" சார் போஸ்ட் "நாம பெத்து கஷ்டப்பட்டு வளத்து ஆளாக்கி வேலைக்கு போக் கூடிய தகுதியை வளத்து எல்லாம் சொல்லிக் குடுத்து அதுக்கப்புறம்தானே இப்போ இந்தப் பொண்ணை நம்ம பையனுக்கு கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கிறோம்

என்னமோ அவளே பெத்து வளத்து கல்யாணம் பண்ணிகிட்டா மாதிரி அவன் நமக்கு சொந்தமே இல்லாத மாதிரி அவளோட புருஷன் அவன் நம்மை கவனிக்கவே கூடாதுன்னு இப்பிடி ராமாயண கூனி மாதிரி வஞ்சகம் செய்யறாளே , இது நியாயமா என்று குமுறினாள் வைதேகி

இதோ பாரு அதெல்லாம் அப்பிடித்தான்! நாம ஆழமா யோசிக்கறா மாதிரி அவங்கல்லாம் யோசிக்கறதில்லே, நாமதான் பெத்த பாசம் வளத்த பாசம்ன்னெல்லாம் தேவையில்லாத உணர்ச்சிகளுக்கு அடிமையாகி குமுறரோம்.

அதெல்லாம் இல்லேங்க என் மனக் குமுறல் எல்லாத்தையும் இந்த லெட்டர்லே எழுதி இருக்கேன் , இந்த லெட்டரை அவளுக்கு போஸ்ட் பண்ணிடுங்க. அப்பவாவது திருந்தறாளான்னு பாப்போம் என்ற வைதேகியை

சரி உன் கையாலே நீயே போஸ்ட் பண்ணிடு , அவ பேரு அட்ரஸ் எல்லாம் சரியா எழுதியிருக்கியா வெளிநாட்டுக்கு போகவேண்டிய லெட்டர் அங்கே ;போயிட்டா ட்ரேஸ் பண்ணமுடியாது நம்மாலே . என்றார். எல்லாம் சரியாத்தான் எழுதி இருக்கேன் வாங்க போஸ்ட் பண்ணிட்டு வரலாம் என்றபடி கிளம்பினாள் வைதேகி.

வெளிநாட்டுக்கு போற தபால் எல்லாம் இந்தப் பெட்டியிலே போடணும் என்றபடி அந்த தபால் பெட்டிக்கு அருகே அழைத்துச் சென்றவர் , இதோ பாரு இப்போ கூட ஒண்ணும் குடி முழுகிப் போயிடலே நிதானமா யோசிச்சுப்பாரு , நாம இந்த லெட்டரை அனுப்பறோம் நிச்சயமா அவ கைக்கு கிடைச்சுரும், இந்த பொட்டியிலே போட்டதுக்கப்புறம் அடேடே யோசிக்காம போட்டுட்டமேன்னு வருத்தப்பட்டு ப்ரயோசனம் இல்லே, போட்டதுக்கப்புறம் இந்த லெட்டர் அவளுக்குதான் சொந்தம், திரும்ப நம்மாலே வாங்க முடியாது. என்றார் கனகசபை.

எல்லாம் யோசிச்சுட்டேன் போட்டே ஆகணும் என்றாள் வைதேகி

நாம இந்த லெட்டரை அனுப்பறா மாதிரி ஆண்டவன் நம்மகிட்டே நம்ம புள்ளையை அனுப்பினான், ஆனா நம்ம மருமகப் பொண்ணு பேரை அட்ரஸ்லே எழுதிட்டானே , நாம வெறும் போஸ்ட்மேன் தான்,. அதுனாலே இந்த புள்ளையை பத்திரமா பாதுகாத்து அட்ரஸிலே எழுதி இருக்கற பேரைப் பாத்து நம்ம மருமகப் பொண்ணுகிட்டே குடுத்தாச்சு. இப்போ நீ போடப் ;போறியே அந்த லெட்டர்மாதிரிதான்.

அதுனாலே இந்த லெட்டர் எப்பிடி உன் மருமகப் பொண்ணுக்கு சொந்தமோ அதே போலத்தான் நம்ம புள்ளையும் இனிமே அவளுக்குதான் சொந்தம்னு அவ நெனைக்கறா. தப்பில்லையே. நல்லா யோசிச்சுக்கோ போஸ்ட் செய்யறதுக்கு முன்னாடி, பிள்ளை விஷயத்திலே நாம் செஞ்ச தப்பை மறுபடியும் செய்யணுமான்னு என்றார்.

ஒரு கணம் அப்படியே போய் அங்கே இருந்த பெஞ்சியில் உட்கார்ந்தவள் சற்று நேரம் அப்படியே உட்கார்ந்திருந்தாள். எழுந்தாள் சரிங்க இந்த லெட்டரை போஸ்ட் செய்ய வேண்டாம் வாங்க வீட்டுக்கு போகலாமென்றாள் தீர்மானமாக வைதேகி,

ஒரு புன்னகையுடன் வைதேகி யின் கையை ஆதரவாகப் பிடித்தபடி வெளியே வந்தார் கனகசபை. வெய்யில் கண்ணைக் கூசியது. கருப்புக் கண்ணாடியை எடுத்து மாட்டிக்கொண்டு எல்லா உணர்ச்சிகளையும் மறைத்துக் கொண்டு புன்னகைத்தார் கனகசபைஅன்புடன்

தமிழ்த்தேனீtamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.