மனிதனின் உயரிய படைப்பான வெள்ளிப் பறவை வெண்பஞ்சு மேகங்களை கிழித்துக் கொண்டு உயரே செல்ல ஆரம்பித்தது. விமலின் அருகே அமர்ந்திருந்த பிரத்யுஷா லேசான பயத்துடன் அவனது கரங்களை இறுகப் பற்றிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

விழிகள் இரெண்டும் மூடியிருந்தாலும், அவளது மனதின் அலைபுருதளுக்கேற்ப கருமணிகள் இங்குமங்கும் உருண்டு கொண்டிருந்தது. பிறந்ததிலிருந்து அன்னை, தந்தையுடன் மட்டுமே வெளியிடங்களுக்கு சென்று வந்தவளுக்கு, திருமணம் என்கிற பந்தத்தின் மூலம் பத்து நாட்களுக்கு முன்பு இணைத்த புதிய உறவுடன் வெளி தேசத்திற்கு செல்வது சற்று பயத்தை கொடுத்திருந்தது.

யாரிடமும் நெருங்கி பழகி பழக்கமில்லாதவளுக்கு விமலின் நெருக்கமும், அன்பும் கூட தடுமாற்றத்தையே கொடுத்தது. தங்கை ஷிவானி இவளது குணத்திற்கு முற்றிலும் மாறான குணத்தைக் கொண்டவள். எந்நேரமும் சலசலத்துக் கொண்டிருக்கும் அருவியைப் போல சுற்றியிருப்பவர்களிடம் தன் இருப்பை உணர்த்திக் கொண்டே இருப்பாள்.

அவளது முக்கியமான கேள்வியே “எப்படிக்கா எந்த நேரமும் அமைதியாகவே இருக்க முடியுது? உனக்கே போர் அடிக்காதா?” என்று ஒரு நாளில் பல முறை கேட்டு விடுவாள்.

அதற்கும் மெல்லிய புன்னகை மட்டுமே பரிசாக கிடைக்கும் இவள் தரப்பிலிருந்து. அவளோ கேள்வி கேட்பது மட்டுமே முக்கியம் பதிலேதும் தேவையில்லை என்பதை போல கண்டு கொள்ளாமல் நகர்ந்து விடுவாள்.

திருமணம் நிச்சயமான தினத்திலிருந்து வீட்டிலிருந்த அனைவரும் ‘உன் குணத்திற்கேற்ப அமைதியான வெளிநாட்டு வாழ்க்கை கிடைத்திருக்கென்று கூறிக் கொண்டிருந்தனர்.

விமலுமே தங்கை ஷிவானியைப் போன்று இல்லாது தேவைக்கு மட்டும் பேசும் குணம் உள்ளவனாக இருந்தான். அது சற்று ஆறுதலைக் கொடுத்தது. ஏர்போர்டில் அன்னையும், தந்தையும், தங்கையும் பிரிவை என்னை கலங்கி நின்ற போது கூட தனது உணர்வை அதிகம் வெளிப்படுத்தாமல் லேசான முக மாற்றத்தை மட்டும் காட்டி நின்றிருந்தாள்.

இதோ! நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கத்தார் தலைநகர் தோஹா விமான நிலையத்தை அடைந்தது. விமானம் நின்ற இடத்தை சுற்றிலும் கண்களை ஓட்டினாள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மரமோ, சிறு செடியோ தென்படாமல் வறண்டு போய் காணப்பட்டது.

விமானத்தில் இருந்து இறங்கும் நேரம் புழுதியுடன் அனற்காற்று மேனியை தீண்டிச் சென்றது. நமது ஊருக்கு முற்றிலும் மாறாக எங்கும் அமைதி! அமைதி! பாலைவனத்தின் நடுவே ஆங்காங்கே ஒன்றிரண்டு உயர்ந்த கட்டிடங்கள் தெரிந்தது.

