சுஜாவுக்கு வந்த ஃபோன் கால் - பகுதி 5

"ஜனனியும் மங்கையும் செத்தது விபத்து இல்ல ........ கொலை ......... என்னைக் கொல்றதுக்காக நடந்த கொலை......."

சுஜாவின் கையில் இருந்த டென்னிஸ் பேட் , அவளையும் அறியாமல் நழுவிக் கொண்டிருந்தது.....

கயல் சொன்னதைக் கேட்டு நொந்து போனவளாய் , அப்படியே சிலையாய் நின்று விட்டாள் சுஜா...

அதிர்ச்சி சற்றும் குறையாமல் , மெல்ல நடந்து கயலின் அருகில் சென்றாள்...

கயலின் தோள்களைக் கைகளால் இறுகப் பிடித்துக் கொண்டு பலவீனமான குரலில் கேட்டாள் , "என்ன சொல்றிங்க கயல்...கொ ...கொலையா...??...எதுக்காக.....யா ....யாரு....??.."

"................"

குழப்பமும் , பயமும் , தன்னால் தன் தோழிகள் இரண்டு பேர் இறந்து போன குற்ற உணர்ச்சியும் மொத்தமாய் ஒன்று சேர்ந்து , ஒரு வார்த்தை கூடப் பேசத் தோன்றாமல் , முற்றிலும் வெறுத்துப் போனவளாய் அமைதியாகவே நின்று கொண்டு இருந்தாள் , கயல்....

".சொல்லுங்க...ப்ளீஸ்...எனக்கு ரொம்ப பயம் வருது...."

எவ்வளவு கேட்டும் ஒரு பதிலும் சொல்லாமல் நின்று கொண்டிருந்த கயலைப் பார்க்கப் பார்க்க ,கொஞ்சம் கொஞ்சமாக எரிச்சலாகிக் கொண்டிருந்தது சுஜாவுக்கு...

கொஞ்சம் பொறுமை இழந்த சுஜா , சற்று ஆத்திரமுற்ற குரலில் , "தயவு செஞ்சு வாயைத் திறந்து ஏதாவது பேசுங்க...என்ன தான் நடந்துதுன்னு தெளிவா சொல்லுங்க கயல்..."

"..............."

'ஓங்கி அறைஞ்சா என்ன இவளை...' , பொறுமை சுத்தமாய் போய் , கோவம் வரத் தொடங்கி இருந்தது சுஜாவுக்கு...

"எனக்கு நீங்க போன் பண்ணினப்போ ஜீவா ஜீவான்னு சொன்னிங்க....ஜீவா யாரு..."

தனது தோள்களை இறுகப் பற்றி இருந்த சுஜாவின் கைகளைத் தட்டி விட்டு விட்டு , கயல் கட்டிலின் மேல் போய் உக்கார்ந்து , தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள்...

'ம்ம்...இவளுக்கு அழுகுறதை விட்டா வேற ஒண்ணும் தெரியாது.... இன்னிக்கு இதும் காலி ,,நாமளும் காலி...நல்லாத் தெளிவாப் புரிஞ்சு போய்டுச்சு எனக்கு..' , சுஜா...

கடுப்பான சுஜா , ஒன்றுமே பேசாமல் , கயலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்...

சில நிமிடங்களுக்குப் பிறகு , ஏதோ ஒரு கட்டத்தில் அழுகை சற்று ஓய்ந்தவளாய் , பேச ஆரம்பித்தாள் கயல்...

"ஜீவா ,,,, ஜனனியோட அண்ணன்..."

"..ம்ம்..நீங்க மறுபடியும் அவருக்கு ஃபோன் பண்ணலியா..."

பதிலுக்கு , கயல் சுட்டிக் காட்டிய இடத்தில் கிடந்தது , உடைத்து நொறுக்கப்பட்ட ஒரு லேன்லைன் போன்...

அதைப் பார்த்த சுஜாவுக்கு , நிலைமையின் தீவிரம் புரியத் தொடங்கியது...

குழப்பத்திலும் , அழுகையோடுமே இருந்த கயலைத் தேற்றி , ஏதாவது விஷயத்தை வாங்க முடியுமாவென்று முயற்சி செய்தாள் சுஜா...

பொறுமையாக அவளுக்கருகில் சென்று ,,

"இங்க பாருங்க கயல்...நீங்க என்கிட்ட , என்ன நடந்துதுன்னு ஏதாவது சொன்னிங்கன்னா தான் இப்போ நம்மால ஏதாவது பண்ண முடியும்....இங்க இருந்து தப்பிக்கவும் முடியும்...நீங்க ஒண்ணுமே பேசாம அமைதியாவே இருந்திங்கன்னா , ரெண்டு பேருமே இன்னிக்கு இங்கயே சமாதி தான்....தயவு செஞ்சு புரிஞ்சுக்குங்க கயல்....பேசுங்க...என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க..."

