இதயம் - 7

அன்றைய நீண்ட நெடிய நாளின் அலுப்பு தீர வெதுவெதுப்பான நீரை பாத்டப்பில் நிரப்பி, அரைமணி போல அதில் அமிழ்ந்து புத்துணர்வுடன் வெளியே வந்தான் சுமந்த். மனம் பரபரவென்றிருந்தது. கடந்த சில நாட்களாக திட்டமிட்டு வெற்றிகரமாக செயலாற்றி, அப்பாவின் ‘நாராயண்’ குழுமத்துக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது மிகுந்த மனநிறைவைத் தந்தது. சேனல் தொடங்கியது முதல் பலதரப்பட்ட சறுக்கல்களை சந்தித்து, பிறகு ஒருவாறாக நிலைப்படுத்தி, கொஞ்சம் கொஞ்சமாக வெற்றிகளை சுவைக்கும் ஒவ்வொரு தருணத்திலும் அவன் மனம் இவாறான பரபரப்பை அனுபவித்தே வந்துள்ளதை எண்ணி அவனின் உதடுகள் வெறுமையாய் புன்னகைத்தன.

‘என்னுடைய வெற்றிகளை ஷேர் பண்ண கூட யாருமில்லாம....என்ன வாழ்க்கை இது? மா, மிஸ் யூ சோ மச் மா!’ போட்டிகள் நிறைந்த துறையில், எதிர்நீச்சலிட்டு சமாளித்து, வெற்றி இலக்கை வெகுபாடுபட்டு எட்டி, இன்று அவ்வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து போராடியபடி, சமூக நலனையும் தன்னுடைய கொள்கையில் இணைத்துக் கொண்ட அந்த இளைஞன், தன்னந்தனிமையாய் உணர்ந்தான்.

மனம் சிறைபட்டாற்போல தவிக்க.....’கொஞ்ச நேரம் சிட்அவுட்ல காத்து வாங்கலாம்....ஐ மே ஃபீல் பெட்டர்!’ தனக்குத் தானே பேசியபடி கதவைத் திறந்து, அறையை ஒட்டியிருந்த சிட் அவுட்டில் வந்தமர்ந்து கொண்டான். பக்கவாட்டில் அமைந்திருந்த நீச்சல் குளத்தில் குளித்து வந்த குளுங்காற்றை கண்மூடி சுவாசித்தான்.

மெல்ல அன்றைய நாளின் நிகழ்வுகளை அசை போட்டான். எல்லாம் சரியாக திட்டமிட்டபடி நடக்கவேண்டும் என்று அன்று காலை முதலே இருந்த மெல்லிய படபடப்பு, டென்ஷன், துரைசாமி மாமாவை அசந்தர்ப்பமாய் போலிஸ் வாகனத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் பார்த்தது, என்று அந்தந்த நிகழ்வுகள் படமாய் ஓட ஓட அவன் முகம் விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்க, ஷ்ரேயாவுடனான டெக்ஸ்டிங் நினைவில் அவன் முகத்தில் புன்னகை உறைந்து போனது. முகம் கனிந்து போனது.

‘ஒஹ் மை காட்! அவளை ஆன்லைன் வர சொல்லி இருந்தேன். இட்ஸ் மிட்நைட் ஆல்ரெடி....’ பரபரப்பாய் எண்ணியபடி எழுந்தான்.

‘கடவுளே! அவ ஆன்லைன்ல இருக்கணும்...இருக்கணும்....இருக்கணும்....’ கடவுளுக்கு கட்டளை பிறப்பித்தபடி மொபைலை எடுத்தான்.

இரவு வெகு நேரம் வரை உறக்கம் பிடிக்காமல் சோஷியல் மீடியாவில் வலம் வந்து நியூஸ் ஃபீட்களை வாசித்து நேரம் கடத்தி, ‘நைட் ஆன்லைன் வருவே தானே..’ என்ற அவனின் ஆர்வமான விசாரிப்பின் குளுமையில் காத்திருந்தவள், நள்ளிரவைத் தாண்டியும் அவனிடமிருந்து மெசேஜ் வராமல் போக, சலிப்புற்று... தாயின் அறைக்குள் தனக்கென போட்டு வைத்திருந்த கட்டிலில் வந்தமர்ந்தாள் ஷ்ரேயா.

புவனாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு, தனிப்பட்ட வேலைகளுக்கு மட்டுமே தன்னுடைய அறையை உபயோகிக்க முடிந்தது. இரவு படுக்கை தாயின் அறையில் என்றாகிப் போனது. கடந்த இரண்டு மூன்று நாட்களாக கீமோவின் பாதிப்பில் உறக்கம் தொலைத்திருந்த புவனா, அன்று ஏதோ தூக்க மாத்திரையின் விளைவால் கொஞ்சம் அசந்து உறங்கிக் கொண்டிருந்தார். தாயைப் பார்க்கப் பார்க்க நெஞ்சம் பதறியது அவளுக்கு.

‘கடவுளே! இப்படி ஒரு நிலை யாருக்கும் வரக்கூடாது..!’ மனம் இறைஞ்சியது. இத்தனைக்கும் காரணமான தகப்பன் மீது வழக்கமாய் கொப்பளிக்கும் கோபம் இன்றும் கிளர்ந்து மனத்தின் மேற்பரப்புக்கு வந்து ஆட்டம் காட்டியது.

‘சரி சரி! அதான், ஏதோ நம்மால முடிஞ்சது முயற்சி பண்ணிட்டு இருக்கோமில்ல...’ தனக்குத் தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள். சுமந்த் மிகத் திறமையாய் செயாலற்றிய நினைவில் அவள் முகம் கனிந்து போனது. மெல்ல அலைபேசியை இயக்கினாள். வாட்ஸ்அப் நோடிபிகேஷன் அவனிடமிருந்து தகவல் வந்திருக்கும் இனிய செய்தியை உரைக்க.... ‘காட்! ஹி இஸ் ஆன்லைன்...’ மனதோடு பேசியபடி ஓபன் செய்தாள்.

“ஹாய்! சாரி சாரி சாரி....கொஞ்சம் லேட் ஆச்சு...!”

“தூங்க போயிட்டியா....”

“அதுக்குள்ள ஏன் தூங்க போனே?”

“நான் பேசணும்னு சொல்லி இருந்தேன் தானே!”

வரிசையாய் மெசேஜ் போட்டு வைத்திருந்தான். அவள் தனக்காகக் காத்திருப்பாள் என்ற அவனின் எதிர்பார்ப்பு, சொன்னபடி நேரத்துக்கு வர முடியாமற்போன இயலாமை, அவள் அவனுக்காக காத்திருக்கவில்லை என்ற ஏமாற்றம், லேசான உரிமை என, அவனின் அனைத்து உணர்வுகளும் அவ்வரிகள் வாயிலாக அவளின் உணர்வுகளுக்குள் கடத்தப்பட, ஏனோ அவளுக்கு கண்கள் கலங்கிப் போனது.

ஒரு காலத்தில் எல்லோராலும் கொண்டாடப்பட்டு, ஆர்வப் பார்வைகள் ஏக்கப் பார்வைகள் அனைத்தும் ஒரு கட்டத்தில் ஏளனப் பார்வையாகி, துச்சாதனப் பார்வையாக திரிந்து போனதில் மனம் கசந்து போயிருக்க, சமுதாயத்தில் மிக உயரிய அந்தஸ்தில் இருக்கும் ஒரு திறமையான இளைஞன், மிக முக்கியமாக, எல்லோரிடத்திலும் நல்ல பெயருடன் விளங்கும் இளைஞன், தன்னிடத்தில் ஆர்வத்துடன் பேச விழைவது...

உள்ளுக்குள்ளே ஏதோ ஒன்று அசைந்தாற்போல உணர்ந்தாள் ஷ்ரேயா...

‘மே பீ....என்னைப் பத்தி தெரிஞ்சா...இவன் வேற மாதிரி கூட பேசலாம்...சொல்றதுக்கில்லை..’ மனம் தன் போக்கில் யோசித்தது.

