மருத்துவமனையின் அந்தக் குளிரூட்டப்பட்ட அறையின் சுவற்றையே எவ்வளவு நேரம் தான் வெறித்துப் பார்ப்பது?! சரி தொலைக்காட்சியை ஆன் செய்ய ரிமோட்-ஐ எடுத்துத் தரச் சொல்லலாம் என்றால் இந்த அம்மா வேறு அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள்.

தொலைபேசியை எடுத்து “எங்க இருக்கீங்க? நாளைக்கு மதியம் இரண்டு மணிக்கு ஆபரேஷன்'ன்னு சொல்லிருக்காங்க.. அதுக்குள்ள வந்திடுங்க ப்ளீஸ்” என்றதும், அதிகாலையில் ட்ரெயின் ரீச் ஆனதும் நேரே மருத்துவமனைக்கு வருவதாகக் கூறிவிட்டு ஃபோன்-ஐ வைத்தார் என் கணவர்.

ஓரிரு நிமிடங்களில் “ஆரிரோ.. ஆராரிரோ.. இது தந்தையின் தாலாட்டு..” என ரிங் டோன் அழைக்க.. எடுத்துப் பேசினேன்.. “என்னடா இன்னும் தூங்கலையா? சீக்கிரம் தூங்கு.. அப்பா காலையில் ப்ரேக்ஃபாஸ்ட் எடுத்துட்டு ஆறு மணிக்கெல்லாம் வந்திடுறேன். இரண்டு இட்லிக்கு மேல சாப்பிடக் கூடாதாம் டா.. டாக்டர் சொல்லிருக்காங்க” என்றதும் “சரிப்பா.. ஆனா மதியம் வரைக்கும் பசி தாங்காதே!” என்றேன்.

“இல்லடா.. இன்னைக்கு ஒரு நாள் தான.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.. குழந்தைய மட்டும் நெனச்சுக்கோ.. இது ஈஸியா இருக்கும்.. இல்லனா ஆபரேஷன் பண்ணும் போது டாக்டருக்குக் கஷ்டம்” என அப்பா சொன்னதும் “சரிப்பா.. நீங்க சீக்கிரமா வாங்க” என்று சொல்லிவிட்டு சமிஞ்கை மொழியிலே என் வயிற்றில் உதைந்து கொண்டிருந்த குழந்தையிடம் பேசத் தொடங்கினேன்.

திடீரென்று பக்கத்து அறையில் இருந்து பெரிய அலறல் சத்தம். அங்கு சுகப் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு பெண் வலியில் துடித்துக் கொண்டிருந்தாள். ‘நல்ல வேளை.. நமக்கு இந்த வலி இல்லை’ என நினைத்துக் கொண்டேன். அந்த உயிர் போகும் வலி எனக்கு வரப் போவது இல்லை எனவும் எனக்குத் தெரியும்.

தூக்கம் வேறு வருவேனா என்றது. இந்த நவம்பர் குளிரிலும் என் பெண்ணிற்கு ஏ.சி ரூம் தான் வேண்டும் என அடம்பிடித்த தந்தையை நினைத்து மெச்சிக் கொண்டேன். ஒரே பெண் குழந்தையாகையால் நான் எப்போதும் என் அப்பாவின் செல்ல இளவரசி தான்!.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு!..

நான் அப்போது முதுகலை இறுதியாண்டு பயின்று கொண்டிருந்தேன். ப்ராஜக்ட் ரிப்போர்ட் சப்மிட் செய்ய பத்து நாட்களே இருந்த நிலையில் இன்ஃபர்மேஷன் கலெக்ட் பண்ணுவதற்காக தூங்காமல் கொள்ளாமல் அலைந்து கொண்டிருந்தேன்.

ஒரு நாள் காலையில் என் அம்மா “அந்த சென்னை பையனை பேசி முடிச்சிடலாமாங்க.. அவங்க நம்பருக்கு ஃபோன் பண்ணிப் பார்க்குறீங்களா?” என்று என் அப்பாவிடம் மாப்பிள்ளையின் ப்ரொஃபைல் வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்கள்.

என் அப்பாவோ உடனே பேசிவிட்டு ஞாயிற்றுக்கிழமை ஒரு வேலையாக சென்னை செல்லவிருப்பதாகவும் அப்படியே விசாரித்துவிட்டு வருவதாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். இதற்கும் எனக்கும் சம்பந்தமே இல்லாதது போல் நான் என் கடமையே கண்ணாக கூகுள்-ஐ பாடாய் படுத்திக் கொண்டிருந்தேன்.

