' என்னம்மா... என்னாச்சு... '

தன் மகள் தேவியின் முக வாட்டத்தைப் பார்த்து வினவினார், கருணாகரன்.

' ஒன்னுமில்லப்பா '

' அப்பாகிட்ட எதோ மறைக்கிற ஏன்டா தேவி இதுவரைக்கும் அப்பாகிட்ட நீ எதுமே மறச்சது கிடையாதே இப்ப என்ன ஆச்சு அப்படி என்ன விஷயம் அப்பாகிட்ட சொல்ல முடியாத அளவுக்கு உன் மனச போட்டு கஷ்டப் படுத்துது ' என்று வினவியவர் மகளின் கேசத்தை மெதுவாக வருடினார்.

கொஞ்ச நாட்களாகவே தன் மகளின் நடவடிக்கையில் மாற்றத்தை கவனித்தவர் அதை அவளே சொல்லட்டும் என்று பொறுமை காத்தார்.

தந்தையின் மீது தலை சாய்த்தவள் ஒரு நிமிடம் தாயாகிய தந்தையின் நினைவுகளில் ஆழ்ந்தாள்.

சிறு வயதிலேயே தாயை இழந்தவள் தாயும் தந்தையுமாய் பாசத்தை கொட்டி வளர்த்த தன் தந்தையின் பாசத்தை எண்ணி நெகிழ்ந்தாள். தாய் இருந்திருந்தால் கூட தன் மீது இவ்வளவு பாசம் காண்பித்திருப்பார்களா என்ற சந்தேகமும் அவளுக்கு எழுவதுண்டு.

இதுவரை தன் தந்தையிடம் எதுவும் மறைத்ததில்லை. சின்ன சின்ன விஷயங்களைக் கூட தன் தந்தையிடம் பகிர்ந்து கொள்வாள். நண்பர்களைப் போல் இருவரும் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வர்.

ஒரு நாள் இருவரும் வெளியே சென்ற போது சில பையன்கள் இவளை கிண்டல் செய்ய பதிலுக்கு அப்பாவும் மகளும் அவர்களை கலாய்த்து தள்ளினர். அது போல் கல்லூரி சேர்ந்து கொஞ்ச நாட்களிலே ஒரு பையன் லவ் லெட்டர் தரவும் அதை தந்தையிடம் காண்பித்தாள். அந்த லெட்டருக்கு தகுந்த பதிலும் எழுத சொன்னார்.

காதல் தவறில்லை. அதற்கு தகுந்த வயது இல்லாமல் காதலிப்பது தான் தவறு. நீ நாளைக்கு ஒரு பையன காதலிக்கிறதா வந்து சொன்னாலும் நான் அதை கண்டிப்பா ஏத்துக்கத் தான் செய்வேன் ஆனா அதுக்கு முன்னாடி நீ நல்லா படிக்கனும் நல்ல ஒரு வேலைல செட்டில் ஆகனும். நாளைக்கு எப்படி இருக்கும்னு நமக்கு தெரியாது. நீ எப்பவும் எதுக்கும் பயப்படமா உன்னோட சொந்த கால்ல நிக்க பழகிக்க. நீ படிச்சு நல்ல வேலைல இருக்கும் போது உனக்கே தெரியும் உன்னோட லைஃப்ப எப்படி அமச்சுக்கனும்னு. அப்போ நீ இவர தான் பா நான் லவ் பண்றேன் இவர தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொல்லு நான் எந்த தடையும் சொல்ல போறதில்லை. ஜாதி மதம் எல்லாம் எனக்கு தேவையும் இல்லை. என்னோட பொண்ணு மனசுக்கு பிடிச்சா சரி தான். ஆனா உன்னோட தேர்வு சரியானதா இருக்கனும் இப்ப விரும்புறேனு சொல்லிட்டு நாளைக்கு கண்ண கசக்கிகிட்டு வந்து நிக்க கூடாது என்று தந்தை கூறியதை மனதில் எண்ணியவள் ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் தந்தையிடம் அனைத்தையும் கூற முற்பட்டாள்.

மகளின் முகத்தில் ஏற்பட்ட தெளிவை பார்த்து மகிழ்ந்தவர்

' சொல்லுடா தேவி யாரை லவ் பண்ற என்ன பிரச்சனை '

' அப்பா ' சிறு அதிர்ச்சியுடன் நிமிர்ந்து தந்தையை பார்த்தாள்.

' சொல்லுமா என்கிட்ட சொல்ல என்ன தயக்கம் '

' அப்பா என்னை மன்னிச்சிடுங்கப்பா ' என்று கூறியவள் தந்தையைக் கட்டிக் கொண்டாள்.

பின் மெதுவாக கூறலானாள்.