அவள் விழிகள் ஓடிய இடங்களைக் கண்டு “இந்த ஊர் துபாய் மாதிரி அவ்வளவு பெரியது இல்லை. இப்போ தான் வளர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் மிக சுத்தமான நகரம். அமைதியானதொரு வாழ்க்கையை இங்கே வாழலாம். சென்னையை போல, மும்பையை போல பரபரப்பு இருக்காது. அதே சமயம் நகர வாழ்க்கைக்கு உரிய அனைத்தும் இங்கே இருக்கும்” என்றான்.

அவன் அப்படி சொன்னதும் மெலிதாகச் சிரித்துக் கொண்டு மீண்டும் விழிகளை ஏர்போர்ட்டின் பக்கம் திருப்பினாள். சிறிய கல்யாண மண்டபம் அளவிற்கு மட்டுமே இருந்த விமான நிலையத்தில் இமிகிரேஷனை முடித்துக் கொண்டு தங்களது பெட்டிகளை ட்ராலியில் வைத்து தள்ளியபடி வெளியே வந்தனர்.

நமது விமான நிலையத்தில் வாயிலில் கூட்டம் அலைமோதும். வெளியூரில் இருந்து வரும் உறவினர்களை வரவேற்க இரவு பகல் பாராது காத்திருப்பார்கள். ஆனால், இங்கோ ஒன்றிரண்டு டாக்ஸி ட்ரைவர்களைத் தவிர ஈ காக்கை இல்லை.

முதன்முறையாக அமைதியை விரும்பவளின் மனதில் சலனம் எழுந்தது. இதென்ன இத்தனை அமைதி! இங்கு மனிதர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்கிற கேள்வி எழுந்தது.

இப்படி பல்வேறு சிந்தனையுடன் நடந்து கொண்டிருந்தவளை விமலின் குரல் கலைத்தது. “இது தான் நம்ம கார் பிரத்யு” என்றவன் காரின் டிக்கியைத் திறந்து பெட்டிகளை அடுக்கி விட்டு உள்ளே அமர்ந்தான்.

அவன் அருகில் அமர்ந்ததும் சீட் பெல்ட் போட சொல்லிவிட்டு காரை எடுத்தான். விமான நிலையத்தை விட்டு வெளியே சென்ற கார் தோஹா வீதிகளை அடைந்ததும், நகரத்தை பார்வையிட ஆரம்பித்தாள்.

சென்னையில் வாகன நெரிசலை கண்டவளுக்கு வெறிச்சென்று இருந்த வீதிகளும், ஆங்காங்கே ஒன்றிரண்டு கார்கள் செல்லுவதும், ஹாரன் சத்தமில்லாதது மிக அமைதியாக சென்றது அதிசயத்தை வரவழைத்தது. அவன் வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்க, அவளோ வெளியில் தெரிந்த நகரத்தை ஆராய்ந்தபடி அமர்ந்திருந்தாள். அவளது மனமோ காரிலிருந்த அமைதியைக் கண்டு முதன் முறையாக சொல்ல இயலாத உணர்வலையை எழுப்பியது.

தான் பேசவில்லை என்றாலும் தன்னைச் சுற்றி இருப்பவர்கள் பேசுவதை ரசித்துப் பழகியவளுக்கு, இந்த அமைதி சலனத்தை ஏற்ப்படுத்தியது. பல வீதிகளைக் கடந்து இறுதியாக மிகப் பெரிய அபார்ட்மென்ட் முன்பு சென்று நின்றது விமலின் கார்.

பார்கிங்கில் விட்டுவிட்டு தங்களது பெட்டிகளை எடுத்துக் கொண்டு லிப்ட் நோக்கி செல்லும் வரை அவளது விழிகள் சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. அத்தனை பெரிய அடுக்கு மாடி குடியிருப்பில் மனித நடமாட்டமே இல்லாத வனாந்திரம் போன்று காட்சியளித்தது.

அமைதி! அமைதி! அமைதி!

தங்களது தளம் சென்று வீட்டைத் திறந்து உள்ளே நுழைந்து கதவை சாத்தும் வரை யாராவது ஒருவராவது கண்ணில் படமாட்டார்களா என்று ஆவலுடன் எதிர்பார்த்தாள்.