‘இப்போதைக்கு கிடைக்குற இந்த சின்ன சந்தோஷத்தை அனுபவிச்சிக்கோ! பின்னாடி வர்றதை பிறகு பார்த்துக்கலாம்....’ ஆத்மார்த்தமான நட்புக்காய் காய்ந்து, வறண்டு, ஏங்கிக் கிடந்த அந்த இளம் நெஞ்சம், தவித்த வாய்க்கு கிடைத்த இளநீராய் அவனின் நட்பை பருகிக் கொள்ளத் துடித்தது.

“இல்லல்ல...இவ்வளவு நேரம் வெயிட் பண்ணி பார்த்துட்டு இப்ப தான் ஆஃப்லைன் போனேன்....” அவளின் பதிலில் அவன் குளிர்ந்து போனான்.

“இன்னைக்கு கொஞ்சம் ஹெவி வொர்க்....பார்த்திருப்பியே ப்ளஸ்டூ ரிசல்ட் வர்றதுக்கு முன்னாடியே மெடிகல் சீட் பேரம்....அது வெளியே வந்ததுல நம்ம பங்கும் கொஞ்சம் இருக்கு....” ஏதோ உந்துதலில் சொல்லி விட்டான்.

“ஒஹ் ரியல்லி...!” அவனின் மனம் திறந்த பேச்சு அவளுக்கு ஆச்சர்யத்தை அளித்தது.

“என்னமோ தெரியல.....உன்கிட்ட ஷேர் பண்ணலாம்...நீ ட்ரஸ்ட்வொர்த்தின்னு உள்மனசு சொல்லுச்சு...அதான்....” லேசாகத் தயங்கினான்.

“நான் யார்கிட்டயும் லூஸ் டாக்ஸ் விட மாட்டேன் சுமந்த்! நீங்க என்னை ட்ரஸ்ட்வொர்த்தின்னு எப்போதும் நம்பலாம்....”

“தேங்க்ஸ் பாரதி! அப்புறம் சொல்லு...உன்னைப் பத்தி....” மனதுக்குள் ஷ்ரேயா என்று உச்சரித்தபடி அவன் கேள்வியாய் இழுக்க...

“பாரதி இஸ் மை பென் நேம்...”

“ஒஹ்! என்கிட்ட ரியல் நேம் ஷேர் பண்றதுல உனக்கு எதுவும் தயக்கமா? பிரச்சனை வரும்னு நினைக்கறியா?”

“முதல்ல தயக்கம் இருந்தது....இப்ப இல்லை....அதுவும் பிரண்ட்ஸ்னு நீங்க சொன்ன பிறகு பாரதின்னு கூப்பிட்டா என்னவோ போல இருக்கு...”அவள் மெல்ல தயங்கித் தயங்கி தனது மனக் கதவைத் திறந்து வெளியே வருவது அவனின் அகக்கண்ணுக்கு புலப்பட்டது.

சந்தோஷமாய் சிரிக்கும் ஸ்மைலி அனுப்பினான்.

“ஷ்ரேயா...” தனது பெயரை அவள் அனுப்ப.....பதிலுக்கு சிரிக்கும் பூங்கொத்துகள் அனுப்பினான்.

“என்னை நம்பினதுக்கு தேங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்...” அவனின் மந்தகாசப் புன்னகை அச்செய்தியில் தெரிய, அதை உள்வாங்கி அவளும் புன்னகைத்தாள்.

“மற்றபடி என் ப்ரோபைல் டீடெயில்ஸ் எல்லாமே உண்மை தான்...” அவள் சொல்ல அவன் ஆமோதித்துக் கொண்டான்.

“பிஈ கம்ப்யூடர் சயன்ஸ் பண்ணி இருக்க.... ஜாப் ஆப்பர்சூனிடீஸ் கொட்டி கிடக்குது....” நல்ல கல்வித் தகுதி இருந்தும், வேலையில் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆச்சர்யத்தை ஏற்படுத்த, அவளைக் கிண்டி கிழங்கெடுக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.

