மனசின் பக்கம் : சேனைப் பிரதிலிபி பாக்ய குரு

சே னைத்தமிழ் உலா நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதையும் அந்தக் கதையையும் மனசில் பகிர்ந்திருந்தேன். அதற்கான பரிசுத் தொகையை நிர்வாகத்தினர் தில்லியில் இருக்கும் காயத்ரி அக்காவுக்கு அனுப்பி அவர் மூலமாக எனது மனைவியின் வங்கிக் கணக்குக்கு வந்து சேர்ந்துவிட்டது. சிறப்பாக போட்டியினை நடத்தி பரிசுத் தொகையையும் விரைவாய் அனுப்பி வைத்த சேனைத்தமிழுக்கு நன்றி.

ச கோதரர் ரூபன் அவர்கள் நடத்திய சிறுகதைப் போட்டியில் பெற்ற பரிசுக்கான பதக்கமும் சான்றிதழும் நான் ஊருக்குப் போவதற்கு முன்பே வந்து எங்கள் வீட்டில் ஆள் இல்லை என தபால்காரர் கொடுக்க மறுத்தபோதும் மனைவியின் அம்மா சண்டை போட்டு வாங்கி வைத்திருந்தார்கள். தற்போது அந்தப் பதக்கமும் சான்றிதழும் எங்கள் வீட்டு ஷோகேசை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. சிரத்தையுடன் அதுவும் அடிக்கடி போட்டிகள் நடத்தி சிறப்பாக செயல்படும் சகோதரர் ரூபன் மற்றும் நண்பர் யாழ்பாவாணன் அவர்களுக்கும் நன்றி.

ப் ரதிலிபி இணையத் தளத்தில் நானும் இணைந்திருக்கிறேன். என்னைப் பற்றியும் எனது பதிவுகளில் சிலவற்றையும் அங்கு பகிர்ந்திருக்கிறார்கள். அதற்கான இணைப்பையும் அவர்களது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்கள். என்னைப் பற்றிய பகிர்வுக்கு இங்கே சொடுக்குங்கள்.

ப்ரதிலிபி தளம் அறிய இங்கு சொடுக்குங்கள்.

பா க்யாவில் தொடர்ந்து எனது கருத்துக்கள் மக்கள் மனசு பகுதியில் வெளிவந்து கொண்டிருக்கிறது. முகநூலில் கேள்வியைப் பகிர்ந்து அதற்கு வரும் கருத்துக்களில் சிறந்தவற்றை அழகாக தொகுத்தளிக்கும் திரு. எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு வாழ்த்துக்கள்.

தி ருச்செந்தூர் செல்லும் போது அங்கிருந்து ஒரு இருபது கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் வனதிருப்பதி சென்று பெருமாளை தரிசித்து வந்தோம். இந்தக் கோவில் நம்ம சரவணபவன் ராஜகோபால் அண்ணாச்சி அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு உண்டியல்கள் இல்லை. சிலைகள் அனைத்துமே மிக அழகாய் தத்ரூபமாய் இருக்கின்றன. மிகப்பெரிய இடத்தில் கோவில் அமைந்துள்ளது. உள்ளே ஹோட்டல்கள் கடைகள் எல்லாம் இருக்கின்றன. இருபது மாடுகளுக்கு மேல் வைத்துப் பராமரிக்கிறார்கள். மாட்டின் பால் அனைத்தும் அபிஷேகத்துக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்களாம்.

கா க்கா முட்டை படம் பார்த்தேன். சேரிச் சிறுவர்கள் இருவரின் பீட்சா ஆசையும் அதன் பின்னான நிகழ்வுகளும் அதை அரசியலாக்கி லாபம் சம்பாதிக்க நினைக்கும் அல்லக்கைகளும், எம்.எல்.ஏவும் என நகரும் படத்தில் அந்த இரண்டு சிறுவர்களும் அருமையாக ஸ்கோர் பண்ணியிருக்கிறார்கள். அதிலும் சின்னவன்... நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறான். கூடை மேல கூடை வச்சு கூடலூரு போன ரம்யா இதில் சேரிப்பெண்ணாக, வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் குடும்பத் தலைவியாக அருமையாக நடித்திருக்கிறார். பேரன்களுக்கு பீட்சா செய்கிறேன் என தோசை மீது குடை மிளகாய் வைத்து செய்து கொடுக்கும் பாட்டி, பேரனின் கேள்வியோடு மரணத்தைத் தழுவி எல்லார் மனதிலும் நிற்கிறார். நல்லதொரு படம்.

போன வருடம் எனது சான்றிதழுக்கு அரபியில் சான்றிதழ் வாங்கும் முயற்சி எடுத்து ஒவ்வொரு படியாக மேலேறி கடையில் கல்வி அமைச்சகத்தில் எனது படிப்புக்கான அரபி சான்றிதழை வெற்றிகரமாக இன்று பெற்றுவிட்டேன். இதற்கான செலவு அதிகம்தான் என்றாலும் இனி அரசாங்க அலுவலத்தில் வேலைக்கு தீவிரமாக முயற்சிக்கலாம். சென்ற முறை இந்தச் சான்றிதழ் இல்லாமல்தான் கிடைக்க வேண்டிய வேலை கிடைக்காமல் போனது. பார்க்கலாம் இறையருள் இருந்தால் மீண்டும் அந்த அலுவலகத்திலே வேலை கிடைக்கும்.

ஊ ருக்குப் போகும்போது நிறுத்திச் சென்ற வேரும் விழுதுகளும் தொடர்கதையை மீண்டும் தொடரலாம் என்று நினைக்கிறேன். அடுத்த பதிவோ அல்லது அதற்கடுத்த பதிவோ இல்லை முன்பு போல் சனிக்கிழமையோ அடுத்த பகுதியைப் பதியலாம் என்று நினைக்கிறேன். இனிமேல்தான் எழுதணும்... எப்பவுமே அந்தந்த வாரம்தான் எழுதுவது வழக்கம் என்பதால் எழுதி பதிவிடுகிறேன். நான்கு அல்லது ஐந்து பகுதிகளோடு முடித்துவிடலாம் என்ற எண்ணம்... பார்க்கலாம் மனசுக்குள் வேர்விடுகிறதா என்பதை...

இ ந்த குருபெயர்ச்சியில் கடனை அடைக்க வேண்டும், நகைகளை திருப்ப வேண்டும், கிராமத்தில் வீடு கட்ட வேண்டும், நல்ல வேலையில் அமர வேண்டும், சிறுகதை தொகுப்பு கொண்டு வரவேண்டும், தொடர்கதையையோ அல்லது கிராமத்து நினைவுகளையோ புத்தகமாக்க வேண்டும் என ஏகப்பட்ட வேண்டும்... நிறைவேற வேண்டும்... குருவின் பார்வை கிடைக்கிறதா பார்ப்போம்.

மனசு தொடர்ந்து பேசும்.

-'பரிவை' சே.குமார்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.