நிழல்கள் தனது உருவத்தை மாற்றும் ஆற்றல் இயற்கையாகவே பெற்றிருக்கின்றன.பகலில் சூரியன் ஆட்சி செய்தாலும்,இரவில் இருள் ஆட்சி செய்தாலும், நிழல் பகலில் தெரிந்தும், இரவில் யாருக்கும் தெரியாமலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அதேபோல் தான் பேய்களும், பிசாசுகளும் இடத்திற்கு ஏற்ப தன்னை பக்குவப்படுத்தி கொள்கிறது. பகலில் ஓய்வு எடுத்து கொண்டும், இரவில் ஆட்சி செய்து கொண்டும் இருக்கின்றன. அதனாலேயே பிசாசிற்கு ஆங்கிலத்தில் ஷேடோ(Shadow) என்று அழைப்பதும் உண்டு. இங்கு எப்படி ஷேடோ இரவில் ஆட்சி செய்தது என்று பார்ப்போம் .


முதல் மர்மம்

நேற்றைய கிறிஸ்துமஸ் விழாவால் Boston (அமெரிக்காவில் உள்ள மாநகரம் ) நகரமே விழாக்கோலமாக இருந்தது. ஆனால் இன்றோ நேற்று இரவு நடந்த சம்பவத்தால் நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது. ஆம் நேற்று இரவு போஸ்டன் நகரில் உள்ள அனைத்து கிறித்துவ தேவாலயங்களில் வழிப்பாடுகள் நடந்து கொண்டு இருந்தன. குழந்தைகளும், இளைஞர்களும், வயதானவர்களும் குடும்பம் குடும்பமாக ஆலயத்தில் வழிபட்டு கொண்டு இருந்தார்கள். இரவு ஒரு மணியளவில் தேவாலயத்தில் மின்சார தடை ஏற்பட்டு இருள் சூழ்ந்தது ,இரண்டு நிமிடத்திற்கு பிறகு அனைவரும் திகைத்து போய் நின்றார்கள்,காரணம் ஆலயத்தில் மூன்று உடல்கள் உயிரற்று சடலங்களாக கிடந்தது. யாருக்கும் என்ன நடந்தது என்று யூகிக்க கூட முடியவில்லை, சற்று நேரத்தில் போலீஸ் வந்தது, என்ன நடந்தது என்று விசாரித்துவிட்டு,சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, மருத்துவ முடிவுக்காக காத்திருந்தனர்.

மருத்துவக் குழு என்ன முயன்றும் தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை.போலீசார் வேறொரு கோணத்தில் விசாரிக்க ஆரம்பித்தனர், விசாரித்ததில் இறந்த மூவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டுபிடித்தனர். பிறகு போலீசார் இறந்தவர்களின் வீட்டிற்கு சென்று,ஏதேனும் தடயம் கிடைக்குமா என்று பார்த்தனர், தடயம் ஏதும் கிடைக்காததால், சில பொருட்களை விசாரணைக்காக எடுத்துக்கொண்டு சென்றனர், விசாரணையை வெவ்வேறு கோணத்தில் விசாரிக்க தொடங்கினர்,அவர்களது இறப்பில் சந்தேகிக்கும் படியான ஒரு தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை .


இரண்டாவது மர்மம்

ஒரு வாரம் சென்றது, புத்தாண்டு வந்தது, கொண்டாட்டம் மீண்டும் கலை கட்ட தொடங்கியது. கிறிஸ்துமஸ் அன்று நடந்த நிகழ்வால் போலீஸ் பாதுகாப்பு இரண்டு மடங்கு அதிகமாக போடப்பட்டு இருந்தது.பாஸ்டன் நகரில் உள்ள அனைத்து மதுபான விடுதியிலும் ஒரே குத்தாட்டமும்,கும்மாளமுமாக இருந்தது. இளைஞர்களும், வயதானவர்களும் போதையில் தடுமாறிக்கொண்டு இருந்தார்கள். இரவு 12 மணி ஆனதும் கொண்டாட்டத்திற்க்காக இரண்டு நிமிடம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அந்த இரண்டு நிமிடம் அனைவரும் விசிலடித்து கொண்டும், முத்தம் கொடுத்து கொண்டும் ,நடனம் ஆடிக்கொண்டும் மகிழ்ச்சியாக கொண்டாடி கொண்டு இருந்தனர். மின்சாரம் மீண்டும் வந்ததும் கொண்டாட்டம் சோகக் கூட்டமாக மாறியது, இம்முறை இரண்டு சடலங்கள் கடற்கரையோரம் ஒதுங்கி இருந்தது. என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் வந்து உடல்களை மீண்டும் சோதனைக்காக அனுப்பி வைத்தனர். இம்முறை சோதனையின் முடிவிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இறந்தவர்கள் இருவரும் ஒரே கல்லூரியை சேர்ந்தவர்கள் என்றும், விடுதியில் ஒரே அறையில் தங்கி இருந்தார்கள் என்றும் கண்டு பிடித்தனர்.

