சிங்கப்பூர்

காலை 10:30

ஆனந்த் என்று எனைத் தெரிந்தவர் அழைப்பர். நான் ஒரு பெரிய கம்பெனியில் கன்செல்டண்டாக வேலை செய்கிறேன். நாங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் தொலைப்பேசி நிறுவனங்களுக்காக ஒரு பெரிய அப்ளிகேஷனை உருவாக்கி விற்று நிர்வகித்து, அதில் மாற்றங்கள் தேவைப்படும்பொழுது, கஸ்டமரோடு இணைந்து வேலை செய்து அவர்கள் விருப்பப்படி அப்ளிகேஷனை மாற்றிக் கொடுத்து ... உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்கும். நாமெல்லாரும் இதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம். என் பணியிடம் இந்தியாவில் என்றாலும், மாதத்திற்கு 10 நாள் நான் இந்தியாவில் இருந்தால் அதிகம். உலகம் முழுதும் உள்ள எங்கள் வாடிக்கையாளர் கட்கு ஏதாவது தேவை இருந்துகொண்டேதான் இருக்கும், ஏதாவது மாற்றம் விரிவு தேவைப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். அதற்கு எங்கள் உதவியை நாடுவார்கள்.

இதோ இப்பொழுது நான் சிங்கப்பூரில் சிங்டெல் நிறுவனத்திற்காக அவர்களுக்கு உதவ ஒருவாரமாய் இங்கே இருக்கிறேன். இதற்கடுத்து எங்கே செல்லவேண்டியிருக்கும் என்பது இப்பொழுது எனக்குத் தெரியாது. வருமானம் என்று பார்த்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டுதான் கொட்டுகிறது. போகும்வரை போகட்டும் என்று, வாழ்க்கை அது என்னை இட்டுச் செல்லும் வழியில் செல்கிறேன்.

ஒருநாள் சிங்டெல் அலுவலகத்தில் வேலையில் இருந்தேன். என் கைப்பேசி மெல்லச் சிணுங்கி என் கவனத்தைத் தன்பக்கம் இழுத்தது. வாட்சப் பில் அழைத்தது கல்லூரி நண்பன், அமெரிக்காவின் அழகன் என்று தன்னை நினைத்துக் கொள்ளும் /கொல்லும் கார்த்தி.

கைப்பேசியை உயிர்ப்பித்து 'சொல்லு நண்பா' என்றேன்.

'மாப்ள எங்கே இருக்கே ?'

'ம்ம்ம் … கொட்டாப்பட்டி பக்கத்துல ஒரு குக்கிராமத்துல'

'கொட்டாப்பட்டியே குக்கிராமம் தானே, அதுக்குப்பக்கத்துல குக்கிராமமா ?'

'எப்டி நண்பா இவ்ளோ புத்திசாலியா இருக்கே, சான்சே இல்லே' கார்த்திக்கு கேட்கும்படி கை தட்டினேன்.

'மாப்ள ஓட்டாதே மாப்ள, எனக்குத்தெரியும், சிங்கப்பூரா ?'

'வாவ்'

'இல்லியா ? ம்ம்ம் … மலேசியா ? ஹாங்காங் ?'

'சிங்கப்பூர்ல தாண்டா இருக்கே , சொல்லு எப்படியிருக்கே ?'

'எப்டி கண்டுபிடிச்சே பாத்தியா ?'

'மயி... சிங்கப்பூர் போறேன்னு க்ரூப்ல போட்டுருந்தே, நீதான் பசங்க என்ன எழுதியிருந்தாலும் கண்டுகிடமாட்டியே, ஒன்னப்பத்தித் தெரியாதா மாப்ள'

'சரி மாப்ள, மேட்டருக்கு வரேன், ரெண்டு வருசமா ரீ-யூனியன் வைக்க முடியலே, இந்த ஆகஸ்ட்ல நியூஜெர்ஸில மீட் பண்ணலாம்னு ஒரு ஐடியா, எப்பவும் போல கஸ்டமர் விசிட் ன்னு போட்டுகிட்டு அங்கே வந்துடறியா மாப்ள?'

'வரேண்டா, ஐம் இன், கவுண்ட் மீ'

'மாப்ள வெங்கட் அங்கேதானே இருக்கா ? பார்த்தாயா ?'

'அவ ரோச்சி ல இருக்கான்டா, பக்கத்து பில்டிங், நேத்துகூட லன்ச் ல மீட் பண்ணோம்'

'அவன்கிட்ட அப்புறம் பேசுறே, நீ அவனை நியூஜெர்ஸி வரச்சொல்லி கூப்டு'

'ஸ்பான்ஸர் கேட்பான், ஓகே வா உனக்கு ?'

