ஆன்மா!


“ நான் அந்த பொண்ணை உயிருக்கு உயிரா காதலிக்கிறேன் அண்ணே”

“ அடப்போடா, நாளைக்கே எவனாவது அவங்கப்பன மெரட்டினாலோ,அமேரிக்க மாப்பிள்ளை கிடச்சாலோ, இல்ல உன்னைவிட ஒரு வசதியான பையன் கிடச்சாலோ அவ உன்ன விட்டுட்டுப் போகப்போகிறாள். எப்படியும் நீ வெறுத்துப்போய் தற்கொலை பண்ணிக்கப்போற. அதை இப்பவே செஞ்சுக்கோயேன். எனக்கும் தனியா ரொம்ப போரடிக்குது”

***

“ அஞ்சு பேர் சேந்து என்னைக் கொடுமை செய்து கொன்னாங்களே,அப்ப நீ என்ன செஞ்சுக்கிட்டிருந்த?”

“ நான்… நான்… என் எதிர் சீட்டில் இருந்த பெண்ணை பாத்துக்கிட்டிருந்தேன்”

“ அவ என்ன செருப்பு போட்டிருக்கான்னா பாத்துக்கிட்டிருந்த?”

“ ம்… இல்ல அவ ரொம்ப அழகா இருந்தா”

“ நீ வேற ஒண்ணும் நினைக்கல?”

அவன் மௌனத்தில் உறைந்தான்.

அவள் தன்னை ஏதும் செய்துவிடுவாளோ என்ற பயத்தில் அவன் தன்னை நியாயப்படுத்த ஆரம்பித்தான் “ நான் ஒண்ணும் உன்னைக் கொல்லலையே”

“ ஆமாம், நீ நேரடியாக் கொலை பண்ணல. உன்னை மாதிரி சின்ன சின்னத் துளிகள் எல்லாம் சேர்ந்து வந்த வெள்ளம்தான் என்னை அடிச்சிட்டுப் போயிடுச்சி”

அவன் மேலே தூக்கி மின்விசிறியில் அறையப்பட்டான்.

தரையில் ஒரு துளி ரத்தம் மட்டும் மிஞ்சியது

***

“ உங்க காமெடிக்கு நான் பெரிய ரசிகனுங்க”

“ அதெல்லாம் இருக்கட்டும். ரொம்பக் கிட்ட வராத. எத்தன மாசத்துக்கு ஒருதடவை பல்லு வெளக்குவ?

“வாரத்துக்கு ஒருதட்ட”

‘ஒனக்கு எய்ட்ஸ் இருக்கா”

“ போன மாசம் டெஸ்ட் பண்ணப்ப இல்ல”

முன்னாள் காமெடியன், ரசிகனின் கழுத்தில் உள்ள ரத்த நாளத்தில் பல் பதித்தான்.

***


அவள் 30 வருடங்களுக்கு முன் இறந்துபோன இயக்குனருக்குத் தீவிர ரசிகை.

“ டைரக்டர் சார் , உங்க படங்கள் எல்லாமே ஒரிஜினல் சி.டி வாங்கிப் பாத்திருக்கேன் சார். உங்க நீதியும், நேர்மையும், ஏழைங்க மேல உங்களுக்கு இருக்குற அக்கரையும், அரசியல்வாதிகளோட ரெட்டைவேடத்தை அம்பலப்படுத்துவதும், முக்கியமா பெண்களின் மீதான அநீதிக்கெதிரா உங்க கருத்துக்களும் சூப்பர் சார். நீங்க உங்க காலத்துக்கு 100 வருஷம் தாண்டி யோசிச்சிருக்கிங்க சார்”

“ ஆமாம், நீயும் ரொம்ப அழகா இருக்க. நீ ஒரு 30 வருஷம் முன்னாடி என்னை வந்து பார்த்திருக்கலாம்” என்றார்.

அவள் தன்னை அங்கங்கே யாரோ தொடுவதைப்போலவும் எதோ படர்வதை உணர்ந்து , பதறி எழுந்து வாசலுக்கு ஓடி செருப்பை எடுத்தாள்.