அந்நகரத்தில் உள்ள அனைவரும் பெரும்பாலும் இரவில் வெளிவர பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர், தொலைக்காட்சிகளில் அனைத்தும் இந்நிகழ்வுகள் குறித்தே வாக்குவாதம் நடைபெற்று கொண்டு இருந்தது. போலீசார் இறந்தவர்களின் அறையில் இருந்த அனைத்து பொருட்களையும் விசாரணைக்காக எடுத்து சென்றனர் .


மூன்றாவது மர்மம்

ஒரு மாதம் கழித்து நகரமே அமைதியாக இருந்தபோது, அந்த அமைதியை கெடுக்கும் விதமாக , மீண்டும் இரு பெண்களின் மரணம் நிகழ்ந்தது . நடந்ததும் இரவு நேரத்தில் தான். கல்லூரியின் விடுதியில் தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது நடந்த சம்பவம். இம்முறையும் மின்சாரம் தடை ஏற்பட்டபோது நிகழ்ந்தது. இம்முறை போலீசாருடன் உளவுத்துறையும் விசாரணையில் இறங்கியது .

உளவுத்துறை விசாரணையில் ஒரு முக்கியமான தகவல் கிடைக்கிறது. இறந்த மாணவிகளின் அறையில் மொத்தம் மூன்று பெண்கள் தங்கி இருந்தார்கள் என்றும், அதில் இருவர் இறந்ததாகவும், அன்று பிறந்தநாள் கொண்டாடிய பெண் மட்டும் உயிரோடு இருப்பதை விசாரணையில் தெரிந்துகொண்டனர். அந்த மாணவியிடமிருந்து தங்களது விசாரணையை தொடங்கினர் .இதற்கு முன் நடந்த இரு சம்பவங்களுக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரிக்க்க ஆரம்பித்தனர் .

இம்மூன்று சம்பவங்களில் இறந்த அனைவருமே மது போதையில் இருந்ததால், விசாரணையின் முதல் கேள்வியும் அது சம்மந்தமாகவே இருந்தது. இந்த கேள்விக்கு அந்த பெண் தனக்கும் மது குடிக்கும் பழக்கம் இருப்பதாகவும், அந்நிகழ்வின் போது தானும் மது அருந்தி கொண்டுதான் இருந்தால் என்பதை தெரிவித்தால் . இதனால் குடி போதையால் யாரும் இறந்து இருக்க வாய்ப்பு இல்லை என்று போலீசாரும், உளவுத்துறையினரும் கருதினர் .


மர்மத்தின் தொடர்பு

போலீசார் அந்த பெண்களின் அறையில் இருந்த பொருட்களையும் விசாரணைக்காக எடுத்து சென்றனர். இம்மூன்று சம்பவங்களில் சேகரித்த அனைத்து பொருட்களையும் போலீசார் உளவுத்துறையிடம் கொடுத்தனர். உளவுத்துறையினர் தங்களது முழு திறமையையும் உபயோகப்படுத்தி நடந்த மூன்று சாம்பவங்களுக்குமே உள்ள சில ஒற்றுமைகளை கண்டு பிடித்தனர்.

