இதயம் - 3

மூணு பேரும் சேர்ந்து ரிலாக்ஸ்டா டைம் ஸ்பென்ட் பண்ணி எவ்வளவு நாளாச்சு.....” உணர்ந்து சொன்ன சுமந்ததை நோக்கி ஆமோதிப்பாய் புன்னகைத்தான் தாம்சன்.

மூவரும் சுமந்த்தின் அதிநவீனமாய் அலங்கரிக்கப்பட்டிருந்த அலுவலக அறையின் ஒரு புறத்தில் அமைக்கப்பட்டிருந்த உணவு மேஜையில் அமர்ந்திருந்தனர். அறையின் மற்ற பகுதிகளில் அரையிருள் சூழ்ந்திருக்க, மேஜைக்கு நேர்மேலே ஒளியை உமிழ்ந்து கொண்டிருந்த பெண்டன்ட் விளக்கு அந்த சூழ்நிலைக்கு ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. நதாஷா கருப்பு வண்ண பேண்டும் ப்லேசரும் அணிந்து, நவீன ஊடகப் பெண்களின் மறுபதிப்பாக இருந்தாள். தலைமுடி ஸ்ப்ரிங் ஸ்ப்ரிங்காய் தோள் வரை புரண்டது.

“அப்புறம் நட்ஸ்....என்டர்டெயின்மென்ட் டெஸ்க் எப்படி போகுது? நான் அந்த பக்கம் வந்தே ரொம்ப நாளாச்சு. நீ அனுப்புற டெய்லி ரிபோர்ட்ஸ் பார்க்கிறதோட சரி....” – பீங்கான் தட்டுகளில் மோதும் ஸ்பூன் மற்றும் போர்க்கின் ஒலி அவர்களின் பேச்சுக்கு பின்னணி இசை அமைத்துக் கொண்டிருக்க, தன்னுடைய நெடுநாள் தோழியை பேச்சுக்குள் இழுத்தான் சுமந்த்.

“ரிலாக்ஸ்டா டைம் ஸ்பென்ட் பண்ணி நாளாச்சுன்னு சொல்லிட்டே ஆபீஷியலா பேசுறான்....இவனை என்ன பண்ணலாம் டாம்.” அவளின் கேலி புரிந்த போதும் பெரிதாக கண்டுகொள்ளாமல் உணவில் கவனமானான். என்ன முயன்றும் சற்று முன் தினேஷ் அனுப்பிய புகைப்படமும் தகவல்களும் அவனின் மூளையின் ஒரு மூலையில் சட்டமாய் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தததை அவனால் விலக்க முடியவில்லை.

‘ஸ்மோக்கி ஐய்ஸ்....அதுக்குள்ள ஏதோ ஒரு காயம் இருக்கு.....’ அவனுடைய மனம் ஷ்ரேயாவை சுற்றிச் சுற்றி வட்டமடித்தது.

என்னதான் அவர்கள் மூவரும் இலகுவாக நேரம் செலவு செய்ய விரும்பினாலும், பேச்சு என்னவோ அவர்களின் உயிர்மூச்சான நியூஸ் சேனலையே சுற்றி வந்தது. அரசியல் நிலவரம், நாட்டு நடப்பு என்று பேச்சு துறை சார்ந்து நீண்டு கொண்டே போனது.

“பட் சுமந்த்....இன்னைக்கு நீ நீயா இல்ல. சம்திங் இஸ் டிஸ்டர்பிங் யு. பெண்கள் உன்னை டிஸ்டர்ப் பண்ற ஸ்டேஜை எல்லாம் நீ தாண்டிட்டதா நினைச்சேன்....” என்றாவறே விடைபெறும் வேளையில் கண்ணைச் சிமிட்டினான் தாம்சன்.

