'ஆவி'களம்

திருவானைக்கோவில், திருச்சி - நான் பிறந்த ஊர். படிச்சது, வளர்ந்தது சென்னை தான். ஆனா, பிறந்த ஊர் பாசம் இன்னும் மனசுல இருக்கு. ஏன்னா, அவ்ளோ ஞாபகங்கள் அந்த ஊர் எனக்குக் கொடுத்திருக்கு. சித்திரை வருஷப்பிறப்பு முடிஞ்சு, கோடை விடுமுறை முழுதும் அங்க தான். ஜூன் மாசம், பள்ளிக்கூடம் ஆரம்பமாகும்போது சென்னைக்கு அழுதுகிட்டே வருவேன். என்ஜினீயரிங் படிச்ச காலத்துலயும் அப்படி தான். நான், எங்கம்மா, என் தம்பி தான் போவோம். அம்மாவோட அம்மா வீடு அங்க இருக்கு. அம்மாவோட அம்மாவை, ‘அம்மாயி’னு கூப்பிடுவேன். பெரியம்மாவும் அங்க தான் இருக்காங்க. ஏன், அந்த ரோடு முழுக்க எங்க சொந்தபந்தம் தான். எப்ப யாரு வீட்ல இருக்கோம், எங்க சாப்பிடறோம்னு கூட யோசிச்சதில்லை. அவ்ளோ அழகான உறவுகள்.சின்ன வயசுல ஒரே ஒரு பிரெண்டி தான் இருந்தா. கொஞ்சம் கொஞ்சமா எங்க படை பெருசாச்சு. நான் என்ஜினீயரிங் மூன்றாம் ஆண்டு விடுப்புல ஊருக்குப் போயிருந்தபோது, நெறய நட்பு வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா எல்லாமே, நண்டு, சிண்டு, தூசு, துரும்பு அளவு தான் இருக்கும். அந்த க்ரூப்ல நான் தான் பெரிய சிண்டு.மே மாசம், கடைசி ஞாயிறு, எங்க தெரு முகனைல இருக்குற மாரியம்மனுக்கு ‘பூச்சொரிதல்’ திருவிழா நடக்கும். மூணு நாளைக்கு ஒரே கொண்டாட்டமா இருக்கும். ஞாயிறு காலைல, காவடி, பால் குடம், அழகு குத்தறது, தேர் இழுக்கறது, முளைப்பாறி, தீச்சட்டினு ஒரே ரத்தக்களரியா இருக்கும். வேகாத வெயில்ல ரெண்டு தெரு சுத்தி வலம் வருவாங்க. அன்னிக்கு சாயங்காலம், அம்மன் ஊர்வலம் வர, பின்னாடியே சிறுசுலேர்ந்து பெருசுவரைக்கும் எல்லா பொண்ணுங்களும், அழகழகா பாவாடை, தாவணி’னு அலங்காரம் பண்ணிக்கிட்டு, பூக்கூடை ஏந்தி வருவாங்க. நான் கூட ஒன்னு ரெண்டு தடவை பூக்கூடை ஏந்தி இருக்கேன். மறுநாள் மாலை சாமியாடி - அம்மன் ஊர்வலம். அதுக்கும் மறுநாள் விடயாத்தி. மூணு நாளும், எங்க பார்த்தாலும் ஜகஜோதியா இருக்கும்.திருவிழா ரெண்டாம் நாள், மாலை நானும் என் படையும் கோவிலுக்குப் போய்ட்டு வந்து, எங்க அம்மாயி வீட்டு வாசல்ல உட்கார்ந்து பேசிட்டு இருந்தோம். அந்த வாசல்ல, மூணு படி இருக்கும். அதுல ஆறேழு பேரு நெருக்கி உட்கார்ந்து பேசுவோம். அது தான் எங்களோட குட்டிச்சுவரு, டீ கடை பென்ச்சு, மீட்டிங் பாயிண்ட் எல்லாம். எங்களுக்கு மட்டுமில்ல, பெருசுகளுக்கும் அந்த படிக்கட்டுகள் தான் எல்லாம்.