நீ நான் நிழல்

மின்னல் வேகத்தில் ஒரு கார் தடுமாறி சாலையின் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக சுழன்று ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது இடித்து கவிழ்ந்து கிடக்கிறது.

12 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த இரவு. மயான அமைதி.

திடீரென விழித்தான் வினோத், இரத்த வெள்ளத்தில் இவன் முகத்துக்கு அருகில் வந்து கிடந்தான் அவனது நண்பன் மனிஷ், வினோத் சீட் பெல்ட் போட்டிருந்தவாறு தலைகீழாக தொங்கிக்கொண்டிருந்தான். தலையில் இருந்து வழிந்த இரத்தம் சொட்டு சொட்டாக நொறுங்கிக்கிடந்த கண்ணாடி மீது விழுந்து கொண்டிருந்தது, தனது நிலை அறியாது மனிஷை இந்த கோலத்தில் பார்த்த வினோத் அதிர்ச்சியில் மீண்டும் மயக்கம் அடைந்தான்.

யாரோ தன்னை தள்ளிக்கொண்டு போவது போல இருந்தது வினோத்திற்கு, கண்களை திறக்க இயலவில்லை ஆனால் காதுகள் மட்டும் வெளியில் நடப்பவைகளை உள்வாங்கிக்கொண்டிருந்தது. இவனது உடல் அசைவை கண்டதும் ஒரு குரல்,

“நான் டாக்டர் சந்தோஷ், உங்க கார் ஆக்ஸிடென்ட் ஆயிடுச்சு, யு டோன்ட் ஒரி, யு ஆர் சேப்(Safe) நவ்" என்று சொன்னவாறு ஸ்டெர்ச்சரில் தள்ளிக்கொண்டு போனார் டாக்டர்.

“மனிஷ்…. மனிஷ்….” என்று புலம்பிக்கொண்டே இருந்தான் வினோத்.


*****

யக்கத்தில் இருந்து விழிக்கிறான் வினோத்.

இருள் சூழ்ந்த அறை. ஆழ்த்த அமைதி.

சோபாவுக்கு எதிராக இருந்த கடிகாரத்திலிருந்து மெல்லியதாக நொடிமுள்ளின் சப்தம் மட்டும் கேட்கிறது.

தொலைபேசி ஒலிக்க, அருகிலேயே அமர்ந்திருந்தவன் சப்தம் வரும் திசையில் கைகளை துளாவி தொலைபேசியின் ரிசீவரை எடுத்து

"ஹலோ" என்றான் வினோத்.

"ஹலோ, எப்படி டா இருக்க?" எதிர் முனையில்.

"யார் பேசுறது" களைப்பான குரலில்.

"நான் தான் டா? என்ன தெரியலையா? அடிக்கடி பேசுனா தெரியும், நீ தான் பேசி 2 மாசமாவது இருக்குமே?

எப்படி உனக்கு என்ன தெரிய போகுது...??"

ஜன்னல் கதவு பட பட வென காற்றில் அடிக்கிறது.

திடிரென்று லைட்டில் இருந்து ஒளி பரவுகிறது, வினோத்திற்கு எதிராக ஒரு மனிதனின் நிழல் தெரிய பயந்துவிடுகிறான்.

அவன் விழிகளில் இருந்து உடல் முழுவதும் பயம் பரவுகிறது. அடுத்த நொடி லைட் மீண்டும் அணைகிறது.

எதிர் முனையியல் பேச்சை கேட்க கேட்க, வியர்க்கிறது வினோத்துக்கு.

களைப்பாக இருந்தவன் இப்போது தெளிவாக இருந்தான்.

“ரெண்டு மாசமா உன்கிட்ட பேச ட்ரை பண்ணிட்டு இருக்கேன் டா?”

குழப்பமான தொனியில்

" நான் உன்ன கடைசியா பாத்தது…." பயத்தில் குரல் சீராக இருந்திருக்கவில்லை.

“கார்ல ஆக்ஸிடென்ட், என் முகத்துக்கு முன்னாடி” பேச தயங்கினான்.

"ம்.. ம்.."

மீண்டும் லைட்டில் இருந்து ஒளி பரவுகிறது, எதிராக மீண்டும் அந்த நிழல், அது அவனது நிழலே.

