அதிகக்குளிரில் சீக்கிரமே முழிப்பு வந்துவிட எழுந்தபோதே அம்மா கிச்சனில் லைட் எரிய சமைத்துக்கொண்டிருப்பாள். விடிந்தப்பப்புறம் கிச்சனில் லைட் என்றால் என் மனசுக்கு உடனே வெளியே மழை என்று புரிபட்டு குதூகலமாகிவிடும். முதலில் ஸ்கூலுக்கு அனுப்ப மாட்டாள். லீவு விடாட்டாலும் “ அதெல்லாம் கிடையாது, போப்படாது” என்று அதே தீர்க்கமான டெசிஷன்.


“இந்த மழைக்கேல்லாம் ஒண்ணும் ஆகாது அல்லி! இத்தன குழந்தைகள் வரச்சே,என்ன, ரகுவ அனுப்பு! இன்னிக்கு டெஸ்ட்” என்று பிருந்தா டீச்சர் பாதி சிரிப்பு பாதி கண்டிப்பாகச்சொன்னாலும்,


“இல்ல பிருந்தா! நீ இன்னொரு நாள் இவனுக்கு தனியா டெஸ்ட் வெச்சுடு, நா அனுப்ப மாட்டேன். வழில குண்டும் குழியுமா இருக்கு, ஒயர் ஏதானும் அறுந்து கெடந்தா..”


எட்டு மணி வரைக்கும் ஏதானும் புஸ்தகத்த வெச்சுண்டு பாவ்லா பண்ணி விட்டு திண்ணைக்கு வந்து விடுவேன். மொத்தம் ஏழோ எட்டோ வீடுகள் மட்டும் இருந்த எங்கள் தெருவில் மழைத்தண்ணீர் சுழித்துக்கொண்டு ஓடும். காம்பவுண்டுக்குள்ளேயே ஒரு இன்ப ஆறு மோஹனமாக நெளியும். மழையின் அலைக்கழிப்பில் செம்பருத்திப்பூவின் மெல்லிய காம்பு அல்லாடும் பரிதாபம். தென்னை மரத்திலிருந்து சொட்டும் நீரில் சொர்க்கம் தெரியும். சில சமயம் எப்போதோ தொலைத்த கலர் பென்சில், ஷார்ப்பனர் என்ற பள்ளி சமாச்சாரங்களும் பல மாலைகளுக்கு முன்னர் சாப்பிட்டு எறிந்த காட்பரீஸ் சாக்லெட் பேப்பரும் மிதந்து வரும்.


”கொழந்த மழைல நனயப்போறான், பாத்துக்கோங்கோ! ரெண்டு தூத்தலுக்கே மண்டைல நீர் கோத்துண்டு அவஸ்தைப்படுவான்” என்று அப்பாவுக்கு கட்டளை போகும்.


பவானி பிறந்த பிறகு, “ அவனோட கூடகூடப்போய் மழைல நிக்கறயா நீ? உள்ல வந்து ”ஹச் ஹச்”சுன்னு தும்மு சொல்றேன், அப்படியே படுக்கைல போட்டுட்டு சீந்த மாட்டேன், வாடி உள்ள” அன்று அவளுக்கு மண்டகப்படி விழும்.


திருட்டுத்தன மழை நீர் அளைச்சலுக்குப்பிறகு குளித்து சாப்பிட்டபின் மழை விட்டு தூவானமாக இருக்கும் நேரம் வாழ்க்கையின் இரண்டாவது அதீத சந்தோஷ கணம். மூன்றாவது வீட்டில் சங்கரும் அடுத்த வீட்டு பாபுவும் வாசலுக்கு வந்திருப்பார்கள்.