பேசிப்பேசி, வேற பேச ஒன்னும் கிடைக்காம, ரொம்ப சளிச்சுப்போய் இருந்தோம். அப்போ எங்க க்ரூப்ல ஒரு சிண்டு, ‘வீஜா போர்ட்’ (ouija board) பத்தி சொன்னா. அவ கேரளத்து சிண்டு. எட்டாங்க்ளாஸ். அந்த வருஷம் தான் எங்க வீட்டு எதிர் வீட்ல குடிவந்தாங்க. அவளுக்கு ஒரு வாலு தம்பி. அவ அந்த வீஜா போர்ட் பத்தி சொல்ல ஆரம்பிச்சதும், நாங்க எல்லாரும் அவளையே வெறிச்சுப் பார்த்துட்டு இருந்தோம். எல்லாம் பயம் தான். வேற என்ன?!அந்த பலகையில் என்ன எழுதணும், ஆவியை எப்படி கூப்பிடனும், எப்படி சென்ட் ஆஃப் (send off) கொடுக்கணும்னு எல்லாம் சொன்னா. நாம எந்த கேள்வி கேட்டாலும் பதில் சொல்லும், அது சொல்றது போலவே நடக்கும்னு வேற சொன்னா. அவ சொல்றதுக்கெல்லாம் அவளோட தம்பியும் ஆமாஞ்சாமி போட்டான். அதுவே எங்களுக்கு ஆர்வத்த தூண்டுச்சு. அம்மன் ஊர்வலம் வர இன்னும் நாழி ஆகும்னு சொன்னாங்க. அதனால, உடனே ஒரு ஆவியை கூப்பிட்டு டைம் பாஸ் பண்ணலாம்னு முடிவு பண்ணோம். யார் வீட்ல பண்ணலாம்னு யோசிச்சோம். எப்பவுமே இந்த மாதிரி நோண்டி வேலைக்கெல்லாம் இருக்கற ஒரே அடைக்கலம், எங்க அம்மாயி வீட்டு மாடி ரூம். குறுகலான படி மேல ஏறினா, ரெண்டு கதவு வரும். நமக்கு எதிரே இருக்கற கதவைத் திறந்தா மொட்டை மாடி. அது நமக்குத் தேவை இல்ல. வலப்பக்கம் இருக்கற கதவைத் திறந்தா அந்த அறை. குலேபகாவலி மாதிரி, ஏக பட்ட பொருளுங்களை தாண்டி போனா, கொஞ்சம் உட்கார இடம் கிடைக்கும். அங்க ஒரு வராந்தாவும் உண்டு. அது ஒரு சின்ன குலேபகாவலி. பழைய டிவி, குத்துயிரும் கொலை உயிருமா ஒரு கட்டில், காந்திய சுட்ட காலத்துல இருந்து சேத்து வச்ச நியூஸ் பேப்பர், ஒரு ஜாடில அந்த காலத்து ஓட்ட காலணா, ஓரனா, ரெண்டனா, மேஜை, என்னென்னவோ புத்தகம், சாக்கு மூட்டைங்க, பிள்ளைங்க சாய்ஞ்சாடம்மா விளையாடற அன்னப்பறவை, பழைய பெட்டிங்க’னு கொஞ்சம் பெரிய சைஸ் குப்பை தொட்டி, அந்த அறை. ஒரே ஒரு மஞ்ச பல்ப். வராந்தா கதவை திறந்தா, தெரு விளக்கு வெளிச்சம் வரும். எப்படியோ ஒரு இடத்தை சுத்தம் பண்ணி, நடுவுல கொஞ்சம் இடத்தை விட்டு, எல்லாரும் சுத்தி உட்கார்ந்தோம். ஒரு பொடுசு சாக்பீஸ் எடுத்துவர, இன்னொன்னு மெழுகுவர்த்தி எடுத்துவந்துச்சு. நான் எங்க அம்மாயிக்குத் தெரியாம ஒரு தம்பளரும், தீப்பெட்டியும் லவுட்டிட்டு வந்தேன்.அந்த மலையாள சிண்டு சொன்ன மாதிரியே தரையிலேயே நான் அந்த வீஜா போர்ட வரைஞ்சேன். ஒரு பெரிய சதுரம் வரைஞ்சு, அதுக்குள்ள A,B,C,D’ய வருசையா அந்த சதுரத்த ஒட்டி எழுதி, நடுவுல 1லேர்ந்து 9 அப்புறம் 0 எழுதி, மத்தியில ஒரு சின்ன வட்டம் வரைஞ்சு, அதுக்குக் கீழ, மூணு வட்டம் வரைஞ்சு, ‘Yes’, 'No’, 'Goodbye’னு அதுக்குள்ள எழுதி முடிச்சேன். ஒரு அரை டிக்கெட்டு ஒரு ரூபா நாணயத்தை எடுத்து, மத்தியில வரைஞ்ச சின்ன வட்டத்துல வச்சான். அதுக்கு மேல அந்த மலையாள சிண்டு, மெழுகுவர்த்திய வச்சு,