மீண்டும் பேச எத்தனித்தவன்.

வீட்டினுள் பெட் ரூம் அறையில் கதவு திறக்க பேச வந்ததை வாயிலே முழுங்கினான், வெறும் நிழல் மட்டும் தரையில் விரிந்தது, அந்த நிழலை பார்த்து பேசுகிறான்.

" ஆபீஸ் கால், வேற ஒண்ணுமில்ல”

நிழல் மெதுவாக மறைய, கண்கள் கடிகாரத்தை நோக்கி சுழல்கிறது. மணி 12:05.

பெட் ரூம் கதவு மூடிவிட்டதா என்று பார்த்துவிட்டு.

மீண்டும் தொடர்கிறான்,

"அதுக்கு அப்பறம் உன்ன நான் பாக்கவே இல்ல."

"என்னனு சொன்னாத்தானே தெரியும், கார் ஆக்ஸிடென்ட்க்கு அப்பறம்” என்றான் நண்பன்.

"நீ… நீ…” படபடப்பு தொற்றிக்கொண்டது.

“நீ செத்துட்டேன்னு கேள்விப்பட்டேன்" என்று முடிப்பதற்குள்.

“ஹா… ஹா…. ஹா….” எதிர்முனையில் சிரிப்பு சப்தம் பலமாக இருந்தது.

"நான் செத்துருந்தா, இப்போ எப்படி உன்கிட்ட பேசிட்டு இருப்பேன்?"

அதிரிச்சியாய் இருந்தது வினோத்திற்கு.

“நீ ரொம்ப கொழப்பிக்காத, பதட்டத்த விடு, நான் செத்தத நீ பாத்தியா??”

வினோத்தின் இதய துடிப்பு வேகமாக இருந்தது.

“நான் நிழல் இல்ல வினோ நிஜம் தான், என்ன நம்பு" என்று சொல்லி போனை துண்டிக்கிறான் நண்பன்.

வேர்வை கடலானது வினோத்திற்கு.

மீண்டும் இருள் சூழ, திடுக்கென்று விழிக்கிறான் நடந்தது அனைத்தும் கனவு போல இருந்தது.


*****

வியர்வையை துடைத்தவாறு வேகமாக எழுந்து அமர்கிறான், பின் மெதுவாக எழுந்து மனைவியை பார்த்தவாறே நடக்க, அவளது நிழல் மதில் மீது விரிகிறது.

ஹாலுக்கு வந்து கடிகாரத்தை பார்த்தான், மணி 11 55.

போனை பார்த்தவாறு ஜன்னல் அருகே சென்றான்.

ஜன்னல் கதவுகளை திறக்க, ஜில்லென்று காற்று வீசுகிறது, அதில் மயங்கி அங்கையே கண்களை மூடி நிற்கிறான்.

மெல்லியதாக நொடி முள்ளின் சப்தம் அவன் காதுகளில் கேட்கிறது, தொலைபேசியை திரும்பி பார்க்க, சரியான நேரத்தில் ஒலிக்கிறது.

நெற்றியை சுருக்கி, ஒருசேர சிந்தனை அனைத்தையும் குவித்து தொலைபேசியை முறைத்தான்.

"ஹலோ"

"ஹலோ". எதிர்முனையில் அதே நண்பனின் குரல்.

"அப்போ அது கனவில்லையா" எண்ணிக்கொண்டு இருந்தவனுக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது.

மீண்டும் "ஹலோ, நீ உண்மையா?"

"ஆமா ஏன் நம்ப மாட்டியா?”

"என்னால நம்ப முடியல"

"நீ நம்பி தான் ஆகணும் வினோ, நம்பு"

தீவிர மௌனம், தனக்கு எதிராக தெரியும் தனது நிழலையே பார்க்கிறான் வினோத்.

"நான் பேசுறத, யார்கிட்டயும் சொல்லிடாத "

"ஆல்ரெடி சுஜா கிட்ட சொல்லிட்டேன் "

"வேற யார்கிட்டயும் சொல்லலையே"

"இல்ல... சுஜா கிட்ட மட்டும் தான்" என்றவாறு பொய் பிதற்றினான்.