ஹையோ மறுபடியுமா? காலேஜ் டேஸ்ல அந்தப் பொண்ணு பேரு என்ன? ஹான் மேக்னா! அவளை லவ் பண்றேன்னு பின்னாடியே போய் கொஞ்ச நாள் லவ்விட்டு, பிடிக்கலைன்னு பிரேக் அப் பண்ணினியே...” நதாஷா பழைய குப்பையைக் கிளற.....

“இது என்ன வம்பா போச்சு! அதுக்காக லைப்ல மறுபடி நான் லவ்வே பண்ணக் கூடாதா என்ன? அவ என் கார்டை ஸ்வைப் பண்ணியே போண்டியாக்கப் பார்த்தா...அவ கூட கண்டினியூ பண்ணிருந்தா இந்நேரம் நடுரோட்டுக்கு வந்திருப்பேன்...” சண்டைக்குக் கிளம்பினான் சுமந்த்.

“அதுக்கில்லைடா! நல்லா யோசிச்சு காலை விடு....உன் புலம்பலைக் கேட்க நான் ஆளில்லை...இப்பவே சொல்லிட்டேன்...” கையெடுத்து கும்பிட்டாள் நட்ஸ்.

“அப்படி யாரையும் இன்னும் மீட் பண்ணல. மீட் பண்ணினா ஃபர்ஸ்ட் இன்ஃபர்மேஷன் உங்க ரெண்டு பேருக்கும் தான். கிளம்புங்கடா! சீக்கிரம் குட் நியூஸ் சொல்லுங்க ரெண்டு பேரும்....”

விரைவில் திருமணம் புரியக் காத்திருக்கும் அந்த அழகான ஜோடியை நட்பாய் முதுகில் தட்டி வழியனுப்பினான்.

அதன் பிறகு அவனுக்கு நின்று நிதானித்து எதையும் யோசிக்கவும் பொழுது இருக்கவில்லை. வாரம் ஒரு முறை ஒளிபரப்பாகும் டாக் ஷோ நிகழ்ச்சிக்கான ரெக்கார்டிங் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

‘ஆரம்பம் முதலே ஸ்டுடியோ ப்ளோர் மேனேஜருக்கும் ப்ரோக்ராம் டைரக்டருக்கும் ஏழாம் பொருத்தமா இருக்கு. ரெண்டு பேரையும் தனித் தனியா கூப்பிட்டு பேசணும்....’ மனதுக்குள் எண்ணியபடி வரிசை கட்டி நின்ற வேலைகளை ஒழுங்கு படுத்திக் கொண்டான்.

அதிகாலை மூன்று மணிவரை அலுவல்களின் ஆக்கிரமிப்பில் இருந்தவன், அதற்குப் பிறகு அங்கேயே அவனுடைய வசதிக்காக போட்டு வைத்திருந்த கௌச்சில் படுத்து உறக்கத்தின் பிடிக்குள் நழுவினான். ஏழு மணி வாக்கில் எழுந்து முகம் கழுவி காபி அருந்திவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.

‘இனிய உதயம்’ என்ற காலை நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்க, அது நேரலை நிகழ்ச்சி இல்லை என்ற போதிலும் ஒரு கணம் மெயின் டெஸ்கில் நின்று மானிட்டர் பார்த்துவிட்டே கிளம்பினான்.

பங்களாவிற்கு வெளியே வழக்கம் போல விதம் விதமான ரகங்களில் வாகனங்கள்...உள்ளே கும்பல் கும்பலாய் கரை வேட்டிகள். அவனுக்கு ஆயாசமாய் இருந்தது.

‘பேசாம ஓஎம்ஆர்ல இருக்குற பிளாட்க்கு ஷிப்ட் ஆகிட்டா என்ன.....?’ யோசனை ஓடியது. வேலை அதிகமாக இருக்கும் நாட்களில் அவ்வபோது அங்கே தங்கிக் கொள்வான்.

‘அம்மா....இந்த வீட்டோட காத்துல கலந்திருக்கும் அவங்களோட சுவாசம்....அதுக்காக மட்டும் தான்.....அதுக்காக மட்டும் தான் இங்கே இருக்கேன்....’ மனம் தாயின் நினைவில் பெருமூச்சு விட்டது.

