' ஏய் கீதா ' என்னடி யோசனை

'ஒன்னுமில்லடி '

' ம்... வா.... படிக்க... நாளைக்கு கணக்கு பரீட்சை இருக்கு முழுஆண்டு தேர்வுன்றதயே மறந்துட்டையா.... ' என்று கீதாவை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றாள், அவள் தோழி சுபா.

இருவரும் பத்தாம் வகுப்பு படிக்கின்றனர். பக்கத்து பக்கத்து வீடு. சிறு வயது முதலே தோழிகள் தான்.

உள்ளே சென்ற இருவரும் பரீட்சைக்கு படிக்கத் தொடங்கினர்.

இடையிடையே கீதா ஏதோ யோசனைக்குப் போகவும் சுபா அவளைக் கண்டித்தாள்.

அவளது யோசனைக்கு காரணம் வருண் தான். அதே தெருவில் கடைசி வீட்டில் இருக்கும் பையன். அவளது பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிப்பவன். அவனைப் பார்க்கும் போதெல்லாம் தன்னை மறந்தாள் கீதா. அவளுக்குத் தெரியும் படிக்கும் வயதில் இது தவறு என்று இருப்பினும் அவன் இவளைப் பார்க்கும் பார்வை இவளை ரசிக்கும் விதம் இவளையும் அவனை பார்க்கத் தூண்டியது. பள்ளிச் செல்லும் போதும் ஆங்காங்கு நின்று இவளை ரசிப்பான். இப்பொழுது அவளது முழுக் கவலையே இனி அவனை பார்க்க முடியாதே என்பது தான். பரீட்சை முடிந்ததும் அவன் கல்லூரிப் படிப்பிற்காக வெளியூர் செல்கின்றான் இனி அவனை எப்போது பார்க்க முடியுமோ என்று ஏங்கினாள்.

பரீட்சையும் முடிந்தது.

அவனும் பரீட்சை முடிந்த கையோடு ஊருக்கு கிளம்பிவிட்டான். கீதா அவளது வீட்டு வாசலில் நின்றபடியே பார்த்துக் கொணடிருந்தாள். அவன் வாசலில் அமர்ந்து ஷு மாட்டிக் கொண்டிருந்தான். அவன் பார்வை அடிக்கடி அவள் மீது பட்டு மீண்டது. கீதாவிற்கு அவன் கிளம்புகின்றானே என்ற வருத்தத்தில் கண்ணீர் வரத் தொடங்கியது. அதை மறைக்க அவள் வீட்டினுள் சென்றுவிட்டாள்.

தேர்வு முடிவு வரும் நாளும் நெருங்கியது.

என்பது சதவீதத்துடன் தேர்வு பெற்ற கீதா பதினொன்றாம் வகுப்பு முதல் குரூப்பில் சேர்ந்தாள். சுபாவும் அவள் வகுப்பிலே சேர்ந்தாள்.

நாட்கள் மிக வேகமாக ஓடியது.

அவன் நினைவும் அவள் மனதில் ஆழமாக பதிந்தது.

பன்னிரண்டாம் வகுப்பும் முடிந்தது.

பள்ளி படிப்பை முடித்த சந்தோஷத்தில் தனது தோழியை அழைத்துக் கொண்டு அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்றிருந்தாள்.

பிரகாரம் சுற்றிக் கொண்டிருக்கும் போது யாரோ தன்னை உற்று நோக்குவது போல் உணர்ந்தவள் சற்றும் முற்றும் பார்வையை சுழற்றினாள். கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தடி நிழலில் நின்று கொண்டு இவளையே பார்த்துக் கொண்டிருந்தான், வருண்.

இரண்டு வருடங்களில் தீபாவளி, பொங்கல் என எந்த பண்டிகைக்கும் வராதவன் இன்று திடீரென்று வந்திருக்கின்றானே என எண்ணியவள் சந்தோஷத்தில் குதித்தாள். தாவணியின் அவன் முதன் முதலில் தன்னை பார்ப்பதை எண்ணி வெட்கமும் அடைந்தாள். அவள் முகம் வெட்கத்திலும் மகிழ்ச்சியிலும் அழகாய் மின்னியதைப் பார்த்த சுபா, ' என்னடி திடீர்னு உன்னோட முகத்தில இவ்வளவு சந்தோஷம் வெட்கம் வேற அப்படி யார பார்த்து வெட்கப்படுற ' என்று வினவியவாறே அவள் முகத்தை ஆராய்ந்தாள்.

