அவர் உயிர் பிரிந்தது. என் வாழ்கைப் பாடங்களை கற்று கொடுத்தவர் இப்போது உயிரோடு இல்லை. எனக்கு ஆசானாக இருந்தவர் இப்பொது உயிரோடு இல்லை. இந்த உலகத்தில் நான் மிகவும் நேசித்த மனிதர் இப்போது உயிரோடு இல்லை. பிற மனிதர்களின் நெஞ்சத்தை அவர் காயப்படுத்தியது இல்லை, அதன் பரிசாக இறைவன் அவரது இதயத்தில் காயத்தை உண்டாக்கினான். இது மூன்றாவது மற்றும் கடைசி முறை (ஹார்ட் அட்டாக்) என்றார்கள். எமனே அவரிடம் இரண்டு முறை தோற்று இருக்கிறான். அவர் அத்தகைய இரும்பு மனிதர் . நேற்று வரை அவருக்கு 55 வயது, இருப்பினும் அவரது முடி கருமையாகவே இருந்தது. அவரது தோல் சுருங்க வில்லை, உருண்ட கண்களின் பார்வை மங்க வில்லை , மற்றும் அவரது இதயத்தை தவிர எல்லா உறுப்புகளும் நன்றாகவே இருந்தன. இன்று அவரது புனித உடலை சுற்றிப் பலர் கூடி இருப்பார்கள். சிலர் அழுவார்கள், சிலர் அழுவதை போல் நடிப்பார்கள், மற்றும் சிலர் வேடிக்கைப் பார்பார்கள். ஆனால் இப்போது அவரைப் பிரிந்து நான் கஷ்டப்படுவதுப் போல் அவரும் என்னை எதிர்ப்பார்த்து கொண்டிருப்பார். ஏன்னென்றால் அவர் எனது நல்ல நண்பர். சில வாரங்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தபோது கூட , அவர் நான் மிக விரைவில் குணமாகி விடுவேன் பின்பு நாம் இரண்டுபேரும் விடுமுறை நாட்களில் மீன் பிடிக்க செல்லலாம் என்றுச் சொன்னப்படி சிரித்தார். இன்னும் அந்த சிரித்த முகம் என் நினைவை விட்டு போகவில்லை. இப்போதும் என்னருகில் அவரை உணர்கிறேன்.

திடீரென ஒரு சப்தம் , நினைவுகளில் இருந்து நிஜத்துக்கு வந்தேன். ஒரு பழைய ராணுவ வாகனத்தில் கையில் துப்பாக்கியும் , நெஞ்சில் குண்டுபுகா கவசமும் இருக்க நான் சக ராணுவ வீரர்களோடு பக்கத்து ஊருக்கு சென்றுக்கொண்டிருகிறேன். அந்த ஊரில் இருப்பிரிவினருக்கு இடையே ஜாதி சண்டை ஏற்ப்பட்டுள்ளது. ஒரு ஜாதியைச் சார்ந்த மிக முக்கியமான நபர் கொல்லப்பட்டார். இதுவே அந்த கலவரத்துக்கு காரணம். அரசாங்கம் அந்த ஊரில் 144 தடை உத்தரவுப் பிறப்பித்தது. ஆதலால் அங்கே சட்ட ஒழுங்கைப் பாதுக்காக்க நாங்கள் செல்கிறோம். நேற்று அவர் இறந்த செய்தியைக் கேட்டதும் நான் ஊருக்கு செல்ல தயாரானேன். ஆனால் இந்த கலவரச் செய்தி அறிந்ததும் என் கடமையை முதலில் செய்ய முற்ப்பட்டேன். ஏனெனில் “நான் என் கடமையை தவறாது செய்வேன்” என உறுதிமொழி செய்துள்ளேன். ஆனால் எனக்காக இரண்டு நாள் காத்துருப்பார்கள். நான் போன பின்பு தான் அவருக்கு இறுதிச்சடங்கு செய்வார்கள். ஏனெனில் இறந்தது என் அப்பா. என் பெயர் சுபாஷ்.

ஜன்னலின் வழி வெளியேப் பர்ர்துக்கொண்டே வந்தேன். அந்த ஊரின் சாலைகள் அமைதியாக இருந்தது. ஆனால் அந்த அமைதியில் சாந்தம் இல்லை. மாறாக கோரமாக இருந்தது. வீசும் காற்றில் ரத்த வாடை வீசியது. வீடுகள் எரிந்து, வயல்கள் நாசம் செய்து, மரங்கள் சரிந்து, விலங்குகள் மடிந்து ஊரே சுடுகாடாய் காட்சியளித்தது. அதைப் பார்க்க வெறுத்து ஜன்னலைச் சாத்தினேன். என் அருகே இருந்தவர் நான் அவர் ரசித்துக்கொண்டிருந்த காட்சியை அனைத்ததுப் போல் என்னைப் பார்த்தார். கண்கள் மூடி மீண்டும் என் நினைவுகளை எழுப்பினேன்.