காரை நிறுத்தி இறங்கியவன்....

“தம்பி.....” ஆவலாய் அன்பாய் ஒலித்த சற்றே பழக்கப்பட்ட குரலில் திரும்பினான்.

“அடடே! துரைசாமி மாமா....எப்படி இருக்கீங்க? எப்ப வந்தீங்க ஊர்ல இருந்து....?”

“காலைல தான் தம்பி! அப்பா தான் கிளம்பி வரச் சொன்னாங்க. தம்பி இளைச்ச மாதிரி இருக்கீங்க....அம்மா இல்லாத வீடு, வீடாட்டமே இல்லை. எங்கே திரும்புனாலும் அவங்க நிற்குற மாதிரியே இருக்குது.....மனசே ஆறல போங்க...” அவர் குரலில் விசனம் பொங்கி வழிந்தது.

“ஹ்ம்ம்.....” அவன் என்ன பதில் பேசுவது என்றே புரியாமல் அமைதியாய் நின்றான்.

“அப்பா இன்னும் ஆபிஸ் ரூமுக்கே வரலை போலிருக்கு. நீங்க டைனிங் ஹால் போய் சாப்பிடுங்க மாமா....” அவரை திசைதிருப்பி அனுப்பி வைத்தான்.

‘இவர் ரொம்ப வெள்ளந்தியாச்சே! இவரை எதுக்கு வரச் சொல்லி இருக்கார் இந்த அப்பா...சம்திங் பிஷ்ஷி....’ எண்ணியபடி அறைக்குச் சென்றவன், தன்னுடைய நம்பிக்கைக்குரிய தனியார் துப்பறியும் நிபுணன் பிரதீப்பை அழைத்தான்.

“பிரதீப்! இன்னைக்கு தானே பிக்ஸ் பண்ணி இருக்கு. எல்லாம் ஏற்கனவே பேசினது தானே...ப்ளான்ல எந்த மாற்றமும் இல்லையே....ஹ்ம்ம்...ஓகே...டன்....” என்று விட்டு விட்டு தொடர்பின்றி பூடகமாய் பேசிவிட்டு அன்றாட அலுவல்களைப் பார்க்கப் போனான்.

சென்னை அசோக் நகரில் அமைந்திருந்த நாராயண் குழும கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலகம்....

சாதாரண வேட்டி சட்டையில், கரடுமுரடான தோற்றம் கொண்ட கிராமத்து மனிதரிடம் தாழ்ந்த குரலில் பேசிக் கொண்டிருந்தான் அந்த வரவேற்பு இளைஞன்.

“சார்! நீங்க இதோட அஞ்சாறு முறை வந்துட்டீங்க. அதனால நான் உங்களை எங்களோட இன்னொரு ஆபிஸ்க்கு டைரக்ட் பண்றேன். இன்னும் ப்ளஸ் டூ ரிசல்ட் வரல. நீங்க இப்பவே சீட் புக் பண்ணனும்னா, அந்த ஆபிஸ் போய் அட்வான்ஸ் பே பண்ணி புக் பண்ணிக்கலாம். பையனோட டென்த் மார்க் ஷீட் குடுங்க...” என்றபடி அதை வாங்கி ஒரு பார்வை பார்த்தவன், அவரின் கையில் ஒரு துண்டு சீட்டில் எழுதப்பட்ட விலாசத்தை திணித்தான்.

பணம் வைத்திருந்த தோல்பையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு காரில் ஏறிக் கொண்ட அந்த மனிதர் தன்னுடைய அலைபேசியை உயிர்பித்து யாரையோ அழைத்தார்.

“தம்பி! அட்ரஸ் கெடச்சு போச்சு...அங்கன தான் போயிட்டு இருக்கேன்...” என்று தகவல் கொடுத்தார்.