முதல் ஒற்றுமை, அனைத்து சம்பவங்களிலும் மின்சாரம் இல்லாமல் இருட்டிலே நடந்துள்ளது. இரண்டாவது ஒற்றுமை, மூன்று சம்பவங்களில் இருந்து சேகரித்த பொருட்களில் இருந்து ஒரு perfume பாட்டிலை எடுத்தனர். அதாவது அந்த பாட்டில் இறந்தவர்களின் அனைவரது வீட்டிலும், அறையிலும் பொதுவாக காணப்பட்டது. நடந்த கொலைகளுக்கு இந்த பாட்டில் மூலம் எதாவது தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டனர். இந்த பாட்டில் எப்படி அனைவரது இறப்பிலும் சம்பந்தப்பட்டுள்ளது என்பதை தீவிரமாக விசாரிக்க தொடங்கினர்.


ஷேடோவின் வாசம்

ஷேடோ, அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வாசம் உடையது, அந்த வாசம் வீசிய திசையை நோக்கி தேடி சென்றனர் போலீசார். ஆனால் அது எங்கு வாங்கப்பட்டது? எப்போது வாங்கப்பட்டது? இந்த வாசனை திரவியத்தால் எப்படி மரணம் நிகழும் என்பதை பற்றி எந்த ஒரு தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

எனவே அந்த பாட்டிலை சோதனைக்காக அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர், சோதனை செய்தவர்கள் அந்த வாசனை திரவிய பாட்டிலில் நச்சுத்தன்மை உள்ளதா என்பதை ஒரு நாயின் மீது பரிசோதித்து பார்த்தனர். யாரும் எதிர்பார்க்காத வகை அந்த நாயும் உயிர் இழந்தது. எவ்வளவு முயற்சி செய்தும் எந்தவொரு நச்சுத்தன்மையும் அவர்களால் அதிலிருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.

நகரமெங்கும் தேடிப்பார்த்தும் எந்தவொரு கடைகளிலும் அந்த மாதிரியான perfume பாட்டிலை விற்பனை செய்யவில்லை,இருப்பினும் இறந்தவர்களின் வீட்டில் மட்டும் எவ்வாறு இது கிடைத்தது என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தது .

மூன்றாவது கொலை சம்பவத்தில் உயிர் பிழைத்த மாணவியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, சம்பவத்தன்று தான் திரவியத்தை உபயோகிக்கவில்லை என்றும், இறந்த தன் தோழிகள் அதை உபயோகப்படுத்தியதாகவும் தெரிவித்தாள். இதிலிருந்து போலீசார் ஒரு முடிவிற்கு வர, உளவுத்துறையினரும் இறந்த அனைவரும் ஷேடோ திரவியத்தை உபயோகப்படுத்தியதை உறுதி செய்கிறார்கள்.

மீண்டும் விசாரணையில், இது போன்ற ஒரு perfume பாட்டிலை தனது பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்தில் ஒருமுறை தான் பார்த்திருப்பதாக தெரிவித்தாள் .உடனே போலீசாரும், உளவுத்துறையினரும் அப்பல்கலைக்கழக ஆராய்ச்சி கூடத்திற்கு சென்றனர். அந்த மாணவி கூறியபடியே அங்கு இருந்த கண்ணாடி பெட்டியில் அந்த பாட்டில் இருந்தது, பிறகு அங்குள்ள தலைமை விஞ்ஞானியிடம் நடந்த சம்பவங்களையும், சம்பவங்களுக்கு காரணமான அந்த வாசனை திரவிய பாட்டிலை பற்றியும் விசாரித்தனர். இத்தகவலை கேட்டு மிகவும் வியப்பில் ஆழ்ந்த தலைமை விஞ்ஞானி " தான் எதிர்பார்த்தபடியே ஆபத்து நடந்து விட்டதாக " கூறினார்.பிறகு அந்த பாட்டில் அந்த ஆராய்ச்சி கூடத்தில் எப்படி வந்தது என்பதை போலீசாரிடம் சொல்ல ஆரம்பித்தார் .