நான் இந்த வேலையில் சேர்வதற்கு முக்கிய காரணமே என் அப்பா தான். கிடைத்ததும் என்னை விட அவர் தான் மிகவும் சந்தோஷப்பட்டார். சிறு வயதில் இருந்தே ராணுவ வேலையின் பெருமைகளை எடுத்து கூறுவார். நாட்டுக்காக கஷ்டப்படுவது தியாகம் என்பார். அதற்கு பாக்கியம் செய்திருக்கனும் என்றும் அடிக்கடி சொல்வார். இன்னும் எனக்கு நினைவு இருக்கிறது , எனக்கு வேலை கிடைத்த செய்தி வந்ததும் என்னைக் பக்கத்தில் இருக்கும் மீன் பிடிக்கும் தளத்திற்குக் கூட்டிச்சென்றார். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே மீன் பிடிக்கச் செல்வார். தூண்டிலைப் போட்டு ஒரு மீனைப்பிடித்தார். பின்பு என்னைப்பர்த்து இந்த மீனைப் போல தான் நீயும். உன்னை இந்த அரசாங்கம் தூண்டில் போட்டு பிடித்துள்ளது. இந்த கடலில் ஆயிரக்கணக்கான மீன்கள் இருந்தும் இந்த மீனுக்கு அதிர்ஷ்டம் கிடைத்ததுப் போல் உனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது. எனக்கு வியப்பாக இருந்தது, நான் “அது எப்படி அதிர்ஷ்டம் ஆகும், அந்த மீன் துடிப்பதைப் பாருங்கள் இன்னும் சில நொடிகளில் அது செத்து விடும்” என்றேன். அவர் சிரித்தபடியே “அந்த மீன் மனிதர்களுக்காக தன்னை தியாகம் செய்துள்ளது. இப்போ அது வலியால் துடித்தாலும் பிறகு அது நல்ல உணவாக மாறும். இப்போ துடிப்பதை எண்ணி அதை மீண்டும் கடலுக்குள் விட்டால் யாருக்கும் பயனின்றி ஒரு நாள் இறக்கும். அதன் பிறப்பின் பயன் அடையாது. அதைப் போல நீயும் பிறருக்கு பயனாக வாழ வேண்டும். நாட்டுக்காக உன்னை தியாகம் செய், அது உன் சந்ததிக்கே பெருமை சேர்க்கும். எல்லாருக்கும் இந்த சந்தர்ப்பம் அமையாது” என்று அறிவுரைச் செய்தார். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அவருடன் கழித்த அருமையான தருணம் அது. அதன் படியே நான் இன்று வரை பிறர்க்கு உதவியாகவே வாழ்ந்து வருகிறேன்.

மீண்டும் நிஜத்திற்கு திரும்பினேன். வண்டி ஒரு இடத்தில் நின்றது. எல்லோரும் வருசையாக இறங்கி அணிவகுத்து நின்றோம். அந்த இடத்தில் ஏற்கனவே கூடாரங்கள் அமைத்து வீரர்கள் தங்கி இருந்தனர். மேல் அதிகாரி ஒருவர் கூடாரத்தில் இருந்து வெளியே வந்தார். ஓங்கிய குரலில் பேசத் தொடங்கினார். “உங்கள் அனைவரையும் இங்கே வரவேற்கிறேன். இங்கே உள்ள சூழல் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது இப்போ இன்னும் மோசமாக மாறி இருக்கிறது. இறந்தவரின் இறுதிச்சடங்கை சீர்குலைக்க சிலர் சதி வேலை செய்யலாம். அப்படி ஏற்படாமல் நாம் பார்த்துக்கொள்ளவேண்டும். திடிரென அவரது இறுதிச்சடங்கை 5 நாள் தள்ளி வைத்துள்ளார்கள். ஆதலால் 5 நாட்கள் நீங்கள் இங்கே தான் தங்க வேண்டும். உங்களுக்கான கூடாரங்களை தேர்ந்தேடுத்து களைப்பாருங்கள்” என்று கூறி விடைப்பெற்றார். எல்லாரும் கூடாரங்களை நோக்கி நகர்ந்தனர். என்னால் நகர முடியவில்லை. அவர் சொன்ன நாள் கணக்கைக் கேட்டு உறைந்துப் போய் நின்றேன். என் அப்பாவின் இறுதிச்சடங்கை நடத்த நான் இன்னும் இரண்டு நாட்களில் போக வேண்டும். ஆனால் இங்கே இப்போ நான் 5 நாட்கள் இருக்க வேண்டி உள்ளது. எனக்காக 5 நாட்கள் என் அப்பாவின் உடலை காக்க வைப்பது நல்லதும் இல்லை. மதில் மேல் பூனைப் போல் ஆனேன். ஆனால் நான் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்.

என் மேல் அதிகாரியின் அறைக்குச் சென்றேன். தயங்கி தயங்கி அவரை நோக்கி நகர்ந்தேன். “சார், வீட்டுக்கு ஒரு போன் செய்யனும், கொஞ்சம் அவசரம் அனுமதி கிடைக்குமா?” என்றேன்.