அந்த விலாசம் போரூர் தாண்டி ஒரு குறுக்குச் சந்தில் இருந்தது. இரண்டொரு அறைகள் மட்டுமே உள்ளடக்கிய சிறிய இடம், அலுவலகத்துக்கான எந்த லட்சணங்களும் இல்லாமல் இருந்தது.

உள்ளே நுழைந்தவுடனேயே கொஞ்சம் தாட்டியான இளைஞன் அவரருகில் வந்து..”சார்! செல்போன் ஆப் பண்ணி என் கிட்ட குடுத்துடுங்க. உங்க கார் சாவி, பேனா இன்னும் கைல என்னென்ன வெச்சிருக்கீங்களோ அது எல்லாத்தையும் இந்த பைக்குள்ள போட்டுடுங்க. உங்க பொருள் நீங்க திரும்பி வர்ற வரை பத்திரமா இருக்கும்...” என, அவரும் அவன் சொன்னது போலவே செய்தார்.

“சார்! பணமெல்லாம் அதுக்குள்ள வாங்க மாட்டாங்க. உங்க கூட யாராவது வந்திருந்தா அவங்க கிட்ட உங்க பணப் பையை குடுத்துட்டு வந்துடுங்க....” என்று சொல்ல, அவரும் வெளியே சென்று காரில் இருந்த நபரிடம் பணப் பையை ஒப்படைத்து விட்டு வந்தார்.

விமானப் பயணத்தின் செகியூரிட்டி செக்கை மிஞ்சும் வகையில் மீண்டும் சோதனை நடத்தப் பட்டு, நிராயுதபாணியாக ஒரு அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார்.

“உட்காருங்க சார்!” மிக மரியாதையாக உபசரித்த அந்த நடுத்தர வயது மனிதர் நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

“சார்! உங்க பையன் டென்த் மார்க் ஷீட் பார்த்தேன். ப்ளஸ் டூல அதை விட ப்ளஸ் ஆர் மைனஸ் அஞ்சு பெர்சண்டேஜ் வரும். கட் ஆப் 180 வந்துச்சுன்னா அறுபது.....அதுக்கும் குறைஞ்சா எண்பது. நீங்க பிப்டி பெர்சென்ட் அட்வான்ஸ் பே பண்ணி சீட் புக் பண்ணிக்கலாம். உங்க பணத்தை அப்படியே கட்டி நம்பர் போட்டு வெச்சிடுவோம். ரிசல்ட் வந்த பிறகு உங்களுக்கு கௌன்சலிங்ல சீட் கிடைச்சா பத்து லட்சம் மட்டும் பிடிச்சிட்டு மிச்சத்தை அப்படியே நேர்மையா திருப்பிக் கொடுத்துடுவோம். ஒண்ணும் அவசரம் இல்ல. நீங்க நல்லா யோசிச்சிட்டு ரெண்டு நாள் கழிச்சு விருப்பமிருந்தா வாங்க....பணத்துக்கு எந்த ரசீதும் குடுக்க மாட்டோம்...” நீளமாக தெளிவாகப் பேசி முடித்தார்.

“ஒஹ்..சரிங்க சரிங்க...” என்று தலையை உருட்டிக் கொண்டிருந்த வேட்டி சட்டை...”யோசிச்சுட்டு பணத்தோட ரெண்டு நாள்ல வர்றேனுங்க...” என்றபடி கிளம்பினார்.

மேலும் இரண்டு நாட்கள் வழமை போல பரபரப்புடன் நகர்ந்து போயிருக்க, பாரதியின் ‘தீ தித்திக்கும் தீயின்’ அடுத்த அத்தியாயத்தை வாசிக்கும் ஆவலில் நள்ளிரவில் அவளின் ப்ளாகை க்ளிக்கினான் சுமந்த்...

ஜுவாலை – 2

ஸ்டடி ஹாலிடேஸ் துவங்கியிருக்க, அதைக் காரணம் காட்டி சென்னை வந்திருந்தாள் அவந்திகா. வீடு அசாதாரண அமைதியில் உறைந்திருந்தது. அவள் வந்து இரண்டு நாட்களாகியும் அப்பா அவளின் முகத்தை ஏறிட்டும் பார்க்கவில்லை.