அம்மா சாப்பிட்டு விட்டு கண்ணயரும் வேளையானதால் கொஞ்சம் தைரியமாக வாசலுக்கு வரலாம். சத்தமில்லாமல் மாடிப்படி அருகே இருந்து கல்கண்டு பத்திரிகை பேப்பர்களை எடுத்து கிழிப்பேன், கப்பல் பண்ண! விகடன் குமுதமெல்லாம் தோதுப்படாது. அம்மாவை நம்ப முடியாது. திடீரென்று போன ரெண்டு வார விகடன எடுத்துப்படிக்க ஆரம்பிப்பாள்.


“எங்கடா ரெண்டு பக்கத்த காணும்? கிழிச்சியா? ஒரு சாமான உருப்படியா விட்டு வெக்காத!’ க்கு பயந்து கல்கண்டை நாடுவேன். அதை ரெண்டாம் தடவை அம்மா படித்ததாக வரலாறு இல்லை!


எங்கள் தெருவின் மேற்கு வழி ட்ரஜெக்டரி புரியாமல் பாபு விடும் கப்பல் என் வீட்டுக்கு ராயசமாக வரும்போது நான் விடும் கப்பல் ஏன் அவன் வீட்டுக்குப்போவதில்லை என்கிற விஞ்ஞானம் புரியாமல் மிகுந்த கவலைப்பட்டிருக்கேன்.


ஏதோ IPR Protectionரேஞ்சுக்கு பாபு, தான் விடும் கப்பல்களில் தன் பெயரை, காபியிங் பென்சில் என்று ஒரு நீலக்கலர் பென்சில் வரும் அந்தக்காலத்தில், அதான் வாயில் வைத்தால் உடனே உதட்டைச்சுற்றி வயலெட்டாக சாயம் படுமே, அதில் கோணலாக எழுதி அனுப்புவான். அன்று மாலையே தரை தட்டியிருக்கும் கப்பலகளைப்பார்வையிட என் வீட்டுக்குப்பக்கம் வந்து ’இதுதான் ஃபாஸ்டாப்போச்சு, இது உன்னோட கப்பல டாஷ் பண்ணிட்டு போய்டுத்து” என்றெல்லாம் வெறுப்பேற்றி விட்டுப்போவான்.


சில மழை நாட்களில் அம்மாவே வாசலுக்கு என்னோடு வந்து ”இதப்பார், இந்த திக் பேப்பர்ல கப்பல் எப்படிப்போகும், இந்தா இந்த தின் பேபர்ல பண்ணு” என்றெல்லாம் எடுத்துத்தருவாள். கூடவே துணி உணர்த்தும் கம்பை வைத்துக்கொண்டு தண்ணியில் லாவகமாக அலைகள் ஏற்படுத்தி கப்பலை வேகமாக ஓட வைப்பாள். இந்த ஆட்டமெல்லாம் ரெண்டு மணி வரைதான். ”போடா எனக்கு விவித பாரதி கேக்கணும்” என்று என்னை சோகத்தில் தவிக்க விட்டு ஹிந்திப்பாடல் கேட்கப்போய்விடுவாள்.


அடுத்த நாள் மழை நின்று, நான் ஸ்கூலுக்குப்போய்விட்டு மாலை திரும்ப வரும்போது காம்பௌண்டுக்கு வெளியே தேங்கி இருக்கும் தண்ணீரில் நேற்றைய கப்பல்கள் பாதி மூழ்கி, காகித மடிப்புக்கள் கலைந்து, பிரிந்து, அழுக்காக சாய்ந்து கிடக்கும்.காட்சி மனதைக்கனமாக்கும்.


அன்னிக்கு மழை பெய்யவில்லை. தண்ணீர் தேங்க வில்லை, கப்பலும் விடவில்லை. அவை தரை தட்டிக்கவிரவும் இல்லை. ஆனால் மனது அதே கனமாக இருந்தது, அம்மாவை எரித்துவிட்டுத்திரும்பிய மதியம்.


மழையும் காகிதக்கப்பலும் அம்மாவும் பிடிக்காத நேரம் ஒன்றுண்டா?

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.