திங்கட்கிழமை ஊரிலிருந்து வந்ததும் வராததுமாய் பையன் வீட்டாரை சர்ச்-ல் மீட் பண்ணினதாகவும் தன் பெண்ணிற்குக் கட்டி வைத்தால் அந்தப் பையனை மட்டும் தான் எனவும் என் அப்பா சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதும் நான் எதுவும் கேட்கவில்லை.

இரண்டு தினங்களில் பெண் பார்க்க வருகிறார்கள் என்றதும் தான் “ஐயோ அப்பா.. என்ன சொல்றீங்க? நான் பையனோட ஃபோட்டோ கூட பார்க்கலையே!” என்றேன். “ஃபோட்டோ எதுக்குடா? ரெண்டு நாள்-ல நேரிலே வரப் போறாங்க. அப்பாவப் பற்றி உனக்குத் தெரியும்-ல. உனக்கு எப்படி பிடிக்கும் என்று எனக்கும் தெரியும். ஸோ டோண்ட் வொரி அண்ட் வெயிட் ஃபார் த சர்ப்ரைஸ்!” என்று புன்னகைத்துச் சென்று விட்டார்.

நான் குழப்பமாய் நிற்பதைப் பார்த்ததும் என் அம்மா என்னிடம் “இங்க பாருடி! வர்றவங்க சரி'ன்னும் சொல்லலாம்.. வேண்டாம்'ன்னும் சொல்லலாம். அதனால நீ ரொம்ப யோசிக்காத. எப்பவும் போல இரு. இப்போ பார்க்க ஆரம்பிச்சா தான் இரண்டு வருஷத்துல முடியும்” என்றதும் கொஞ்சம் நிம்மதி அடைந்தேன்.

ஆனாலும் நான் முழுவதுமாய் சமாதானம் அடையாத நிலையில் “அதெல்லாம் சரி தான்மா.. இப்போ ஒருத்தங்க பொண்ணு பார்க்க வர்றாங்க-ன்னு சொன்னதும் உள்ளுக்குள்ளே ஏதோ ஒரு இனம் புரியாத பட்டாம்பூச்சி பறக்குற உணர்வு வருது! இதே போல ஒவ்வொருத்தர் முன்னாடியும் வருமா? இதெல்லாம் எனக்குப் பிடிக்கல.. ஒரு வேளை இவங்களுக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டாங்கன்னா அதுக்கப்புறம் இந்த பொண்ணு பார்க்குற ஸீன் எல்லாம் நம்ம வீட்டில் இல்லை. அடுத்து வருகிறவர்களை சர்ச்-லயே என்னைப் பார்த்துக்கச் சொல்லுங்க. எல்லாருக்கும் காஃபி எடுத்துட்டுப் போய் ஷோக்கேஸ் பொம்மையா என்னால் நிற்க முடியாது” என்றேன் வெறுப்பாய்.. ஏனோ முதல் முறையாக இந்தக் காஃபி கலாச்சாரத்தின் மீது எரிச்சல் வந்தது..

புதன்கிழமையன்று வீடே பரபரப்பில் மூழ்கியிருக்க கடிகாரத்தின் முட்கள் மாலை ஆறு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. “என்னடா ரெடி ஆகிட்டியா?” என்று வினவியவாறே அறைக்குள் நுழைந்த என் சித்தப்பா “பயப்படாதடா.. அவங்க வெளிய வரச் சொல்லும்போது வந்தாப் போதும். இப்போ தான் அவங்கள ரிசீவ் பண்ணிவிட்டு வந்தேன். பையன் ஃபோட்டோ விட நேரில் இன்னும் ஸ்மார்ட்.. எங்க அண்ணன் செலக்‌ஷன் எப்பவும் பெஸ்ட் தான்!” என்று என் தலையை வாஞ்சையாய் வருடி விட்டுச் சென்றார்.

எனக்கோ இதயம் ஓவர் ஸ்பீடில் பம்ப் ஆகி வெளியில் வந்து விழுந்துவிடும் போல.. அவ்வளவு பயம்! பொண்ண வரச் சொல்லுங்க! என்ற குரல் கேட்டது.. மெதுவாக வெளியில் வந்ததும் ஒரு இருக்கையைக் காட்டி அமரச் சொன்னார்கள். நிமிர்ந்து பார்க்கவே முடியாத அளவு வெட்கத்தில் நான் திணறிக் கொண்டிருந்தேன்.

