்டது. அது வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. எலும்பு புடைத்துக் கொண்டிருக்கும் உடல் கொண்ட செம்மண் வண்ண நாய். கடைசியாக எப்போது சாப்பிட்டிருக்கும் என்று எனக்கு தோன்றியது. ஒரு பிஸ்கட் வாங்கி போட்ட போது அது மனிதனானது போல நம்பினேன். அல்லது நான் நாயானது போல நம்பினேன். நொண்டிய மனதுடன் நான் சைக்கிள் கடைக்காரரைப் பார்த்தேன். அவர் காத்தடித்துக் கொண்டிருந்தார்.

அவருக்கும் கொஞ்சம் காத்து அடிக்க வேண்டும் போல இருந்தது அவரின் உடலும். வேர்த்து ஊற்றும் உடல் வாகு. 1 ரூபாய்க்கு ஒரு மணி நேரம் வாடகை சைக்கிள் ஓட்டிய ஞாபகம் வந்தது. இப்போதெல்லாம் வாடகை சைக்கிள் கான்செப்டே இல்லை போல. கேட்க நினைத்த போது ஒரு பஞ்சு மிட்டாய்க்காரன் எங்களைக் கடந்து சென்றான். பார்க்க பீகார்காரன் போல இருந்தான். உயர வாக்கில் பிடித்திருந்த கம்பில் நாலைந்து பஞ்சு மிட்டாய் கவர் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரே வண்ணத்தில் காற்றில் அசைந்தாடும் அவன் வாழ்வை காண நேரிட்டது.

"இத வித்து எப்படி இவன் சாப்பிடறான்" என்று யோசித்த போதே "அததுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு. அது எப்படியும் பசி ஆறிக்கும்" என்றபடியே சைக்கிள் கடைக்காரர் என்னை பார்த்தார்.

எனக்கு அந்த நொடி ஒன்றுமே தோன்றவில்லை.

முன்பொரு காலத்தில் ஜவ்வு மிட்டாய்க்காரன் ஊருக்குள் வரும் போதே குழந்தைகள் கத்தி கூச்சலிட்டு பின்னாலேயே வரும் காட்சி மணிக்கட்டில் கட்டி இறுகிப் போன ஜவ்வின் காலத்தை சொரக்கென்று பிய்த்து கொண்டு வரும் எச்சில் ஊரும் நிமிடங்களாய் என்னுள் மெல்ல மெல்ல மேலெழும்பியது.

வேகமாய் நடக்கத் துவங்கினேன்.

என்னைக் கடந்து எனக்கு முன்னால் பின்னால் என்று சாரை சாரையாக மக்கள் போவதும் வருவதும் ஒரு கணம் என் தலையை சுற்ற வைத்தது. இவர்கள் எல்லாம் எங்கு போகிறார்கள். எதை நோக்கிய பயணம் இது. ஓர் ஆற்றாமைக்குள் நிகழும் வெப்ப மயமாதலைப் போல உடல் வேகும் நடையோடு ஒவ்வொருவரும் இருக்கிறார்கள். அது தீருவதே இல்லை. சாந்தப்படுத்தும் குளுமையடையும் முகம் ஒருவருக்கு கூட ஏன் இல்லை. யுத்தனின் கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது.

"துக்க வீடா விழா வீடா
தெரியவில்லை
ஒரே மாதிரி சாமியானா
ஒரே மாதிரி மனித முகங்கள்"