“டேய் லைட்ட ஆப் பண்ணுங்கடா” என்றாள்.

“என்னது, லைட் ஆப் பண்ணனுமா?” - கூட்டத்துல ஒன்னு கேட்க

“பண்ணலேனா இது வேலை செய்யாது” - அவ சொல்ல

பத்தாங்க்ளாஸ் பரிட்சை எழுதியிருந்த ஒரு பால்வாடி, பாய்ஞ்சு போய் லைட்ட அமுக்கிட்டு, பறந்து வந்து உட்கார்ந்தான். வராந்தா கதவு வழியா லேசா தெரு விளக்கு வெளிச்சம் வந்தது.அப்போ அந்த சிண்டு, தீப்பெட்டி எடுத்து, மெழுகுவர்த்திய பத்த வச்சா. எல்லாரோட கண்ணும் அந்த மெழுகு மேல தான் இருந்தது. உள்ளுக்குள்ள திகிளா இருந்தாலும், வெளியிலே ஒரே குதூகலமா இருந்தது. அடுத்து, தம்பளர எடுத்து தலைகீழா கவுத்து, அந்த மெழுகை மூடினா. எல்லாரும் ஆள்காட்டி விரல் நுனியை அந்த தம்பளரோட பின்புறத்துல பட்டும் படாம தொட்டோம். மனசுக்குள்ள ஒரு மரண பயம்.

“குட் ஸ்பிரிட் ப்ளீஸ் கம். நல்ல ஆவியே வா” - இதையே ரெண்டு மூணு தடவை சொன்னா.

“குட் ஸ்பிரிட் நீங்க வந்தாச்சுன்னா, ‘yes’ல போய் நில்லுங்க”, அப்படினா.

அந்த தம்பளர் மெல்ல நகர்ந்துச்சு. மெழுகு அப்போ அனைந்திருந்தது. தம்பளர் நகர, அந்த ஒரு ரூபா நாணயம் மட்டும் நகராம வச்ச இடத்துல வச்ச மாதிரியே இருந்தது. ‘அல்லு விடறது’னா என்னனு அப்போ தான் புரிஞ்சுது.அந்த தம்பளர் நகர்ந்து ‘yes’ வட்டத்துக்குள்ள வந்து நின்னுடுச்சு.

“இப்போ குட் ஸ்பிரிட் வந்திடுச்சு. யாரும் உங்க விரலை எடுக்கக்கூடாது. தம்பளர லேசா தான் தொடணும். தம்பளர தள்ளிகிள்ளி விட்டீங்கனா, யாரு மேல வேணும்னாலும் அந்த ஸ்பிரிட் புகுந்துடும்”னு சொன்னதுதான் போதும், எல்லாரும் கப்சிப். எங்களோட நூறு சதவிகித கவனமும், அந்த தம்பளர் மேல தான். வேண்டாத தெய்வமில்ல!முதல் கேள்வியை யாரு கேட்கறது, என்ன கேட்கறதுன்னு ஒரே யோசனை. “முதல்ல அந்த ஸ்பிரிட் சரியா பதில் சொல்லுதான்னு செக் பண்ணுங்கக்கா”னு என்னை ஒரு பக்கி கோர்த்துவிட்டுச்சு. நானே வெளில சொல்ல முடியாம உதறிக்கிட்டு இருந்தேன். இதுல இதுவேற.