வழக்கமான ட்ரேட் மார்க் குரலில் “பையனுக்குப் பொண்ணு பிடிச்சிருக்கா?!” என சத்தமாய் யாரோ கேட்க “என்ன சொல்லப் போகிறாரோ? ஐயோ நான் இன்னும் அவர் முகத்தையே பார்க்கவில்லையே” என்று எனக்குள் நான் விவாதம் நடத்திக் கொண்டிருந்தேன்.

“இன்னொரு காஃபி கிடைக்குமா?!” என்று மாப்பிள்ளை கூற அங்கு அனைவர் முகத்திலும் ஒரு சந்தோஷ மின்னல். என்னைப் பிடித்திருக்கிறதென்பதை அவர் எக்ஸ்ப்ரஸ் செய்த விதத்திலும் அவரது குரலிலும் நான் பாதி இம்ப்ரஸ் ஆகிவிட்டிருந்தேன்.

மாப்பிள்ளையும் பெண்ணும் தனியாகப் பேசட்டும் என ஒரு அறையில் விட்டு விட்டு அனைவரும் காத்திருக்க.. “ஹாய்!” என்ற குரலில் நிமிர்ந்து பார்த்தேன். அவர் அணிந்திருந்த ‘வொயிட் காட்டன் ஷர்ட் அண்ட் ஃபேடட் ப்ளூ ஜீன்ஸ்’ என்னுடைய ஃபேவரிட் காம்பினேஷன்! அங்குமிங்கும் அலையாத விழிகள்! நேர் கொண்ட வசீகரப் பார்வை! அதிகம் பேசாத உதடுகள்!

மிஞ்சிப் போனால் ஐந்து நிமிடங்கள் தான் பேசியிருப்பார். “இது தான் உங்க ரூம்-ஆ” என ஆரம்பித்து படிப்பு பற்றி அவர் ஏதேதோ கேட்க நான் பதற்றத்தில் உளறிக் கொட்டினேன். அவரோ லேசாகச் சிரித்துவிட்டு “பிடிச்சிருக்கு தானே? போய் ஓ.கே-ன்னு சொல்லிடலாமா?” எனக் கேட்க ஐந்து நிமிங்களில் பெண் பார்த்து முடிப்பதெல்லாம் பாட்டி காலம் என பட்டிமன்றம் வைக்காத குறையாகப் பேசித் திரிந்த நான் தான் அன்று “சரி!” என்று பூம் பூம் மாடு போல தலையை ஆட்டிக் கொண்டு பின்னே சென்று கொண்டிருந்தேன்..

விரைவில் பேசி திருமண நாள் குறிக்கலாம் அதுவரை எங்கள் வீட்டுப் பெண்ணை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறி மாப்பிள்ளை வீட்டார் சென்றுவிட ‘இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?! இனி என் வாழ்க்கை உன்னோடு தானோ?!” என்ற எண்ணம் தோன்றிய போது முதல் முறையாக இந்த காஃபி ட்ரடிஷன் கொஞ்சம் இண்ட்ரெஸ்டிங்-ஆகத் தெரிந்தது!

இருவருமே தொலைபேசி எண்கள் பரிமாறிக்கொள்ளாத நிலையில் ஒரு வாரம் சென்றபின் ஒரு புது எண்ணிலிருந்து மெசேஜ் வந்திருந்தது. யாராக இருக்கும் என யோசித்து முடிக்கும் முன் என் அப்பா ஃபோன் செய்து “நான் தான் டா மாப்பிள்ளை வீட்டிற்குப் பேசும் போது உன் நம்பர் கொடுத்தேன். அவர் ஃபோன் பண்ணினா பேசிக்கோ” என்று சொல்லி வைத்துவிட்டார்.

அதற்குப் பின்பான இரண்டு மாத இடைவெளியில் நான் தான் காதலில் கசிந்துருகினேனொழிய அவரோ மிகவும் ஃபார்மலாக எல்லை மீறாமல் பேசிக் கொண்டிருப்பார். என்னவோ அந்த கண்ணியம் எனக்குப் பிடித்திருந்தது!..