குழப்பம் படர்ந்த முகத்தோடே ,சிறிது நேரம் சுஜாவையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த கயல் , அப்பவும் கொஞ்சம் கூட எந்த வகையிலுமே நம்பிக்கையே வராதவளாய் , வறண்டு போன உதட்டைத் திறக்கக் கூட சிரமப்பட்டு , சிறு அனத்தலினூடே சொல்லத் தொடங்கினாள் , மிக மெதுவாக ,,

"அன்னைக்கு ........ கோயம்புத்தூர் ஷாப்பிங் மால்ல , எஸ்கலேட்டர்ல , நான் பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ விழுந்..........."

"வெயிட் எ மினிட் லேடிஸ்..............."

பட்ட்ட்ட்டாரென்று அடித்துக் கொண்டு திறந்த கதவை , கதி கலங்கிப் போய்த் திரும்பிப் பார்த்தார்கள் கயலும் சுஜாவும்...

திடிரென்று திறக்கப்பட்ட கதவின் வழியாய் வந்த வெயில் தாங்காமல் , ஒரு நொடி கண் கூசியது கயலுக்கு...முகத்தைக் கையால் மறைத்துக் கொண்டாள் ..

கையை விலக்கி , நிமிர்ந்து பார்த்த போது , அங்கு நின்று கொண்டிருந்தான் ,, அவன் ,,...

அவனைப் பார்த்த நொடியில் , முகம் வெளிறிப் போய் , மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கத் தொடங்கியது கயலுக்கு...வயிற்றுக்குள் குடல் வரை பிசைந்தது...

கை கால்கள் எல்லாம் மொத்தமாய் நடுங்க , மெத்தையில் விரிக்கப் பட்டு இருந்த பெட்ஷீட்டை இறுகப் பிடித்துக் கொண்டு , கால்களைச் சுருக்கிக் கொண்டாள்...

மேல் மூச்சு வாங்கிக் கொண்டே இருந்தது அவளுக்கு அவனைப் பார்க்கப் பார்க்க...

இத்தனை நடந்து கொண்டிருந்த போதும் , என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்தாள் சுஜா...ஆனால் , கயல் நடுங்குவதை வைத்து ஏதோ ஒன்று புரிந்தது...

'...இவன் தான் மெயின் வில்லனா ....பாக்க அமீர்கான் மாதிரி இருக்கானே....இவனா.......இவனா....................இந்தப் பால் வடியிற மூஞ்சியா ,ரெண்டு கொலை பண்ணுச்சு.....' , சுஜா.....

அவனது தோற்றத்தையும் அவன் அணிந்து இருந்த வெள்ளை குர்தாவையும் வைத்து இவன் தான் கொலை செய்தவன் என்று நம்பவே முடியவில்லை அவளால்...

இவர்களை இருவரையும் கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் , மெது மெதுவாய் நடந்து , அறையின் உள்ளே வந்தான் ,,அவன்...

கையில் வைத்திருந்த டெய்ரிமில்க் சாக்லேட்டை வாயில் வைத்து சப்பிக் கொண்டே கயலை ஓரக் கண்ணால் நிமிர்ந்து பார்த்த ,,அவன்,, பார்வையை மட்டும் திருப்பி , சுஜாவை கவனித்தான்...

அந்தப் பார்வையின் அர்த்தம் என்னவென்றே , சுஜாவுக்கு விளங்கவே இல்லை...

கயலின் அருகில் வந்து நின்று , மேலிருந்து கீழாய் அவளைப் பார்த்த ,,அவன்,, வலது காலைத் தூக்கி , கயலின் அருகில் கட்டில் மேல் வைத்து , கயலை நோக்கிக் குனிந்தான்...

பாதி உயிர் போய் விட்டிருந்தது கயலுக்கு...

குனிந்தவன் , கயலின் உச்சந்தலையில் முகத்தை வைத்து , அவளது கூந்தலின் வாசத்தை முகர்ந்தான்...முகர்ந்து கொண்டே மெதுவாய் நிமிர்ந்த அவனை ,, மிகுந்த அருவருப்பு கொண்டு , "ச்சீ... " , என்று இரண்டு கைகளாலும் தள்ளி விட்டாள் கயல்...

"ம்ம்ம்ம்ம்.........ச்சீ.........ச்சீ...............அன்னைக்கு........அன்னைக்கு சொல்லி இருக்க வேண்டியது தானே இந்த 'ச்சீ'.. ..........."

'என்னைக்குடா...' ..... சுஜா .... 'யாராவது ஏதாவது புரியற மாதிரி சொல்லித் தொலைங்களேண்டா ...'

பயமும் அருவருப்பும் சேர்ந்து , கயலைக் கிட்டத் தட்டக் கொன்று விட்டிருந்தது...