“ஸ்பிரிட், என் லெப்ட்’ல உட்கார்ந்திருக்கற பெண்ணோட பேரோட, முதல் எழுத்து என்ன?” - என்னோட புத்திசாலித்தனமான கேள்வி.

அந்த தம்பளர் நகர்ந்து போய் ‘S’ல நின்னுது. எங்களுக்கு ஒரே ஆச்சர்யம்.

“அக்கா வேற ஏதாவது கேளுங்க” - அதே பக்கி.

“அக்கா அவன் பேச்சு கேட்டு ரொம்ப செக் பண்ணாதீங்க. அதுக்கு கோபம் வந்துடுச்சுனா, என்ன வேணும்னாலும் பண்ணும்”, அப்படின்னு அந்த சிண்டு சொல்ல, பின் லாடன் விலாசத்தை தேடி அலஞ்ச பைத்தியத்துக்கிட்ட மாட்டின வடிவேலு மாதிரி ஆயிடுச்சு என் நிலைமை.“அக்கா நான் கேக்குறேன்” - பத்தாங்க்ளாஸ் பால்வாடி.

“குட் ஸ்பிரிட், நான் டென்த்ல எவ்ளோ மார்க் வாங்குவேன்?”

தம்பளர் நகர்ந்தது. 7...6...8.

“டேய் நல்ல மார்க்குடா… சூப்பர் டா”

“சூப்பர் டா”

எல்லாருக்கும் ஒரே சந்தோஷம். ஆனா பால்வாடி மட்டும் அமைதியா இருந்தான்.

“என்னடா ஆச்சு? இந்த மார்க்கு போதாதா?”

“அக்கா நீங்க வேற… நான் எழுதுனதே ஐநூறுக்கு தான்”

என்னடா இது! திருச்சி பேய்க்கு வந்த சோதனை!

“இரு நான் கேட்கறேன். குட் ஸ்பிரிட், என்னோட ரைட்’ல இருக்கற பையன், டென்த் எழுதியிருக்கான். மொத்தமே ஐநூறு மார்க்கு தான். அவன் மார்க்கு என்ன’னு, கொஞ்சம் நல்லா யோசிச்சு சொல்லுங்க ப்ளீஸ்”னு ரொம்ப பவ்யமா கேட்டேன்.

இப்போ அது சொன்ன பதில் 4...1...1.

எல்லாருக்கும் பரம சந்தோஷம். அந்த ஆவிய எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போயிடுச்சு.

“அக்கா ப்ளீஸ்கா, இப்போ நான் கேட்குறேன்” - இது ஆறாங்க்ளாஸ் அரவேக்காடு.

“டேய் நீ ஆறாவது இன்னும் ரெண்டு வருஷம் படிக்கப் போற… அது எங்களுக்கே தெரியும்… இந்த ஸ்பிரிட் கிட்ட வேற கேட்டு தெரிஞ்சுக்கணுமா?” என்று ஒரு பொடுசு கலாய்க்க, ‘ஹீ ஹீ ஹீ’னு ஒரே சிரிப்பு.

“அதை பத்தி இப்போ யாரு கவலைப்பட்டா?”னு கொஞ்சம் கோவமா அவன் கேட்க

“சரிடா என்ன வேணுமோ கேளு”னு சொன்னேன்.

“குட் ஸ்பிரிட், நான் ஒரு பெண்ணை லவ் பன்றேன். அவளும் தான். நாங்க ஒன்னு சேருவோமா?”னு ரொம்ப பீலிங்சா கேட்டான்.

எனக்கு பேய் கூட பெருசா தெரியல. அவன் சொன்னதை கேட்டவுடனே மூச்சே நின்னுடுச்சு.

“என்னடா லவ்’ஆ?”

“ஆமாகா… ரொம்ப சின்சியரா லவ் பண்றேன்”னு சொன்னான்.பக்கத்து வீட்டு பல்லு போன பாட்டி, எப்போ பார்த்தாலும் என்ன பார்த்து, ‘ஏண்டி உன் வயசு பொண்டுகல்லாம் எப்படி இருக்கு, நீ ஏன்டி இதுங்களோட சுத்திட்டு இருக்க? வயசு பொண்ணு மாதிரியா இருக்க?’னு திட்டும். ‘நீங்க ஷட் அப் பண்ணுங்க’னு போயிடுவேன். இப்போ தான் புரியுது, அந்தக் கிழவியின் கேள்வி.