“நீ இன்னும் அப்படியேதான் இருக்க வினோ, எல்லாவிஷயத்தையும் சுஜா கிட்ட உடனே சொல்லிடுவியா? இனி எதையும் சொல்லாத, சொன்னாலும் நம்ப மாட்டாங்க!!" என்றவாறு புன்னகைத்தான்.

போன் துண்டிக்கப்பட்டது, வினோத்திற்கு இன்னும் பேசவேண்டும் போல இருந்தது.

பின்பும் ரிசீவரை காதில் வைத்தவாறு தனது நிழலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் கழித்து வந்த எண்ணுக்கே அழைக்கிறான்.

"டையல்டு நம்பர் நாட் இன் யூஸ்" ரெகார்டிங் குரலாக வந்தது.

"செத்தவன் எப்படி பேசுவான்” குழப்பத்தோடு பெட் ரூம் உள்ளே வந்தவன்.

"இத இவ கிட்ட சொல்லலாமா? ஏற்கனவே அவளுக்கு உடம்பு வேற செரிஇல்ல, மனசையும் கஷ்டப்படுத்த வேண்டாம்"

மனம் அழுத்தமாக உணர பெட்டில் படுத்தவன், விட்டத்தை பார்க்கிறான்.

நண்பனை யோசித்துக்கொண்டிருந்தவன் சிறிது நேரம் கழித்து, அயர்வில் கண்களை மூட

அவன் நண்பனது முகம் ரத்தவெள்ளத்தில் அவன் முகம் அருகே இருப்பது போல தெரிய, அடுத்த கணம் விழித்து மனைவியை எழுப்ப தொடங்குகிறான்.


******


றுகிய முகத்தோடு ஆபீஸ் உள்ளே நுழைந்தவன், ஒரு கான்பரன்சிங் அறையில் சென்று அமர்ந்துகொண்டான்.

வினோத்தை தேடி அவரது மேனேஜர் அந்த அறைக்கு விரைந்தார்.

அவனை வருத்தத்தோடு பார்க்கிறார், குற்ற உணர்ச்சியோடு அவரை பார்ப்பதை தவிர்க்கிறான்.

மேனேஜர் நிழல் தரையில் தெரிய அதையே பார்த்துக்கொண்டிருந்தான்.

" வினோ, நீ இல்லாம ப்ராஜெக்ட்ட டைம்கு டெலிவர் பண்ண முடியாதுன்னு உனக்கே நல்லா தெரியும்”

"அது.. அது.. வந்து.."

அவன் பேச்சை இடைமறித்து

“உன்னோட ப்ராபளம் எனக்கு நல்லாவே தெரியும் வினோ, வி ஹேவ் டு மூவ் ஆன்.

ப்ராஜெக்ட் மட்டும் டைம்கு போகலனா நம்ம எல்லோரும் வீட்டுக்கு தான் போகணும், ப்ளீஸ் கொஞ்சம் டெடிகேட்டடா ஒர்க் பண்ணு வினோ, நீ இல்லனா கண்டிப்பா முடியாது" என்று கூறி கிளம்பியவர்.

கதவருகே சென்று திரும்பி வினோத்தை பார்த்து

“உனக்கு மட்டும் இல்ல, எல்லாத்துக்குமே பர்சனல் ப்ராபளம் இருக்கத்தான் செய்யுது, அதுக்காக இப்படியே இருந்துட முடியாது வினோ. ப்ளீஸ் டேக் கேர்.” என்றார் மேனேஜர்.

தலையில் கை வைத்தவாறு லேப்டாப்பை வெறித்துக்கொண்டிருந்தான் வினோத்.

தனது லேப்டாப் பையை திறந்து பேப்பரும் பேனாவும் எடுத்து எழுத தொடங்கினான்.

“ஹலோ டாக்டர்”

மெயில் வந்ததிற்கான அறிவிப்பு சப்தம் கேக்கவே, அதிலிருந்து களைந்து மெயில்ளை பார்க்கத்தொடங்கினான்.

