ரகுநந்தன் ராஜமாணிக்கம் அந்த அறையில் முன்னும் பின்னும் உலாத்திக்கொண்டிருந்தான். அடிக்கடி தன் அலைப்பேசியை எடுத்து மணி என்ன என்பதையும் பார்த்துக்கொண்டான். மணி 11.30 தாண்ட இன்னும் இரண்டு நிமிடங்கள் இருந்தது. விரல் நகங்களை வாயில் வைத்து கடித்துக்கொண்டான்.


மணி 11.30 ஆனது. அவன் கண்கள் விரிந்தன. அறைக்கதவை தாழிட்டான். தன் அலைப்பேசியை எடுத்து அணைத்து வைத்தான். அவன் முன்னமே வாங்கி வைத்திருந்த பெரிய மெழுவர்த்திகளை எடுத்து ஒவ்வொன்றாய் கொளுத்தி ஒரு ஒற்றை வட்டத்தை உருவாக்கினான். அவன் முன்னால் ஒரு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடி அந்த நெருப்பின் ஒளியை வீரியமாக காட்டிக்கொண்டிருந்தது. அனைத்து மின் விளக்குகளையும் அணைத்தான். ஜன்னலும் தாழிடப்பட்டது. அந்த இருள் சூழ்ந்த இடத்தில் இப்பொழுது அந்த மெழுகுவர்த்தியின் வெளிச்சம் மட்டுமே இருந்தது.


அணைக்கப்பட்ட மின்விசிறியாளும், கொழுந்துவிட்டு எரியும் மெழுவர்த்தியின் உஷ்ணத்தாலும் அவனுக்கு முழுக்க வியர்த்து ஒழுகிக்கொண்டிருந்தது. ரகுவிற்கு ஆவியிடம் பேசவேண்டும் என்பது வெகுநாள் கனவு. அதைப்பற்றி பெரிதாக ஆராய்ச்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருப்பான். அனைவரும் ஓஜோ போர்டு பற்றி சொன்னபோதும் அவன் அதில் பெரிதாக நாட்டம் காட்டவில்லை. காரணம் – அவன் ஆவியிடம் பேசவேண்டும் என்று நினைத்தான். நேராக ஒரு மனிதரை போல. அதற்கு அவன் கண்டுபிடித்த முறை தான் இந்த கண்ணாடிகளும் மெழுகுவர்த்தியும்.


மெழுகுவர்த்தி நன்றாக எரிந்துக்கொண்டிருந்தது. அதன் ஓரத்தின் ஒழுகிய மெழுகை கையில் எடுத்து முன்னால் இருந்த கண்ணாடியில் பூசினான். பின் உப்பை எடுத்து கண்ணாடி முன்பும் மெழுகுவர்த்திகள் சுற்றியும் போட்டுக்கொண்டு நடுவில் அமர்ந்துக்கொண்டான். சிறிது நேரத்தில் கண்ணாடியின் மேலிருந்த மெழுகு நன்கு கடினமானது. இடைவெளியில் அவன் எந்த மாதரி ஆவியை அழைக்கவேண்டும் என்று எழுதினான்.


‘கொலை..’ அப்படியெனில் யாரேனும் கொலைசெய்யப்பட்ட ஆவி வரும். பின் ஒரு ஊசியால் தன் விரலில் குத்தி வரும் ரத்தத்தை அந்த கண்ணாடியில் தெளித்தான்.


‘ஜீவன் அல்லாமல் உயிர் பிரிய மரணமில்லாமல் ஆயுள் நீங்காமல் வஞ்சக சூழ்ச்சியாலோ, வெறுப்பாலோ கொலைசெய்யப்பட்ட பாவ ஆத்மாவே.. வா.. உன்னுள் இருக்கும் வருத்தங்களை என்னிடம் சொல்லி போக்கிக்கொள்ள வா. நாளை காலை வரை உனை விடுவித்திருக்கும் வகைச்செயல் இது. வா.. வெளியில் வா..’


அமைதியாக இருந்தான். மீண்டும் சொன்னான். இம்முறை இன்னும் சத்தம் அதிகமாக. காத்திருந்தான். எந்த மாற்றமும் இல்லை. திடீரென மெழுகுவர்த்தி அசைந்தன. காற்று இதமாக வீசியது. அவன் முன்னும் பின்னும் பார்த்தான்.