‘எத்தனை வயதானாலும், வளர்ந்த பிள்ளைகள் இருந்தாலும் ஆண் மட்டும் ஆணா தான் இருப்பான் போல. பெண்கள் தான் தாயா சிநேகிதியா சேவகியா தன்னை மாத்திக்கிறாங்க.....’ மனம் கசந்து வழிந்தது.

பெற்றோரின் அறைக்குள் ஏதோ வாக்குவாதம் நடப்பதும், தொடர்ந்த அம்மாவின் தீனமான அழுகை ஒலியும் அவளுக்கு வயிற்றைப் பிசைந்தது. மெல்ல மாடியேறினாள். அவர்களின் அறைகதவின் அருகே இருந்த சுவற்றில் சாய்ந்து நின்று கொண்டாள். இப்போது அவர்களின் உரையாடல் கொஞ்சம் தெளிவாகவே கேட்டது. இது போல ஒட்டுக் கேட்கும் அநாகரீக சூழ்நிலையில் தன்னை நிறுத்தி விட்டிருந்த விதியின் மீது கோபம் பொங்கியது.

“இவ்வளவு வருஷம் நல்லபடியா தானே இருந்தீங்க. ஏதோ அப்பப்போ தண்ணியடிப்பீங்க....பெண்கள் விஷயத்துல என் புருஷன் மாதிரி வருமான்னு பெருமையா இருந்தேனே.....என் தலையில கல்லைத் தூக்கி போட்ட மாதிரி இப்படி பண்ணிட்டீங்களே...கல்யாண வயசுல பொண்ணு இருக்கு...ஐயோ கடவுளே!” பொங்கி வந்த அழுகையை புடவைத் தலைப்பில் அடக்கியபடி, தாள மாட்டாமல் பேசிக் கொண்டிருந்தார் சுமதி.

“ஏய்! ரெண்டு நாளா இந்த ஒப்பாரியை கேட்டு கேட்டு புளிச்சு போச்சு எனக்கு. ஊர்ல எவனும் செய்யாததையா நான் செஞ்சுட்டேன். நீயே சொல்ற இல்ல...இவ்வளவு நாளு நல்லபடியா இருந்தேன்னு! இப்ப ஏன் இப்படி பண்ணேன்னு நல்லா உட்காந்து யோசி...உன்னால தாண்டி...எப்ப பாரு கோயிலு விரதம் புண்ணாக்கு.....இல்லேன்னா இடுப்புவலி முட்டிவலி....ஒரு வலியும் இல்லேன்னா..வேலை அதிகம்னு ஒரு சாக்கு....” அவர் அடுக்கிக் கொண்டே போக, அதிர்ந்து போனார் சுமதி.

“எங்கே, என் முகத்தைப் பார்த்து சொல்லுங்க! உங்களுக்கு நான் குறை வெச்சேன்னு என் முகத்தை பார்த்து சொல்லுங்க!” ஆவேசம் வந்தவரைப் போல கணவரைப் பிடித்து உலுக்கினார். சட்டென்று தன்னை மீட்டுக் கொண்டு, தீச்சுட்டார்போல கைகளை விலக்கிக் கொண்டார்.

“சீ! என் கையால இனி உங்களை தொட மாட்டேன்....” சொல்லிக்கொண்டே பின்னுக்கு நகர்ந்து சுவற்றில் சாய்ந்து நின்று விட்டார்.

“இங்க பாரு! சும்மா சீன் போடாதே. நானே டிபார்ட்மன்ட் என்கொயரின்னு அலைஞ்சிட்டு இருக்கேன். இதுல சொந்தக்காரனுக வேற போன் மேல போன் போடறானுங்க. எவன் கேட்டாலும்...அது அவர் குரலே இல்லைன்னு அடிச்சு பேசு...இப்பெல்லாம் தெருவுக்கு தெரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் இருக்கானுங்க...இவர் பேரைக் கெடுக்க யாரோ சதி செஞ்சுட்டதா ஸ்ட்ராங்கா பேசு...புரிஞ்சுதா....” என...