மனிஷ் என்ற பெயரில் மெயில் அவன் கண்ணில் பட கலக்கமானான் லேப்டாப்பில் மணியை பார்க்க 12:00

மெயிலை திறக்க,

"சுஜா இஸ் வெரி சீரியஸ்" என்று இருந்தது, பார்த்ததும் திடுக்கிட்டான்.

அவனது இதயத்துடிப்பு அதிகரிக்க, அது அவனுக்கே தெளிவாக கேட்டது.

போனை எடுத்து வீட்டிற்கு கால் செய்கிறான்.

எதிர்முனையில் அவன் மனைவியின் பேச்சு கேக்க

"உனக்கு ஒண்ணுமில்லையே"

அவள் பேசுகிறாள்.

நிம்மதி பெருமூச்சு விட்டவன். மீண்டும் தொடர்ந்தான்.

"என் மேல கோவமா? உன்ன எழுப்பி நான் அப்படி பேசியிருக்க கூடாது, சாரி "

அவள் மௌனமாகவே இருக்கிறாள்.

"நிச்சயம் இது போல நடக்காது, இனிமேல் நான் வீட்டுக்கு வந்தா போன எடுக்கவே மாட்டேன்"

சின்ன மௌனத்திற்கு பின் பேச்சு கேட்கிறது வினோத்திற்கு.

சரி என்றவாறு போனை அணைக்க போகையில், அவனது நண்பனின் குரல் கேட்கிறது.

"என்ன வினோ என்ன நம்பலையா" போன் துண்டிக்கிறது.

கடுப்பாகிப்போனான் வினோத், நண்பனின் மெயிலை தேடினான், மீண்டும் ஒரு அறிவிப்பு சப்தம், மனிஷிடம் இருந்து மற்றுமொரு மெயில்.

"சுஜா இஸ் நாட் சேப்(safe) அட் ஹோம்"

லேப்டாப் திரையை கோபக் கனலோடு வெறித்தவன் கண்களின் வழியே உலகமே வெளுப்பாகிப்போனது.

*****

தூக்கம் இல்லாமை ஆட்கொள்ள, கண்கள் சிவந்து மிகவும் அயர்வாக காணப்பட்டான் வினோத்.

தொலைபேசிக்கு அருகில் சோபா, எதிரில் உள்ள மதிலில் கடிகாரம், தொலைபேசியையும் கடிகாரத்தையும் மாறி மாறி பார்த்தவாறு சோபாவில் அமர்ந்திருந்தான்.

மணி 12 நெருங்கிக்கொண்டிருந்தது. ஆனால் அவனுக்கு பதட்டமோ பயமோ இல்லை கோவத்தில் கொதித்துக்கொண்டிருந்தான். இவன் இதயத்துடிப்பின் சப்தத்தால் நொடிமுள்ளின் சப்தம் அவனுக்கு கேட்கவில்லை.

12 ஆக தொலைபேசி ஒலிக்கிறது.

"ஆபீஸ்ல உன்னால வேலையயே செய்ய முடியல? ஏன் இந்த மாதிரிலாம் பண்ணிட்டு இருக்க மனிஷ்?"

சின்னதாய் சிரிக்கிறான் நண்பன்.

"சுஜா ரொம்ப கோவமா இருக்கா? உன்ன பத்தி சொன்னதுல இருந்து பயப்படுறா, நான் ஒரு அமானுஷியம் கிட்ட பேசிட்டு இருக்கேன்னு நெனைக்குறா, என்கிட்ட பேசவே தயங்குறா"

இப்பொழுது சப்த்தமாக சிரிக்க தொடங்குகிறான் மனிஷ்.

இது வினோத்தை எரிச்சல் அடைய செய்கிறது.

"உச்..., நீ என்ன கண்ட்ரோல் பண்ண ட்ரை பண்ற? செத்தவனோட நான் பேசிட்டு இருக்கேன்! உன்னால என்னோட நார்மல் லைப் அபக்ட் ஆகுது, ஆபீஸ்ல எந்த வேலையும் செய்யமுடியல, என்னோட ப்ராஜெக்ட்டும் ஊத்திக்கும் போல, என்னோட மேனேஜர் என்ன சத்தம் போடுறார்”

இப்போது மீண்டும் பலமாக சிரிக்கிறான்...