MCA இறுதி ஆண்டு.

ஆறு மாத Project காக தனது தோழிகளோடு ஒரு Softwsre company க்கு சென்றாள்.

அங்கு வேலை பார்க்கும் பிரேமை பார்த்ததுமே இவளுக்கு பிடித்துவிட்டது. இரண்டு மாதங்களிலே இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்து பின் காதலிக்கவும் தொடங்கினர். இப்பொழுது தன்னை ஒதுக்குவதாக கூறியவள் முன்னமே உங்க கிட்ட சொல்லி இருக்கனும் உங்க கிட்ட மறச்சுட்டேன் என்னை மன்னிச்சிடுங்கப்பா பிளீஸ்...' என கூறி அழலானாள்.

' காதல் வந்தா அப்படி தான் மா விடு அப்பா ஒன்னும் தப்பா நினைச்சுகல நீ முதல அழுகுறத நிறுத்து அந்த பையன பத்தி முழு விவரம் சொல்லு ' என மகளை சமாதானம் படுத்தி முழு விவரம் கேட்டறிந்தார்.

இரண்டு நாட்கள் சென்றது.

மறுநாள்-

' தேவி '

' என்னப்பா '

' சீக்கிரம் ரெடி ஆகி வா மா '

' எங்கப்பா வெளியே எங்காவது போறம்மா பா '

' இல்லம்மா. உன்னை பெண் பார்க்க வந்திருக்காங்க '

' அப்பா ' அதிர்ந்தவள் அழ தொடங்கினாள்.

' இங்கப் பாருமா தேவி அவுங்க உன்னை பார்க்கனும்னு வந்திருக்காங்க அவுங்க கிட்ட போய் நான் என்ன சொல்லட்டும். பெண் பார்க்கிறது தான மா எதுவும் பேசி முடிக்க போறதில்ல மா நீ ஒன்னும் கவலை படாம கிளம்பி வா உனக்கு விருப்பம் இல்லாத எதையும் அப்பா செய்ய மாட்டேன் அந்த நம்பிக்கை உனக்கிருந்தா நீ கிளம்பி வா ' என்று கூறியவர் திரும்பி பார்க்காமல் வெளியே வந்தார்.

அடுத்த பத்து நிமிடங்களில் ரெடியாகி வந்தவள் தனது தந்தை காபி டம்ளர் அடங்கிய தட்டை நீட்டவும் வாங்கிக் கொண்டு நடந்தாள். அனைவருக்கும் காபியை கொடுத்தவள் மாப்பிள்ளை அருகில் வந்தாள். விரும்பாத செயல் என்பதால் யாரையும் நிமிர்ந்து கூட பாராமல் வந்தவள் மாப்பிள்ளை அருகில் வந்ததும் ' மாப்பிள்ளைய நிமிர்ந்து பார்த்துக்கோ மா பின்ன என்ன எதும் குறை சொல்லக் கூடாது ' என்று தனது தந்தை சொல்லவும் அங்கே சிறு சிரிப்பொலி எழவும் நிமிர்ந்து பார்த்தவள் ' பிரேம் ' என்று முணுமுணுக்க அவன் நானே என்று தலையசைக்கவும் கண்களில் கண்ணீர் வர ஓடிச் சென்று தனது தந்தையை கட்டிக் கொண்டாள்.

மனம் விரும்பிய மன்னனுடன் திருமணமும் நிச்சயம் ஆனது.

மகளிடம் பேசிய மறுநாள் பிரேமை நேரில் சென்று பார்த்தார். தனது தங்கைக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை வீட்டில் தங்கை இருப்பதால் பெண் கொடுத்து பெண் எடுக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டனர். எனது தங்கைக்கும் மாப்பிள்ளை பிடித்துவிட்டதால் என்னால் எனது காதலை வீட்டில் சொல்ல முடியாமல் சூழ்நிலைக் கைதியாய் நிற்கின்றேன் என தனது நிலைமையை எடுத்துரைத்தான்.

கருணாகரன் லேசில் விட்டுவிடுபவரா என்ன தனது மகள் விரும்பிய பையனையே அவளுக்கு மணமுடிக்க எண்ணியவர் பிரேம் வீட்டிலும் அவர்களது சம்பந்தி வீட்டிலும் சென்று பேசினார். ஒருவழியாக அனைவரும் பச்சை கொடி ஆட்டிவிட்டனர்.

தனது மகளிற்கு தந்தையின் பரிசாய் அவள் விரும்பிய காதல் நாயகனையே மணமுடித்து வைத்தார் அவள் கேம்பஸ் இன்டர்வியூ வில் தேர்வானதற்கான கடிதத்தையும் கொடுத்தார். இருவரும் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்தினார்.

- நித்யஸ்ரீ

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.