“டேய் அந்த பொண்ணு பேரு என்னடா?”

“அவ பேரு, லோகதஸ்னம்யா”

“என்னது லாலாக்குடோல்டப்பிமாவா?”னு ஒருத்தன் கேட்க, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிச்சுடுச்சு.

“பேரு கூட இவனுக்கு சொல்லத் தெரியல… அக்கா, அந்த பொண்ணு பேரு லோகதர்ஷன்யமயா… அதுதான் சொல்ல தெரியாம கடிச்சு துப்பறான்”னு சிண்டு சொன்னது.

“அக்கா… அவ பேரு என்ன வேணும்னாலும் இருக்கட்டும். நான் வச்ச பேரு, ‘புஜ்ஜிமா’. அவள அப்படிதான் கூப்பிடுவேன்”னு போட்டானே ஒரு போடு, நாங்கெல்லாம் வாய திறக்கல.

இவன ஆறாங்க்ளாஸ் அரவேக்காடுன்னு குறைச்சு எடை போட்டுட்டேன். இது பிஞ்சுலேயே பழுத்தது.ஆறாங்க்ளாஸ்லயே புஜ்ஜிமா

நானும் தான் இருக்கேனே தெண்டமா

வயசுக்குத் தக்கன சகவாசம் வேண்டாமா

இனியாவது வாழ்க்கைல உருப்படுவோமா??!!“குட் ஸ்பிரிட், நானும் என் புஜ்ஜிமாவும் ஒன்னு செருவோமா மாட்டோமானு சொல்லுங்க”னு ரொம்ப அதிகாரமா கேட்டான்.

எனக்கோ, நெஞ்சு பொருக்குதில்லையே!!

‘டேய் ஆவி மவனே, நீ மட்டும் ‘Yes’னு சொன்ன, ஏற்கனவே செத்த உன்ன, திரும்பவும் சாகடிச்சுடுவேண்டா’னு ரகசியமா அந்த ஆவியை மிரட்டினேன். நல்ல ஆவி! என் மனசு கோணாம ‘No’னு சொல்லிடுச்சு. எங்க எல்லாருக்குமே ஆத்மத்ருப்தி.

“இதை நான் ஒத்துக்கமாட்டேன்”னு அவன் சொல்ல

“டேய் நீயே வடாம் போட்டு வைக்கற டின் சைஸுக்கு தான் இருக்கற. ஒனக்கு அந்த ஊருகா ஜாடி, ஜோடியா?”னு ஒருத்தன் கேட்க, அடிதடி ஒன்னு தான் நடக்கல.

“சரி சரி சண்டபோடாதீங்கப்பா”னு நான் சமாதானம் பண்ணிவிட்டேன்.“அப்போ நான் கல்யாணம் பண்ண போற பொண்ணு பேரு என்னனு சொல்லு ஸ்பிரிட்?”னு, ‘ஆவி’ங்கர பயமே இல்லாம, ரொம்ப தெனாவட்டா கேட்டான்.

“டேய் இதுக்குமேல காதல், கல்யாணம், கத்திரிக்கானு வாயத் திறந்த, கொண்டேபுடுவேன்”னு அவனை ஒரு மிரட்டு மிரட்டி அமைதி ஆக்கினேன்.“அக்கா நீங்க கேளுங்க” - மலையாள சிண்டு.

“ஹ்ம்ம்… குட் ஸ்பிரிட், நான் படிச்சு முடிச்சு கல்யாணமாகி, லண்டன்’ல செட்டில் ஆவேனா?”

(எல்லாரும் அமெரிக்கா போறாங்க, நாம லண்டன் போலாம்னு முடிவு பண்ணி இருந்தேன்)

‘Yes’னு சொல்லி, என் மனச கவர்ந்திடுச்சு அந்த ஆவி.