சாவகாசமாய் சாக்லேட்டை ரசித்து ரசித்து சாப்பிட்டு முடித்த ,,அவன்,, இடது கை விரலில் ஒட்டி இருந்த சாக்லேட்டை வாயில் வைத்து சப்பிக் கொண்டே கயல் அருகில் வந்து நின்று , அவளது கன்னத்தில் வழிந்த ரத்தத்தை ரசித்துக் கொண்டே தடவினான்....

ரத்தத்தைத் தடவியவன் , அவளது கன்னத்திலும் நெற்றியிலும் அவனது விரலால் கோலம் போட்டுக் கொண்டே க்ரூரமாய்ச் சிரித்தான்...

ஆத்திரம் பொங்கிக் கொண்டு வர , அவனது விரல்களைப் பிடித்து மடக்கி , இருந்த பலத்தை எல்லாம் சேர்த்து வைத்து அவனைத் தள்ளி விட்டாள் கயல்...

"அய்யய்யோ ....ம்ம்...தப்பும்மா ...ஒழுங்கா அமைதியா சொல்றதைக் கேட்டின்னா , ஈசியா செத்துடலாம்...இல்லன்னா ...ம்ம்ம்....ரொம்பக் கஷ்டம்....அப்புறம் நான் பொறுப்பில்ல....சொல்லு.....ஈசியா சாகணுமா இல்ல கஷ்டப்பட்டு சாகணுமா....சொல்லுடி செல்லம்...."

இதைக் கேட்ட சுஜாவுக்குத் தூக்கி வாரிப் போட்டது...'கொள்ளப் போறானா..' ..பதறிப் போய் அவனருகில் வந்தாள் சுஜா....

"இங்க பாருங்க சார்... எதுவா இருந்தாலும் பேசித் தீத்துக்கலாம்.... ஏற்கனவே நீங்க ரெண்டு கொலை பண்ணி இருக்கீங்க... இனிமேலும் தப்புக்கு மேல தப்புப் பண்ணாதிங்க... நீங்களாவே போலிஸ் கிட்ட சரணடைஞ்சுடுங்க... அது தான் உங்களுக்கு நல்லது..."

இவளுக்கென்ன பைத்தியம் புடிச்சுருச்சா என்பது போல் பார்த்தாள் கயல் , சுஜாவை...

"ஒ..ஒ ..ஒ...எல்லாமே தெரியுமா...." , தலையைச் சாய்த்து அவன் கேட்ட ஸ்டைலில் கதி கலங்கி பீதி அடைந்தாள் கயல்....

"சொல்லிட்டியாடி செல்லம்..எல்லாத்தையுமே சொல்லிட்டியா..." , மிகக் க்ரூரமாய்...

"இல்ல இல்ல ...இவளோ தான் தெரியும் ..இதுக்கு மேல ஒண்ணும் தெரியாது..." , சுஜா...

"சொல்லுடி...சொல்லிட்டியா..." , கொஞ்சம் கொஞ்சமாய்க் குரல் கொடூரமாய் மாறிக் கொண்டிருந்தது...

"..................."

"கேக்குறேன் இல்ல....சொல்லுடி சொல்லிட்டியா....."

ஆத்திரத்தில் கத்திய வேகத்தில் , ஓங்கிப் பளாரென்று ஒன்று விழுந்தது ,, சுஜாவுக்கு...

கொஞ்சம் கூட இதை எதிர் பார்க்காத சுஜா , இரண்டு சுற்று சுற்றிக் கொண்டு போய் சுவரில் மோதிக் கீழே விழுந்தாள்...

"ஆ....." , அலறிக் கொண்டு கன்னத்தில் கை வைத்துக் கொண்ட கயலுக்கு , அறை விழுந்தது தனக்கல்ல என்று உணரவே இரண்டு நொடி ஆனது...

கயலின் முடியைக் கொத்தாய்ப் பிடித்த அவன் , அவளது முகத்தின் அருகே முகத்தைக் கொண்டு வைத்துக் கொடூரமான குரலில் ,,,

"பயந்துட்டியாடி செல்லம்...."

"................."

கண்களை சுருக்கிக் கொண்டு ,,

"சொல்லுடி ....எல்லாத்தையும் சொல்லிட்டியா........."

".................."

"சொல்லுடி...."

"................."

"சொல்லுடி ...சொல்லு சொல்லு ... சொல்லு....."

"................."

".என் ....என் ...........என் சஞ்சுவை அநியாயமாக் கொன்னிங்களேடி '''''.............. '''''' மூணு பேரும் சேர்ந்து....அதையும் சொல்லிட்டியா...."

அந்தக் கட்டிடமே அதிர அலறினான் அவன்........

அவனுடைய கொலை வெறிக் கண்களில் , மரணம் தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது , சுஜாவுக்கு....

அவன் வெறித்தனமாகக் கத்தியதைக் கேட்டுக் கிட்டத்தட்ட சிலையாகவே மாறி இருந்தாள் சுஜா..