ஷேடோவின் பிறப்பு

ஹார்வார்ட் பல்கலைக்கழகம் போன்ற மாபெரும் பல்கலைக்கழகங்களில் பேய், பிசாசுகள் மீதான ஆராய்ச்சிகள் மேற்கொள்வது வழக்கம், அதற்காக தனியாக பாடத்திட்டங்களும் வகுக்கப்பட்டு பேய்களை பற்றி அனைத்து விதமான தகவல்களும் கற்பிக்கப்படுகின்றன, இதற்காகவே இரண்டு வருட பட்டப்படிப்பும் உள்ளது,மாணவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பும் இப்படிப்பிற்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதுபோன்ற பட்டப்படிப்பிற்கு இரண்டாம் ஆண்டு இறுதியில் பேய்,பிசாசுகள் மீது ஆராய்ச்சி செய்து அதற்கான ஆய்வறிக்கை சமர்ப்பிக்க வேண்டும், அத்தகைய ஆய்வறிக்கைகளின் தரம் குறித்தே தேர்வு முடிவுகளும் இருக்கும் என்றும் கூறினார். இதுபோன்ற ஆராய்ச்சிகள் எந்த ஆராய்ச்சி கூடத்திலும் மேற்கொள்ளலாம் என்றும் ஆராய்ச்சியின் முடிவில் பெரும் விளைவுகள் ஏற்பட்டுள்ளதால் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இரண்டு ஆண்டிற்கு முன்னதாகவே பேய், பிசாசுகள் மீது ஆராய்ச்சிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும் கூறினார் .

இரண்டு ஆண்டிற்கு முன்னர் வேறொரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூன்று மாணர்வகள் இது போன்ற ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இங்கு வந்தனர், அப்போது அவர்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு "பெர்ஃயூம் கோஸ்ட்ஸ் (perfume Ghosts)"அதாவது பேய்களுக்கு பிடித்தமான வித விதமான வாசனைகளை சேகரித்து அதன் மூலம் ஒரு திரவியத்தை தயார் செய்து அந்த திரவியத்தின் மூலம் பேய்,பிசாசுகளை வர வைப்பது தான்.

சில பேய்களுக்கு சிகரெட் புகையின் வாசம் பிடிக்கும், சில பிசாசுகளுக்கு அழுகிய முட்டையின் நாற்றம் பிடிக்கும்,அது போல் வேறு சில பேய்களுக்கு குறிப்பிட்ட பூக்களின் வாசம் பிடிக்கும் , இதுபோன்ற குறிப்பிட்ட வாசங்களையும் , மனங்களையும் ஒன்று சேர்த்து ஒருவிதமான திரவியத்தை தயார் செய்து, அந்த திரவியத்தின் மூலம் பேய், பிசாசுகளை வரவழைத்து பேசுவது தான் அவர்களது ஆராய்ச்சியின் நோக்கமாக இருந்தது .

இத்தகைய ஆராய்ச்சி இது வரை யாரும் மேற்கொள்ளவில்லை என்றும், இது புதுவிதமான ஆராய்ச்சி என்பதால் தானும் இதற்கு உதவி செய்ய ஒத்துக்கொண்டதாக தெரிவித்தார் அந்த விஞ்ஞானி . மூன்று மாத கடின உழைப்பால் ஒருவழியாக அந்த திரவியத்தை தயார் செய்து, அதனை சோதனை செய்ய அம்மூன்று நபர்களில் ஒருவர் மீது அந்த திரவியத்தை உபயோகப்படுத்த முடிவு செய்து , அவ்வாறு சோதனை செய்யும் பொழுதுதான் தாங்கள் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டது பெருந்தவறு என்று கூறினார் , சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவன் அடுத்த இரண்டு மணிநேரத்தில் இறந்து விட்டதாக திடுக்கிடும் தகவலை கூறினார், அதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.


மர்ம முடிச்சுகள்

பேய்,பிசாசுகளுக்கு திரவியத்தின் வாசத்தை பொறுத்து அதனுடைய நடவடிக்கைகள் இருக்கும், ஒருவித வாசத்தால் பிசாசுகளை மகிழ்விக்கவும் முடியும், வேறு சில வாசத்தால் அவர்களை கோபப்படுத்தவும் முடியும். தாங்கள் தயார் செய்த திரவியம் பேய், பிசாசுகளை கோபப்படுத்தியதோடு இல்லாமல் அந்த வாசனை திரவியத்தை உபயோகப் படுத்தியர்வர்களை அந்த கோபத்தினால் கொல்லவும் செய்தது .

