நட்பதிகாரம்

கல்லூரி தனில்நான்கால் வைத்த போது

கண்வழியே என்நெஞ்சுள் புகுந்த வன்தான்

பல்லூழி காலத்துத் தொடர்பைப் போல

பழகியபோல் என்னுள்ளே ஒன்றிப் போனான்

எல்லோர்க்கும் கிடைக்காத அருமை நட்பாய்

எழுகதிராய் வளர்ந்ததவே நாளும் நாளும்

பல்லோரும் வியந்திடவே இரட்டை யர்போல்

பகலிரவு ஒன்றாக இருந்தோம் நாங்கள் !

பள்ளியிலே படிக்கின்ற காலம் தொட்டே

பாடல்கள் நானெழுதி வந்த போல

துள்ளிவரும் கவிநெஞ்சை அவனும் பெற்றுத்

துடிப்பான கவிதைகளை எழுதி வந்தான்

உள்ளத்துள் பொங்கிவரும் கவிதைக் கங்கே

உரியதொரு யாப்புதனைக் கற்றுக் கொண்டே

அள்ளித்தேன் பருகியபோல் தமிழைக் கற்றே

அடுத்தநிலை உயர்தற்கே பிரிந்தோம் நாங்கள் !

தமிழ்பயிற்றும் ஆசானாய்ச் செல்வ தந்குத்

தகுதிதனை நான்பெற்றேன் ! அவனோ செம்மை

தமிழ்கற்று நீதிதனை காப்ப தற்குத்

தகுதிபெற்று வழக்கறிஞர் தொழிலை ஏற்றான்

அமிழ்தான தமிழாசான் பணியை ஆற்ற

அவனிருந்த ஓசூரின் பள்ளி வந்தேன்

நிமிர்ந்திருக்கும் குன்றின்மேல் விளக்கு போல

நின்றிட்டோம் தமிழ்ப்பணியில் இருவர் சேர்ந்தே !

(1)

இலக்கியத்துப் பாலமாக ஓசூர் தன்னில்

இலங்கிட்டான் ! தும்பையெனும் கவிதை ஏட்டை

உலகமொழி தமிழுக்குப் பெருமை சேர்க்க

ஊரெல்லாம் நடமாட உலவ விட்டான்

பலமொழிகள் ஆதிக்கம் செய்யும் மண்ணில்

பசுந்தமிழின் ஆட்சிக்கு வித்தை ஊன்றி

நலமாக தமிழ்வளர்ச்சி மன்றம் தன்னை

நகரத்தில் தொடங்கெனக்குத் தலைமை தந்தான் !

கன்னடமும் களிதெலுங்கும் ஒலிக்கும் மண்ணில்

கற்கண்டு தமிழொலிக்கத் தமிழ கத்தின்

முன்வரிசை தமிழறிஞர் பல்லோர் தம்மை

முயன்றழைத்துத் தெருவெல்லாம் முழங்கச் செய்தான் !

என்முகத்தை முன்நிறுத்திப் புகழைச் சேர்த்தே

எல்லோரும் அறிவதற்குத் தும்பை ஏட்டை

பின்நின்று நடத்தியென்னை எழுத வைத்துப்

பீடுதனை நான்பெறவே துணையாய் நின்றான் !

கவியரங்கம் பட்டிமன்றம் எங்கென் றாலும்

கரம்கோர்த்தே எனையழைத்துச் செல்வான் முன்னே

குவிகின்ற பாராட்டை எனக்க ளித்துக்

குளிர்நிலவாய் நெஞ்சுவந்து மகிழ்வான் பார்த்து

புவிதன்னில் பலநாட்டு மேடை யேற்றிப்

புதுமைக்குள் மரபுதனை முழங்கச் செய்தே

அவிழ்இடுப்புத் துணிபிடிக்கும் கைகள் போன்றே

அருகிருந்தே என்வாழ்வை ஒளிரச் செய்தான் !

(2)

என்னுள்ளே இருந்திட்ட கவித்து வத்தை

எழுப்பியதை அனைவருக்கும் அறிய வைத்தே

இன்றிங்கே கருமலையாம் தமிழாழ னாக

ஈட்டிட்ட பெருமைக்கு வித்தாய் நின்றான்

பன்முகத்துத் திறன்களிலே திகழ்ந்த போதும்

பணத்தினிலே செல்வாக்கில் கொழித்த போதும்

முன்கழுத்தை நீட்டாமல் நண்பன் என்னை

முன்நிறுத்தி மகிழ்ந்திட்ட பண்பின் முத்து !

வழக்கிறிஞர் தொழிலினிலே ஈட்டி வந்த

வருவாயைத் தமிழுக்கே நாளும் ஈந்தான்

பழகுகின்ற நட்பிற்குப் பிசிராந் தையாம்

பாவலன்போல் இந்நாளில் திகழ்ந்த தூயன்

குழந்தையதன் மனம்கொண்டோன் கள்ள மில்லா

குணம்படைத்தோன் தேனிராபாண் டியனாம் வானின்

கிழக்குதிக்கும் கதிர்அன்னோன் மறைந்த போதும்

கீர்த்திபெற்று வாழ்கின்றான் என்பா போன்றே !

(3)

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.