‘வந்துட்டீங்களா?’ மேலே பார்த்து கேட்டான். பதில் இல்லை. தூரமாக சுவர் ஏதோ தட்டப்படுவது போல இருந்தது. அருகில் சென்று பார்த்தான். ஒன்றுமில்லை.


‘இருக்கீங்களா..’ இரண்டு மூன்று முறை கேட்டான். பதில் இல்லை. இன்னும் சில முறை சொல்லி பார்த்தான். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. மெழுகுவர்த்திகளை அணைத்துவிட்டு ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு சுற்று முற்றும் பார்த்தான். எந்த மாற்றமும் இல்லை.


‘இன்னும் வேற எதனா கண்டுபுடிக்கணுமா.. சே..’ வருத்தமாக சொல்லிவிட்டு அமைதியாக சென்று படுத்துக்கொண்டான். புரண்டு புரண்டு கிடந்தான். அடுத்த சில நிமிடங்களில் தூங்கி போனான்.


மணி இரவு 3.30. அவன் உடல் குளுமை அடைந்தது. மெல்ல போர்வையை இழுத்தி தூக்கத்திலே போர்த்திக்கொண்டான். அமைதியாக இருந்த அந்த இடத்தில் சடசடவென ஏதோ சத்தம் எழுந்தது. ரகுவின் தூக்கம் மெல்ல கலைந்தது. அந்த சத்தம் இன்னும் அதிகமானது. அரைதூக்கத்தில் இருந்தவன் அந்த சத்தத்தால் எழுந்தான்.


என்ன சத்தம் என்று யோசித்துக்கொண்டே சத்தம் வரும் திசை நோக்கி பார்த்தான். அங்கே அவனது டைரியின் பக்கங்கள் பறந்துக்கொண்டிருந்தன.


மெல்ல நடந்து சென்று அந்த டைரியை எடுத்து பார்த்தான். அதில் சில எழுதியிருந்தன. கொஞ்சம் அலங்கோலமாக தான் இருந்தது. அவன் உற்று பார்த்தான்.


‘ஹலோ..’


’இருக்கேன்… இந்த பக்கம்..’


’கூப்பிட்டு எங்க தூங்க போற.. அடபோப்பா..’


வரிசையாக இப்படியானவை அதில் எழுதப்பட்டிருந்தன. அவனுக்கு வியர்க்க ஆரம்பித்தது. சுற்றி திரும்பி பார்த்தான்.


‘இருக்கீங்களா..?’ கேட்டான். பதில் எதுவும் இல்லை. டைரியை முன்னால் நீட்டிக்கொண்டு சிறிது நேரம் அமைதியாக இருந்தான். ஏதேனும் எழுத்துக்கள் வருகிறதா என்று பார்த்தான். வரவில்லை. சட்டென பறந்தது. மற்றொரு பக்கத்தில் ஏதோ எழுதியிருந்தது. அவன் பக்கங்களை திருப்பி பார்த்தான்.


‘நீ எழுந்திரிக்க போல தெரியல. என் கதைய தானே கேட்க ஆசைப்பட்ட. சொல்லுறேன்…’ என்று எழுதிவிட்டு கீழே இன்னும் எழுதப்பட்டிருந்தது. அவன் தொடர்ந்து படித்தான்.


‘என் பெயர் குழலி. எனக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும் தான். எனக்கு பேச வராது. நான் எல்லார்கிட்டயும் இப்படி தான் எழுதி எழுதி பேசுவேன். அதனாலயே எங்க அப்பா என்னைய படிக்க வச்சார். எனக்கு இப்படி இருக்குறதால நான் யார்கூடவும் சேரமாட்டேன். எப்பொழுதும் ஒதுங்கியே தான் இருப்பேன்.


எனக்கு அப்போ எங்க ஊருல இருக்குற ஒருத்தர ரொம்ப பிடிக்க ஆரம்பிச்சுது. ஊருக்கு ஒண்ணுனா ஓடி போய் நிப்பார். ஊருக்கு யாருக்கு என்ன வேணும்னாலும் முதல்ல அவர தான் கூப்பிடுவாங்க. அவர் பாக்குறதுக்கும் நல்ல அழகா இருப்பார். முதல்ல எல்லோருக்கும் அவர பிடிக்கிற போல தான் எனக்கும் பிடிச்சுச்சு. ஆனா.. காலபோக்கில அதுவே காதலாகிபோச்சு.


