இங்கே கலாபேகம் என்று ஒரு ஆசிரியர் இருந்தார்களே! அவர்கள் இப்போது இல்லையா?

அடுக்ககத்தின் ஐந்தாவது மாடியில் எதிர்வீட்டு மாமியிடம் கேட்டுக்கொண்டிருந்ததை பாலாமணி கேட்டாள்.

வீட்டைப் பூட்டியபடி நீங்கள் யார்? அவர்கள் இந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பையனுடன் அமெரிக்கா சென்றுவிட்டார்கள். ரிடையர்மெண்ட் வந்தபிறகு அவர்களுக்குப் போரடித்துவிட்டது.

நான் அவர்களுடைய மாணவன். எனது பெயர் சிவா. இனி அவர்களைப் பார்க்க இயலாதா? அமெரிக்க முகவரி தர இயலுமா?

நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?

நான் சுந்தரம் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக இருக்கிறேன். இவை ஆசியருக்காக நான் வாங்கி வந்தவை. இவற்றை நான் என்ன செய்வது?

அதற்குள் சிவாவின் செல்லிடப்பேசி அழைக்கவே, இதோ! வந்துவிடுகிறேன் டிரைவர்! எனச் செல்லிடப்பேசியை அணைத்தார்.

நீங்கள் கீழே சென்று எதிர்வீடு ஒன்று இருக்கும். அதில் காந்தி இல்லம் என ஒன்று இருக்கும். அங்கு இவற்றைத் தந்துவிடுங்கள் எனப் பாலாமணி கூறிவிட்டு சட்டெனச் சென்றுவிட்டார்.

மேடம்! முகவரி கேட்டேனே! என்றார்.

பாலாமணி ஒன்றுமே பேசவில்லை.

லிஃப்டில் மெளனமாக சிவா பட்டனை அழுத்தாமலேயே நின்று யோசித்துக் கொண்டிருந்தார்.

ஏன் அப்படிச் சொன்னாய்?

பின்னே அந்தம்மா புருஷனைப் பத்தி கதையா சொல்ல முடியும்?

சிவாவின் காதில் வார்த்தைகள் அறைந்தன.

குடிகாரக் கணவனால் கலாபேகம் பள்ளியில் பட்ட அவமானங்கள் சிவாவின் மனதில் அலைஅலையாய் எழுந்து மறைந்தது. இருந்த ஒரு பிள்ளையை நல்ல படிப்பு படிப்பதற்காகப் பணிக்கு வந்ததாகச் சக ஆசிரியரிடம் பேசியதை ஒருநாள் சிவா கேட்க நேர்ந்தது.

இவனை ஒரு நல்ல இடத்துல பணியில் சேர்த்துட்டேன்னோ என் உயிரைப் பற்றிக் கவலைப்படமாட்டேன்.

சொன்ன கலாபேகத்தின் வார்த்தைகள் சிவாவின் நெஞ்சை நெருடியது.

எனது ஆசிரியர் இந்தியாவை விட்டுச் சென்றிருக்கமாட்டார் என்ற எண்ணம் வலுப் பெற்றது.

வகுப்பில் நடந்த காந்தி தாய்க்குச் செய்த சத்தியம் கற்றுத் தந்த பாடம் அவருக்கு அந்த எண்ணத்தைக் கொடுத்து இந்த அளவு உயர்ந்த பணியைப் பெற்றுத் தந்துள்ளதென்றால் கற்றுத் தந்த ஆசிரியர் மட்டும் எப்படி வெளிநாடு செல்ல முடியும்?

கைப்பையில் ஆசிரியர் கையெழுத்து போட்டுக் கொடுத்திருந்த கலாம் எழுதிய புத்தகம் மனதில் கனத்தது.

அதற்குள் லிஃப்டில் யாரோ ஒரு சிறுமி உள்ளே வந்து லிஃப்டை லாக் செய்தாள்.

அங்கிள் நீங்க இங்கே யாரைத் தேடி வந்தீங்க? என்றாள்.

எனது ஆசிரியரைத் தேடித்தான்மா……………

ஓ! அந்தக் குடிகாரன் வொய்ஃபா?

அதிர்ந்தார் சிவா.

குடிகாரனாக அவர் கணவர் இருந்தாலும் ஆசிரியர் இல்லையா அம்மா!

குடிகாரனையே திருத்த இயலாத ஆசிரியர் மாணவர்களுக்கு எப்படி நல்லவழி காட்ட முடியும் அங்கிள்?

எங்க கிளாசில் இருந்து பார்த்தால் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களே பாரில் குடிப்பது தெரியும்!

காந்தி பாடத்தைப் போதிக்கும் ஆசிரியருக்கு ஏன் மதுவை ஒழிக்க அரசுவிற்கு பெட்டிஷன் போடத் தெரியவில்லை அங்கிள்? குடிப்பவனுக்கு சகோதரி, தாய், மனைவின்னு பேதமா தெரியும்! இன்னைக்கு அம்மா என்னை கராத்தே வகுப்பிற்கு அனுப்பறதுக்குக் காரணமே இந்தக் குடிதான். என்னை நான் காப்பாத்திக்கணும் இல்லையா?

சிவா மௌனமானார்.

இன்றைய மாணவர்களி்ன் பார்வையே வேறுமாதிரி இருக்குப்பா என்ற நண்பன் சேசாத்ரியின் பேச்சு நினைவிற்கு வந்தது.

லிஃப்ட் கிரவுண்ட் ஃப்ளோர் வரவே, அதோ! அந்த ஆசிரியர் கட்டின காந்தி இல்லம். அவர்கள் புருஷன் அவர்களை அடித்து உதைத்ததில் அவர்கள் கோமா நிலைக்குப் போய்விட்டார். அவர் உடல் உறுப்புகளை எல்லாம் தானமாக யாருக்கோ கொடுத்ததாகச் சொன்னார்கள். வேறு எதுவும் தெரியாது அங்கிள் என்றபடி மிதிவண்டியில் பெண் சொல்லிவிட்டுப் பறந்தாள். காந்தி இல்லம் கட்டிடத்தின் நுழைவாசலில் காந்தியின் படம் சிரித்துக்கொண்டிருந்தது.வாசலில் இருந்தபடியே தனது மாணவன் கலெக்டர் இளம்பிறைக்கு மனுவொன்றினைத் தயார் செய்து செல்லிடப்பேசியில் அனுப்பினார்.

பொன்.இராம்

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.