திருமணத்திற்கு முன்பு வெளியில் அழைத்துச் செல்வது மரபு அல்ல என அவர் என்னைக் கூட்டிச் செல்ல மறுத்தபோதும் “ச்சே! அவ்வளவு பெரிய மெட்ரோ சிட்டி-யில் இப்படி ஒரு பையனா?!” என அவரது ஜெனியூன் கேரக்டரை நினைத்து பெருமைப்பட்டுக் கொண்டேன்.

திருமண நாளும் வந்தது! மண மேடையில் இருவரும் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளவில்லை. அருகில் வந்த என் தோழி ஒருத்தி “ஏன் –டி இப்படி உம்முன்னு இருக்க? அவர் கிட்ட ஏதாவது பேச வேண்டியது தான?” என்ற போது ‘நான் என்ன தனியாகவா பேசிக் கொள்ள முடியும்? ஒரிரு முறை நான் பேச முயன்று தோற்றது இவளுக்கு எங்கே தெரியப்போகிறது’ என நினைத்துக் கொண்ட போது ஏதோவொரு வெறுமையை என்னால் உணர முடிந்தது.

எங்கள் இருவரையும் இணைத்து ஃபோட்டோ எடுப்பதற்குள் பாவம் அந்த கேமராமேன் தான் திண்டாடிவிட்டார். “உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல ஒரு பாலமே கட்டிடலாம் போல! ப்ளீஸ் கொஞ்சம் சேர்ந்து நில்லுங்க” என அவர் கெஞ்சிய போது பார்க்கப் பாவமாக இருந்தது.

என் அன்பு கணவரோ மணமேடையில் கிடைக்கும் இடைவெளியில் எல்லாம் தனியே சென்று தொலைபேசியில் பேசுவதும் குறுந்தகவல் அனுப்புவதுமாய் இருந்தார். நானோ ஆசைகள் அனைத்தும் நொறுங்கிய நிலையில் வெறுப்பின் உச்சத்திற்கே சென்றுவிட்டேன்.

இனிதே வைபவங்கள் முடிந்து வீட்டிற்குச் செல்லும் வழியிலும் அந்த பாழாய்ப் போன தொலைபேசியுடனே அவர் தனித்திருக்க எனக்கு அப்படியே கீழே இறங்கிச் சென்றுவிடலாம் போல இருந்தது. வழக்கமான சம்பிரதாயங்களுடன் பால் பழம் கொடுத்து அனுப்புகையில் என் பாட்டியோ “மாப்பிள்ளையின் மனம் கோணாமல் நடந்துக்கோ” என டஜன் கணக்கில் அறிவுரை வேறு!

பயந்து தயங்கி அறைக்குள் நுழைகையில் அவர் தன் லேப்டாப்-ல் ஏதோ ஆழ்ந்து டைப் செய்து கொண்டிருந்தார். நான் அசையாமல் நிற்கவும் நிமிர்ந்து பார்த்தவர் “ஹேய்! ஏன் நிற்கிற? அதை ஓரமா வெச்சிட்டு உட்கார்” என்றதும் கீ கொடுத்த பொம்மையாய் சொன்னதைச் செய்தேன்.

“எனக்கு நாளைக்கு ஒரு க்ளையண்ட் மீட்டிங் இருக்கு.. அதுக்குள்ள ஒரு கொட்டேஷன் ரெடி பண்ணியாகனும். கொஞ்சம் வொர்க் ப்ரெஷர். உனக்குத் தூக்கம் வந்தா தூங்கு!” என்றார். “இல்ல.. நான் முழிச்சிருக்கேன்” என்றதும் “ஓ.கே! யுவர் விஷ்” என்றபடி வேலையில் மூழ்கிப் போனார்.

அனைத்து அலுவலக வேலைகளும் முடித்த பிற்பாடு லேப்டாப்-ஐ ஷட் டவுன் பண்ணிக் கொண்டே “இப்போ சொல்லு.. ஏதாவது பேசணுமா?” என்று அவர் கேட்ட போது லேசான மிரட்சியுடன் “இல்ல.. உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்” என்றேன். “நீங்க ஏன் ஸ்டேஜ்-ல என் கிட்ட பேசவே இல்ல? எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது தெரியுமா?” என்றதும் “கொஞ்சம் வொர்க் ப்ரெஷர். எவ்ரிதிங் வில் பி ஃபைன். நீ தூங்கு” என்றார்.