***

“ நீங்க இப்பவும் இவ்வளவு அழகா இருக்கீங்களே ”

“ டேய், ஆவிக்கெல்லாம் சாவும்போது என்ன வயசோ அதே வயசுதாண்டா இருக்கும். நீ யசுனாரி கவபத்தா கதையெல்லாம் படிச்சதில்லையா?”

“ அழகாவும் இருக்கீங்க. புத்திசாலியாவும் இருக்கீங்க. உங்க கூட வாழறதுக்காக நான் சாகவும் தயாரா இருக்கேன்”

“ போடா , இப்படி பேசின ஒருத்தன நம்பி கல்யாணம் கட்டிக்கிட்டுதான், நான் மாடியில இருந்து குதிச்சி செத்துப்போனேன். இங்கயாவது நிம்மதியா இருக்க விடுடா”

ஆவி அலறி அடித்துக்கொண்டு ஓடினாள்

***


ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில்...

“ எனக்கு சாராயம் வாங்கிக் குடும்மா”

“ நான் ஏண்டி வாங்கித்தரணும்”

“ நான் இங்கே இருக்கேன்னு பொய் சொல்லி , ஊரை பயமுறுத்தித்தான இந்த இடத்துக்கு யாரும் வராமப் பண்ணி, நீயும் உன் காதலனும் இங்க வந்து கூத்தடிக்கறீங்க”

“ அதுக்கு?”

“ நான் என்ன அவன பங்கு குடுன்னாவா கேக்குறேன். நான் கல்யாணமே ஆகாம செத்துப்போன பொண்ணும்மா. எங்க காலத்துல உன்ன மாதிரி எதுனா செஞ்சிருந்தா எங்க வீட்டுல வெட்டிப்போட்டிருப்பானுங்க. என்னால இதெல்லாம் பாக்க முடியலம்மா. நான் சாராயம்தான கேக்குறேன்” அந்த ஆவிப்பெண் ஓலமிட்டு அழ ஆரம்பித்தாள்.

“ சரி சரி அழாதடீ, நாளைக்கி வரும்போது வாங்கியாறேன். அப்பப்ப கேட்கக்கூடாது. நாளைக்கு ஞாயித்துக்கிழமை. நாங்க காலையிலயே வந்துடுவோம். நீ சீக்கரமா வந்துடு”

****


“ ஏண்டா , நீ பொழைக்கறதுக்காகப் பேய் புடிச்சிருக்குன்னு சொல்லி பொண்ணுங்களைக் கொடுமைப்படுத்தி, அவங்க முடிய என்மேல ஆணி வச்சி அடிச்சியே, எனக்கு வலிக்கும்னு எப்பவாவது யோசிச்சிருக்கயா?


அவன் மிரண்டான்.


“அது கூடப் பரவாயில்லடா, யாரும் எங்கிட்ட வராம எனக்குப் பேய்மரம்னு பேர் வச்சிட்டானுங்க. நான் என்ன மரம்னு எனக்கே மறந்துபோய், நீ அடிச்ச ஆணிகளால நான் எப்படி ஆயிட்டேன் பாரு”


அடுத்த நாள் காலை அதே மரத்தில் அவன் ஜடைமுடி கிளையில் கட்டப்பட்டுத் தொங்கி மயங்கிய நிலையில் இருந்த அவனை ஊர்மக்கள் ஆம்புலன்ஸில் ஏற்றிக்கொண்டிருந்தனர். பூசாரிக்கு சக்தி போய்விட்டதாக பேசிக்கொண்ட அவர்கள் இனி பேய் ஓட்ட அவனிடம் வரமாட்டார்கள்.***


காற்றில் எழுத்துக்கள் தோன்றி மறைவதைப்பார்த்த மதகுரு ஆடிப்போனான்.

“ யார் நீ”

“ என்னைத் தெரியல?”