“இல்ல...வீட்ல என்னோட பிரசன்ஸ் கொஞ்சம் தேவைப் படுது. அதான் எதுவும் ட்ரை பண்ணாம இருக்கேன்...” அவனின் ஒவ்வொரு கேள்விக்கும் மிகத் தயங்கி, யோசித்தே அவள் பதிலளிப்பதை அவன் துல்லியமாக உணர்ந்து கொண்டான்.

“நீங்க என் கிட்ட பேசுவீங்களோ என்னவோன்ற சந்தேகத்துல தான் ஸ்டோரி நடுவுல க்ளூஸ் குடுக்கலாம்னு நினைச்சேன்....இனிமே இங்கேயே குடுத்துடவா?” இதை சாக்கிட்டு தன்னுடைய தொடரை வாசிக்கும் கொடுமைக்கு அவனை ஆளாக்க வேண்டாம் என்று தோன்ற மெல்ல கேட்டாள்.

“இல்லல்ல...அது ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கு... ஏதோ பசில்(puzzle) சால்வ் பண்ற மாதிரி. அது அப்படியே கண்டினியூ ஆகட்டும். பட் டைம் கிடைக்கும் போது என்னோட ப்ரீயா பேசணும்....ஓகே....” அவன் டீல் போட அவள் சம்மதித்தாள்.

“ஹ்ம்ம் ஷ்ரேயா....!” அவன் கற்கண்டு தித்திப்பில் விளிக்க அவள் திகைத்தாள்.....உள்ளுக்குள் ஏதோ ஒன்று இளகி உருகி வழிந்து உருண்டோடியது.

“ம்ம்...”

“பேசின கையோட சேட் ஹிஸ்டரி கிளியர் பண்ணிடு....ரிஸ்க் எடுக்க வேண்டாம். எந்த பக்கமிருந்து எது வரும்னு சொல்ல முடியாது. பட்...ஐ ம் ஆல்வேஸ் வித் யூ....அது மட்டும் நினைவில் வை...” அவனின் செய்தியில் ஒரு வித கட்டளை இருந்தது.

“ஷூர் சுமந்த்....!” அவன் குட் நைட் சொல்லியபடி ஆஃப்லைன் போக....அவள் மீண்டுமொருமுறை அவனுடனான உரையாடலை வாசித்து மனதிலேற்றிக் கொண்டு, மனமே இல்லாமல் சேட் ஹிஸ்டரி கிளியர் செய்தாள்.

அவளுக்கு எவ்வாறு தகவல்கள் கிடைக்கின்றன என்பது போன்ற கேள்விகளைக் கேட்காமல், மிக நாசூக்காக, நட்பாக அவன் பேசிய விதம் அவளை வெகுவாகக் கவர்ந்தது.

‘வெரி டீசன்ட் கய்..’ அவள் மனம் அனிச்சையாய் பாராட்டியது.

தன்னுடைய சிறு வெற்றியை அவளிடம் லேசாக கோடிட்டுக் காட்டி விட்டதில் மனத்தை அடைத்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு வகை பாரம், விலகினாற்போல உணர்ந்தான் சுமந்த். அந்த நூதன உணர்வு தந்த நிறைவிலும், களைப்பிலும், நித்திரையில் சுகமாக அமிழ்ந்து போனான்.

வழக்கமாக காலை உணவை அறைக்கே தருவித்து, வெளிநாட்டு ஆங்கில செய்திச் சேனல்களில் மூளையை செலுத்தியபடி உண்பவன், அன்று ஏனோ கீழே இறங்கி வந்தான். தன்னுடைய பதின் பருவத்தில், தாய் அருகிருந்து பரிமாற இதே உணவு மேஜையில் உணவுண்ட நினைவுகள் அவனது நெஞ்சத்தில் அலை அலையென கிளம்பியது.

சமையல்காரர் சங்கரன் ஓடோடி வந்தார்.

“தம்பி! உட்காருங்க.....” அவனின் நிறைவான மிடுக்கான தோற்றத்தை கண் நிறைய உள்வாங்கியபடி வெண்பொங்கலை பரிமாறினார்.