"இனி உன்கிட்ட பேச ஒன்னும் இல்ல? நீ வெறும் நிழல் தான் மனிஷ் நிஜம் இல்ல.,

நீ உண்மையா இருந்தா நேர்ல வா?"

என்று கத்தியவனாய் போனை துண்டிக்கிறான் வினோத்.

அதன் பின்னும் நண்பனது சிரிப்பு சப்தம் ரீங்காரமாய் வினோத்தின் காதுகளில் கேட்டுகொண்டே இருக்கிறது...

வேகமாக எழுந்து சென்று பெட் ரூமில் நுழைந்தான், மனைவியை பார்க்கிறான்.

அவள் ஆழ்ந்த உறக்கத்தில் படுத்திருந்தாள்.

அவனது கண்களில் அவள் தேவதைப்போல பளிச்சிடுகிறாள்.

அவள் காதருகில் சென்று மிகவும் கனிவாக அவள் மனதிற்கு மட்டுமே கேட்பது போல

“இனி எந்த ப்ராபளமும் வராது சுஜா” என்று சொல்லிவிட்டு, அவள் நெற்றியில் முத்தமிடுகிறான்.

கண் இமைகள் மூடாமல், அவள் முகத்தை உற்றுப்பார்க்கிறான், மனதில் இருந்த கவலைகள் எல்லாம் மறந்து, எந்த குழப்பமும் இன்றி இயல்பு நிலைக்கு திரும்புகிறான் வினோத்.

******

ழக்கம் போல கான்பரன்சிங் அறையில் சென்று அமர்ந்தான். அவன் முகம் முழுவதுமாய் தாடியினுள் மறைந்திருந்தது. லேப்டாப்பில் மெயிலை திறக்க கைகள் நடுங்கியது.

பதட்டத்தோடு திறந்தவனுக்கு பல மெயில்கள் இருந்தது, ஆனால் எதுவும் அவன் நண்பனிடம் இருந்து வரவில்லை. பெருமூச்சு விட்டவன் தனது மேனேஜரிடம் இருந்து வந்த மெயிலை திறந்தான்.

அதில் வினோத்திற்கு ஒரு மாதம் கட்டயவிடுப்பு அளிக்குமாறும், அவனது வேலை திருப்திகரமாக இல்லாமல் இருப்பதாகவும் ஆதலால் அவனது மனநிலை கருத்தில் கொண்டு கட்டாய விடுப்பு அளிப்பதாகவும் இருந்தது.

மணியை பார்க்கிறான் 11:58.

அடுத்த இரண்டு நிமிடத்தில் என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கையில் இருந்து எழுந்தான் வினோத், மேனேஜரை தேடி அவரது இருக்கைக்கு சென்றான். அங்கே வேற ஒரு நபர் அமர்ந்திருந்தார்.

குழப்பமாக அங்கையே அவரை பார்த்துக்கொண்டிருத்தவனை

“என்ன வினோத் சொல்லுங்க” என்றார் அங்கு அமர்ந்திருப்பவர்.

“இல்ல, சுரேஷை தேடி வந்தேன்” என்று சொல்ல.

அவனை ஆச்சரியமாய் பார்த்தவர்,

"சுரேஷா, நீங்க என்ன டூ மந்த் வெகேஷன்ல இருந்தீங்களா வினோத்" என்று ஆச்சரியத்துடன் கேட்டார்.

ஒன்றும் புரியாதவனாய் அவரை பார்க்கிறான்.

"அவர் இறந்து டூ மந்த்ஸ் ஆச்சு, உங்களோட கார்ல தான ஆக்ஸிடென்ட் ஆச்சு" என்று சொல்லிவிட்டு அவர் லேப்டாப்பை பார்க்கத்தொடங்கினார்.

அது அவனுக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

அந்த அதிர்ச்சியோடு கான்பிரன்ஸ் அறைக்குள் வந்தவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, குழப்பத்தையும் தாண்டிய மனநிலையில் தவித்துக்கொண்டிருந்தான்.

தனது கைபேசியில் கால் வர எடுத்து பார்த்தான், அதில் டைலிங் டார்லிங் என்றிருந்தது.