“என்னகா, லண்டன் போய்டுவீங்களா? உங்களை நெனச்சப்போ’லாம் அப்புறம் பார்க்க முடியாதே. டிக்கெட் ரொம்ப விலையாகுமா? அங்க குளிருமா?” - சிண்டு

‘இவஒருத்தி. ‘அடேய்’னு கூப்பிட புருஷன் இல்லையாம். அதுக்குள்ள டிக்கெட்டு, பிளைட்டு, ஸ்வெட்டெர்னுட்டு’

“இருடி நீ வேற… குட் ஸ்பிரிட் நான் கல்யாணம் பண்ணப்போறவரு பேர கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ்” - நான்

“அக்கா ஒருவொரு எழுத்தா சொல்ல சொல்லுங்க. இப்படி எல்லாம் கேட்டா சொல்லாது”

“ஹ்ம்ம்… நான் கல்யாணம் பண்ணப் போறவரோட பேர்ல முதல் எழுத்த சொல்லுங்க”

தம்பளர் ரெண்டு சூத்து சுத்திட்டு, ‘K’ல வந்து நின்னுது.

‘குமார், கிருஷ்ணா, கண்ணன், கார்த்திக், கதிர், கௌஷிக்’னு நான் பட்டியல் போட ஆரம்பிச்சேன்.

“அடுத்த எழுத்த சொல்லுங்க, குட் ஸ்பிரிட்”

‘O’ல வந்து நின்னுது.

“அடுத்தது சொல்லுங்க குட் ஸ்பிரிட்”

‘R’ல வந்து நின்னுது.

‘KOR… என்னங்கடா வித்தியாசமா இருக்கு… இதுல என்ன பேரா இருக்கும்’னு மண்டயபோட்டு கசக்கிப் பிழிஞ்சும் ஒன்னும் தோணல.

“என்ன குட் ஸ்பிரிட், எங்க அக்கா மாப்ள பேரு குரங்கா?”னு ஒரு குரங்கு கேட்க, அதுக்கு அந்த ஆவி குரங்கும் ‘Yes’னு சொல்ல, அதை பார்த்து மத்த குரங்கெல்லாம் கெக்கேபிக்கே கெக்கேபிக்கேன்னு சிரிக்க, எனக்கு ரொம்ப ஷேம் ஷேம் பப்பி ஷேமா போச்சு.

‘அரே சைத்தான் கே பச்சே… என்னையவே கலாய்ச்சுட்டல்ல நீ. இரு இரு உன்னை கவனிச்சுக்கறேன்’ - கோபத்துல என் கண்ணு சிவந்திடுச்சு.நம்மள யாராவது கலாய்ச்சா, அது ஜோக்குனு அர்த்தம் இல்லை, நாம ஒரு பேக்குன்னு அர்த்தம். அந்த கோபம் தான் எனக்கு. பிரெண்ட்ஸ் கலாய்ச்சு பார்த்திருப்பீங்க, கூட பொறந்தவங்க கலாய்ச்சு பார்த்திருப்பீங்க, ஏன், சில வீட்ல அம்மா, அப்பா, பல்லு போன பாட்டி கலாய்ச்சு கூட பார்த்திருப்பீங்க. ஆனா, இந்தியாவுலயே, ஏன் இந்த வேர்ல்டுலயே ஒரு ஆவி கலாய்ச்ச ஒரே ஆளு (கடைசி ஆளும்) நான் தான்.பேய் இருக்கறத கூட மறந்துட்டு எல்லாம் விழுந்து விழுந்து சிரிச்சுதுங்க. அப்போ ‘நங்’னு ஒரு சத்தம். எவன் பார்த்த வேலைனு தெரியல, தம்பளர் கீழ விழிந்துடுச்சு. எல்லாருக்கும் உள்ள இழுத்த மூச்சு, அங்கேயே நின்னுடுச்சு. வெளிய வரல. ஒரு பொட்டு சத்தம் இல்ல. அந்த தம்பளரையே பார்த்துட்டு இருந்தோம். அப்போ ‘படார்’னு ரூம் கதவு திறக்க, ஒரு உருவம் வந்து நின்னுச்சு. எல்லாரும் அலறி அடிச்சுக்கிட்டு, ஒருத்தன் மேல ஒருத்தன் ஏறி, குமிச்சு வச்ச குப்பை மாதிரி, மூலைல குமிஞ்சோம்.