'ஓகே, அவன் இல்லாமயே ரீ-யூனியன் வச்சிப்போ, என்ன சொல்றே?'

'நாயே, வை ஃபோனை'

அழைப்பைத் துண்டித்தேன். நியூஜெர்ஸி போனால் என்ன என்று தோன்றியது. இன்னும் இரண்டு மாதம் இருக்கிறது ரீ-யூனியனுக்கு, சிங்-டெல் வேலை இந்த வாரக் கடைசியில் முடிந்துவிடும். நியூஜெர்ஸியில் பிசின் டெலிகாம் எங்கள் வாடிக்கையாளர் தான். ஒரு வருடத்திற்கு முன் சென்றிருக்கிறேன். அந்த கம்பெனியின் பெரிய தலைக்கு ஆகஸ்டில் வரப்போவதாகவும், ஏதாவது சேவை தேவைப்படுமா ? என்றும் கேட்டு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு, என் வேலையைத் தொடர்ந்தேன்.

கஸ்டமர் ஸ்பான்சர் செய்தாலும் சரி, இல்லையென்றாலும் இரண்டு பேருக்கு செலவு செய்து போய்வர எனக்கொன்றும் பணம் பிரச்சனையில்லை. செலவழிக்கத்தானே சம்பாதிப்பது என்பது என் எண்ணம். அதுசரி இரண்டு பேரா என்று முழிக்கிறீர்களா ? ஆம். அபிராமியையும் அழைத்துச்செல்வோம் என்ற எண்ணம் என்னுள் உதித்தது. இந்த சிங்கப்பூர் பயணத்தின்போதே அவளையும் அழைத்துவர எண்ணியிருந்தேன். கடைசி சமயத்தில் எப்படியோ முடியாது போய்விட்டது. நியூஜெர்ஸி பயணத்திற்கு அவளையும் இழுத்துக்கொண்டு சென்றுவிடவேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன். அபிராமியா? அதுயார் என்று நீங்கள் குழம்புமுன் சொல்லிவிடுகிறேன்.

***

அபிராமி இப்படித்தான் இருப்பாள் என்று ஒரு ஒப்பீட்டுக்குச் சொல்கிறேன், 'தம்பி' படத்தில் 'சும்மா கெடந்த சிட்டுக்குருவிக்கு' என்று ஒரு பாடல் வரும், அதில் மிக அழகாக, பச்சை மிளகாய் போல துருதுருவென்று, தாவணியில் பூஜா ஆடியிருப்பார், பார்த்திருப்பீர்கள், இல்லையென்றால் ஒருமுறை யூடியூபில் பார்க்கவும்; அபிராமியும் அந்தப் பூஜா மாதிரிதான். இந்த ஒரு ஒப்பீட்டிற்காகவே நாங்கள் அந்தப்படத்தை, தியேட்டரில், 3 தடவை பார்த்தோம்.

சரி, கதைக்கு வருவோம், அபிராமியைப்பற்றி எண்ணிக்கொண்டிருக்கும்போதே, என்னுள் ஒரு ... ஒரு... ஆனந்தம், பரவசம், பரபரப்பு, உற்சாகம்; அவளே ஒரு கவிதை, அவளைப் பற்றி ஒரு கவிதை.

அபிராமி.
எனக்கு மிகவும் நெருக்கமானவள் ;
நான் என்ன சொன்னாலும் சம்மதிப்பாள்
துணிவோடு முடிவெடுப்பாள்
பரதம் ஆடுவாள்
மனசு மயங்க மெல்லப் பாடுவாள்
என் நெஞ்சின் இறுக்கம்
அவளைக் கண்டால் இறங்கும்
பார்வையில் தெய்வீகம்
அதைப் பார்த்தாலே என்னுள் ஒரு பரவசம்
சித்தம் சாந்தம்
நித்தம் ஆனந்தம்
இதுபோதும், வேறென்ன வேணும் ?


அபிராமி எங்களோடு கல்லூரியில் பயின்றவள், சரியாய்ச் சொல்லவேண்டுமென்றால், நான் அபிராமியோடு, இன் ஃபாக்ட் அபிராமியிடம் தான் பயின்றேன், மிகவும் கூர்மையானவள், அறிவாளி, உடனே புரிந்துகொண்டு புரியும்படி சொல்லியும் தருவாள். கமல் 'அபிராமி அபிராமி' என்று புலம்பி பைத்தியம் போல் ஆனவர், நான் ஆகாதவன், அவ்வளவே வித்தியாசம்; மற்றபடி அபிராமி தான் எனக்கு எல்லாமே; சென்னையில் வேலையிலிருக்கிறாள். நாங்கள் ஒருவரை ஒருவர் காதலிக்கிறோம், ஏனோ அபிராமியின் வீட்டில் என்னவோ ஒரு தயக்கம், அபிராமி வேறுயாரையும் கல்யாணம் செய்துகொள்வதாய் இல்லை என்று அவள் வீட்டில் சொல்லிவிட்டாள். காலம் கனியும்வரை காத்திருக்க முடிவெடுத்துவிட்டோம்.