பல பெண்குரல்களைக் கேட்டிருந்த அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ நான் இதுக்கெல்லாம் பயப்படமாட்டேன்” அவன் போலித்துணிவுடன் பேசினான்.

“ நீ என்ன செய்யவும் அஞ்சமாட்டேன்னு எனக்குத் தெரியும்

“ நான் சாமியார் , கடவுளின் நேரடி அவதாரம்”

“ இப்படி சொல்லி சொல்லித்தானடா உயிரோட இருக்கும்போது என்னையும் ஏமாத்துன. நான் எழுத்தாளர்டா. மொழியின் நேரடி அவதாரம்” கொலுசு சத்தம் கேட்டது. காற்றில் மல்லிகைப்பூ வாசம்.


கண்ணில் தெரிந்த, காதில் ஒலித்த,வாயில் அடைத்த, கழுத்தை நெறித்த வார்த்தைகளின் வன்மத்தில் அவன் இறந்துபோனான்.


****


“ அய்யா எழுத்து ஞானி, எப்படி இருக்கீங்க ”


நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் கண்விழித்தார். யாரையும் காணவில்லை. ஒருவேளை தான் நோய்தீர்க்க எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளின் பக்க விளைவாக இருக்குமோ என எண்ணி மறுபடியும் சாய்ந்துகொண்டார்.


“ உடம்பு இப்பப் பரவாயில்லயா”?


அவர் லேசான திகிலுடன் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இருப்பதற்கான சுவடு எதுவும் தெரியவில்லை. ஒருவேளை இறந்து போன தன் எதிரிகளின் ஆன்மா ஏதும் வந்திருக்குமோ. அவருக்கு ராஜுவின் ஞாபகம் வந்தது. ஆம், அவன் ஆன்மா எப்படியும் சாந்தி அடைந்திருக்காது.


“ யாரு ராஜுவா”

ஏதோ இருக்கிறது எனத் தெரிந்துவிட்ட நிலையில் அவரது பதட்டம் விலகி இருந்தது. தனக்கு ஏதோ நிகழப்போவதையும் உணர்ந்திருந்தார். ஆனால் படங்களிலும், கதைகளிலும் வருவதைப்போல் சாம்பிராணிப் புகையோ, மல்லிகை மணமோ வரவில்லை. சிகரெட் , மருந்து மற்றும் செண்ட் வாசனை அடித்தது. இது கண்டிப்பாக தன் உடலில் இருந்து வரவில்லை. அவர் இப்போதெல்லாம் சிகரெட் பிடிப்பதில்லை. மேலும் இப்போது உடல் நிலை தேறியிருப்பதால் மணம் வீசும் மருந்து எதையும் உட்கொள்ளவில்லை. ஆம், நம்மை குணப்படுத்தும் மருந்திலிருந்து வருவதை “ துர்நாற்றம்” என்றா சொல்வது. மணம் அல்லது வாசம் என்பதே சரியாக இருக்கும். மேலும், அவருக்கு செண்ட் அடிக்கும் பழக்கம் இல்லை. ஜவ்வாது மட்டுமே பூசிக்கொள்வார். அதனோடு சேர்ந்து நெற்றியில் போட்டிருக்கும் விபூதியின் வாசம் அவரது எழுத்துக்களிலும் வீசும். இல்லாவிட்டால் முப்பத்தைந்து வருடங்கள் தமிழ் நாவல், சிறுகதைகளின் “ இலக்கிய ஞானி” யாகப் பல தடைகளையும் தாண்டி நின்றிருக்க முடியுமா?


“ ஐயா, உங்கள் சிந்தனையை விட்டு வெளியே வாருங்கள். நான் வெகுநேரமாகக் காத்திருக்கிறேன்”


“ சொல்லுப்பா, நான் உனக்கு என்ன செய்யட்டும்?”