“ஆனா அது உங்க குரல் தான்....எனக்குத் தெரியும்....” சுமதியின் குரல் அழுகையில் உடைந்தது.

“ஆமாடி! இப்ப என்ன பண்ணணும்கற? இப்படியே பேசிட்டு இரு....கர்மம்...உன் முகத்தை பார்க்கவே பிடிக்கல...அப்படியே கழுத்தை நெரிச்சடலாம் போல வருது...” பேசியபடி சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே கிளம்பினார்.

அறைக்கதவைத் திறந்தவர் அவந்திகாவைப் பார்த்து கொஞ்சம் திகைத்துத் தான் போனார். ஆனால் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இறங்கிப் போய் விட்டார். சுமதி சுவற்றில் சரிந்து அமர்ந்திருந்தார். பார்வை எங்கோ வெறித்தபடி இருந்தது.

‘இத்தனை விரதமும் பூஜைகளும் இந்த மனிதருக்காகத் தானே! மனைவியா என் கடமையை நான் செய்யலைன்னு இப்படி கூசாம சொல்லிட்டு போறாரே...கடவுளே!’ எத்தனை யோசித்தாலும் தாம்பத்திய கடமையிலிருந்து தவறியதாக கணவரின் குற்றச்சாட்டை அவரால் ஏற்கவே முடியவில்லை. இதயத்தின் மத்தியில் கத்தி விட்டு திருகினாற்போல் வலித்தது.

“அம்மா அம்மா.....!”தாயின் தோளை லேசாக உலுக்கி நனவுக்கு மீட்டு வந்தாள் அவந்திகா. மெல்லத் திரும்பி மகளின் முகம் பார்த்தவர், அவளின் முக வடிவை நடுங்கும் விரல்களால் வருடினார்.

“அம்மா இப்படி சொல்றேனேன்னு தப்பா நினைச்சுக்காதே அவந்தி! எந்த ஆம்பிளையையும் நம்பிடாதே! புருஷனா இருந்தாலும் கண்காணிச்சிட்டே தான் இருக்கணும். உனக்கு ஒரு நல்ல வாழ்கை அமையுறதைப் பார்கிறவரை இந்த அம்மா உயிரோட இருப்பேனான்னு கூட தெரியலை....” கண்ணீர் வழிய அணைத்துக் கொண்டார்.

“இனி என்ன ஆகும் மா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அப்பாவை பார்க்கவே வெறுப்பா இருக்கு. அப்பான்னு சொல்லக் கூட பிடிக்கலை. அவர்கிட்ட குற்றவுணர்ச்சி கூட இல்லை. நாம தனியா போய்டலாமா மா? உங்க பேர்ல ஏதாவது ப்ராபர்ட்டி இருக்கா? நான் இதுவரை இப்படி எல்லாம் யோசிச்சதே இல்லை....” தாயின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கேவினாள்.

“நாம எங்கேயும் போக முடியாது-டா! அம்மா பேர்ல எதுவும் இல்ல. எனக்கு என்னைப் பத்தி கவலை இல்லை. உன்னை ஒரு நல்லவன் கைல பிடிச்சு கொடுத்துட்டா போதும். அபினவை நீ தான் பார்த்துக்கணும். எனக்கு உடம்பு வர வர ரொம்ப படுத்துது-மா! எதுக்கும் ஒரு செக்கப் பண்ணிக்கலாம்னு இருக்கேன். அப்பாயின்ட்மெண்ட் கூட வாங்கினேன். துணைக்கு வர்றியா ராஜாத்தி! தனியா போக கஷ்டமா இருக்கு...” உடல் ரீதியான பிரச்னையை மகளிடம் கூட மனம் விட்டுப் பகிர முடியாமல் மறுகிப் போனார் அந்தத் தாய். கணவர் தடம் மாறிப் போயிருக்க, தனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும் அசௌகரியங்களுக்கும் அவரின் ஒழுக்கக்கேடான நடவடிக்கைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்ற நினைவில் அவரின் உள்ளம் பதறியது.

