சமூக வளர்ச்சியின் அடித்தளமும் மேற்கட்டமைப்பும்

சமூக உற்பத்தி முறைதான், எல்லா வகையான சமூக உணர்வுநிலைகளையும் தீர்மானிக்கின்றன. உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகள் ஆகிய இரண்டையும் உள்ளடங்கியவையாகும். இந்தப் பொருளாதார அமைப்பே அடித்தளம் என்றழைக்கப்படுகிறது.


தத்துவம், மதம், அரசியல், சட்டம், அறநெறி, பண்பாடு, கலை போன்றவை குறிப்பிட்ட பொருளாதார அமைப்பிற்கு ஏற்பத்தோன்றும் மேற்கட்டமைப்பாகும்.


அடித்தளத்திற்கும் மேற்கட்டமைப்புக்கும் இடையே ஒன்றுடனொன்றான தொடர்பு நிலவுகிறது. இந்தத் தொடர்பில் அடித்தளம் முதன்மையாகவும், மேற்கட்டமைப்பை தோற்றுவிக்கும் காரணமாகவும் இருக்கிறது. ஆகவே சமூகத்தின் அடித்தளத்திற்கு ஒத்த மேல்கட்டமைப்பு உருவாகிறது. இவ்வாறு கூறுவதால் மேற்கட்டமைப்பு என்பது தன்முனைப்பின்றி, அடித்தளத்தின் பிரதிபலிப்பாக மட்டும் செயல்படுவதாக சொல்லிவிட முடியாது. மேல்கட்டமைப்பின் போக்கை மார்க்சியம் மறுத்திடவில்லை. அடித்தளத்தின் மீதான மேல்கட்டமைப்பின் தாக்கம், அடித்தளத்திற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது, இதனால் தான் மேல்கட்டமைப்பின் சுதந்திரம் ஒப்பீட்டு நிலையானது என்ற கருத்தைத் தெரிவிக்கிறது. தீர்மானகரப் பங்காற்றுவது அடித்தளமேயாகும். .


சமூக வளர்ச்சியை உணர்த்துகின்ற அதன் ஆளும் விதி என்று மார்க்சியம் கூறுவதை இன்று பல மார்க்சிய பேரறிஞர்கள் என்றழைத்துக் கொள்பவர்கள், வரலாறு என்பது விதிக்குட்பட்டதல்ல, சமூக வளர்ச்சியை விதியின் வழியில் செல்கிறது என்றெல்லாம் கூறுவது தலைவிதி போன்ற விதிவாதம் என்கின்றனர்.


மார்க்ஸ் வகுத்தளித்திருக்கின்ற அடித்தளம் மேற்கட்டமைப்பு பற்றிய கருத்தாக்கத்தை எந்தளவுக்கு குழப்ப முடியுமோ அந்தளவுக்கு குழப்பி வருகின்றனர். மார்க்சின் இந்த கருத்தாக்கத்தின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல், அல்லது அதனை ஏற்றுக் கொள்ளாமல் மார்க்சியத்தை சிதைத்து வருகின்றனர்.


அடித்தளத்தில் காணப்படும் சமூக வளர்ச்சியின் புறநிலைத் தன்மையையும், மேற்கட்டமைப்பில் காணப்படும் சமூக மாற்றத்துக்கான அகநிலைத் தன்மையும் மார்க்ஸ் விளக்குகின்ற வழிமுறையில் விளக்கிடாமல், மார்க்ஸ் எதனை எதிர்த்து தம் கருத்தாக்கத்தை அமைத்துள்ளாரோ அதற்காக வழக்காடுகின்றனர்.


மார்க்சும் எங்கெல்சும் அடித்தளமும் மேற்கட்டமைப்பும் பற்றி கூறிய கருத்தாக்கத்தை மூன்று வகையில் தொகுத்துப் பிரித்துப் பார்ப்போம். முதலில், அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது என்பதையும். இரண்டாவதில், மேற்கட்டமைப்பு அடித்தளத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தையும், மற்றும் வடிவத்தை அமைப்பதில் பெரிதளவாயிருப்பதையும், மூன்றாவதில், மேற்கட்டமைப்பின் இடைச்செயலை மறுத்திடவில்லை என்பதோடு, இறுதியில் பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருப்பதையும் குறிப்பிடுகிறது.


