அன்று ஒரு மாலைப் பொழுதில், குமணனும், மதிவாணனும் கடற்கரையில் சிறு மணல் வீடு கட்டி உல்லாசமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் இரண்டாமாண்டு பொறியியல் கல்லூரி பயிலும் மாணவர்கள். எங்கும் ஒரே கூச்சலும் கும்மாளமும் நிறைந்து காணப்பட்டன. பறவைகள் தன் இன்பச் சிறகடித்து இன்னிசைப் பாடிக் கொண்டிருந்தன. எங்கும் குழுமியிருந்த சிறு வியாபாரிகள் கூட்டமோ, ஓய்வின்றி இராப்பொழுது தன் குடும்பத்தாரின் பசியினைப் போக்க வேண்டி, மும்மரமாக ஓடித்திரிந்து கூவிக் கூவி விற்பனை செய்துகொண்டிருந்தன.

பூத்துக் குலுங்கும் நறுமண மலரென வெள்ளி வீதியில் முல்லை அரும்பு போல் மெல்ல மெல்ல விண்மீன்கள் தத்தித் தத்தி வந்து எட்டிப் பார்த்துப் பட்டுக் கண் சிமிட்டக் காத்துக் கொண்டிருந்தன. கடலின் வெள்ளி அலைகளோ மிகவும் ஒய்யாரமாய், தன்னைக் காண்பவரின் கண்களும் கருத்தும் ஒருசேர, தாவிப்பாய்ந்து வருவோர் போவோரின் பாதங்களை வருடி அனைவருக்கும் புத்துணர்ச்சியையும், புதுத் தெம்பையும் இடையறாமல் நல்கிக் கொண்டிருந்தது.

எங்கும் கடற்கரை ஆடல், பாடல், கேளிக்கைகள். வசந்தமென வீசும் மெல்லிய பூங்காற்றோ அனைவரையும் ஆரத்தழுவி சொந்தம் கொண்டாடியது. கடலின் வெள்ளத்தோடு போட்டியிட்டு இன்பவெள்ளமும் கரைபுரண்டோடியது.

அதோ இரவு வரக்காத்திருக்கின்றது. அதுகாறும் குதூகலித்த மக்கள்வெள்ளம், சிறுகச் சிறுக கலைந்து செல்ல எத்தனித்தன. இரவே இங்கு உன் வரவை யாரும் விரும்பவில்லை. காலை முதல் மாலை வரை பணியாற்றிக் களைத்துத் திரிந்த எங்களுக்கு இக்கடற்கரை ஒரு வரப்பிரசாதம். இந்த இடம் தான் எங்கள் அனைவருக்கும் ஒரு புண்ணியத் தலம். ஏன் தெரியுமா? இங்கு தான் ஜாதி. மத, பேதமின்றி அனைவரும் திரண்டிருக்கின்றனர். இங்கு மகிழ்ச்சியைத் தவிர வேரொன்றையும் காண்பது அரிது. அதற்குள்ளாக நீ வந்து மிரட்டுகின்றாயே! இன்று ஒருநாளாவது சற்றுத் தாமதமாக வந்தால்தானென்ன? என்று அனைவருமே இரவின் வருகையின் மீது சற்றே கோபித்துக் கொள்ளத்தான் செய்தனர்.

கடற்கரைக் காவலாளிகள் அனைவரையும் வெளியேற்றத் தயாராகிக் கொண்டிருந்தனர். அச்சமயத்தில் தான் கண்ணிமைக்கும் நேரத்தில் அச்சம்பவம் நடந்தேறியது. ஆம். எங்கிருந்தோ சீறிப் பாய்ந்து வந்த வெள்ளலை ஒன்று குமணனை தன்னுள்ளே வாரிச்சென்றது. சித்தபிரம்மையில் மூழ்கியிருந்த மதிவாணனை அங்குக் குழுமியிருந்தோர் எத்தனையோ முயன்றும், அவனை தன் பழைய நிலைக்குக் கொண்டுவர இயலவில்லை. ஏனெனில் அவன் தன் நண்பனோடு மனத்திரையில் உரையாடிக் கொண்டிருந்தான்.

என் அன்பு நண்பா! குமணா! எங்கே சென்றாயடா? இதோ, இரண்டாம் வருடமும் ஓடிவிட்டது. கணவனைப் பிரிந்து கைகுழந்தையுடன் நான் பட்ட இன்னலெல்லாம் பஞ்சாய்ப் பறக்கப் போகின்றது. பைந்தமிழ்ப் புலமை படைத்தும், பல பட்டங்கள் பெற்றும், தோற்றப் பொலிவிற்கு முதன்மைத் தந்து திறமையைப் பற்றி சிறுதும் எண்ணாமல் எனக்கு உரிய வேலைத் தர மறுத்த இந்த சமுதயத்தில் ஏதேதோ பணியாற்றி உன்னை எப்படியெல்லாம் வளர்க்க ஆசைப் பட்டு, இதோ இன்று உன்னை நீ ஆசைப் பட்டவாறே பொறியியல் கல்லூரியிலும் பயிலவைத்துவிட்டு விடியலுக்காக் காத்திருக்கிறேனடா மகனே! என்று கண்ணிர் மல்கக் காத்திருக்கும் உன் அன்னைக்கு என்னடா உரைப்பேன்.

குமணா! குமணா! விளையாடாதே! வந்துவிடு! விரைந்து வீட்டிற்குச் சென்றுவிடலாம் என்று மனதினுள் மௌனமாகக் கதறியழுத மதிவாணனை உலுக்கி உலுக்கி ஊரார் எழுப்பினர் கடற்கரை காவலர் உட்பட.

குமணா! குமணா! என்று திரண்டோடும் கண்ணீருடன் கலங்கிய மதிவாணனை அணைத்துச் சென்றனர் அங்கு குழுமியிருந்தோர்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.