இதோ இன்று, நியூஜெர்ஸியில் நடக்கும் ரீ-யூனியன் பற்றி அபிராமியிடம் பேச எண்ணி, 'பேசலாமா ?' என்று ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் 'போகப்போகிறாயா ?' என்று பதில் வந்தது. நான் எதைப்பற்றிப் பேசப்போகிறேன் என்று அவளுக்குத் தெரிந்துவிட்டது. சிரித்துக்கொண்டே தொலைப்பேசியில் அவளைத்தொடர்பு கொண்டேன்.

'வரியா?' என்று கேட்டேன்.

'எங்கே சிங்கப்பூருக்கா ? வரட்டா ?' கொஞ்சு மொழியில் கேட்டாள்.

'நியூஜெர்ஸி, ரீ-யூனியன் க்கு, போவோமா ?'

'இல்லேடா, வீட்டுல கேட்கணும், தனியா எப்படி அவ்ளோ தூரம் போவேன்னு கேட்பாங்க, வேணா, நீ போயிட்டுவா, நான் வரலை'

'ஆபிஸ்லேர்ந்து போகச்சொல்றாங்கன்னு சொல்லு, இல்லே ஒருவாரம் தில்லிக்கு போகணும்னு சொல்லு'

'ஆசையாத்தான் இருக்கு, அவசியமான்னுதான் யோசிக்கறேன்'

'என்மேல நம்பிக்கை இருக்குல்ல?'

'சீ, நீ எங்கே கூப்பிட்டாலும் வரத் தயாரா இருக்கே'

'கண்டிப்பா ?'

'கண்ணா, எனக்கு உன்னைப் பிடிக்கும், அதனால நீ என்ன சொன்னாலும், என்ன செய்தாலும் எனக்குப் பிடிக்கும்'

'அருமையான டயலாக்'

'உன்னோட ஸ்டேடஸ் லேர்ந்து சுட்டது'

'வாவ், சரி பாஸ்போர்ட் ரெடியா வச்சிக்கோ, விசாவுக்கு ஏற்பாடு செய்கிறேன்'

'உனக்கு சிங்கப்பூர் வேலை எப்போ முடியுது ?'

'இந்தவாரம் முடிஞ்சிடும், ஞாயிறு சென்னைக்கு வந்திடுவேன், திங்கட்கிழமை மீட் பண்ணுவோம், சரியா ?'

'பை'

'ஒரு ...'

பச் பச் என்று மூன்று முத்தம் தந்துவிட்டுப் ஃபோனை வைத்தாள். 'புத்திச்சாலி' என்று சிரித்துக்கொண்டே போனை வைத்தேன்.

***
அமெரிக்கன் விசாவிற்கு சென்னையில் ஆதரைஸ்ட் ஏஜென்ட் யாரைப் பிடிக்கலாம் என்று யோசித்தேன். எங்கள் அலுவகத்திலேயே இருப்பவர் மேல் எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை, அவர் பலசமயத்தில் கைவிட்டுவிடுவார் என்று பலபேர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எதற்கு ரிஸ்க் எடுக்கவேண்டும் என்று தோன்றியது. சரி வெங்கட்டை மதிய உணவு சமயத்தில் சந்தித்து அவனுக்குத் தெரிந்த யாரேனும் இருக்கிறார்களா என்று கேட்கத் தீர்மானித்து, அவன் வருகைக்காகக் காத்திருந்தேன்.

'என்ன நண்பா, எப்படியிருக்கே ?' கேட்டுக்கொண்டே வெங்கட் வந்தான்.

'பைரவி எப்படியிருக்கா ?'

'ம்ம்ம் இன்னிக்கு வரியா ? உன்னை அழைச்சுக்கிட்டு வரச் சொல்லியிருக்கா'

'வரேன் நண்பா, சென்னைல உனக்குத் தெரிந்து அமெரிக்கா விசா ப்ராசஸ் செய்ற ஆதரைஸ்ட் ஏஜென்ட் யாராவது, நம்பிக்கையான ஆள், இருக்காங்களா ?'

