எதிர்கொள்

பிறந்தநாள் பரிசால் இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று வினோதினி எதிர்பார்க்கவில்லை. ஒரு வாரமாக என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறாள்.

அப்பாதான் அவளுக்குப் பதினான்கு வயது நிறைவடைந்ததும், இந்த ஸ்மார்ட் போனைப் பரிசளித்தார்.

“அவளுக்கு இதெல்லாம் இப்போ எதுக்குங்க, காலங் கெட்டுக் கெடக்குது” என்று எதிர்ப்பு தெரிவித்தார் வினோதினியின் அம்மா.

அப்பாவோ, “இதெல்லாம் தெரிஞ்சிக்கணும், தொழில்நுட்பத்துலர்ந்து தப்பிக்கவே முடியாது. அவ பிரண்ட்லாம் இந்த மாடல் போன் வச்சிருக்காங்க, அந்த மாடல் போன் வச்சிருக்காங்கனு சொல்றத வச்சே புரிஞ்சிக்கணும். வீட்டுப்பாடமே எஸ்.எம்.எஸ்லதான வருது” என்று பேசி, ஆண்டுக்கொருமுறை கிடைக்கும் ஊக்கத்தொகையில் நடுத்தரமான ஸ்மார்ட் போனை வாங்கிக் கொடுத்தார்.

வினோதினி இரண்டு மாதங்களாக அதைப் பயன்படுத்தி வருகிறாள். அதில் பல செயலிகள் இருந்தாலும், பேஸ்புக்தான் அவளுக்குப் பிடித்திருந்தது. மொபைலில் இணைய சேவையை வாங்க அப்பா அனுமதிக்கவில்லை; பள்ளி இன்னும் வை-ஃபை வசதியுடையதாக மாறவில்லை என்பதால் மாலையில் அரைமணி நேரம் மட்டும் வீட்டு வை-ஃபையில் இணையம் பயன்படுத்தும்படி கட்டுப்படுத்தி வைத்திருந்தார். அவளது நண்பர்கள் எங்கு படம் பார்க்கின்றனர், எந்த உணவகத்தில் சாப்பிடுகின்றனர் என்றெல்லாம் பார்த்து, அங்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று கேட்கத் தொடங்கியிருந்தாள். அவள் கேட்டபடி ஒரு திரைப்படத்துக்கும், ஓர் உணவகத்துக்கும் சென்றனர்.

அவளுக்குப் பாரம்பரிய உடைகள் மேல் விருப்பம் இருந்ததில்லை. ஜீன்ஸ், சட்டை, ஷார்ட்ஸ், டீ-சர்ட் அணிவதே பிடித்திருந்தது. சீருடை உடுத்தாத போது இவற்றையே அணிந்திருப்பாள். போன் வந்த பிறகு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செல்ஃபி எடுக்கும் பழக்கம் வந்திருந்தது. இந்த வயதில் தன்னைத்தானே ரசிப்பது இயல்பானதுதான் என்று அம்மாவும் அப்பாவும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

நான்கைந்து நாட்களாக செல்ஃபி எடுக்காமல் இருந்ததையும், வீட்டுக்கு வந்த பின் தொலைக்காட்சியில் பார்க்கும் நிகழ்ச்சிகளைக்கூட பார்க்காமல், புத்தகத்தைக் கையில் வைத்தபடி, ஏதோ சிந்தனையில் இருப்பதையும் அம்மாவும் அப்பாவும் கவனித்தனர்.

“ ஏம்மா என்னமோ மாதிரி இருக்க?” அம்மாதான் கேட்டாள்.

இந்தக் கேள்விக்காகவே காத்திருந்ததைப் போல் அழத்தொடங்கிவிட்டாள் வினோதினி. சிறிது நேரம் அழுதுவிட்டு, ஆசுவாசமாகி, “ என் போட்டோவை ஒரு பேஜ்ல போட்டு மோசமா எழுதியிருக்காங்கமா. போனவாரம் இந்த ராம் எங்கூட சண்டை போட்டான். ‘ போட்டோ போட்டு எழுநூறு லைக்கா வாங்கற…உன் பேஸ்புக் போட்டோவ எடுத்து என்னா பண்றேன்னு பாரு’ னு சேலஞ்ச் பண்ணான். அவன் தான் இப்படிப் பண்ணியிருக்கணும். ஃப்ரண்ஸ்லாம் கிண்டல் பண்றாங்கனு பேஸ்புக் அக்கவ்ண்ட்ட டீ-ஆக்டிவேட் பண்ணிட்டேன்” என்றாள்.