'என்னது...சஞ்சுவா...கொலையா...புதுசா இருக்கே இந்தக் கதை...' சுஜா , மிகுந்த குழப்பத்தோடும் அதிர்ச்சியோடும்... 

படு ஸ்லோ மோஷனில் கயலைத் திரும்பிப் பார்த்த சுஜா , யோசித்தாள் , 'ஏய் , கடைசில நீதான் அக்யூஸ்டா , கொலை பண்ணினியாடி நீ...பாக்க அப்பாவிப் புள்ளையாட்டம் இருந்துக்கிட்டு....ஏண்டி....கொலையாடி செஞ்சே...அதுக்குதான் இவன் இப்போப் பழி வாங்குறானா....'

ஒரு மாதிரியாக என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது அவளால்...

யோசனையின் ஊடே அசையாமல் நின்று கொண்டிருந்தாள்...

அவனோ , கயலின் கழுத்தைக் கொலை வெறியோடு நெறித்துக் கொண்டிருந்தான்....

கயலின் கண்கள் வெளியே தள்ளிப் பிதுங்கிக் கொண்டிருந்தன...

'நிஜமாவே கொன்னுருவானோ...'

அவனைத் தடுத்து , அவளைக் காப்பாத்தக் கூட மனமில்லாமல் சிலையாகவே நின்றிருந்தாள் சுஜா...

'இப்போ இவளைக் காப்பாத்துறதா வேணாமா..' சுஜா...'இவ நல்லவளா இல்ல கெட்டவளா..?'

அங்கிருந்து சென்று விடலாமா என்று தோன்றியது சுஜாவுக்கு...

அவனது பிடியில் இருந்து தப்பிப்பதற்காகப் போராடிக் கொண்டிருந்தாள் கயல்...

அவனை நெட்டித் தள்ளித் திமிறியவள் , அவளது விரல் நகங்களால் அவனது கழுத்தை எட்டிப் பிடித்துச் சுற்றி சரக்கென்று கீறினாள்...

'ஒ சட்..'

வலியால் துடித்த அவன் , கயலின் கழுத்தை நெறிப்பதை விடுவித்து விலகி நின்றான்...

கயல் கழுத்தைப் பிடித்துக் கொண்டு இருமிக் கொண்டிருந்தாள்...மரண பயமும் ஆத்திரமும் நிறைந்த கண்கள் , அவனையே வெறித்துக் கொண்டிருந்தன...

கழுத்தில் வழிந்த ரத்தத்தைத் தொட்டுப் பார்த்து , பற்களை நற நறத்துக் கொண்டே கயலை நிமிர்ந்து பார்த்த அவன் , பயங்கர ஆத்திரமுற்று கயலின் காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்தான்...

'அய்யோ...' ,

வலி தாங்காமல் அலறிய கயல் , சடாரென்று கட்டிலின் மேல் கால்களைத் தூக்கி வைத்துக் கொண்டாள்...

அவன் , அவளையே முறைத்துக் கொண்டிருந்தான்...

"பண்ணுடி பண்ணு என்ன வேணா பண்ணு....கடைசியா மூஞ்சி கிழிஞ்சு அசிங்கமா சாகப் போறேடி..." , ஆத்திரமும் நக்கலும் கலந்து...

கயல் , நடுங்கிக் கொண்டே மெத்தையின் மேல் மெது மெதுவாகப் பின் புறமாய் நகர்ந்து கொண்டிருந்தாள்...

சுஜாவோ , இங்கு நடந்து கொண்டிருக்கும் எதற்கும் தனக்கும் எந்த வித சம்மந்தமுமே இல்லாதது போன்று நின்று , அங்கு நடக்கும் அத்தனையையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தாள்...

கயலை முறைத்துக் கொண்டே , அறையில் பார்வையை ஓட விட்டவனது கண்களில் பட்டது கட்டிலின் அருகில் ஓரமாய் வைக்கப் பட்டிருந்த அந்தக் கண்ணாடி ஜக்...

கயலைப் பார்த்துக் கொண்டே , அந்தக் கண்ணாடி ஜக்கை ஓங்கி மிதித்தான்...கண்ணாடி ஜக் உடைந்து நொறுங்கியது...

கண்ணாடி நொறுங்கும் சத்தத்தில் , சுய நினைவிற்கு வந்தாள் சுஜா...

"இன்னிக்கு நீ காலிடி..." , கொலை வெறியோடு உடைந்த கண்ணாடித் துண்டு ஒன்றை எடுத்துக் கொண்டு , கயலைக் குத்தப் போனான்...

மூச்சடைத்துப் போன கயல் , நெஞ்சைப் பிடித்துக் கொண்டு கதறினாள்...