'ரீ-யூனியனுக்கா ? என்ஜாய் ப்ரோ, உனக்குத்தான் H1B இருக்குல்லே, அப்புறமென்ன ?'

'அபிராமியையும் ... நான் ... ரீ-யூனியனுக்கு அழைச்சுக்கிட்டு போலாம்னு பார்க்குறேன்'

'ஓஹோ, அப்படிப்போடு, கையும் காலும் மூக்கும் கொண்டு ...'

'ஆட வந்தக் காரணம் ஆடித்தானே சேர்த்துவச்ச பாவம் யாவும் தீரணும் - தெரியும் நண்பா, நீங்க ஆடாததா நாங்க ஆடப்போறோம்'

'ஓகே ஓகே என்ஜாய், எங்க ஆபீஸ் ஏஜென்ட் நம்பர் தரேன், பட் நண்பா தூரத்துல இருப்பவன் நல்லவனாத்தான் இருக்கணும்னு அவசியமில்லை. உனக்குத் தெரிஞ்சு பக்கத்துலேயே இருப்பவன் கெட்டவனா இருந்தாகணும்னு கட்டாயமுமில்லை'

'எங்கே படிச்சே நண்பா ?'

'ஏன் என்னோட மூளைல ஒரு மூலைல இந்த மாதிரிப் பொன்மொழி உதிக்கக்கூடாதா ?'

'கண்டிப்பா, நன்றி லா, அந்த ஆளைப் போய் பார்க்குறேன், பட் லா, நான் அபிராமியை அழைச்சுக்கிட்டு வரேன்னு நீ க்ரூப்ல யாருகிட்டேயும் சொல்லாதே, அவங்களுக்கு அபிராமி வருவது ஒரு சர்ப்பிரைஸா இருக்கட்டும்'

'டன்'

மதியச்சாப்பாடு முடித்துவிட்டு அந்த ஏஜெண்டின் நம்பரும் வாங்கிக்கொண்டு என் இருப்பிடம் வந்தேன்.

***
சிங்கப்பூர் வேலை முடித்து சனிக்கிழமை சென்னை வந்து ஞாயிறு அன்று அபிராமியை என் வீட்டிற்கு அழைத்திருந்தேன், வந்தாள்.


புடவை கருநீலநிறத்தில், எனக்குப் பிடிக்குமென்றா ?
ப்ரேஸ்லெட் கையில், பரிசாய்த் தந்தேனே அதுவா ?
பாயசம், நீ செய்ததா ? எனக்காகவா ?
வாக்குதந்தவாறு வந்து விட்டாயே
காத்திருந்தாயா ?
நான் வரும்பாதை பார்த்திருந்தாயா ?
இளைத்துவிட்டாயே, என் பிரிவினாலா ?
இதையும் கவிதை எனக்கொண்டு
ஏதேனும் தருவியா ?


தந்தாள். பெற்றுக்கொண்டேன். தந்தேன். பெற்றுக்கொண்டாள். நிறைய பேசினோம். நியூஜெர்ஸிக்கு அவளும் இந்தமுறை வந்தாகவேண்டும் என்றும், வந்தால் நன்றாயிருக்கும் என்றும் எடுத்துச் சொன்னேன். பழைய, கல்லூரி நண்பர்களை பார்க்க ஒரு வாய்ப்பாய் அமையும் என்றும் எடுத்துரைத்தேன். நாம ஒருமுடிவு எடுத்திட்டோம், அதுபடி நம் வாழ்க்கை நாம வாழ்வோம். மற்றவர்களுக்குத் துன்பம் நேராதவகையில், நமக்குச் சரின்னு தோணுவதை நாம செய்வோம் - என்றெல்லாம் வசனம் பேசி அபிராமியை முதலில் சம்மதிக்க வைத்தேன். ஆகஸ்டில் ஒரு பத்து நாள் ஏதாவது சொல்லி அவள் வீட்டில் அனுமதி வாங்கிவிடுவது என்று இருவரும் முடிவெடுத்தோம். அவளின் பாஸ்போர்ட் மற்றும் வேலை சம்பந்தப்பட்ட சிலபல டாக்குமெண்ட்ஸ் வாங்கி வைத்துக்கொண்டேன்.