அடித்தளம் மேற்கட்டமைப்பை நிர்ணயிக்கிறது


மனிதர்கள் தமது வாழ்க்கைக்காக உற்பத்தி செய்திடும் போது, தவிர்க்க முடியாத வகையில் திட்டவட்டமான உறவுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த உறவுகள் மனிதர்களுடைய சித்தங்களிலிருந்து தனித்து புறநிலையாக இருப்பவையாகும். இதுவரை வளர்ச்சியடைந்துள்ள பொருளாதார உற்பத்திச் சக்திகளின் மட்டத்திற்கு ஏற்ப, உற்பத்தி உறவு ஏற்படுகிறது. இந்த உற்பத்தியின் கூட்டுமொத்தமே அன்றைய அரசியல் பொருளாதார அமைப்பாகும், அதுவே அச்சமூகத்தின் அடித்தளமாகும். இந்த அடித்தளத்தின் மீது சட்டம், அரசியல் போன்ற மேல்கட்டமைப்பு எழுப்பப்படுகிறது. இதற்குப் பொருத்தமாக சமூக உணர்வின் வடிவங்கள் தோன்றுகின்றன.


மனிதர்களின் உணர்வுநிலை அவர்களுடைய வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை, அவர்களுடைய சமூக வாழ்நிலையே அவர்களுடைய உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது.. இந்த மாற்றம் விரைவிலோ அல்லது சற்று தாமதமாகவோ நடைபெறலாம். மனிதர்களின் சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வுநிலையை நிர்ணயிக்கிறது. இவ்வகையில் தான் சமூக உணர்நிலையின் மாற்றத்தை புரிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு சமூக அமைப்பும் அதன் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பாக மறைந்திடுவதில்லை. அச்சமூகத்திலுள்ள பழைய உற்பத்தி உறவுகளை அகற்ற வேண்டுமானால், புதிய உற்பத்தி உறவுகள் தோன்றுவதற்கான, பொருளாயத நிலைமைகள் அச்சமூகத்தில் தோன்றியிருக்க வேண்டும்.


அடித்தளத்தில் மேற்கட்டமைப்பின் தாக்கம்


உற்பத்தியும், மறுவுற்பத்தியும், அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தியாகும். ஆனால், மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தாக்கம் செலுத்துவதையும், இடைச்செயல் புரிவதையும் மார்க்சியம் மறுத்திடவில்லை. இந்த இடைத்தொடர்பு மிகவும் தொலைவானதாக இருக்கிறது, முடிவில்லாத தற்செயல் நிகழ்வுகளுக்கு மத்தியில், பொருளாதார இயக்கம் முடிவில் இன்றியமையாததாகத் தன்னை நிறுவுகிறது. மேற்கட்டமைப்பு பல இனங்களில் வடிவத்தை நிர்ணயிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது.


அடித்தளம் மேற்கட்டமைப்பு ஆகியவற்றுக்கிடையேயான இடைச்செயல்


இரண்டாம் நிலையானாலும் சித்தாந்தங்கள் அடித்தளத்தின் மீது எதிர்ச்செயல் புரிவதை மார்ச்சியம் மறுக்கவில்லை. இதனை மறுப்பவர்கள் வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தை இயக்கவியல் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை, காரணத்தை ஒரிடத்திலும், விளைவை வேறோர் இடத்திலும் காண்கிறார்கள். ஆனால் இந்த இடைச்செயல் சார்பானதாகும், மேற்கட்டமைப்பு அடித்தளத்திற்கு கட்டுப்பட்ட வகையில் தனது செயற்பாட்டில் சுதந்திரம் பெற்று அடித்தளத்தில் தாக்கம் செலுத்துகிறது. இந்த சார்பான தாக்கதை மேற்கட்டமைப்பின் முழுச்சுதந்திரம் பெற்றதாகவோ, அடித்தளத்தை நிர்ணயிக்கிற சக்தி உடையதாகவோ கணக்கிடமுடியாது. பொருளாதார இயக்கம் மிகவும் வலிமையானதாகவும், ஆதிமூலமானதாகவும், தீர்மானகரமான சக்தியாகவும் இருக்கிறது.


அடித்தளம் மேற்கட்டமைப்பைத் தீர்மானித்தால் அது பொருள்முதல்வாதம். மேற்கட்டமைப்பு அடித்தளத்தை தீர்மானித்தால் அது கருத்துமுதல்வாதம்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.