அவளது எண்ண ஓட்டத்தை அறிந்து கொள்ளாமல், கையைப் பற்றி அழைத்துக் கொண்டு வீட்டின் ஒவ்வொரு அறையையும் சுற்றிக் காண்பித்து என்னென்ன பொருட்கள் எங்கே இருக்கிறது என்று காண்பித்தான்.

“கொஞ்ச நேரம் தூங்கி எழுந்திரு பிரத்யு. இன்னைக்கு வெளில சாப்பிட்டுக்கலாம். ரெஸ்ட் எடுத்திட்டு கடைக்கு போய் சாமான்களை வாங்கிட்டு வரலாம்” என்று சொன்னவன், ஹாலில் டிவியை ஆன் செய்துவிட்டு அமர்ந்து கொண்டான்.

சிறிது நேரம் அப்படியே நின்றவள் மெல்ல தங்களது அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தாள். முதன் முறையாக தனிமை உணர்வு அவளை தாக்கியது. தன்னை சுற்றி ஒலித்துக் கொண்டிருக்கும் குரல்களின் ஓசை தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது என்பதை அந்த நிமிடம் உணர்ந்தாள்.

அன்றும் அதற்கடுத்து வந்த நாட்களிலும் தங்களது பிளாட்டில் எதிர் வீடுகளில், அக்கபக்கத்தில் யாராவது தென்படுகிறார்களா? என்று தேடி கலைத்து போனாள்.

அதிசயமாக என்றாவது பேச்சுக் குரல் கேட்கும் போது அவசரமாக வெளியில் எட்டிப் பார்த்து, அங்கே நிற்கும் அரபி குடும்பத்தாரைக் கண்டு அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு கதவடைத்துக் கொள்வாள்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஓர் நாள் விமல் மாலை அலுவலகத்தில் இருந்து சீக்கிரம் வந்திருந்திருந்தான். இங்கு வந்த இரண்டு மாதங்களிலேயே மனைவி மிகவும் சோர்ந்து போனதை உணர்ந்திருந்தான். தனிமை அவளை வாட்டுகிறதோ என்கிற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது. அவளைப் பற்றி அவன் கேள்விப்பட்டவரை அமைதியை விரும்பவள், அதிகம் மக்களுடன் கலந்து பழகாதவள் என்றே அறிந்திருந்தான். அப்படி இருக்கும் போது அவளது சோர்வு அவனை யோசிக்க வைத்தது.

அதிலும் இந்த ஒரு மாதமாக அவளது முகத்தில் லேசாக தெரியும் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று அறிந்து கொள்ளவே விரைந்து வந்திருந்தான்.

காபியை போட்டு அவனிடத்தில் கொடுத்து விட்டு அங்கிருந்து அகன்றவள் அதன் பின்பு அவன் முன்னே வரவே இல்லை. பால்கனியில் இருந்து பேச்சு குரல் கேட்டது.

காப்பி கோப்பையுடன் மெல்ல அங்கே சென்றவன், அங்கு கண்ட காட்சியில் உறைந்து போனான்.

பால்கனியில் எங்கும் தானியங்கள் இரைந்திருக்க, ஒன்றிரண்டு புறாக்கள் கைப்பிடி சுவரில் அமர்ந்திருக்க, “ ஏய்! அரபி புறாவே? இன்னும் என்னை கண்டு எதுக்கு பயம்? சும்மா கீழ இறங்கி வந்து சாப்பிட வேண்டியது தானே?” என்று பேசிக் கொண்டிருந்தாள் பிரத்யு.

முதலில் அவள் பேசியதை கண்டு சாதரணமாக எடுத்துக் கொண்டவன்...அடுத்து அவள் கூறிய வார்த்தைகளில் அவளின் மன நிலையை முற்றிலுமாக உணர்ந்து கொண்டான்.