மாலையில் இருவரும் வெங்கட் க்குத் தெரிந்த அந்த ஏஜென்ட் டை சந்தித்து டூரிஸ்ட் விசாவிற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று தெரிவித்து எல்லா விவரங்களையும் அளித்துவிட்டு வந்தோம். பலபேரோடுப் பழகிப் பழகி ஒரு ஆளைப் பார்க்கும்போதே இவர் வேலைக்காவாரா இல்லையா என்று தெரிந்துவிடும். எனக்கென்னவோ அவர் நம்பிக்கையான ஆளாய்த்தான் பட்டது. விசா நேர்க்காணல் தேதி நேரம் கேட்டு அபாயிண்ட்மெண்ட் வாங்கி எல்லாவற்றுக்கும் கூடவேயிருந்து பார்த்துக்கொண்டார். ஒத்துழைத்து வேலை செய்தால் எல்லாம் சரியாய்த்தானே நடக்கும், நடந்தது, விசா கிடைத்தது; பயண விவரங்களை அபிராமிக்கு அவ்வப்பொழுது தெரிவித்துப் பயணிக்கத் தயாரானோம். எல்லாரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தவேண்டுமென்பதால் அபிராமியும் பயணிப்பதைப் பற்றி, ரீ-யூனியனில் கலந்துக்கொள்வதைப் பற்றி நானோ அவளோ யாருக்கும் விவரம் தெரிவிக்கவில்லை.

பயணத் தேதியின் போது நான் முதலில் சென்று விமானநிலையத்தில் காத்திருக்க, அதன்பின் அபிராமி வந்து சேர்ந்தாள். சென்னையிலிருந்து கிளம்பி துபாய் வந்து அங்கிருந்து நியூயார்க் விமானம் ஏறினோம். நியூயார்க் கில் விமானம் இறங்கும்பொழுதே, தொடர் பயணத்தால் அபிராமி மிகவும் சோர்ந்திருந்தாள். இன்னொரு விமானத்தில் நியூஜெர்ஸி போகவேண்டும் என்றபோது, 'நான் வரலை' என்று சொல்லி அங்கேயே உட்கார்ந்துவிட்டாள். என்ன செய்வது என்று யோசித்தேன். அருகிலேயே ஹெர்ட்ஸ் கவுண்டர் இருந்தது. ஐந்து நாட்களுக்கு தேவைப்படுமென்று ஒரு வாடகைக் காரை எடுத்துக்கொண்டேன். ரோடு வழியாய்ச் செல்வோம் என்று அபிராமியிடம் சொல்லி, அழைத்துக்கொண்டு, ஏர் லைன் அலுவலகத்தில் எங்கள் போர்டிங் பாஸைக்காட்டி பெட்டிகளை நியூஜெர்ஸி விமானநிலையத்தில் எடுத்துக்கொள்கிறோம் என்று தகவல் அளித்துவிட்டுக் கிளம்பினோம்.

'சாரி என்னால உனக்கு ரொம்பக் கஷ்டம்'

'என்ன கஷ்டம் ? ஆகாய மார்க்கமென்றாலும் ஆழ்கடலுள் செல்வதென்றாலும் அழகி நீ அருகிலிருந்தால் வேறென்ன வேணும் உலகில்'

'இந்தக் கவிதை வரிகளுக்கு ஒரு முத்தம் உண்டு, அப்புறம் தரேன், ஞாபகம் வச்சுக்கோ'

'ஹேய் விமானத்திலேயே இந்த மாதிரி இன்னும் சில பல கவிதைகள் சொன்னேனே ... காலையில் கனவினில் கண்திறவாது கிடக்கையில் ... ம்ம்ம் ...'

'கன்னியுன் சேலையின் நிறத்தினில் இந்த காளையின் ... '

'கரெக்ட், அந்தக் கவிதைக்கெல்லாம் முத்தம் ? '

'சரி முத்துப் போன்ற வரிகளுக்கு பத்து முத்தம், வரிவரியான என் உதட்டிலிருந்து, அப்புறம் தரேன்'

'கடன் அன்பை முறிக்கும்,, இப்போவே தா'

'உடம்பு சரியில்லேடா, சுடுது பார்' என் கையை எடுத்துத் தன் கன்னத்தில் வைத்துக் காட்டினாள்.

உடம்பு சுடாய்த்தான் இருந்தது. அங்கேயே விமானநிலையத்தில் இருந்த ஒரு ஜெனரல் மருத்துவரிடம் காட்ட ஓய்வெடுத்தால் சரியாய்ப்போய்விடும் என்றவர் சொல்லி மாத்திரை தர, அதையும் வாங்கிக்கொண்டு எங்கள் காருக்கு வந்து சேர்ந்தோம்.