‘கடவுளே! அப்படி எதுவும் இருக்கக் கூடாது. என் பிள்ளைகளுக்காக....என் பிள்ளைகளுக்காக என் மேல கொஞ்சம் கருணை காட்டு! இதுக்கும் மேல பெருசா எதையும் என் தலை மேல தூக்கி போட்டுடாதே....என்னால தாங்க முடியாது...!” அவரின் உள்ளம் அரற்றியது. என்னதான் இறைவனை வேண்டிக் கொண்டாலும் மனம் நம்பிக்கையிழந்து தவித்தது. இன்னும் பெரிதாக ஏதோ வரப்போகிறது என்று ஆழ்மனம் அடித்துச் சொன்னது.

“அம்மா! நீங்க முகம் கழுவிட்டு கீழே வாங்க. நான் போய் சாப்பாடு எடுத்து வைக்கிறேன். நீங்க காலைலியே ஒண்ணும் சாப்பிடல...” சற்றே வற்புறுத்தலாகச் சொல்லி அவரை எழச்செய்தாள். அவரைக் குளியலறைக்குள் அனுப்பிவிட்டு கீழே இறங்கி வந்தாள்.

மாடிப்படிக்கு கீழே நின்றபடி அப்பா யாருடனோ தழைந்த குரலில் பேசுவது கேட்டு ஒரு நிமிடம் சுதாரித்தாள்.

“ரொம்ப ஆட்டம் காட்றான் அந்த காஞ்சீபுரம் கலக்டர்! வியாழக்கிழமை அன்னைக்கு நாள் குறிச்சிருக்கு. மணல் லாரியை வெச்சு லைட்டா ஒரு காட்டு காட்டினா அடங்கிடுவான்.”

அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. சிறுவயது முதல் மிகப் பிரியமாக என்றில்லாவிட்டாலும், ஓரளவு அக்கறை காட்டியே வளர்த்த தந்தை என்ற ஆதர்ஸ பிம்பத்தின் மீது, அவரே ஒவ்வொரு கல்லாய் விட்டெறிந்து அந்த பிம்பத்தை அலங்கோல வடிவமாக்கிக் கொண்டிருப்பது அவளுக்குப் புரிந்து போனது.

ஜுவாலை பற்றி எரியும்...

‘கண நேர சபலத்துக்கு ஆளாகும் ஆண்கள், ஒரு நிமிஷம் அவங்களை நம்பியிருக்கும் குடும்பத்தை பத்தி யோசிச்சு பார்த்தா...இப்படி வழி மாறி போக முடியுமா? யோசிப்பாங்களா இருக்கும்! ஆனா ஆண் அப்படின்ற மமதை கண்ணை மறைக்குமோ? என்ன தான் தறிகெட்டு நடந்தாலும் பாதிப்பு என்னவோ மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தானே.....’

கௌரவமான வாழ்க்கை வாழும் ஒரு குடும்பம், அக்குடும்பத் தலைவனின் அடாத செயலால் சுமக்கும் சிலுவைகள், சுமந்த்தின் மனத்தை பாரமாக்கின.

‘நல்ல ரைட்டிங் ஸ்கில்! படிக்க ஆரம்பிச்சா அப்படியே எழுத்து உள்ளுக்கு இழுக்குது....’ எண்ணியபடியே விளக்கணைத்துப் படுத்தவன், சடாரென்று எழுந்தமர்ந்து கொண்டான்.

‘கடைசில....காஞ்சிபுரம் கலெக்டர்ன்னு ஏதோ எழுதிருந்தாளே?’

‘மை காட்!’


இதயம் இன்னும் கேட்கும் ...

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.