“இதை சாப்பிட்டு நான் குறட்டை விட்டு தூங்கவா அண்ணா?” லேசாக சிரித்தபடி கேட்க....

“கொஞ்சமா தான் வெச்சிருக்கேன்...சாப்டுட்டே இருங்க...உங்களுக்கு பிடிச்ச முறுகல் தோசை கொண்டு வரேன்..” அவர் விரைய... அவன் பொங்கலை கொறித்துக் கொண்டே பூஜை அறைப் பக்கமாக பார்வையை ஓட்டினான்.

‘மா! நீங்க இருக்கும் போது செய்யுறது மாதிரியே தினம் சுத்தமா துடைச்சு அழகா கோலம் போட்டு விளக்கேத்தி வைக்க சொல்லிருக்கேன். ஆனா சாமி கும்பிட தான் மனசே வரல...’ மனதுக்குள் மிகக் கசப்பாய் புன்னகைத்துக் கொண்டான்.

அவனுக்குப் பிடித்த விதமாய் குறைவாக எண்ணெய் விட்டு முறுகல் தோசை வர, உண்டுகொண்டிருந்த வேளையில் தந்தையும் வந்து இணைந்து கொண்டார்.

“அப்பனும் புள்ளையும் சந்திக்கறதே அபூர்வமா தான் இருக்கு...” சொல்லியபடி அமர்ந்து கொண்டார். ‘வலிய வந்து சிக்கிட்டேன் போல’ மனதுக்குள் நொந்து கொண்டு தலையசைத்தான்.

சத்யநாராயணன் அரசியல்வாதிகளுக்கே உரிய சகல லட்சணங்களுடன் இருந்தார். தும்பைப்பூ வெள்ளையில் வேட்டி சட்டை...கருகருவென்று டை அடிக்கப்பட்ட மீசை தலைமுடி என்றிருந்தாலும் திருத்தமாக மரியாதையான தோற்றத்தில் இருந்தார். ஆரம்ப காலத்தில் இருந்ததை விட தற்போது இமேஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதை அவன் அறிந்தே இருந்தான். தன்னுடைய அடாவடித் தனங்களை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் மிகத் தன்மையாகவே பொது வாழ்வில் கலக்கிக் கொண்டிருந்தார்.

“உனக்கு எதுவும் லீட் கிடைச்சுதா சுமந்த், அந்த வெள்ளைச்சாமி யாரு என்னன்னு? ஒரு தவணை பணத்தை மட்டும் குடுத்துட்டு, வேணும்னே போய் கம்ப்ளைன்ட் பண்ணிருக்கான். இதுக்கு பின்னாடி யாரு இருக்காங்கன்னு ஒரு க்ளூவும் கிடைக்கலை. காசு வாங்காம எந்த ஸெல்ப் பைனனன்சிங் காலேஜ்ல சீட் குடுக்கறாங்க? என்னமோ நாம மட்டும் தான் காசு வாங்கிட்டு சீட் குடுக்கற மாதிரி....” அவர் குரல் கடைசி வாக்கியத்தில் தேய்ந்து பொங்கலுடன் உள்ளே போனது.

“என்னை எதுக்கு உங்க பிஸ்னெஸ்ல கூட்டு சேர்க்கிறீங்க?” அவன் இடக்காகக் கேட்க....

“சரி! நான் தான் காசு வாங்கினேன் போதுமா...” என்றவர்...

“இதெல்லாம் ஒண்ணுமில்லாத மேட்டர்....அதை விடு.....சென்ட்ரல் மினிஸ்டர் சச்சிதானந்தன் அவர் பொண்ணை உனக்கு குடுக்கணும்னு ரொம்ப பிரியப்படறார். ஒன்பது எம்பி சீட் கைல இருக்கு. சென்ட்ரல்ல கூட்டணி ஆட்சி...நம்ம ஆளுங்கட்சி எப்ப பார்த்தாலும் ‘ஆதரவை விலக்கிக் கொள்வோம்னு’ மிரட்டிட்டே இருக்கு...பிஎம் செம கடுப்புல இருக்காரு. இந்த சம்பந்தம் மட்டும் வொர்க் அவுட் ஆச்சுன்னா மத்திய அரசுக்கு ஆதரவு குடுத்து குறைஞ்சது ரெண்டு காபினட் மினிஸ்டர் போஸ்ட் வாங்கிடுவேன். என்ன சொல்ற..?”