***

காரில் அமர்ந்து நியூஜெர்ஸி நோக்கி பயணிக்க ஆரம்பித்தோம். பிரட் வாழைப்பழம் என்று கிடைத்தை உண்டு, மாத்திரை முழுங்கி அபிராமி உறங்க ஆரம்பித்தாள். ஏற்கனவே நான் சிலமுறை அமெரிக்கா வந்திருந்ததால் இங்கு கார் ஓட்டுவது சுலபமாகவே இருந்தது, GPS சில் வழி சரிபார்த்துக்கொண்டு ஒரு 2 மணி நேரப்பயணத்திற்குப் பின் நான் புக் செய்திருந்த, ஏற்கனவே தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்து சேர்ந்தோம். கொஞ்சம் கூட அசைவில்லாது, அசதியில் கிட்டத்தட்ட 6 மணி நேரம் அபிராமி தூங்கிகிடந்தாள். நான் மட்டும் இடையில் போய் காலை உணவு உண்டு அவளுக்கும் எடுத்துவந்திருந்தேன். அவள் எழுந்தவுடன் உண்டு முடித்து வெளியே கிளம்ப, நியூஜெர்ஸியில் எனக்குத் தெரிந்த கேசினோ விற்கும் வேறு சில இடங்களுக்கும் அழைத்துச் சென்றேன். அடுத்தஇரண்டு நாளும் ரீ-யூனியனில் சென்று விடும் என்பதால் இன்று ஒருநாள் எங்களுக்கென்று ஷாப்பிங் செய்து, என்னதான் இந்தியாவிலிருந்து எல்லாருக்கும் பரிசுப்பொருட்கள் வாங்கி வந்திருந்தாலும், கொஞ்சமே கொஞ்சமாய் இங்கும் வாங்கிக்கொண்டோம்.

யாராவது தோழர் தோழிகள் தெரிந்த முகங்கள் கண்ணில் தட்டுப்படுகிறார்களா என்று நாங்கள் சுற்றும் இடமெல்லாம் தேடிப்பார்த்தோம். யாரும் அகப்படவில்லை. வாட்சப்பில் நான் அமெரிக்கா வந்ததை அறிவிக்க, கார்த்தி மட்டும் போன் செய்து இரவு உணவுக்கு வீட்டிற்கு வரவேண்டுமென்று அழைத்தான். அபிராமியையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். இருவருக்கும் சந்தோஷம். நாளை காலை வரை அபிராமி வந்திருப்பதைப் பற்றி யாரிடமும் மூச்சு விடக்கூடாது என்று எச்சரித்துவந்தோம். அவன் அனுப்பிய போட்டோவிலெல்லாம் அபிராமி இல்லாது பார்த்துக்கொண்டோம்.

இருந்தாலும் 'சார்ப்ரைஸ் !!! கண்டுபிடிப்பவர்களுக்கு 100$' என்று கார்த்தி வாட்சப்பில் தெரிவிக்க, சிங்கையிலிருந்து வெங்கட் 'நான் கண்டுபிடிக்கலாமா ?' என்று கேட்க, 'இது நியூஜெர்ஸியில் இருப்பவர்களுக்கு மட்டும்' என்று நான் பதில் அடிக்க, 'என்னவாயிற்கும் ?' என்று அபிராமி ஒரு முனையிலிருந்து கேட்க, 'நீயும் அமெரிக்கா வந்திருக்கலாம்ல' என்று பிரபா பதிலனுப்ப ...... ஒரு அமர்களமாய்ப் போனது ரீ-யூனியனுக்கு முன்தின இரவு.

***
அடுத்தநாள் காலையில் எட்டு மணிக்கெல்லாம் கிளம்பி ரீ-யூனியன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரிசார்டுக்கு வந்து சேர்ந்தோம். எங்களோடு சேர்ந்து படித்த வித்யா பிரபா நாராயணி வடிவு எல்லாருக்கும் அமிராமியைப் பார்த்ததும் மிக ஆச்சரியம். கட்டிப்பிடித்து, முத்தமிட்டு, 'மெதுவா மெதுவா' என்று நான் கத்த, அபிராமி என்னைப்பார்த்து சிரிக்க, கொண்டாட்டமாய் அந்த நாள் ஆரம்பித்தது.

கொடுக்கப்பட்ட வெல்கம் ட்ரிங்க் கைக் குடித்துவிட்டு அங்கு வந்தோரிடமெல்லாம் பள்ளியிலிருந்து இன்று வரை கதை கேட்டு பேசிக்கொண்டிருந்தேன். அதற்குள் அபிராமி முறுக்கு சீடை என்று இந்தியாவிலிருந்து கொண்டு வந்தவைகளை இரண்டு தட்டில் ஏந்தி எல்லோருக்கும் கொடுத்துக்கொண்டிருந்தாள். இதுதான் பெண் என்பது. நான் காரிலிருந்து இறங்கி புல்தரையில் அமர்ந்ததைத் தவிர வேறேதும் இதுவரை செய்யவில்லை. என்னோடு வந்தவள், மும்முரமாய் வேலை பார்த்துக்கொண்டு, அட அதற்குள் அவள் உடை வேறு மாற்றியிருப்பதைக் கவனித்துக்கொண்டிருக்கும்போதே இரண்டு தட்டையும் ஏந்திக்கொண்டு என்னருகில் வந்தாள்.