"இங்க பாரு...தயவு செஞ்சு நான் சொல்றதைக் கேளு....நான் வேணுமுன்னு எதுவும் செய்யலை...தெரியாம நடந்துருச்சு...தயவு செஞ்சு என்னை விட்டுரு...உன்னைக் கெஞ்சிக் கேக்குறேன்..." , உயிர் பயத்தில் கெஞ்சிக் கதறினாள்..

ஆனால் அவனோ , அவளுடைய வார்த்தைகளைக் கேட்கக் கூடத் தயாராக இல்லை...குரூரமாக அவளை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்....

"என்னை விட்டுரு ப்ளீஸ்..." , கையெடுத்துக் கும்பிட்டுக் கெஞ்சினாள் கயல்...

அவன் அவளை நோக்கி நகர்ந்து கொண்டே இருந்தான் , கொலை வெறியோடே...

"அய்யோ ..." , தலையில் கை வைத்துக் கொண்டு கண்களை இறுக மூடிக் கொண்டு கதறினாள் , "ப்ளீஸ்...சொன்னாக் கேளு...தயவு செஞ்சு நம்பு....தெரியாம நடந்த ஆக்சிடெண்ட் அது... என்னை விட்டுரு...ப்ளீஸ்..."

'என்னது தெரியாம நடந்த ஆக்சிடெண்ட்டா ..' , சுஜா , 'அப்போ அது கொலை இல்லையா....ஒ மை காட்...தப்பாப் புரிஞ்சுக்கிட்டுப் பழி வாங்குறானா இவன்...?' , சுஜா...

ஏதோ ஒரு தெளிவுக்கு வந்த சுஜாவுக்கு உடனடியாய் , அடுத்து என்ன செய்வதென்று மூளை துரிதமாகத் திட்டம் தீட்டியது...

'எப்படி இவன் கிட்ட இருந்து தப்பிக்கிறது..'

'கொஞ்சம் விட்டா நிஜமாவே கொன்னுருவான் போலிருக்கே...'

'எப்படி இவனைத் தடுத்து நிறுத்துவது..'

'இவனுக்கு எடுத்து சொல்லிப் புரிய வெச்சா கேக்குற மன நிலையில இவன் இருக்குற மாதிரி தெரியலை...'

'அடிச்சுப் போட்டுட்டு தான் இங்கிருந்து ஓடியாகணும்...'

கயலைக் கவனித்தாள்...மரண பயத்தில் கிட்டத்தட்ட செத்து விட்டிருந்தாள் அவள்...

அவனைத் தாக்க , சுற்றி முற்றி ஏதாவது கிடைக்கிறதாவென்று தேடினாள்...

தேடியவளது கண்களில் பட்டது அதே டென்னிஸ் பேட்...

அவன் என்ன செய்கிறானென்று கவனித்துக் கொண்டே அதை எடுக்க ஓடினாள் ...

ஆனால் ,

திடிரென்று ,,, எதோ ஒரு குழந்தை பேசும் குரல் கேட்டு , டக்கென்று நின்றாள்...

'டாடி...எங்க இருக்கீங்க...சீக்கிரம் வீட்டுக்கு வாங்க...'

'டாடி...எங்க இருக்கீங்க...சீக்கிரம் வீட்டுக்கு வாங்க...'

'டாடி...எங்க இருக்கீங்க...சீக்கிரம் வீட்டுக்கு வாங்க...'

திகைத்துப் போன சுஜாவும் கயலும் ஒன்றும் புரியாமல் திறு திறுவென்று முழித்தனர்...

'என்ன சத்தம் அது..'

'எங்க இருந்து வருது...'

அந்தக் குரல் ,,அவனது,, கைக் கடிகாரத்தில் இருந்து ஒலித்தது...

அந்தக் குரல் ஒலித்த நொடியில் சட்டென்று , அவன் முகம் மாறியது...

அவனது முகத்தில் இருந்த கொலை வெறி மறைந்து , முற்றிலும் உடைந்து போய் அழ ஆரம்பித்தான்...

கண்ணாடித் துண்டு , அவனையும் அறியாமல் அவனது கைகளில் இருந்து நழுவி விட்டிருந்தது...

"சஞ்சு...சஞ்சு..." கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி , அடக்க முடியாமல் கொடூரமாய் அழுதான்...

'சஞ்சுங்கிறது இவனோட குழந்தையா...' , சுஜா...

கைக் கடிகாரத்தை நெஞ்சோடு அணைத்தபடி அவன் கதறிக் கதறி அழுது துடிப்பதைப் பார்க்கப் பார்க்க சுஜாவுக்கு அழுகையாய் வந்தது...

என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளவே சற்று நேரம் பிடித்தது இருவருக்கும்...

'ஆனால் , சென்டிமென்ட்டுக்கு இது நேரம் இல்லை...'

'தப்பிக்காட்டி இப்போயே இங்கயே , கதை முடிஞ்சுரும்...'

