பிஞ்சுக் குழந்தை!... அவளுக்கு மனம் வரவில்லை. ஆனால், வேறு வழியில்லை. கை நீட்டிக் காசு வாங்கியாகி விட்டது. அதற்குண்டான வேலையை அவள் செய்துதான் ஆக வேண்டும்.

அவள் மீண்டும் வாசலருகே வந்து பார்த்தாள். பன்னிரண்டு வீடுகள் கொண்ட அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் அவளிடமிருந்து அந்தச் சிறு குழந்தையைக் காப்பாற்ற அந்நேரம் பார்த்து யாருமில்லை. தலை திருப்பி வீட்டினுள் இருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். மணி மதியம் இரண்டு. குழந்தையின் அம்மா வர இன்னும் முழுதாக நான்கு மணி நேரத்துக்கு மேல் இருக்கிறது. தீர்மானித்தவள், உறுதியாக நடை போட்டு மீண்டும் வீட்டினுள் சென்றாள்.

குழந்தையை நெருங்கினாள். அது நடைவண்டியில் அமர்ந்திருந்தது. மேசை மீதிருந்த துப்பாக்கியை எடுத்துக் குழந்தையின் நெஞ்சுக்கு நேராய்ப் பிடித்தாள். குழந்தை அவளையே பார்த்தது. மனதைத் திடப்படுத்திக் கொண்டு… துணிந்த ஒரு நொடியில் பட்டென விசையை அழுத்தியே விட்டாள்… டுமீல்!

திடுக்கிட்ட குழந்தைக்கு விக்கல் நின்றது. குழந்தைக் காப்பாளராகப் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்த அன்பினிக்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது. மிரண்டு போய் வீறிட்டு அழத் தொடங்கிய குழந்தையை ஓடிப் போய் அள்ளிக் கொண்டு, “அச்சுச்சுச்சூ... அழக்கூடாது செல்லம்!” என்று தேற்றலானாள்.

* * * * *

பி.கு: மேலே “அவளிடமிருந்த அந்தச் சிறு குழந்தையைக் காப்பாற்ற” என்பதற்கு மாறாக “அவளிடமிருந்து அந்தச் சிறு குழந்தையைக் காப்பாற்ற” என்று தவறாக அச்சாகி விட்டது. நேயர்கள் திருத்திப் படித்துக் கொள்ள வேண்டுகிறோம்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.