அப்படி ஒரு முகத்தோடுதான் இந்த தள்ளு வண்டிக்கார் இருக்கிறார். நாலைந்து வருடங்களாக வாழைப் பழம்தான் விற்றுக் கொண்டு இருக்கிறார். இதே இடம்.... இதே வாழ்வு. என் முகம் கூட அப்படி ஒரு முகமாகத்தானே இருக்கிறது. எனக்கு உடனே என் முகத்தைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. நோ பார்க்கிங்-ல் நிறுத்தியிருந்த தண்டர் பெர்டில் கொஞ்சம் எட்டி சாய்ந்து முகத்தைப் பார்த்தேன். நேற்று பார்த்த அந்த பெரியவரின் முக சாயலை ஒட்டியிருந்தது. சரி நான் எங்கு போகிறேன். இவர்களை போல எனக்கும் வேலை இருக்கிறது. நானும் போகிறேன். இதே கவுண்டம் பாளையத்தை எத்தனை முறை கடந்திருக்கிறேன். எத்தனை விதமான கவுண்டம் பாளையத்தை பார்த்துக் கொண்டிருக்கிறேன். ATM வாசலில் வரிசையாக நின்ற கவுண்டம் பாளையம்தான் அற்புதமான கவுண்டம் பாளையமாக எனக்கு பட்டது. ஏன் என்று தெரியவில்லை. தெரியவும் நான் விரும்பவில்லை. விரும்பாத சூழலுக்குள் விரும்பிய நட்சத்திரம் படக்கென்று விழுந்து விடுவதை உற்று கேட்கும் பொருள் படும் இருப்பின் வசத்தை என் வசமே கொண்டிருக்கிறேன் என்பது தான் என்றோ என் இன்றைய நிலை.

"எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்... என் மனதில் கலந்தே அது பாடும்...." கடந்து போன மினி பஸ்சின் பால் தன்னால் திருப்பியது இசையின் விசை. சாதாரண பாடலைக் கூட மினி பஸ்ஸில் கேட்கும் போது அற்புதமாகி விடுகிறது. நான் சனிக்கிழமை இரவுகளில் மினி பஸ்ஸில்தான் கவுண்டம் பாளையத்தில் இருந்து வீட்டுக்கு வருவது வழக்கம். இளையராஜாவின் பாடல்களில் ஜன்னலோர என்னை சிறை உடைத்து பறவை செய்யும் மாயம் நிகழும் அற்புத கணம் அவைகள். பாட்டுக்காகவே மினி பஸ்ஸில் வடவள்ளி வரை சென்று விட்டு திரும்பும் என் இரவு எப்போதாவது தான் விடியும். இட்லி ஞாபகம் வந்த போது பேருந்து முழுக்க இட்லி தலைகள். திரும்பிக் கொண்டேன். திரும்பியதை கொண்டேன்.

"எட்டு ரூபாய்க்கு ரெண்டு இட்லி விக்கிற கடை.... கரெக்ட்டா 7 மணிக்கு தொறக்கற கடை..... பேரு கூட அம்பிகை இட்லி கடை...."

"தெரியவில்லை" என்று உதடை பிதுக்கிய தள்ளுவண்டி இட்லிக்கடைக்காரர் பார்த்து பார்த்து ஒல்லி ஒல்லி இட்லியாக ஊற்றிக் கொண்டிருந்தார். "ரூ 10- ரெண்டு இட்லி" என்று பக்கவாட்டில் எழுதி இருந்தது.

சிறுவயது முதல் எத்தனை விதமான இட்லி சாப்பிட்டு விட்டேன். கல்லு மாதிரி.. வெங்காயம் போல தோல் உரியும் இட்லி... மெது மெதுவென்ற இட்லி... நடுவில் கொஞ்சம் வேகாத இட்லி...வறண்டு போன இட்லி.. சாதம் போல குழைவாக பிசைந்தால்தான் சாப்பிட முடியும் என்ற இட்லி...சற்று புளிப்பான இட்லி.....மட்டன் குழம்புக்கு ஏற்ற சற்று பெரிய சைஸ் இட்லி. மைசூரில் உண்ட தோசை சைஸ்க்கு உப்பிய இட்லி என்று எத்தனை விதமான இட்லிகள். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் எத்தனை இட்லிகள் உண்பான். மனம் கணக்கெடுக்க ஆரம்பித்தது. நான் இதுவரை கிட்டத்தட்ட 50000 இட்லிக்கு மேல்.

எனக்கு இட்லி உப்புமா ஒருபோதும் பிடிப்பதில்லை. அதன் வாழ்வை சிதைக்கும் செயல் அது. அதை இன்னொன்றாக மாற்றும் உரிமையை யார் கொடுத்தது. இட்லியின் ஆவித்தன்மையை உணர்ந்தோர் உயர்ந்தோர். மற்றபடி இட்லி உப்புமா செய்வதை மிக வன்மையாக கண்டிக்கிறேன். என் கண்கள் அலை பாய்கிறது. காற்று வெளியிடை கண்களெல்லாம் இட்லியாகவே தெரிகிறது. வானத்து நிலா பாட்டி ஊற்றிய இட்லி தான். நான் தேடுகிறேன்.