"ஹலோ"

எதிர் முனையியல் குரலை கேட்டு பீதி அடைந்தான். பேசுவது அவனது இறந்த நண்பன் மனிஷ்.

"நீ எப்படி அங்க? ஏன் என்ன இப்படி அணு அணு வா கொல்லுற??

நீ செத்து இருந்தாலும் பரவா இல்ல, உன்ன திரும்பவும் கொல்லாம விடமாட்டேன்" என்று கத்தினான்.

கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் கொட்டியது எதிர்முனையியல் அவனது நண்பன் சிரித்து கொண்டிருந்தான்.

அந்த எ.சி அறையிலும் படபடப்பில் வேர்வை கொட்ட ஆரம்பித்தது. ரத்தம் கொதித்துக்கொண்டிருக்க,

மனஅழுத்தம் ஆட்கொள்ளவே மயக்கம் அடைந்து விழுந்தான் வினோத்.

*****

திடீரென விழிக்கிறான். அருகில் தனது மனைவியை காணவில்லை.

வேகமாக எழுந்து ஹாலுக்கு வருகிறான்

“சுஜா சுஜா” என்று கத்தியவாறு.

அவள் தொலைபேசி அருகில் அமர்ந்து இருக்கிறாள், அவளை பார்க்கிறான், அவளது நிழல் கீழே சிதறிக்கிடக்கிறது.

கடிகாரத்தை பார்க்கிறான் மணி 12:00 சின்ன முள்ளின் சப்தம் தெளிவாக கேட்கிறது.

தொலைபேசியை பார்க்கிறான். அது ஒலிப்பது போல தெரியவில்லை.

கதவை தட்டும் சப்தம்,

"நேரில் அழைத்தவன் வந்துவிட்டானா?"

கை பட படக்கிறது, கதவை தட்டும் சப்தத்தின் ஊடே பயம் காதில் இருந்து உடல் முழுவதும் பரவுகிறது. எச்சிலை விழுங்குகிறான்.

மெதுவாக கதவருகில் செல்கிறான். தனது மனைவி இருக்கும் இடத்தையும் பார்த்து கொள்கிறான்.


கதவு தட்டும் சப்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது, கதவு லென்ஸ் வழியாக பார்க்க, அங்கே யாரும் இல்லை. சப்தம் நின்றுவிட்டது.

அவனது உடல் மொழி முழுவதும் பயத்தால் மாறியிருந்தது.

மெதுவாக பின்னோக்கி கதவை பார்த்தவாறே நடந்துவந்தான்.

மீண்டும் கதவை தட்டும் சப்தம் காதை கிழிக்க வேகமாக ஓடி வந்து கதவை திறந்தான்.

வெளியே யாருமில்லை, தரையிலே நிழல் தெரிகிறது நடுக்கத்தோடு நிழல் வந்த திசையில் திரும்ப, நிமிர்ந்து பார்த்தான். பக்கத்துக்கு வீட்டுக்காரர்.

"என்ன தம்பி பாத்து ரொம்ப நாளாச்சு”

அதிர்ச்சியாய் அவரை பார்க்கிறான், வியர்த்திருக்கிறது.

“பயந்துட்டியா? சாரி பா."

வினோத் உள்ளே திரும்பி,

"பக்கத்துக்கு வீட்டுக்காரர் தான்" என்றான்.

அவர் கையில் ஒரு கவர் வைத்திருந்தார், அதை அவனிடம் குடுத்தார்.

"கொரியர் தம்பி" என்று சொல்லி உள்ளே எட்டி பார்த்தார் இருட்டில் எதுவும் தெரியவில்லை. வாங்கிக்கொண்டு கதவை சாத்தினான் வினோத்.

தொலைபேசி அருகே வந்தவன். மணியை பார்த்தான் 12:05. மனைவி சோபாவில் படுத்தவள் உறங்கிப்போயிருந்தாள்.

வாங்கி வந்த கொரியர் என்னவென்று பார்க்க ஆவல் ஆனான்.

அதில் இறந்து போன நண்பனின் பெயர் இருந்தது, மீண்டும் கலக்கத்தில்.

இதைய துடிப்பு கூடியது, கை நடுக்கம் வேறு, மனம் அழுத்தமாகிக்கொண்டே இருந்தது.