இந்த நிலையில் “நான் அப்பவே சொன்னேன்”னு ஆரம்பித்தால் மகள் இன்னும் உடைந்துவிடுவாள் என்பதால், “ அவ்ளோதான…அப்பா வந்ததும் பேசி என்ன பண்லாம்னு பாக்கலாம், டீ போட்டுத் தரேன் , குடி”

”எனக்குக் காபி வேணும்” என்றாள் வினோதினி.

வீடு திரும்பிய அப்பா, முகம் கைகால் கழுவிவிட்டு, சமையலறையில் இரவு உணவை சமைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் “ கேட்டியா ” என்றார்.

“ அவ போட்டோவ யாரோ தப்பான பேஜ்ல போட்டிருக்காங்களாம். அதுக்குப் பயந்து பேஸ்புக்க டீ-ஆக்டிவேட் பண்ணிட்டு , சொல்ல முடியாம இருந்திருக்கா”

” அவ்ளோதான…பாத்துக்கலாம்”

நாற்காலியில் அமர்ந்து சில நிமிடங்கள் சிந்தித்த அப்பா, கணினியில் இணைய இணைப்பைக் கொடுத்து , வை-ஃபையை மூவருக்கு மட்டும் தெரியும்படி செய்தார்.

” வினோ, இங்க வாம்மா”

அவள் வந்து அவரது காலடியில் அமரப் போகும்போது, “ அந்த சேரை எடுத்துட்டு வந்து உக்காருமா” என்றார்.

அவள் நாற்காலியை எடுத்து வந்து அப்பாவின் வலதுபுறம் அமர்ந்தாள். அவள் கண்களில் என்ன சொல்வாரோ என்ற அச்சமும், பதற்றமும் தெரிந்தன.

“ இப்ப நீ டீ-ஆக்டிவேட் பண்ணிட்ட, அதால எல்லாம் சரியாயிடுமா? உன் அக்கவுண்ட் ஆக்டீவா இருந்தா, போட்டோவை இதுல இருந்து எடுத்தாங்கனு நீ சொல்லாமலே எல்லாருக்கும் தெரியும். நீ டீ-ஆக்டிவேட் பண்ணாலோ, போட்டோவை நண்பர்கள் மட்டும் பாக்கறா மாதிரி மாத்தினாலோ, பயந்துட்டனு இதச் செஞ்சவனுக்குத் தெரிஞ்சிடும். அத வச்சி உன்ன மெரட்டுவான். நீ பயந்து பணிஞ்சு போனா, இந்த டெக்னிக் ஒர்க் ஆவுதுன்னு நெனச்சிப்பான். ஒரு தடவ ஜெயிச்சவன் இத இன்னொருத்தங்க கிட்டயும் செய்வான். உன்னையே அடிக்கடி தொல்லை பண்ணவும் வாய்ப்பிருக்கு. நீ எப்பவும்போல இருக்கறதுதான் அவனுக்குக் குடுக்குற பதிலடி. உன் நண்பர்களையெல்லாம் அந்தப் பக்கத்தப் பத்தி பேஸ்புக்ல ரிப்போர்ட் பண்ண சொல்லு. நிறைய பேர் ரிப்போர்ட் பண்ணா அந்தப் பக்கத்த நீக்கிடுவாங்க. அப்படிச் செய்யலனா சைபர் க்ரைம்ல கம்ப்ளைண்ட் குடுப்போம். ப்ரின்சிபால் கிட்ட வந்து பேசுவோம். ஒரு படத்த வச்சி எங்க பட்டுக்குட்டிய எவனோ தொல்லை பண்ண விட்டுடுவோமா? எதுவா இருந்தாலும் பயப்படாம எங்ககிட்ட சொல்லு. நீ எங்க செல்லம்டா, நாங்க சப்போர்ட் பண்ணுவோம்” என்ற அப்பா “வை-ஃபை ஆன் பண்ணிட்டேன்” என்று மகளின் முன் தலையை பாசத்துடன் வருடி, “போம்மா” என்று தலையசைத்துச் சொன்னார்.

அடுத்த நாள் , பள்ளிக்குச் செல்லும் போது இயல்பான துள்ளலுடனும் உறசாகத்துடனும் இருந்தாள் வினோதினி.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.