'டிரஸ் மாத்திருக்கே ?'

'நீ என்னோட மூன்று பெட்டியை சுமந்துக்கிட்டு வந்திருக்கே, அதுக்காகவேணும் நான் கலர் கலரா உடை மாத்தவேண்டாமா ?'

'அதுசரி, `எல்லாத்தையும்` மாத்திக்கிட்டியா ?' மேற்கோள் குறி காட்டிக்கொண்டே கேட்டேன்.

'பக்கி எருமை, எடுத்துக்கோ' என்று தட்டு நீட்டினாள்.

கையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு 'எல்லாத்தையுமா மாத்துனே ?' என்று மீண்டும் கேட்டேன், சிரித்தாள்,

'மாத்தறது என்ன கஷ்டமா இருந்துச்சி ?' மீண்டும் கேட்டேன்.

'தனியா மாத்திக்க கஷ்டமாத்தான் இருக்கு, அடுத்ததடவை நீ வந்து ஹெல்ப் பண்றியா ? ப்...ளீளீளீளீஸ்' என்று கெஞ்சல் கொஞ்சல் பார்வை பார்த்து, இமைகளை படபட வென்று அடிக்க, நான் இளித்துக்கொண்டே தலையாட்ட, சிரித்துக்கொண்டே அவ்விடத்தைக் காலி செய்தாள்.

அன்றும் அடுத்த நாளும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்களமாகச் சென்றது. எனக்கு ஒரு ஐந்து நாட்கள் கஸ்டமரின் வேலையும் இருந்ததால், நான் அலுவலக வேலையாக சென்றபின்பு அபிராமியை வித்யா காயத்ரி பிரபா என்று யாராவது அழைத்துக்கொண்டு இல்லை எல்லாரும் சேர்ந்து ஊர் சுற்றினார்கள். சென்னை திரும்பவேண்டியநாளில் எல்லாரிடமும் பிரியாவிடை பெற்றுக்கொண்டு விமானம் ஏறினோம்.

***

சென்னை விமானநிலையத்தில் வந்து இறங்கியவுடன் பையிலிருந்த மாத்திரையைத் தூக்கியெறிந்தேன்.

'என்னாதது ?' அபிராமி கேட்டாள்.

'உனக்கு பறக்கும்போது ஏதாவது தொந்தரவு வந்தா, அதுக்காக மாத்திரை வாங்கி வச்சிருந்தேன்'

'சோ ஸ்வீட், லவ் யூ பேபி' என் கையை இறுக்கக் கட்டிக்கொண்டு நடந்தாள்.

'அருகில் இருந்தும் அவசியமில்லாது போய்விட்டது'

'அந்த மாத்திரை மட்டும்தான் அருகில் இருந்தும் அவசியமில்லாது போய்விட்டதா ?'

'என்ன சொல்ல வரே ?'

'நானும்தான் அருகில் இருந்தேன், என்னை என்ன செய்தாய் ?'

சின்னச் சிரிப்புடன் அவள் உள்ளங்கையில் ஒரு முத்தம் தந்தேன்.

'சிரிச்சா ? எங்கெங்கேர்ந்தோ போன் பண்ணுவே, என்னென்னவோ கேட்பே, கண்ட நேரத்துல காமத்துப்பால்ல கவிதை சொல்லுவே, அமெரிக்கால ஆருமில்லா அறையில அய்யா அடங்கி ...'

'இதை நீ அங்கேயே கேட்கவேண்டியதுதானே ? ஏன் கேட்கலை?'

'எங்கூர்ல ஒன்னு சொல்லுவாங்க - வேலியில ஓடுற ஓணானை ....'

'அபி, அமெரிக்காவிற்கு நீ என்னை நம்பி வந்திருக்கே, நான் ஏதாவது தவறா நடந்துக்க முயற்சி செய்தால், தப்பிக்க முடியாம, நீ வேறு வழியில்லாம என் வற்புறுத்தலுக்காக இணங்கலாம் இல்லியா, உன்னை நான் கார்னர் பண்ணிட்டதா ஆயிடுமே, moreover, சிங்கத்தை அதனோட குகையில சந்திச்சு …'

'தேங்க்யு' என்னை அருகில் இழுத்து கன்னத்தில் ஒரு முத்தம் தர, அவள் இடையில் அழுத்தி கிச்சுகிச்சு செய்து துள்ளவைத்தேன்.