அவனது கவனம் சஞ்சுவின் பக்கம் திரும்பிய இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட சுஜா ,அவசரமாய் , "கயல் கமான்...ஃபாஸ்ட்..."

என்ன நடக்கிறது என்று ஒன்றும் புரியாமல் அமர்ந்து கொண்டிருந்த கயல் , சுஜா கூப்பிட்டதும் கட கடவென்று கட்டிலில் இருந்து இறங்கி கதவுப் பக்கம் ஓடினாள்..

அவர்கள் இருவரும் தப்பித்து ஓடுவதைப் பார்த்து சட்டென்று சுதாரித்துக் கொண்டு சுய நினைவிற்கு வந்த அவன் ,

"ஏய்..." , கயலின் கையைப் பிடித்து இழுத்தான்..

"ஐயோ....சுஜா....சுஜா..." , கயல்..

திரும்பிப் பார்த்த சுஜா , டக்கென்று கீழே கிடந்த டென்னிஸ் பேட்டை எடுத்து அவனை நோக்கி விசிறி விட்டாள்...

அது நேராக நங்கென்று அவனது நெற்றியில் போய்ப் பட்டு , நெற்றி தெறித்து ரத்தம் வழிந்தது...

அவனுக்கு , வலி தாங்காமல் கண்கள் இருட்டி விட்டது...

அவன் சோர்ந்து விட்டதைக் கவனித்த சுஜா , "கமான் கயல்..."

இருவரும் அந்த அறையை விட்டு வெளியே வந்து படியில் இறங்கி ஓடினார்கள்...

மாடியில் இருந்து கீழே வந்ததும் , கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென்று சுஜா மாமரத்தின் மேலேறி , காம்பவுண்ட் சுவரில் ஏறி நின்று கொண்டு ,

"ம் கயல் ஏறுங்க...சீக்கிரம்..." , என்றாள்...

சுஜா மரத்தின் மேலேயும் சுவரின் மேலேயும் சர்வ சாதாரணமாக ஏறுவதை அதிர்ச்சியாகப் பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள் கயல்...

"அய்யோ கயல் சீக்கிரம்...அவன் வந்துடப் போறான்..."

முன்ன பின்ன சுவர் ஏறிக் குதித்துப் பழக்கம் இல்லாத கயல் , மரத்தின் மீது ஏற முயற்சி செய்து செய்து கீழே விழுந்து கொண்டே இருந்தாள்...

"ஐயோ....கீழ உள்ள அந்த தண்டு மேலக் காலை வெச்சு , இந்தக் கிளையைப் பிடிச்சு ஏறுங்க...கமான் க்விக்.." , சுஜா..பயங்கர பதட்டத்தோடு...

கயல் , சுஜா சொன்னபடி மரத்தில் காலை வைத்து ஏறிக் கொண்டிருந்தாள்..கிளையைப் பிடித்துத் தாங்கலாய் , சுஜாவின் கையைப் பிடித்துக் காம்பவுண்ட் சுவரில் கால் வைக்கப் போன அந்த நொடி , கொஞ்சம் கூட எதிர் பாராத விதமாக எங்கிருந்தோ ஒருவன் தோன்றி இவர்களைப் பார்த்துக் கத்திக் கொண்டே ஓடி வந்தான்..

"ஏய் ...ஏய் ....எங்கடி தப்பிக்க பாக்குறிங்க...."

காம்பவுண்ட் சுவரின் மீது காலை வைத்து ஏறிக் கொண்டிருந்த கயலின் காலைப் பிடித்து அவன் அவளைக் கீழே இழுத்துத் தள்ளினான்...

"அய்யோ ...அம்மா....." , கீழே விழுந்த கயல்...

பயங்கரக் கடுப்பாகி விட்டது சுஜாவுக்கு...சுவரில் இருந்து கீழே குதித்து , கடுப்போடே அவனிடம் வந்தாள்...

அவனோ கயலை வீட்டின் உள்ளே இழுத்துச் செல்வதிலேயே குறியாக இருந்தான்...

"ஏய் ...இன்னும் ரெண்டு செகண்ட் லேட்டா வந்து இருந்தின்னா நாங்க ஓடிப் போயிருப்போம்டா...சரி.... அவளை விடு..." , சுஜா...திமிரான குரலில்...

"என்னடி வாங்கினது ஏதும் பத்தலையா..."

"ஹ...வாங்கினது எல்லாம் தாராளமா போதுண்டா...ஆனா இன்னும் திருப்பிக் குடுக்க வேண்டியது நிறைய பாக்கி இருக்கே..."

சொல்லிக் கொண்டே , அவன் அருகில் மெதுவாக நடந்து வந்து நின்றவள் ,,, டக்கென்று மாடி பால்கனியை சுட்டிக் காட்டி ,

"ஏய் இவன் எங்கிருந்து தப்பிச்சு வந்தான்..?" என்றாள்...