“ நீங்க எனக்கு இனிமே ஒண்ணும் செய்ய முடியாதுய்யா. உங்களுக்கு ஒடம்புக்கு முடியலைனு கேள்விப்பட்டேன். சிகரெட் பழக்கத்தால நுரையீரல் பாரம் தாங்காம அவதிப்பட்டதுன்னு உங்க பேட்டியப் படிச்சு பதறி அடிச்சி ஓடிவந்துட்டேன்”


“ நீ என்னோட எழுத்துக்கு அவ்வளவு தீவிர வாசகனா?”


“ ஆமாங்க. செத்தப்புறமும் உங்க பேரைப் பத்திரிகையில பார்த்த உடனே ஓடிப்போயி, இல்ல இல்ல, காத்தாப்பறந்து போயி படிச்சேன்”


“ நல்லதுப்பா. நீ எப்படி இறந்து போன?”


“ அது வேணாங்க. நீங்க சொகமாயிட்டீங்களா. அதுவே போதும் . நான் கெளம்பறேன்”


“ மனித உடலுக்குத்தாம்பா மரணம் உண்டு. ஆன்மா மறுபடி மறுபடி வெவ்வேறு உருவங்கள் எடுத்து வந்துகொண்டுதான் இருக்கும். இதுதான் விதி. இதை அறிந்தவன்தான் ஞானி. நான் ஞானி. என்னிடம் நீ எதனையோ சொல்ல வந்திருக்கிறாய். அதை சொன்னால்தான் உன் ஆன்மா சாந்தி அடையும். நீ எப்படி இறந்தாய் சொல்லப்பா”.


விதி யாரை விட்டது.


“ நான் ஒருமுறை உங்க நாவலை படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு நாய் வந்தது. அதே போல் என் எதிரிலும் ஒரு நாய் வந்தது. நீங்கள் நாயும் நம்மைப்போன்ற ஒரு ஜீவன். அதற்கும் ஆத்மா உண்டு என்றெல்லாம் எழுதி இருந்தீர்கள். அதனால் நான் அப்படியே அமர்ந்திருந்தேன். ஆனால் அது அருகில் வந்து என்னைக் கடித்துவிட்டது. அது ஒரு வெறிநாய்”


“ நீ நாய்க்கடியாலதான் இறந்தாயா. என் கதையில் வந்தது வெறிநாய் இல்லையே”


“ அவசரப்படாதீங்க. நான் வெறிநாய்க்கடியால இறக்கல. தொப்புல சுத்தி ஊசி போட்டாங்க. அது நீங்க வசனம் எழுதன படத்துல வந்த ஹீரோயின் தொப்புள் மாதிரி ஆயிடுச்ச்சி. நான் பொழச்சிட்டேன். ஆனா நீங்க தினமும் 14 பாக்கட் சிகரெட் புடிப்பேன்னு சொன்னீங்க பாத்தீங்களா, அதனால நம்ம ஒரு ஏழு பாக்கட்டாவது புடிக்கணும்னு தினம் ஏழு பாக்கட் புகைச்சேன். உங்க வயசுல பாதி வயசிலையே நுரையீரல் புற்றுநோய் வந்து , மருத்துவம் பலிக்காமல் நான் செத்துட்டன். நான் உங்களைக் குற்றம் சொல்லலைங்க. எழுத்தையோ எழுத்தாளனையோ யோசிச்சு ஃபாலோ பண்ணணும்னு புரியுதுங்க. நான் உங்க வாசகன்.”அவன் போய்விட்டதுபோல் இருந்தது.


“ ஏம்பா, நீ இருக்கியா?” .இப்போது அவர் குரல் நடுங்கியது.


அவர் நாசிகளில் ஜவ்வாது , விபூதி வாசனைகளுடன் சிகரெட் துர்நாற்றமும் மருந்துகளின் வாடையும் ஏறியது. அவர் உடல் துடித்து அடங்கியது.

அவர் ஒன்றும் இறந்துவிடவில்லை. அவர் ஆன்மா உடலை விட்டு நீங்கி இருக்கிறது. மீண்டும் “எழுத்து ஞானி”யாக இல்லாவிட்டாலும் “எழுத்துத்தோணி”யாகவாவது வருவார்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.