அதை பிரித்தான், அதனுள்ளே மேலும் இரண்டு லெட்டர்.

ஒன்றில் இது உனக்கானது என்றும் மற்றோன்றில் இது சந்தோஷுக்கு, பிரித்து படிக்கவேண்டாம் என்று முகப்பிலேயே எழுதியிருந்தது.

அவனுக்காக வந்த லெட்டரை பிரித்தான்.

அதில்,


அன்பு நண்பன் வினோவிற்கு,

நான் உன்னை மிகவும் தொந்தரவு செய்து விட்டேன்,

உனக்கு என்னை பிடிக்கவில்லை போலும்.

இனி நான் உனக்கு எந்த தொந்தரவு செய்யமாட்டேன்,

அதற்க்கு கைமாறாக எனக்கு ஒரு உதவி,

அந்த லெட்டரை கொண்டு சென்று அதில் உள்ள முகவரியியல் சேர்த்து விடு, நீ படிக்க மாட்டாய் என்று நம்புகிறேன்.

கடைசியாய் ஒரு முறை,

ரியலி ஐ மிஸ் யு நண்பா.

நன்றி..


மற்றொரு லெட்டரில் சந்தோஷ் என்றும் அவரது முகவரியும் இருந்தது.

"எப்படியும் இத போய் சேர்த்துடனும், அப்பத்தான் நம்ம நிம்மதியா இருக்கமுடியும்" உறக்கத்தில் இருந்த மனைவியை பார்த்து பேசினான்.

*****

மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான் வினோத், தனது மனைவியையும் அழைத்துக்கொண்டு லெட்டரில் இருந்த முகவரிக்கு காரில் புறப்பட்டான்.

வெளியே செக்யூரிட்டி அமர்ந்திருந்தார், காரைவிட்டு இறங்கி அந்த செக்யூரிட்டியிடம் தான் ஒரு லெட்டரை சந்தோஷிடம் சேர்க்கவேண்டும் என்றும் சொல்ல.

அவர் சந்தோஷுக்கு இண்டர்காம் வழியாக அழைக்கிறார், சந்தோஷ் வினோத்தை தனது ஹாலில் அமர சொல்லிவிட்டு அந்த லெட்டரை கொண்டு வர சொல்கிறார்.

அவசரமாக வெளியே கிளம்பிக்கொண்டிருந்த சந்தோஷ், லெட்டரை படித்ததும் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்குகிறார்.


ஹலோ டாக்டர்,


நான் மிகவும் மன உளைச்சலில் வாழ்ந்து வருகிறேன், நான் எனது நண்பன் மனிஷ் மற்றும் எனது மேனேஜர் சுரேஷ் மூவரும் ஒரு பார்ட்டிக்கு சென்று திரும்பும் போது எதிர்பாரா விதமாக ஆக்ஸிடென்ட் ஆகி மனிஷும் சுரேஷும் சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். அவர்கள் என்னையும் என் மனைவியையும் நிழல் போலவே பின் தொடர்கிறார்கள். அவர்களிடம் இருந்து என்னையும் என் மனைவியையும் தயவுகூர்ந்து காப்பாற்றுங்கள்.


நன்றி

வினோத்


தனது மேஜைக்கு சென்று, லெட்டர் மேலே பேப்பர் வெயிட்டை வைத்தார். அது பேன் காற்றில் மேலும் கீழுமாக அசைகிறது.

மேஜையிலே இருக்கும் கணினி வழியாக சி.சி.டிவி காமெராவில் பார்க்கிறார்.

வினோத் சோபாவில் அமர்ந்து அருகில் பேசிக்கொண்டிருக்கிறான்.

இண்டர்காம் வழியாக செக்யூரிட்டியை அழைக்கிறார்.

"சொல்லுங்க டாக்டர் "

"அவர செகண்ட் புளோர் வரச்சொல்லுங்க"

"சரிங்க டாக்டர்"

செக்யூரிட்டி வினோத்திடம் லிப்ட் இருக்கும் திசையை காட்டிவிட, வினோத்தும் அவனது மனைவியும் லிப்ட் உள்ளே ஏற கதவு மூடுகிறது.

