உயிர் உறையும் நேரம்

ஒரே நாளில் புள்ளத்தாச்சிக்காரி மீனாவும் அவள் அண்ணன் ராசுவும் இறந்துபோக ஊரே சோகமயமாகி இருந்தது.பிரசவத்திற்கு அழைத்துச் சென்ற ராசு, பிள்ளை கொடிசுத்தியிருப்பதாகவும் இரண்டில் ஒரு உசுரு கண்டிப்பாக போய்விடும் என்ற மருத்துவரிடம், என் தங்கச்சிய மட்டுமாவது காப்பாத்திருங்க டாக்டர்ன்னு அவன் கதறியதும், மதுரையில இருக்குற முக்கால்வாசி ஆஸ்பத்திரிக்கும் மெடிக்கலுக்கும் பேயா சுத்துனதாகவும் ஊர்க்காரர்கள் சொல்லி கதறி அழுதபோது கனத்த கல் நெஞ்சில் விழுந்து அழுத்தியது.சிம்மக்கல் சிக்னலில் மணல் லாரி ட்ரைலர் கதவு தலையில கழண்டு விழும் வரை அவன் வேகம் அநாயசமாக இருந்ததாம். அவனுக்குள்ள தங்கச்சிய எப்படியும் பிழைக்க வச்சுறனுங்கிற வெறி இருந்துருக்கும் ஆனால் தங்கச்சி செத்தாளா? பிழைச்சாளான்னு? தெரிஞ்சுக்ககூட இல்லை அவன்.


"ஹலோ சொல்றா வெங்கட் "


"என்னடா சொல்ற?? "


"காலையில என்கூடதான்ட பைக்ல வந்தான் "


நான் சரவணன், எனக்கு பேய்னா பயம் இருந்ததில்லை ஏன்னா? நான் நாத்திகன். குமார், என் நண்பன் காலையில என்கூட பைக்ல வந்தவன் இப்ப பிணமா மார்ச்சுவரியில இருக்கானாம். குமாரோட சேர்த்து எங்க ஊர்ல இந்தமாசம் மட்டும் விழுந்த சாவு ஆறு, அதில நாலு சாவு மர்மமான சாவு. நாலு பேரும் முப்பது வயசுக்குள்ள உள்ளவங்க .

மார்ச்சுவரி முன்னாடி சிறு குழு குழுமியிருந்தது


"வெங்கட் "


"மச்சான்"


"எப்படிடா"


"அவன் மாமா வண்டிய எடுத்துட்டு பெட்ரோல் போட போய்ருக்கான், சர்ச் பக்கத்தில ஜெராக்ஸ் கடைக்கிட்ட சைக்கிள் வரிசையா நிப்பாட்டி வச்சுறுப்பாய்ங்களே. அந்த இடத்தில மண்ணு வாரிவிட்டு பஸ்ஸுக்கு அடியில போய்ட்டான் "


"ச்ச்ச் ச்ச்சே" அடுத்த நொடி என் செல் ஒலித்தது.


" ஹலோ, என்னம்மா நான் மார்ச்சுவரிக்குலாம் போகல, இன்னும் அரை மணி நேரத்தில வந்திறேன். வெங்கடேஸ் இருக்கான்மா அவன்கூட வந்திறேன் நீ வைம்மா "


" போஸ்ட்மார்டம் எப்ப பன்றாங்களாம் ?”


"காலையிலதான் பாடி கிடைக்குமாம் "


" சரிடா வீட்டுக்கு வரியா ?? "


" இல்லை மச்சான் நான் இங்கே எங்க அக்கா வீட்ல தங்கிட்டு காலையில வரேன் மச்சான். நீயும் வாயேன்டா? ? "


"இல்லைடா காலையில் வேலைக்கு வரனும் ட்ரெஸ் இல்லை, நான் வீட்டுக்கு போறேன்டா"


"சரிடா பார்த்து போ "


பைக்குக்கு பெட்ரோல் போட சர்ச் பங்குக்கு போக நினைத்தவன் ஏனோ வேறு பங்குக்கு திருப்பினேன் . முதல்முறையாக நான் செய்தது அசட்டுத்தனமான செயலாகவே தோன்றியது இருந்தாலும் ஒரே மாதத்தில் ஒரு சின்ன கிராமத்தில் ஆறு சாவு என்பது அசாதரணமான ஒன்றுதான் . போலிஸ் ஜீப் ஒன்று இடைமறித்தபோதுதான் இயல்நிலைக்கு திரும்பினேன்.