இதனால் இந்த ஆராய்ச்சியின் முடிவுகளை சமர்ப்பிக்க முடியவில்லை என்றும் , வெளி உலகிற்கு தெரிய வந்தால் பெரும் ஆபத்து நேரும் என்பதால், அந்த வாசனை திரவிய பாட்டிலை மற்றவர்களுக்கு தெரியாதவாறு தானே வைத்துள்ளதாகவும் தெரிவித்தார் அந்த விஞ்ஞானி .

திரவிய பாட்டிலை மண்ணில் புதைக்கவோ, தீயில் எரிக்கவோ, கடலில் வீசவோ முடியாது என்றும், அதனால் வெளி உலகிற்கு ஆபத்து நேரிடலாம் என்றும் தெரிவித்தார், இருள்தான் பேய் பிசாசுகளுக்கு மிகவும் பிடித்தமான நேரம் என்பதால் வாசனை திரவியத்தை உபயோகிப்பவர்களுக்கு இரவில் மட்டும் தான் ஆபத்து நேரும் என்றும் கூறினார்.இதற்கு மாற்று வழி ஏதேனும் உள்ளதா என்பதை இன்றளவும் ஆராய்ச்சி செய்து வருவதாக கூறினார் .

ஆராய்ச்சியில் இருக்கும் இந்த வாசனை திரவியம் வெளி உலகிற்கு எப்படி வந்தது? என்று போலீசார் விஞ்ஞானியிடம் கேட்டனர். அதற்கு அவர் தனக்கு இதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூறினார் .மேலும் கூறுகையில், ஆராய்ச்சியில் ஈடுபட்ட மற்ற இரு மாணவர்களுக்கு அதனுடைய சூத்திரம்(formula)தெரியும் என்றும், அவர்களால் இதை தவறாக உபயோகப்படுத்தி வெளி உலகிற்கு விற்று இருக்கலாம் என்றும் கூறினார்.

உடனே போலீசார் மற்ற இரண்டு நபர்களைப்பற்றிய தகவல்களை பெற்றுக்கொண்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். அடுத்த இரண்டு நாட்களில் அவர்களை கைது செய்து விசாரணையை தொடங்கினர்.விசாரணையில் இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணம் தாங்கள் தான் என்றும், வாசனை திரவியத்தை தாங்களே தயார் செய்து தங்களுக்கு பிடிக்காதவர்களுக்கும், தங்கள் எதிரிகளுக்கும், தங்கள் காதலை ஏற்க மறுத்த பெண்களுக்கும் திரவியத்தை உபயோகப்படுத்த வைத்ததாகவும் தெரிவித்தனர். திரவியத்தை உபயோகப்படுத்திய அனைவரும் இப்போது உயிருடன் இல்லை என்பதையும் தெரிவித்தார்கள்.

போலீசார் இவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். இது போன்ற திரவியத்தை பொதுமக்கள் யாரும் உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தினர்.

Xxxxxxxxxxxxx


நிலவில் காலடி வைப்பதும், வேற்று கிரகவாசிகளை பற்றி ஆராய்ச்சி செய்வதிலும், மிருகங்களை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதும்,அந்நிய சக்திகளை மோப்பம் பிடிப்பதிலும் தான் மனிதர்களின் ஆர்வம் மிகுதியாக உள்ளது, தொழில்நுட்பத்தில் வானுயர பறந்தாலும், மனிதன் முதன் முதலில் உலகில் தோன்றிய வரலாற்றை இதுவரை யாராலும் முழுவதுமாக கண்டறிய முடியவில்லை. மனிதன் எப்போது தன்னை பற்றி முழுவதும் தெரியாமல் மற்றவைகளை ஆராய ஆரம்பித்தானோ அப்போதிலிருந்து தொடங்கியது அவர்களது அழிவு. இது அணுகுண்டு ஆராய்ச்சியிலும் பொருந்தும், பேய் பிசாசுகளின் மீது ஆராய்ச்சிகளும் இதற்கு சான்றாகும், இதன் தீர்வு மனிதன் முதலில் இயற்கையோடு இணைந்து மனிதனாக வாழ்வது மட்டும் தான்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.