இரண்டு என்ற பட்டனை அழுத்த லிப்ட் நகர்கிறது.

சந்தோஷ் லிப்ட் வாசலில் வினோத்திற்காக காத்திருக்கிறார்.

லிப்ட் திறந்து வினோத் மட்டும் வெளியே வருகிறார்.

சந்தோஷ் வினோத்தை பார்த்தவாறு புன்னகைத்து,

" தாங்கள் வினோத் தானே " என்று கனிவோடு கேட்கிறார்.

"ஆமாம்" என்று புன்னகையோடு பதில் சொல்ல, வினோத் கைபேசியை எடுத்து பார்க்கிறான், அதில் டைலிங் டார்லிங் என்றிருக்க.

"போன் அடிக்கிறதா, ப்ளீஸ் அட்டென்ட் யுவர் கால்" என்று சந்தோஷ் சொல்கிறார்.

"ஹலோ"

"ஹாஹாஹா" மேனேஜரும் நண்பனும் சிரிக்கிறார்கள்.

"நீங்கதான் உயிரோடு இல்லையே, என் மனைவிக்கு மட்டும் எதாவது ஆச்சு ...." என்று கத்த போன் துண்டிக்கிறது.

"டென்ஷன் ஆகாதீங்க வினோத், டூ மந்த்ஸ் முன்ன நீங்க ஆக்ஸிடென்ட் ஆனப்போ நான் தான் ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணேன், உங்க ப்ராபளம் எனக்கு புரியுது"என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கு, வேகமாக லிப்டில் பாய்ந்தான் வினோத்.

மீண்டும் இண்டர்காம் வழியாக செக்யூரிட்டிக்கு கால் செய்து

"அவர் கொஞ்சம் மென்டலா டிஸ்டர்ப் ஆகிருக்கார், அவர வெளிய விடாதீங்க, நான் கீழே வரேன்" என்று சொல்லிவிட்டு படிக்கட்டு வழியாக இறங்கினார் சந்தோஷ்.

அப்போது அவர் சிந்தைக்கு எட்டியது,

“அன்று ஆக்ஸிடென்ட்டில் மூன்று பேர் இறந்து போனார்களே, ஒரு பெண்ணும் உட்பட, அவர் மனைவியாய் தான் இருக்க வேண்டும், அவர் பெயர்கூட சுஜாதா” என்று எண்ணிக்கொண்டு

அவர் கீழிறங்கி வர, செக்யூரிட்டி யிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தான் வினோத்.

செக்யூரிட்டி யை அடித்துவிட்டு "சுஜா... சுஜா..." என்று கத்தியவாறு ஓடிச்சென்று காருக்குள் ஏறினான்.


மின்னல் வேகத்தில் ஒரு கார் தடுமாறி சாலையின் இடதுபுறத்தில் இருந்து வலதுபுறமாக சுழன்று, ஓரத்தில் இருந்த புளியமரத்தின் மீது இடித்து கவிழ்ந்து கிடக்கிறது.

12 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது அந்த இரவு. மயான அமைதி.

இரத்த வெள்ளத்தில் அருகில் இருந்த சீட்டில் சீட் பெல்ட் போட்டிருந்தவாறு வினோத்தின் திசை நோக்கி கிடந்தவள், அவனையே பார்க்கிறாள், மயங்கிக்கிடக்கிறான். உடலிலும் மனதிலும் வலிமைகள் ஏதும் அற்றவள், அவனை முழுவதுமாய் மனதினுள் நினைத்து வினோ வினோ என்று அழைக்கிறாள். அவனுக்கு எந்த சப்தமும் கேட்டதுபோல் தெரியவில்லை. கடைசியாய் ஒருமுறை தனக்குள் இருக்கும் மொத்த பலத்தையும் ஒன்று சேர்த்து வினோத் என்ற அவள் கத்த. வினோத் பதறிக்கொண்டு முழிக்கிறான், அவளது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக அவளை விட்டு பிரிந்து கொண்டிருக்க வினோத் சாகவில்லை என்ற திருப்தியோடு புன்னகைக்கிறாள். உயிர் பிரிகிறது.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.