“சாமி புறப்பாடு ஆகிடுச்சு. இருட்டுல என்ன விளையாட்டு உங்களுக்கு? கீழ வாங்க எல்லாரும்”னு சொல்லிட்டே லைட்ட போட்டாங்க, என் பெரியம்மா. அப்பாடா!போ... உசுரு வந்துடுச்சு

அந்த ...வி எங்களை விட்டுடுச்சு

இது போல ஒரு வேலை

செய்யவேணாம் இனி மேல

நொடி கூட இங்க இருக்காத

உயிரை விட்டு ஆவி கூட செல்ல நினைக்காத...“நீங்க போங்க பெரியம்மா, நாங்க வர்றோம்”னு சொல்லி அனுப்பிவச்சேன்.“டேய் போதும்டா இதெல்லாம். வாங்க போலாம்” - நான்.

“அக்கா அப்படி எல்லாம் விட்டுட்டு போக முடியாது. ‘குட்பை’ சொல்லி அந்த ஸ்பிரிட்ட அனுப்பி வைக்கணும்” - மலையாள சிண்டு.

“அதான், தம்பளர் கவுந்துடுச்சே. அந்த ஸ்பிரிட் எங்க போச்சோ! எதுக்குடி குட்பை?”

“அக்கா சொல்லமுடியாது. அது தம்பளர்குள்ள ஒட்டிட்டு இருந்தாலும் இருக்கும்”

“அதென்னடி குடிச்சு வச்ச டீ க்ளாசா, அடியில ஒட்டிட்டு இருக்க??”

“அக்கா, இல்லகா ரிஸ்கு. நாம ‘குட்பை’ சொல்லிடுவோம்”சரின்னு விழுந்த தம்பளர் நிமிர்த்தி வச்சு, “குட் பை ஸ்பிரிட்”னு அந்த சிண்டு சொல்ல, தம்பளர் ‘Good bye’ வட்டத்துல போய் நின்னுது. விட்டா போதும்டா சாமி’னு, ஒரே ஓட்டமா எல்லாரும் ஓடி போய்ட்டோம். சாமி ஊர்வலமும், சரியா எங்க வீட்டு வாசல் முன்னாடி வந்தது. எல்லாருக்கும் அப்பதான் நிம்மதியும் வந்தது. “அக்கா, இங்க சாமி வந்துடுச்சுல, இனிமே அந்த ஆவி இங்க இருக்காது. எங்கயாவது ஓடி போய் இருக்கும்”னு என் காத கடிச்சுது அந்த சிண்டு. ‘மொதல்ல நான் தான் உங்களை விட்டு ஓடணும்’னு விளையாட்டா மனசுல நெனச்சேன். ஆனா, அதே மாதிரி ஆயிடுச்சு. அதுக்கு அடுத்த வருஷம், படிப்பு முடிஞ்சு, வேலை, கல்யாணம், குழந்தைன்னு வாழ்க்கை ஓடிடுச்சு. திருவிழா மட்டும் பார்க்க சந்தர்ப்பமே அமையல.


இந்த சம்பவம் நடந்து ஒரு பத்து, பன்னிரெண்டு வருஷம் இருக்கும். எப்ப ஊருக்கு போனாலும், எங்க அம்மாயி வீட்ல தான் தங்குவேன். அந்த ரூம் தலைகீழா மாறி, இப்போ ‘கெஸ்ட் ரூம்’ ஆயிடுச்சு. என்னதான் எல்லாம் மாறிப் போனாலும், நாங்க விளையாண்ட கதை, பேசி சிரிச்ச கதை எல்லாம் இன்னும் அந்த சுவர்கள்ளையும், ஜன்னல் கம்பிகள்ளையும் படிஞ்சு தான் இருக்கு. அப்போ சிரிச்சு, சிரிச்சு கண்ணுல தண்ணி வந்தது. இப்போ நெனச்சு நெனச்சு கண்ணுல தண்ணி வருது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.