“பாட்டி பால் பழம் கொடுத்துவிட்டாங்க” என்றதும் “உனக்குப் பசிச்சா சாப்பிட்டுத் தூங்கு. எனக்கு எதுவும் வேண்டாம். ஐ ஆம் ஸோ ஸ்லீப்பி.. கொஞ்சம் லைட் ஆஃப் பண்றியா?” என்று லேசாகப் புன்னகைத்து உறங்கிவிட்டார். கண்ணைக் கட்டி காட்டில் விட்டதைப் போல் இருந்தது எனக்கு! இதெல்லாம் கனவாய்ப் போய்விடக் கூடாதா என்று ஏங்கியே ஜன்னல் வழியே விடிகின்ற பொழுதுக்காய் காத்திருக்கத் தொடங்கினேன்!

மறுநாள் காலை காஃபி கொடுக்கையில் “சாரி.. தப்பா நினைக்காத.. எனக்கு ஆஃபீஸ் வொர்க்'னு வந்துட்டா அதை முடிக்குற வரைக்கும் வேற எதுலயும் கவனம் வராது. அப்படியே பழகிட்டேன். அதான் நேத்து சரியா பேச முடியல” என்றார்.

அதை என்னிடம் மணமேடையிலே சொல்லியிருக்கலாமே என்று நான் நினைக்கையில், “அது மட்டும் இல்லாம.. நான் கொஞ்சம் ரிசர்வ்டு டைப். எனக்கு ரொம்ப ஃப்ரெண்ட்ஸ் கூட கிடையாது. அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பழக மாட்டேன். ஸோ நம் இருவருக்கும் இடையில் ஒரு புரிதல் வரணும். பேசி பழகி அப்புறம் எல்லாம் தானே நடக்கணும்! உனக்குப் புரிஞ்சிருக்கும்-னு நினைக்கிறேன்” என்றார்.

எனக்கும் வரப்போகிறவர் இப்படித் தான் இருக்க வேண்டும் என்கிற கற்பனை இருந்தது. என் கணவர் இவ்வாறு பேசியதில் எனக்கும் மகிழ்ச்சியே. ஆனால் இந்த இரண்டு மாத இடைவெளியில் தொலைபேசியில் நன்றாகத் தானே பேசினார்.. இப்பொழுதோ மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்கச் சொல்கிறாரே என்ற குழப்பத்துடன் புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டினேன்.

நாட்கள் செல்லச் செல்ல அவர் பேசுவதே இல்லை. எப்போதும் லேப்டாப்.. செல்ஃபோன்.. ஆஃபீஸ்.. தூக்கம் இப்படியே அவர் இருக்க எனக்கு தனிமை கொடுமையாகத் தோன்ற ஆரம்பித்தது. பேசுவதற்காய் நான் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தது!

எங்களின் முதல் சண்டையும் அரங்கேறியது! ஒரு நாள் இரவில் கேட்டேவிட்டேன்.. “உங்க கிட்ட நான் பேசணும். ஆஃபீஸ் டைம்-ல ஃபோன் பண்ணினா.. இப்போ வீட்டு விஷயம் பேசாதன்னு சொல்றீங்க! வீட்டிற்கு வந்தும் பேச மாட்டேங்குறீங்க.. ஏதாவது சொன்னீங்கன்னா தான எனக்குத் தெரியும்.. உங்களுக்கு என்னைப் பிடிக்கலையா?” என்றேன்.

“எனக்கு உன்னைப் பிடிக்கலைன்னா இந்நேரம் நீ உங்க அம்மா வீட்டில் இருந்திருப்ப! நான் ஏற்கனவே சொன்னது தான். ப்ளீஸ் டென்ஷன் பண்ணாம தூங்கு” என்று சொல்லிவிட்டு நான் பதில் பேசும் முன் தூங்கிவிட்டார்.

எனக்கோ பல இரவுகள் கண்ணீரில் கரைந்திருக்க அப்படியே நான்கு மாதங்கள் கடந்துவிட்டது. ஒரு வேளை அவர் மனதில் வேறு ஏதாவது பெண் இருப்பாளோ என்று யோசிக்க அவரை முதன் முதலாய் பார்த்த போது அந்தக் கண்கள் சொல்லிய ஆயிரம் கதைகள் எப்படி பொய்யாய் போகும் என்று முரண்பாடாகவும் தோன்றியது! “சில நேரம் பனிக்காலத் தென்றலாய் வருடிய அந்த விழிகள் சில நேரம் தீயாய் தகிப்பது ஏன் எனப் புரியாமல் நான் தவித்திருந்த கால கட்டம் அது!”