' போடி அதெல்லாம் ஒன்னுமில்ல. வா.... நாம வீட்டுக்குப் போகலாம் என்று தோழியை இழுத்துக் கொண்டு சென்றாள். வருணும் பின்தொடர்ந்தான் தோழிகள் அறியாதவாறு.

தோழியிடம் மறைக்கிறோம் என்ற கவலை தொற்றிக் கொண்டது, கீதாவிடம்.

மறுநாள் தோழிகள் இருவரும் வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அதே சமயம் வருணும் வாசலில் வந்தமர்ந்தான். கீதாவின் கண்கள் வருணிடம் செல்ல அதே சமயம் வருணும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். இருவரது கண்களும் மனமும் ஐக்கியமானது. சுபா, தான் மட்டும் பேசிக் கொண்டிருக்கிறோம் அவளிடம் இருந்து பதிலைக் காணோமே என்று எண்ணியவள் அவளைத் திரும்பிப் பார்த்தாள். அவளது கவனம் இங்கில்லை என்று அறிந்தவள் அவள் கண்கள் பார்க்கும் திசை பார்த்தவள் அங்கே வருணும் இவளைப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்தாள். என்ன நடக்குது இங்க என்று எண்ணியவளாய் கீதாவை உலுக்கினாள். சுபா தன்னை காண்பதைக் கண்டதும் வருண் அவ்விடம் விட்டு நகன்றான்.

' ஏய் என்னடி நடக்குது இங்க. நீங்க இரண்டு பேரும் மெய் மறந்து பார்த்துகிட்டிருக்கீங்க. எனக்கென்னவோ இது சரியா படல உங்க வீட்டுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான் ' என்ற சுபாவின் கைகளைப் பிடித்தாள், கீதா.

' சுபா பிளீஸ்டி நீ எதுவும் சொல்லிடாதடி. எனக்கு வருண ரொம்ப பிடிச்சிருக்கு இரண்டரை வருஷமா நான் அவன தான் நெனச்சுகிட்டு இருக்கேன். இதுவரைக்கும் நாங்க இரண்டு பேரும் ஒரு வார்த்தை கூட பேசினது கிடையாது. அவன் என்னை பார்க்கிற பார்வையில ஒரு ஈர்ப்பு தெரியுது. அவனும் என்னை விரும்புறானு நெனைக்கிறேன் ' னு சொன்னவள் நிமிர்ந்து தோழியின் முகத்தைப் பார்த்தாள்.

' நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இல்லைனு நினைச்சேன் ஆனா இது நாள் வரைக்கும் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாமலே மறைச்சிட்டே இல்ல '

' பிளீஸ் சுபா என் மேல கோவுச்சுகாதடி சொல்ல கூடாதுனு மறைக்கல. அவனோட மனசுல என்ன இருக்கு எங்க இரண்டு பேருக்கிடையில என்ன நடக்குதுனு எனக்கே தெரியல அதான் உன்கிட்ட எதுவும் சொல்லல என்ன மன்னிச்சிடு சுபா பிளீஸ் ' என்றவள் கண்களில் கண்ணீரோடு தோழியைத் தழுவிக் கொண்டாள்.

அவளும் சமாதானம் ஆனாள்.

கீதா கல்லூரி செல்லத் தொடங்கினாள். சுபாவிற்கு அவர்களது வீட்டில் வசதி கம்மி என்பதால் படிக்க வைக்கிற காசுக்கு திருமணம் செய்துவிடலாம் என எண்ணி திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

நாட்கள் மிக வேகமாக ஓட, கீதாவும் தனது கல்லூரி படிப்பை முடித்துவிட்டாள்.

இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு முறை கூட வருணை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை இருப்பினும் அவன் நினைவுகளுடனே இருந்தாள்.

வீட்டில் மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கினர். அவள் இதயம் படபடக்கத் தொடங்கியது. அவன் காதலிப்பதாய் எதுவும் சொல்லாத போது வீட்டில் என்னவென்று சொல்வது. செய்வதறியாது தவித்தாள். சுபாவும் ' அறியா பருவத்தில் மனதில் ஏற்பட்ட ஈர்ப்பு அதை காதல்னு மனச போட்டு குழப்பிக்காத அந்த பையனையும் பார்த்து இத்தனை வருஷமாச்சு அவன் உன்னை விரும்புறதா இருந்தா இந்நேரம் சொல்லிருக்கமாட்டானா இன்னும் எதையாவது மனசில போட்டு குழப்பிகாம வீட்டுல பார்க்கிற மாப்பிள்ளைய கல்யாணம் செய்துக்கோ கீதா ' என்று எவ்வளவோ கூறியும் அவள் ஏற்கவில்லை.