'ம்ம்ம் ... அமெரிக்கா ன்னு நெனச்சியா, இந்தியா வந்துட்டோம்'

'முத்தம் தரும்போது இது தெரியலையா ?'

பேசிக்கொண்டே பார்க்கிங்கில் இருந்த என் காருக்கு வந்து வீடு நோக்கிக் கிளம்பினோம்.

'சாரி உன்கிட்ட நான் ஒரு உண்மையை மறைச்சிட்டே'

என்ன என்பதுபோல் பார்த்தேன்.

'நாம அமெரிக்கா போனது என் அப்பா அம்மாவிற்குத் தெரியும்'

'அப்படியா ? நல்லதாப்போச்சு, ஒரு பொய் சொல்ல அவசியமில்லை'

'என்னோட விசா ப்ராசஸ் செய்தாரே கிருஷ்ணகுமார் அப்பாவுக்குத் தெரிஞ்சவராம், அவரு சொன்னாராம்'

'அடடடா'

'பட் நான் முன்னாலேயே அமெரிக்கா போகப்போறேன்னு சொல்லிருந்தே, அதனாலே அப்பா சமாளிச்சிப் பேசிட்டாரு'

'வாவ், கிரேட் தாங்க்யூ, இல்லேன்னா நம்மகிட்ட சொல்லாம அமெரிக்கா போறான்னு நெனச்சிருப்பார்ல'

'ஆமாம், பட் நான் ஆரம்பத்திலேயே அமெரிக்கா ட்ராவல் பத்திச் சொல்லிட்டே, தேங்க் காட்'

'சரி நீ என்னவோ உண்மையை மறைச்சிட்டேன்னு சொன்னியே, என்னாதது ?'

'அது ...'

'அபி, ஏன் என்கிட்டே தயங்குறே, ஆர் யு ஓகே ?'

'அப்பா …… அமெரிக்கா போகறதுக்கு முன்னாலேயே …… நம்ப கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டாரு'

'வாவ் வாவ் .... சொல்லவேயில்லை நீ, அங்கே எல்லாரும் எப்போ கல்யாணம்னு கேட்டாங்கல்ல, எனிவே ஐம் ஹாப்பி'

அபிராமி கண் கலங்குவது போல் உணர்ந்தேன்.

'என்னாச்சி ... என்னடா ?' காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, அவள் கன்னத்தில் முத்தமிட்டேன்.

அபிராமியும் என்னைக்கட்டிக்கொண்டு முத்தமிட்டு கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

'என்னாச்சி ஏன் அழுதே ?'

'கல்யாணத்துக்கு அப்பா சம்மதிச்ச விசயத்தை உன்கிட்ட சொல்லாம மறைச்சிட்டே, ஹவ் ஜென்டில் யு ஆர், அமெரிக்காவிற்கு நீ என்னை நம்பி வந்திருக்கே, நான் ஏதாவது தவறா நடந்துக்க முயற்சி செய்தால், தப்பிக்க முடியாம, நீ வேறு வழியில்லாம என் வற்புறுத்தலுக்காக இணங்கலாம் ன்னு நீ தள்ளித் தள்ளி எவ்ளோ டீசெண்டா என்கிட்ட நடந்துக்கிட்டே'

'தேங்க் யு'

'நான் கல்யாணத்துக்கு சம்மதம் வந்திருச்சு ன்னு சொல்லி, நீ அதை உனக்குச் சாதகமா எடுத்துக்கிட்டா என்ன பண்றதுன்னு பயந்துதான் சொல்லாம விட்டுட்டே, ஐம் சாரி' அபிராமி கண் துடைத்துக்கொண்டாள்.

'தட்ஸ் ஓகே டியர்' அவள் முதுகைத் தடவிக்கொடுத்து ஆறுதல் படுத்தினேன்.

'ஐம் சாரிடா ஆனந்த்' அமர்ந்திருந்தவாறே என் கையைக் கட்டிக்கொண்டாள்.

'தட்ஸ் ஓகே எனக்கு ஒன்னும் தப்பாத் தெரியலே, ஐ லவ் யு'

'ஐ டூ லவ் யு' என் சட்டை பிடித்துத் தன்னை நோக்கி இழுத்துக்கொண்டாள்.

காரில் 'இதழில் கதையெழுதும் நேரமிது' பாடல் ஒலிக்கத்துவங்கியது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.