நெருங்கிய தோழி ஒருத்தியுடன் உரையாடும் போது அவள் கூறிய விஷயம் என்னை யோசித்துப் பார்க்க வைத்தது. “ஏன் –டி காலேஜ்-ல படிக்கும் போது எவ்வளவு விஷயம் பேசிருக்கோம். அப்போ எல்லாம்.. எனக்கு வரப்போகிறவர் இப்படி கெத்தா இருந்தா தான் பிடிக்கும்-னு சொல்லிட்டு இப்போ நிஜமா நடக்கும் போது ஃபீல் பண்ற! அவர் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லலையே. நல்லா யோசிச்சுப் பாரு” என்றாள் என் தோழி. என்ன செய்வது சில சமயங்களில் யாரோ ஒருவர் சம்மட்டி கொண்டு அடித்தால் தான் நமக்கும் புத்தி தெளிகிறது!

“உன் மனதில் இருக்கும் காதலை உன் இதழ்கள் உரைக்கும் நாள் தொலைவில் இல்லை” என புதிதாய் ஒரு நம்பிக்கை மலர அது முதலாய் என்னவர் தன் காதலைச் சொல்லும் தருணத்திற்காய் காத்திருக்கத் தொடங்கினேன். காதலில் காத்திருப்பதும் சுகமே!

காதல் வெளிப்பட்ட தருணமும் வந்தது.. ஆனால் வார்த்தையாய் அல்ல.. நான் தாய்மை அடைந்திருக்கிறேன் என்கிற செய்தியாய்! ஒவ்வொரு பெண்ணிற்கும் தன் பிறப்பின் அர்த்தம் புரிகின்ற நேரம் அது!

முதல் மூன்று மாதங்கள் மசக்கையிலே கழிய.. அதுவரை ரசித்த உணவுகள் குமட்டலோடு ஒதுக்கி வைக்கப்பட.. பெண்மையின் அடுத்த பரிணாமம் தியாகம் என்பது புரியத் தொடங்கியது!

ஐந்தாம் மாதம் அடிவயிற்றில் கருவின் அசைவை நான் உணரத் தொடங்கிய போது லேசாக அதிர வைத்தது ஸ்கேன் ரிப்போர்ட்! ப்ளாசெண்டா ப்ரிவியா எனப் பல க்ரேடுகளில் மருத்துவர்கள் அதற்கு விளக்கம் கற்பிக்க நான் அறிந்து கொண்டதென்னவோ எனக்கு சுகப் பிரசவத்தின் சாத்தியக் கூறுகள் ஐம்பது சதவிகிதமே.

எட்டாம் மாதம் வரை பொறுத்திருந்து பார்க்கலாம் என டாக்டர் கூற.. அதற்குள் இன்னும் சிக்கலாகியது நிலைமை. குழந்தை நகர முடியாத படி ப்ரீச் பொசிஷனில் மாட்டிக் கொண்டது.. இன்னும் ஒன்றரை மாதங்கள் தாக்குப் பிடிக்க வேண்டுமே என்ற மருத்துவரின் மிரட்சி என்னையும் தொற்றிக் கொண்டது!

இருப்பினும் பெற்றோரின் புண்ணியங்கள் தாங்கிப் பிடிக்க இதோ நாளை அறுவை சிகிச்சை எனத் தேதி குறிக்கப்பட்டு இன்று இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறேன்.

குழந்தையின் இதயத் துடிப்பைக் கண்காணிக்க நர்ஸ் உள்ளே நுழையவும் “அதற்குள் விடிந்து விட்டதா“ என நினைக்கும்படி என் அப்பாவும் வந்துவிட்டார். “அக்கா! உங்க குழந்தை ரொம்ப ஆக்டிவ்வா இருக்கு! அம்மாவைப் பார்க்கப் போகிற சந்தோஷம் போல!” என நர்ஸ் கூறியதும் எனக்கும் ஆவல் பற்றிக் கொண்டது!