“ம்ம்ம்” என்றார்.

என் வீட்டு எண்ணுக்கு அழைத்தேன். சில ரிங்குக்கு பிறகு என் தங்கை அழைப்பை எடுத்தால்.

“ஹலோ, நான் சுபாஷ் பேசுறேன்” என்றேன்.

“அண்ணே!!!” என்று அழத்தொடங்கினாள்.

“அங்க எல்லாம் எப்படி போகுது ?” எனக் கேட்டேன்.

“இங்க ஒன்னும் பிரச்சன இல்ல .நீ எப்போ வர?” என்றால் அழுதபடியே.

“நா இப்போ வர முடியாது, இன்னும் 5 நாள் ஆகும். அப்பாவோட இறுதிச்சடங்க எனக்கு பதிலா நீ தான் நடத்தனும்” என்று கூறியப்படியே அதிகாரியின் மேஜையில் இருந்த தண்ணி டம்ளர் –ஐ நோக்கி சைகையால் குடிக்க அனுமதிக் கேட்டேன்.

அந்த அதிகாரி சம்மதிக்க, தடுமாறிய நான் படப்பட என தண்ணீரைக் குடித்தேன். என் கண்கள் ஓரம் கண்ணீர் வடிவதை அந்த அதிகாரி கவனித்தார்.

“ஹலோ? ஹலோ? அண்ணே?” என தங்கை குரல் போனில் ஒலித்தது.

“எல்லா நல்லப் படியா நடக்கட்டும். நா சீக்கிரம் வரேன்” என்று கூறி போனை கட் செய்தேன். கண்ணீரை துடைத்துக் கொண்டு , அதிகாரிக்கு நன்றி சொல்லிவிட்டு நகர ஆரம்பித்தேன்.

“உன் அப்பா இறந்து விட்டாரா?” என அதிகாரிக் சந்தேகத்தோடு கேட்டார்.

“ஆமா சார்.” என பதிலளித்தேன்.

“நா உனக்கு அனுமதி வாங்கி தரேன். நீ உடனே ஊருக்கு புறப்படு” என்றார்.

“வேணா சார் .நா என் வேல முடிஞ்சதும் போய்க்கிறேன்.” என்றேன்.

“நீ போகாம உங்க அப்பா ஆத்மா எப்படி சாந்தி அடையும்? உங்க அப்பா சந்தோசமா சொர்கலோகம் போக வேண்டாமா? ஒவ்வொரு மகனுக்கும் இது தலையாயக் கடமைப்பா” என எடுத்துக்கூறினார்.

“எங்க அப்பா மனசு நா இங்க இருந்தாதான் சந்தோசப்படும் சார். ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாட்ட காப்பாத்துறதுதான் முதலாயக் கடமைன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வாரு. நன்றி சார்” என்றேன் சிரித்தபடியே.

அந்த அதிகாரி என்னை வியப்பாக பார்த்தார். ஆனால் நான் சரியான முடிவை தான் எடுத்தேன் என எனக்கு தெரிந்தது. என் கூடாரத்தை நோக்கி நடந்தேன். என் பையில் இருந்து அப்பாவின் புகைப்படம் ஒன்றை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நான் அங்கே இல்லை எனினும், என் நினைவுகள் என் தந்தை இடமே இருந்தது. அங்கே அவருக்கு நடக்கும் சடங்குகளை நினைத்துப் பார்த்தேன். அந்த புகைப்படத்தை நெஞ்சில் அனைத்தப்படியே கண்கள் மூடி சாய்ந்தேன். நினைவுகள் துளிர்ந்தன. என் அப்பாவுடன் கழித்த அந்த சந்தோஷமான நாட்களை நினைத்துப் பார்த்தேன். புன்னகைத்தேன்.

தீடிரென சுபாஷ் கண்விழித்தான். அவன் இப்போது அவனது ஊரில் உள்ள மீன்பிடித்தளத்தில் நின்றுக்கொண்டிருந்தான். தூரத்தில் யாரோ அவனை நோக்கி கையசைப்பதை கவனித்தான். அவரை நோக்கி நடந்தான். சிறிது தூரம் சென்றதும் அது தன் அப்பா என்பதை உணர்ந்தான். அவர் அவனை மீன் பிடிக்க அழைத்தார். அவர் மிகவும் இளமையாக இருந்தார். சந்தோஷத்தில் “அப்பா” என்று அழைத்தப்படியே ஓடினான். அவனது நினையுலகில் அவன் அப்பா மீண்டும் பிறந்தார். இருவரும் மீண்டும் வாழத்தொடங்கினார்கள்.

“எல்லா உயிரினங்களுக்கும் மரணம் நிச்சயம். ஆனால், அது உடலுக்கு மட்டுமே. அவர்களது நினைவுகள் வாழ்ந்துக் கொண்டே இருக்கும்”.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.