மகனின் மணவாழ்க்கையையும் அரசியலாக்கி கலந்து கட்டினார் அவனைப் பெற்றவர். அந்தப் பெண்ணையும் ஓரிரு முறை பார்டிகளில் சந்தித்திருக்கிறான். ஒருமுறை அதிவேகத்தில் காரை ஓட்டி, சாலையோரத்தில் உறங்கிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளிக்கு சாவு மணி அடித்த பெருமையும் அப்பெண்ணுக்கு உண்டு. அந்த அதிவேகத்துக்கு காரணம் என்ன என்பது விவாதத்துக்கு உரிய கேள்வி; மத்திய மந்திரியின் செல்வாக்கில் அவ்வழக்கு ஒன்றுமில்லாமல் பிசிபிசுத்துப் போனது தனிக் கதை.

‘மனுஷன் மூளை எப்போதும் இப்படி ஆக்டிவா குள்ளநரித்தனமாவே யோசிக்குதே? இவரை பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா?!’ தந்தையின் தன்மைகளில் வழக்கம் போல தலை சுழல, மனம் ஆச்சர்யக்குறியை பதிவு செய்தது.

‘அரசியவாதிங்க மூளை எப்போதும் யாரை கவுக்கலாம், இல்ல யாரும் நம்மை கவுத்துடுவாங்களோ அப்படின்னு அலெர்ட்டா இருப்பதால தான் அவங்க நீண்ட ஆயுளோட இருக்காங்க...அதே கவர்மென்ட் ஜாப்ல இருப்பவங்க ரிடையர் ஆனதும் ஏதோ ஹெல்த் ப்ராப்ளம் வந்து போய் சேர்ந்துடறாங்க....’ மனதுக்குள் எண்ணியவனாக....

“சாரி! எனக்கு கல்யாணம் பண்ற எண்ணமில்லை. இனி அது பத்தி பேசாதீங்க....” என்று வார்த்தைகளால் கத்தரி போட்டான்.

“டேய்! நான் சொல்றதை கொஞ்சம் காது குடுத்து கேளு...” அவர் மேற்கொண்டு ஏதோ சொல்ல வர, இவன் உணவு முடித்து கைகழுவி வந்தான்.

“இந்த வயசுல கல்யாணம் பண்ணாம சாமியாரா போக போறியா? சாமியாருகளே... பளிங்கு மாளிகைல...இல்லாத வீர விளையாட்டெல்லாம் விளையாடிட்டு இருக்காங்க. அனுபவிக்க வேண்டிய வயசுல அனுபவிக்காம நரம்பு தளர்ந்து போன பிறகா அனுபவிப்ப? வாலிபம் போயிருச்சுன்னா.....” அவர் பேசிக் கொண்டே போக, கண்டுகொள்ளாமல் காபிக்காக காத்திருந்தான்.

அவரின் அலைபேசி அடிக்க பேச்சுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.

“யோவ்! என்னதான்யா நினைச்சிட்டு இருக்கான் அந்த கலெக்டரு? மணல் அள்ளாம கட்டிடம் எப்படிய்யா கட்ட முடியும்? அதிகாரிகளை விட்டு ஃபைன் போட வெச்சான்...கட்டியாச்சு. இன்னும் என்ன வேணுமாம்?” அவர் இரைந்து கொண்டிருக்க இது விவேக் அண்ணன் பற்றிய உரையாடல் என்பது சுமந்துக்கு சொல்லாமலே விளங்கியது.

சலனமின்றி காபியை பருகிவிட்டு, சிரமப்பட்டு உணர்வு துடைத்த முகத்துடன் வெளியேறினான்.