ஒருநாள்.. அவர்கிட்ட என்னோட காதல இதுபோல எழுதி காண்பிச்சேன். அவர் மறுத்துட்டார். என்னைய எப்போதும் அந்த எண்ணத்தோட பாத்தது இல்லனு அவர் சொல்லிட்டார். அதுக்கு பிறகு அவர் முகத்தை என்னால பாக்க முடியல. அப்பப்போ அவர் மட்டும் என்னைய பாத்தா சிரிப்பார்.


அவர் வெளியூருக்கு பொழப்பு தேடி போனார். நாள் கடந்து போச்சு. எனக்கு திருமணம் ஆச்சு. கனவுகளோட ஒரு வாழ்க்கை. என்னோட ஊனத்தையும் பொருட்படுத்தாத ஒரு கணவர்னு சந்தோசமா தான் ஆரம்பிச்சேன். ஆனா அந்த சந்தோசம் எனக்கு நீடிக்கல… என் கணவர் என்னைய விரும்பினதுவிட என் அப்பாவோட பணத்தை தான் அதிகமா விரும்பிருக்கார்னு எனக்கு அப்போ தான் தெரியவந்துச்சு. அத என் அப்பாகிட்ட சொல்லுற முன்னவே என் அப்பா இந்த உலகத்தை விட்டு போயிட்டார். அதுக்கு அப்பரம் என் கணவர் இன்னும் மோசமாகிட்டார். அடிக்கடி சண்டை, அடிக்கிறதுனு இப்படியே போயிட்டு இருந்துச்சு.


குழந்தை பிறந்துச்சு. ஆனாலும் அவர் கொடுமை மாறல. அப்போ தான் திரும்ப அவர பார்த்தேன். ஊருல நான் காதலிச்சவரு. என்னை பார்த்து வந்து பேசினார். வழக்கம்போல நான் எழுதி எழுதி பேசுனேன். ஏனோ என்னோட கஷ்டங்கள அவர்கிட்ட சொல்ல தோணுச்சு. சொன்னேன். அவர் ஆறுதலா பேசினார். அதுக்கு பிறகு நாங்க அடிக்கடி சந்திச்சுக்கிட்டோம். இம்முறை எனக்கு அவர் மேல காதல் இல்ல. ஆனா ஒரு பாசம். ஒரு நட்பு. அவரும் ரொம்ப அன்பாவாவே பேசினார். அவரோட குழந்தைய ஒருமுறை தூக்கிட்டு வந்தார் என பாக்குறப்போ. அவரோட ஆண்குழந்தைக்கு என்னோட பெண் குழந்தைய கல்யாணம் பண்ணிக்கொடுக்கணும்னு வெகுளித்தனமான ஆசையெல்லாம் எனக்கு வந்துச்சு. அவரோட மனைவி பத்தி சொன்னார். அவங்க நல்ல குணங்கள பத்தி சொன்னார்.


அவங்.. அவங்க.. அவ…’


என்று எழுதியிருந்த அந்த டைரியில் வேறு எதுவும் இல்லை. கீழே அழுத்தமாக கிறுக்கியிருந்தது. இன்னும் பக்கங்களை திருப்பி பார்த்தான். ஆனால் வேறு எதுவும் இல்லை.


‘வேற என்ன.. என்ன ஆச்சு? உங்கள யார் கொன்னது..’ ரகு இம்முறையும் மேலே பார்த்து கேட்டான்.


‘டப் டப் டப்..’ அவன் அறை கதவு தட்டப்பட்டது. அவன் சட்டென திடுக்கிட்டான். கதவருகில் சென்று திறக்க பார்த்தான். கதவு திறக்கவில்லை. இன்னும் இழுத்து பார்த்தான். தாழிட்டதை விலக்கிய பிறகும் இன்னும் அந்த கதவை திறக்க முடியவில்லை. கதவை தட்டினான். இன்னும் முயற்சித்தான். முடியவில்லை. பலமான இடித்தான். அவன் நெஞ்சம் படபடவென அடித்துக்கொண்டது.