மதியம் மணி இரண்டு ஆகியிருந்தது. “ரொம்ப பசிக்குதுப்பா.. இவரை வேறு இன்னும் காணவில்லை” என நான் அப்பாவிடம் ஆரம்பிக்க “ட்ரெயின் டிலேயாம். மாப்பிள்ளை இப்போ வந்திடுவார்” என என்னை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போதே ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு செல்ல ஸ்ட்ரெச்சரும் வரவழைக்கப்பட்டது.

உள்ளே நுழைகிற கடைசி நொடியில் அவர் முகம் என் கண்களில் பட அப்போது மனதில் ஏற்பட்ட நிம்மதி வார்த்தைகளில் விவரிக்க முடியாதது! தாய்மை அடைகின்ற ஒவ்வொரு பெண்ணும் ஏங்கித் தவிப்பது தன் குழந்தையின் முதல் அழுகுரலைக் கேட்கத்தான்!

நிலவின் மறுபிம்பமாய் மாசில்லாத செவ்விதழ்கள் குவித்து முடி முதல் அடி வரை மொத்தமும் சிவந்திருக்க என் குட்டி இளவரசனின் முதல் உணர்ச்சியாம் அழுகை என் செவிகளில் பாய்ந்த போது கருவறையிலும் பால் சுரந்திருக்கக் கூடும்! பெண்களைக் குறித்தும் பெண்ணியம் குறித்தும் எத்தனை மாறுபட்ட கருத்துகள் உலவினாலும் தாய்மையின் அங்கீகாரத்தை நிலைநிறுத்தும் இந்த ஒரு நொடி அதைக் கடந்து வருகிற எந்த ஒரு பெண்ணிற்கும் எப்போதும் நாஸ்டால்ஜிக் தான்!

அரை மயக்கத்தில் ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளிக்கொணரப்பட்ட எனக்கு சீதோஷ்ண நிலையின் மாற்றத்தாலோ என்னவோ உடல் தூக்கிப் போட ஆரம்பித்தது. விழிகளில் பதிந்த என்னவரின் பிம்பமே நான் கண்ட கடைசி காட்சி! பரபரப்பான குரல்கள் அசரீரி ஆகிப்போக என் நினைவோ என் வசம் இல்லை.

உடம்பெல்லாம் ரணமாய்க் கனக்க கண் விழித்துப் பார்க்கையில் ஒரு நாள் கழிந்து விட்டிருந்தது. கலைந்த தலையுடனும் சிவந்த விழிகளுடனும் என் முகத்தை தாங்கிப் பிடித்திருந்த என் அன்பு கணவரிடம் “பயந்துட்டீங்களா?” என்றேன் மெதுவாய்.

“உயிரே போய்டுச்சு! நீ இல்லாம நான் மட்டும் எப்படி?! ஐ லவ் யூ ஸோ மச்!” எனக் கண்ணீரே சாட்சியாய் நெற்றியில் வாஞ்சையோடு அவர் இதழ் பதிக்க “பார்த்தியாடா! உன் அப்பா அவரோட மனசத் திறந்து பேச நீ இந்த உலகத்திற்கு வர்ற அளவு டைம் ஆகியிருக்கு!” என்றேன் என் குட்டி இளவரசனிடம்.

என்ன புரிந்ததோ.. அந்தப் பிஞ்சுப் பாதங்கள் கொண்டு தன் அப்பாவை அவன் உதைத்த போது தாய்மை அங்கு ஆணுக்கும் சொந்தம் என நிரூபணமாகியது! கருவறையில் பத்து மாதம் சுமந்திடும் பெண்ணிற்கு தாய்மை ஒரு வரம் என்றால் வாழ்க்கை முழுவதும் தன் குழந்தையை நெஞ்சில் சுமந்திடும் ஆணிற்கு தாயுமானவன் என்கிற பதம் சமர்ப்பணமே!

இரு இதயங்கள் அங்கு இணைந்திருக்க இதழ்கள் சொல்ல மறந்ததை விழிகள் பேச ஆரம்பித்தது! சுருங்கச் சொன்னால் “ஸ்டோரி விச் இஸ் ஹாப்பிலி எவர் ஆஃப்டர்!” இப்போதும் அவர் அதிகம் பேசுவதில்லை.. இருப்பினும் அந்த ஒற்றைச் சொல்லே எனக்கு வேதமாய்! லைஃப் இஸ் இன்ட்ரெஸ்டிங் ஃபார் தோஸ் ஹூ ஆர் இன் லவ்!

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.