' என்னால முடியாதுடி என்னோட மனசு முழுவதும் வருண் தான் இருக்கான். மனசுல அவனை நினைசுகிட்டு இன்னொருத்தனோட என்னால வாழ முடியாது. என்னோட காதல் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு அது நிச்சயம் எங்களை சேர்த்து வைக்கும் ' னு கூறும் தோழியை என்ன செய்வதென்றே அவளுக்கு தெரியவில்லை.

இந்நிலையில் வருண் தனது மருத்துவ படிப்பை முடித்து அதே ஊரில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியில் அமர்ந்தான்.

ஒரு நாள்-

கீதாவின் பெற்றோர் அவளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதைப் பற்றி பேசிக் கொண்டிருந்த சமயம் வருண் அவர்கள் வீட்டிற்கு வந்தான். கீதா கோவிலுக்கு செல்வதைப் பார்த்துவிட்டு தான் வந்தான். அவளது பெற்றொரிடம் தனது மனதில் இருப்பதைக் கூறினான். நீங்கள் சம்மதம் தெரிவித்தால் எங்கள் வீட்டில் பேசி பெண் பார்க்க அழைத்து வருகிறேன் என கூறினான். அவனது நேர்மை அவர்களை கவர்ந்தது. அவனை முன்பே பார்த்திருக்கிறார்கள் தான். நல்ல பையன். நல்ல வேலையில் இருக்கின்றான். கீதாவிற்கும் அவனைப் பிடிக்கும் என எண்ணியவர்கள் அவனிடம் சம்மதம் தெரிவித்தனர்.

கோவிலில் இருந்து வரும் போது அவன் நினைவுகளின் உந்துதலால் தற்செயலாக வருணின் வீட்டைப் பார்த்தாள். அவன் வீட்டின் வாசல் அருகே நின்றிருந்தான். இவளைப் பார்த்து அழகாக புன்னகைத்தான். இவளுக்கு மூச்சே நின்று விடும் போலிருந்தது. இமைக்க மறந்து அவனைப் பார்த்தாள். இருவரது பார்வையும் ஒன்றாக கலந்தது. யுகயுகமாய் காத்திருந்தது போல் ஒரு தவிப்பு இருவர் மனதிலும். பார்வைத் தாழ்த்தியவள் வீடு சென்று தான் நிமிர்ந்தாள்.

மறுநாள் மாலை வருண் தனது பெற்றோரின் சம்மதத்துடன் கீதாவை பெண் பார்க்க அழைத்து வந்தான்.

மறு நாளே வரவும் கீதாவின் பெற்றோர்க்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. வருணின் பெற்றோரை இன்முகத்தோடு வரவேற்றனர். இது எதுவும் தெரியாமல் அவளோ வருணை நினைத்துக் கொண்டு கனவுலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். வருண், கீதாவின் பெற்றோரிடம் அனுமதி பெற்று அவள் அறைக்குச் சென்றான். யாரோ வரும் அரவம் கேட்கவும் திரும்பியவள் அங்கே வருணைக் கண்டதும் சிலை போல் ஆனாள். அவனைக் கண்டதில் மகிழ்ச்சியும் இப்படி திடீரென வந்து நிற்கிறானே பெற்றோர்கள் பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற பயமும் அவள் கண்களில் மாறி மாறி தெரிய அவள் அருகே சென்றான்.

அழகாக புன்னகைத்தவன் என்னோட பெற்றோரும் உன்னோட பெற்றோரும் சம்மதிச்சு தான் நான் உன்னை பெண் பார்க்க வந்திருக்கேன் என்று சொன்னதும் அவளுக்கு மகிழ்ச்சியில் கண்ணீர் பெருகியது. வருண் தனது மனதில் இருந்த காதலை அவளிடம் வெளிபடுத்தினான். அவளை தன்னவள் ஆக்கினான். காதல் நாயகியும் அவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டாள்.

பெற்றோரின் ஆசியோடு தோழியின் வாழ்த்தோடு இனிதே நடந்தேறியது கீதா வருணின் காதல் திருமணம்.

- நித்யஸ்ரீ

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.