"என்னடா இந்த நேரத்தில எந்த ஏரியாடா நீ "


" கிள்ளியூர் சார்! என் ப்ரெண்ட் ஆக்சிடென்ட்ல இறந்துட்டான், அதான் ஹாஸ்பிடல இருந்துட்டு வீட்டுக்கு போறேன் "


" யாரு சாயந்திரம் டவுன் பஸ்ல மாட்டி செத்தானே அவனா "


" ஆமா சார் "

" சரி போ "


மணி பதினொன்னு பத்து எப்படியா இருந்தாலும் பன்னிரண்டு மணிக்குள்ள ஊருக்கு போய்டலாம். மறுபடியும் மனது பயந்து யோசித்ததை உணர்ந்தேன் .சாமி இல்லை பேய் இல்லை பூதம் இல்லை என்று பேசிய வாய் இன்று ஏதேதோ உளறியது.


அந்த கொடூர இருட்டைக்கிழித்தபடி என் பைக் சென்று கொண்டிருந்தது. குறுக்கே பாய்ந்த இரண்டு முயல்கள் கூட என்னை வெகுவாக பயமுறுத்தியது.தூரத்தில் சானான்தோப்பில் நேற்று இறந்த பொண்ணியின் சடலத்தை எரித்துக்கொண்டிருந்தனர். மெல்லிய நடுக்கம் என் உடம்பில் நுழைந்ததை உணர்ந்தேன்


“.****** இந்த வெட்டியான் **** இப்பதான் வந்தான் போல காலையில் இருந்து தேடிகிட்டு இருந்தாய்ங்க” வெட்டியானை திட்டி சிறிது பயத்தை போக்கினேன்.


திடிரென குளிர்ந்த காற்று வீசி வியர்த்திருந்த என் உடலில் மின்சாரம் பாய்ச்சியது.ரோமக்கற்றைகள் போருக்கு கிளம்பும் சிப்பாயக நிமிர்ந்து நின்றன

" சர்வண்ணா "

" ஆங்ங் " என்பெயரை யாரோ காதோரம் கிசுகிசுத்தனர்.என் உடம்பு சிலிர்த்து பயம் நடுஉச்சியில் ஏறியது . முகமெல்லாம் கூட புளியங்காய் தின்றதுபோல கூசியது.அடுத்தநொடி என் பைக் இரண்டு வெட்டு வெட்டி அணைந்தது.

" ஆக்க், ச்சே அந்த போலிஸ்காரன்கிட்ட பேசிகிட்டே பெட்ரோல் போடாமல் வந்துட்டேனே " வண்டியை சாய்த்து, பெட்ரோல் டாங்கில் ஊதி எத்தனையோ பிரயத்தனம் செய்துவிட்டேன் ஈகூம்ம் .


உடம்பில் இருந்து வியர்வை ஆறாக ஓடியது பிணவாடை வேறு அருகில் வீச ஆரம்பித்தது. சரவணா சுடுகாட்டை நெருங்கிட்டே அந்தப்பக்கம் பார்க்காதே மனசு மருகியது. வாய் மெல்ல கந்தசஸ்டியை முனுமுனுக்க ஆரம்பித்தது .


சுடுகாட்டு அனல் மெல்ல தாக்கியது திடும்மென எழுந்தது பொண்ணியின் சடலம் , சர்வநாடியும் ஒடுங்கியது எனக்கு. பைக் என் கையிலுருந்து நழுவியது, கருப்பனும் அவன் மகனும் அதை அடித்து அமுக்குவது தெரிந்தது. அதற்கு பின் " சரவண்ண்ண்ணா " அந்தக் குரல் இம்முறை தெளிவாக கேட்டது, மிகவும் பரிச்சயபட்ட குரல்.


பொண்ணி, மீனா, ராசு, பூசாரி, வள்ளியாச்சி என ஒருவர் பின் ஒருவராக மாண்டவர்கள் மனக்கண்ணில் தோன்றி மயிர் கோதி சென்றனர்.


" சரவண்ண்ண்ணா " ஆம் இது குமாரின் குரல், காலையில் என்னுடன் வந்து மாலையின் எமனுடன் சென்றவன். ரோலர் ஹோஸ்டரில் இருந்து தலைகுப்பற விழுவதைப் போன்றிருந்தது.


" குமார்ரு..… அக்க்க் க்க்வக்க்க்" குமாரின் ஆவி எதற்காக என்னை சூழ்கிறது?  என் மனக்கண்ணில் நான் இழைத்த பாவம் எல்லாம் மனத்திரையில் பயம் என்னும் குதிரை பூட்டி ஓடத்தொடங்கியது .

" தெரிந்துருக்குமோ? "

குமாரின் டிஎன்பிஎஸ்சி கால்லெட்டர் கிழித்தது, ராசுவுடன் சேர்ந்து சரசை ...
என்குரள்வளை நெறிபட ஆரம்பித்தது, கண்விழி பிதுங்கியது , மெல்லக் கரைந்து கொண்டிருந்த என் ஜீவன் எட்டாவது உயிரை தேட ஆரம்பித்திருந்தது கண்மாய் நீருக்குள் அமிழ்ந்தபடி...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.