இதோ என்னை அலைக்கழித்து கொண்டிருக்கும் நேற்று அந்த பெரியவர் கூறிய எட்டு ரூபாய்க்கு ரெண்டு இட்லி விற்கும் அந்த அம்பிகை இட்லிக்கடையை கண்டு பிடித்து விட்டேன். மிருதுளா ஆஸ்பத்திரியை ஒட்டினாற் போல முன்பொரு காலத்தில் இருந்தது என்பது போல இருந்தது. கடையின் பெயர் பலகையைப் பார்த்தேன். "அம்பிகை இட்லி கடை" என்று ஒரு சாமி சிரித்துக் கொண்டிருந்து. இட்லியே சாமி தானே என்று தோன்றியது. வேக வேகமாக நான் தேடினேன். கண்களை இட்லியாக்கி தேடினேன். அந்த முகத்தை காணவில்லை.

நான் நேற்று கவிதாவுக்காக பைக்கில் அமர்ந்தபடியே காத்திருக்கையில் என்னை நோக்கி வேக வேகமாக வந்து நின்று என்னைப் பார்த்து "அம்பிகா இட்லி கடை திறந்திருக்கா..." என்று என்று வேகமாக கேட்ட அந்த பெரியவரின் தாடி முகத்தைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.

"ரெண்டு இட்லி எட்டு ரூபாய். நல்லா இருக்கும். சாம்பார் அப்டி இருக்கும்...." அவர் என் கண்களை கூர்ந்து பார்த்தார்....இட்லியை பார்ப்பது போல. நான் பதிலுக்கு என்ன சொல்வதென்று யோசிக்கும் போதே... "எட்டுரூபா குடு....." என்று கை நீட்டினார். எனக்கு திக்கென்று ஆனது.
சுற்றும் முற்றும் பார்த்தபடியே... பாக்கெட்டில் கை விட்டு, இருந்த சில்லறை 3 ரூபாயை எடுத்து நீட்டினேன். வாங்கி எண்ணிப்பார்த்து விட்டு "இது பத்தாது.... எட்டு ரூபா குடு......கடை 7 மணிக்கு டான்னு திறந்திடுவான்" என்றார். அவரின் பல் வரிசை அழகாக இருந்தது. வெளேரென வளர்ந்திருந்த தாடி பளீரென சிரித்தது.

"தாத்தா நிஜமாவே என்கிட்டே காசு இல்ல.... இன்னைக்கு பர்ஸை மறந்துட்டு வந்துட்டேன்.... மதிய சாப்பாடு கூட, கூட வேலை செய்யறவர்தான் வாங்கி குடுத்தார்... இவ்ளோதான் இருக்கு" என்று சொல்லும் போது மனதுக்குள் பைக் பஞ்சர் ஆனால் என்ன செய்வது என்று யோசித்தேன்....

"அப்டியா.... சரி.... நான் பாத்துக்கறேன்.... நீ நாளைக்கு கொண்டு வா.... எட்டு ரூபா...." என்றபடியே வேக வேகமாய் நடந்து கூட்டத்தில் மறைந்து போனார்.

இன்று பர்ஸ் வைத்திருக்கிறேன்.... 2000 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. எத்தனை இட்லி வேண்டுமானாலும் வாங்கி கொடுக்கத்தான் இத்தனை நேரமும் தேடிக் கொண்டிருக்கிறேன். இதுவரை என் கண்களுக்கு அவர் தட்டுப்படவே இல்லை. ஒருவேளை நீங்கள் அவரைக் காணக் கண்டால் எட்டு ரூபாய் கொடுத்து போங்கள்..... அடையாளம் பெரியதாக ஒன்றும் இல்லை.

அவர் என்னை போல உங்களை போல சாயல் கொண்டவர்தான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.