சட்டென கீழே விழுந்தான். யாரோ தள்ளிவிட்டது போல இருந்தது அவனுக்கு. ‘ஆஆஆ..’ கத்த பார்த்தான். ஆனால் அவன் வாயில் இருந்து சத்தம் வரவில்லை. அவன் பேசுவது அவனுக்கு கூட கேட்கவில்லை. சுற்றி இருக்கும் சத்தம் எதுவும் கேட்காமல் காது பலமாக அடைத்துக்கொண்டது போல இருந்தது அவனுக்கு. காதை தட்டினான். இன்னும் உதறினான். கண்கள் மங்கலாயின. தேய்த்தான். தொண்டை வரண்டது. படபடவென சென்று டேபிளில் இருக்கும் தண்ணீரை எடுத்து மடக்மடக்கென்று குடித்தான். தண்ணீர் உள்ளே இறங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அதன் ஈரம் அவன் நாவையோ, தொண்டையையோ நனைக்கவில்லை. தொண்டையை இன்னும் பலமாக பலமாக தடவினான்.


ஓடிச்சென்று ஜன்னலை திறந்தான். ஜன்னலும் திறக்கமுடியவில்லை. தனது அலைப்பேசியை எடுத்தான். அலைப்பேசி தூர தூக்கி எரியப்பட்டது. சுக்குநூறாகி விழுந்தது.


அந்த டேபிளில் இருந்த டைரியில் ஒரு பேனா அழுத்தமாக தானாக கிறுக்கியது. ரகு அந்த டைரி பக்கத்தில் சென்றான்.


‘அமைதி..’ என்று பெரிய எழுத்துகளில் அலங்கோலமாக எழுதப்பட்டிருந்தது அது. திடீரென காற்று ஆக்ரோஷமாக வீசத்தொடங்கியது. எங்கிருந்து என்று தெரியவில்லை. படுக்கை எல்லாம் களைந்து தூரமாக தூரமாக தூக்கியெறியப்பட்டது. தண்ணீர் டம்ளர், புத்தகங்கள், டேபிள் லைட் என எல்லாம் அலங்கோலமாகின. ரகுவிற்கு ஒன்றும் புரியவில்லை. வாயில் இருந்து வார்த்தையும் வரவில்லை. தலையில் கைவைத்துக்கொண்டு அமைதியாக உட்கார்ந்தான்.


அடுத்த ஐந்து நிமிடத்தில் அவன் அறையில் மட்டும் வீசிய அந்த காற்று நின்றது. அவன் எழுந்தான். கதவுக்கு அருகில் சென்றான். கதவை மெல்ல திறந்து பார்த்தான். அது திறந்தது.


‘ஐயோ..’ கீழிருந்து ஒரு சத்தம். அவன் அந்த அறையைவிட்டு வேகவேகமாக ஓடிவந்தான். அவன் அப்பா அலறியிருந்தார். அவன் அம்மாவின் மேலே மின்விசிறி விழுந்துகிடந்தது. முகமெல்லாம் ரத்தமாக அவள் மயங்கி கிடந்தாள். அவர்கள் இருவரும் ஆம்புலஸ் அழைத்து, அவளை ஏற்றி சென்றார்கள். பலன் இல்லை. அவள் இறந்துவிட்டாள்.


ரகுவிற்கு ஆத்திரம் அடைத்தது. அந்த ஆவிதான் அம்மாவை கொன்றுவிட்டதாக அவன் நினைத்தான். அவள் உடல் அந்த வீட்டில் கிடத்தப்பட்டிருந்தது. ரகு அவனது அறைக்கு சென்றான். சுற்றி பார்த்தான். அந்த டேபிளில் இருந்த டைரியை பார்த்தான். காலை வந்தவுடன் அந்த ஆன்மா சென்றிருக்கும் இனி கோபம் கொள்ள யாரும் இல்லை என அவனுக்கு தெரிந்தது.


அந்த டைரி அருகில் சென்றான். மெல்ல புரட்டினான். அவன் படித்தது போக இன்னும் புதிதாக சிலது எழுதப்பட்டிருந்தது.


‘எங்கள் நட்பு எங்களுக்கு மட்டுமே தெரிந்தது. பார்த்த அவரின் மனைவி கண்களுக்கு அது தவறாக தான் தெரிந்தது. விளைவு. அவர் மனைவி என்னையும் நான் உலகமாக கருதிய என் பெண்ணையும் வஞ்சகமாய் என் வீட்டு சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றார். பழி என் கணவர் மேலே விழுந்தது. அவர் சிறைசென்று அங்கேயே இறந்தார். இத்தனைக்கும் காரணமான என் முதல் காதல் – என் இனிய நட்பு. சிரிப்பு தான் வருகிறது. சொல்ல மறந்து போனேன்.. அவர் பெயர் ராஜமாணிக்கம். உன் அப்பா.’


  • தம்பி கூர்மதியன்
tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.