“நேத்து நீ சொன்ன கதையை பத்தியே நினைச்சிட்டு இருந்தேன் அரபி புறாவே. எதுவுமே நம்ம அருகில் இருக்கும் போது அதனோட அருமை தெரியிறதே இல்லை. கிடைக்காத போது தான் அதனோட அருமை புரிகிறது. என் தங்கை அதிகம் பேசுறான்னு சொல்லி கடவுள் கிட்ட ஒரு நாள் அவள் வாயை கட்டி போட்டுடுங்கன்னு வேண்டிகிட்டேன். ஆனா, இன்னைக்கு எங்காவது ஒரு பேச்சுக் குரல் கேட்காதான்னு ஏங்கி கிட்டு இருக்கேன். அதுவும் தப்புன்னு நீ எனக்கு உணர்த்திட்ட. நீங்க எல்லாம் மரங்களில் கூடு கட்டி வாழ்ந்து பழகியவர்கள், எங்களோட வளர்ச்சியில் உங்களுக்கு தங்க இடம் இல்லாம மக்களோடவே அவர்கள் கட்டி இருக்கிற அடுக்கு மாடி குடியிருப்புகளின் ஜன்னலோரங்களில் வாழ பழகி கொண்டீங்க. அது போல சூழ்நிலைகளுக்கேற்ப வாழ பழகிக்கனும்ன்னு சொன்ன உனக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல புறாவே?” என்று புறா தன்னிடம் பேசுவதாக எண்ணி பேசிக் கொண்டிருந்தாள்.

தன்னை மணந்து தனக்காக சுற்றத்தை எல்லாம் துறந்து வந்தவளின் மனதை புரிந்து கொள்ளாமல், அவளது தேவைகளை அறிந்து கொள்ளாமல் தான் நடந்து கொண்ட விதத்தை எண்ணி வெட்கமடைந்தான்.

அவன் வந்து நின்று தன்னையும் புறாவையும் கவனிப்பதையோ அறியாது மேலும் அதனுடன் சந்தோஷமாக கதை பேசிக் கொண்டிருந்தாள். அதை கண்டவனது கண்கள் கலங்க மெல்ல பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே சென்றான். அவனைக் கண்டதும் புறாக்கள் பறந்தோட, தன்னருகே வந்து நின்றவனை அதிசயமாக பார்த்தாள்.

“நீங்க டிவி பார்க்கல? நான் பேசினது உங்களுக்கு தொந்திரவா இருந்துதா?” என்று பதட்டத்துடன் கேட்டாள்.

மேலும் அவளருகே நெருங்கி தோளோடு அணைத்து “இல்லடா! நீ எனக்கு தொந்திரவா?” என்றவனை அதிசயத்துடன் நிமிர்ந்து பார்த்தாள்.

லேசாக கண்களை சிமிட்டி “ இந்த இந்திய சிட்டோட பேச எனக்கு மட்டும் தான் உரிமை உண்டு. அரேபிய புறாவுக்கு இல்லை” என்றான்.

அவனை லேசாகப் பிடித்து தள்ளியவள் “ இல்ல..இந்த சிட்டு கிட்ட பேசுகிற முதல் உரிமை அரேபிய புறாவுக்கு மட்டும் தான். இந்த ஆறு மாதமா அரேபிய புறா மட்டும் தான் எனக்கு துணையா இருந்தது. அதனால அதுக்கு தான் முதல் உரிமை” என்றாள்.

இரு கைகளையும் உயரே தூக்கி “ சரிங்க சிட்டு! என்னோட உரிமையை அந்த புறாவுக்கு விட்டு கொடுக்கிறேன். நான் செய்த தப்பிற்காக” என்றான்.

அவனது செயலில் மனம் நெகிழ்ந்து மார்பில் சாய்ந்து கொண்டவள் “நீங்க எந்த தப்பும் செய்யல” என்றாள் கனிவுடன்.

அவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த அரேபிய புறா பறந்து சென்று தனது ஜோடியின் அருகில் அமர்ந்து கொண்டது. அதன் கண்களில் ஒரு திருப்தி தெரிந்தது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.