‘கல்யாணமாம்? அந்த பந்தத்து மேல மரியாதை இல்லாத இந்தாளுக்கு அந்த வார்த்தயை உச்சரிக்க கூட எந்தத் தகுதியும் இல்லை. இதுல இவரு சொல்ற பொண்ணை நான் கட்டணுமாம்...என் மனசு சொல்லணும்! இவ தான் வேணும்னு என்னோட இதயம் கேட்கணும்!’ கட்டுக்கடங்காமல் கிளம்பிய கோபத்தில் ஸ்டீரிங் வீலை ஓங்கிக் குத்தினான்.

‘வர வர...இந்த வீட்டுல ரொம்ப மூச்சு முட்டுது....என்னால முடியல. ஷிப்ட் ஆகிடறது பெட்டர்....’ அவன் தனியாக போய்விடுவது பற்றி தீவிரமாக சிந்திக்கத் தொடங்கினான்.

அலுவலகம் செல்ல மனமில்லாமல் மாற்றுப்பாதையில் கடற்கரைக்கு காரை செலுத்தினான். அன்று அதிசயமாக சற்று மேக மூட்டமாக இருக்க, வெயிலின் உக்கிரமின்றி கடற்காற்றின் விசை சற்று அதிகமாகவே இருந்தது. வின்ட்ஸ்க்ரீனை இறக்கிய கணத்தில் முகத்தில் மோதிய கடற்காற்று, மனத்தில் எரிந்து கொண்டிருந்த கோப நெருப்பை சற்றே சாந்தப்படுத்தியது. கண்மூடி சீட்டில் சரிந்து கொண்டான். தூரத்தே தெரிந்த நீலக் கடலும் ஆர்பரிக்கும் அலையின் ஓசையும் மட்டுமே சிந்தையில் நிறைய, கசப்பான நினைவுகளின் மிச்சத்தை அவ்வழகிய இயற்கையின் பேரோசை... சப்தமின்றி சுத்தம் செய்தது. நொடிகள் நிமிடங்களாக பல்கிப் பெருக, பத்து நிமிடங்களில் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு எழுந்து விட்டான்.

மனத்தின் கோபம் முற்றிலுமாக வடிந்து போயிருக்க... ‘அவர் அப்படித் தான்னு தெரிஞ்சும் அவரைப் பார்த்து கோபப் படறது என்னோட முட்டாள்தனம். இனி இந்த முட்டாள்தனம் செய்யக் கூடாது. ஐ ஷுட் ஹான்டில் ஹிம் இன் எ மெச்சூர்ட் வே! மனசுக்கு பிடிச்ச விஷயங்களை நினைக்கணும்...வேண்டாத குப்பைகளை ஒதுக்கித் தள்ளணும்...’ என்று எண்ணிக் கொண்டபடி காரைக் கிளப்பினான். ‘பிடிச்ச விஷயம்’ என்றதும் ஷ்ரேயாவின் நினைவு வர, முகம் தன்னால் புன்னகையைப் பூசிக் கொண்டதை அவனால் தவிர்க்கவே இயலவில்லை.

அவனுக்கு தகவல்தர பல மட்டங்களில் ஆட்கள் இருந்தாலும் அவளின் அணுகுமுறையில் இருந்த ஏதோ ஒரு கவர்ச்சியில், அவன் அவளின் கோரிக்கைக்கு உடன்பட்டான். அவளுடைய தகவல்களை அவன் கொஞ்சம் குறுக்குசால் ஓட்டி சரி பார்க்கவும் தவறவில்லை. என்றாலும் அவளிடம் அதை வெளிப்படுத்திக் கொள்ள அவனுக்கு மனமில்லாமலே இருந்தது.

அவள் சர்ச்சையில் சிக்கிய போலிஸ் அதிகாரியின் மகள் என்பதை அறிந்திருந்த காரணத்தால், அந்த சர்ச்சைக்குரிய அரசியல்வாதியின் மகன் அவளுடைய மனவோட்டத்தை துல்லியமாக கணித்திருந்தான். அவள்பால் கொஞ்சம் கொஞ்சமாக கனிந்து கொண்டிருந்தான்.


இதயம் இன்னும் கேட்கும் ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.