அவன் , கயலின் மீது இருந்த கவனம் சிதறி , சட்டென்று மாடியை நிமிர்ந்து பார்க்க ,

"உங்கப்பன் தான்டா நிக்கிறான் அங்க...இந்தாடா...வாங்கிக்கோ..." , எகிறி ஒன்று விழுந்தது அவனது பின் மண்டையில்...

அவன் நிலை தடுமாறிப் பின் மண்டையைப் பிடித்துக் கொண்டே திரும்பி , பயங்கரக் கோவத்தில் இவளை அடிக்கக் கை ஓங்கினான்...

ஆனால் , அதற்கும் முன்னமே இவள் ஓங்கி அவனது நடுக் கழுத்தில் நச்சென்று ஒரு குத்து விட்டாள்...

காது அடைத்து கதி கலங்கிப் போன அவன் , கீழே விழுந்தான்...

கீழே விழுந்த பிறகும் அங்கிருந்து நகர முயன்ற இவளை விடாமல் , விடாப்பிடியாய் இவளது காலைப் பிடித்துக் கொண்டான்...

"ப்ச்,,டேய் காலை விட்டுத் தொலைடா எருமை..." , சுஜா...

என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்த கயல் , அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து ,,,சுஜாவிடம் நீட்டினாள்...

'ஹும்...இது இருக்குது பாரு...இது அடிக்காம என்கிட்டே நீட்டுது...'

மனதிற்குள் சலித்துக் கொண்ட சுஜா , அந்தக் கல்லை வாங்கி அவனது நடு மண்டையில் ஓங்கிப் போட்டாள்...

நன்றாகவே மயக்கம் அடைந்து சரிந்தே விட்டான் அவன்...

காலை விடுவித்துக் கொண்டு , அங்கிருந்து மீண்டும் தப்பித்துப் போக மரத்தை நோக்கி இருவரும் ஓடும் நேரம் பார்த்து , நிஜமாகவே மேல் மாடி அறைக் கதவு திறக்கப் படும் சத்தம் கேட்டது...

'அய்யோ .....வந்துட்டானா...'

வயிற்றுக்குள் மரண பீதி கலக்கியது கயலுக்கு...

'ஐயோ நெத்தி கிழிஞ்சும் திரும்ப வர்றானே...'

'என்ன செய்ய...'

இருவரும் பயங்கர ஷாக்காகி , ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள , "இப்போ என்ன பண்றது...?" , கயல்...

பலத்த யோசனையோடே கயலைப் பார்த்த சுஜா , அங்கு அடிப்பதற்கு வசமாய் ஏதேனும் கிடைக்குமா என்று தேடினாள்...

'இங்க என்ன ஒரு உருட்டுக்கட்டை இரும்பிக் கம்பி ஒன்னத்தையும் காணோம்...?'

ஆனால் அதற்குள் மாடி அறைக் கதவு திறக்கப் பட்டு அவன் வெளியேறும் சத்தம் கேட்க , அதிர்ந்து போன கயல் , "என்கூட வாங்க ..." , சுஜாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினாள்...

வீட்டின் பின் புறத்தின் இடது புற ஓரமாய் இருந்த மோட்டர் ரூமுக்கு...

மோட்டர் ரூமுக்குள் சென்று அடைந்தவர்கள் கதவை சாத்திக் கொண்டு வெகு அமைதியாக ஒரு ஓரமாகப் பதுங்கிக் கொண்டார்கள்...

யாரேனும் நடமாடும் சத்தம் கேட்கிறதா என்று கவனித்துக் கொண்டே இருந்தது சுஜாவின் காதுகள்...

மாடியில் இருந்து வேக வேகமாய் இறங்கி வந்த அவன் , ஆத்திரம் தாங்காமல் அவனது ஆட்களிடம் கத்திக் கொண்டே அங்கேயும் இங்கேயும் இவர்களைத் தேடுவது தெளிவாகக் கேட்டது...

மரத்துக்கு அருகில் அடி வாங்கி மயங்கிக் கிடந்தவனை எழுப்ப , அவனோ ,

"அண்ணே ...சிருக்கிங்க ரெண்டு பேரும் செவுறு ஏறி எட்டிக் குதிச்சு ஓடிட்டாளுங்க அண்ணே..."

"அவளுங்க ஓடிப் போற வரைக்கும் நீ என்ன .............டா இருந்தே ...?" , அவனை ஆத்திரத்தோடு எட்டி உதைத்த அவன் , ஆட்களிடம் , "டேய் , போய்த் தேடுங்கடா ...எங்க இருந்தாலும் தூக்கிட்டு வாங்க அவளுகளை..."

மோட்டர் ரூமுக்குள் பதுங்கி இருந்த இருவருக்கும் இத்தனையும் தெளிவாய்க் கேட்டது...

மூச்சு விடும் சத்தம் கூடக் கேட்காதவாறு படு அமைதியாகப் பதுங்கி இருந்தார்கள்...

ஆட்கள் ஒவ்வொரு திசையில் கலைந்து போய்ப் பேச்சுக் குரல் கேட்பது கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்தது...

சற்று நேரத்தில் , ஆள் நடமாட்டமும் ஆரவாரமும் சுத்தமாய் அடங்கிப் போக , சற்றே நிம்மதி ஆகி மூச்சு விட்டுக் கொண்டார்கள் இருவரும்...

தலையைக் குனிந்தபடி தரையையே பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து , படு அமைதியாய் உட்கார்ந்து இருந்தாள் கயல்..

அவளது மன நிலையை சுஜாவால் உணர முடிந்தது...

அவளை சுய நினைவிற்குக் கொண்டு வர முயன்றாள் சுஜா...

"இப்போவாவது சொல்லுங்க கயல்...என்ன நடந்துது....சஞ்சு யா......."

சொல்றேன் என்பது போல் கை அசைத்து , சுஜா மேலும் பேசுவதைத் தடுத்து நிறுத்தினாள் கயல்...

சிறிது நேர மௌனத்திற்குப் பிறகு பேச ஆரம்பித்தாள் கயல்...

"கோயம்புத்தூர் ஷாப்பிங் மால் எஸ்கலேட்டர் ல, நான் பேலன்ஸ் மிஸ் ஆகி கீழ உருண்டு விழுந்துட்டேன்னு சொன்னேன் இல்ல...?"

"ம்ம்.."

"நான் கீழ விழுகும்போது , எங்களுக்குக் கீழ போயிட்டு இருந்த ஒரு சின்ன பொண்ணு மேல விழுந்து இருக்கேன்..."

"என்ன....?" , பயங்கர ஷாக்காகி....

"அந்தச் சின்னப் பொண்ணு , அந்த எஸ்கலேட்டர் படியில தலை குப்புற உருண்டு விழுந்து , மண்டைல அடிபட்டு அந்த இடத்துலேயே .........இறந்து போயிடுச்சு...."

குலை நடுங்கியது சுஜாவுக்கு...கயல் சொன்னதைக் கேட்டு...

"எங்களுக்கு என்ன நடந்துதுன்னு எதுவுமே தெரியாது...நான் கீழ உருண்டு விழுந்த அதிர்ச்சில மங்கையும் ஜனனியும் அந்தப் பொண்ணு மேல நான் விழுந்ததைப் பாக்கக் கூட இல்ல..."

"................."

"சுஜா....."

"..ம்ம்."

"அந்தப் பொண்ணு , சஞ்சு , கண்ணு தெரியாத பொண்ணு...."

"அய்யோ...." , வயிறைக் கலக்கியது சுஜாவுக்கு கயல் சொல்வதனைத்தையும் கேட்கக் கேட்க....

தலையில் இரண்டு கைகளையும் கவிழ்த்துக் கொண்டு உட்கார்ந்தே விட்டாள்...

"அந்தப் பொண்ணு....அந்தச் சின்னப் பொண்ணு....சஞ்சு....அதே இடத்துலேயே...........என்னாலதான்..............நான் தான்.........அய்யோ .........." , தலையில் அடித்துக் கொண்டு கதறிக் கதறி அழுதாள் கயல்...

குற்ற உணர்ச்சி அவளைக் குத்திக் கொன்று கொண்டிருந்ததை சுஜாவால் தெள்ளத் தெளிவாய் உணர முடிந்தது...

கயலையே உற்றுப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்து இருந்தாள் சுஜா...

திடிரென்று , சுஜாவின் கைகளை இறுக்கமாகப் பிடித்துக் கொண்ட கயல் ,

"சுஜா, சத்தியமா நான் வேணுமுன்னு செய்யல சுஜா....தெரியாம நடந்துருச்சு சுஜா....."

அவள் பேசிய தொனியைப் பார்த்து அதிர்ந்து போனாள் சுஜா...

அந்தப் பெண்ணின் மரணம் இவளது மன நிலையை வெகுவாகப் பாதித்து இருந்ததை உணர முடிந்தது சுஜாவால்...

எப்படித் தேற்றுவது அவளை என்று தெரியாமல் அவளையே அதிர்ச்சியாய் பார்த்துக் கொண்டிருந்தாள் சுஜா...

திடிரென்று , ஏதோ நினைவுக்கு வந்தவளாய்க் கேட்டாள் ,, சுஜா ,, கயலிடம் ...

"கோயம்புத்தூர்ல நடந்த சம்பவம் இது....உங்களை இந்த ஊர்ல எப்படி அவன் தேடிக் கண்டு புடிச்சு வந்தான்....?"

அதற்கு ,,, கயல் சொன்ன பதிலைக் கேட்டு , கிட்டத்தட்ட மயக்கம் வந்து விட்டிருந்தது சுஜாவுக்கு...


தொடரும்...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.