'அப்பா அவங்க எப்படிப்பா இருப்பாங்க ?'

'உன்னை மாதிரியே அழகா இருப்பாங்க'

'உங்களுக்கு அவங்களைப் பிடிக்குமா ?'

'ரொம்பப் பிடிக்கும்'

'என்னை ரொம்பப்பிடிக்குமா, இல்லே அவங்களையா?'

'ம்ம்ம் ... ஒனக்கு என்னை ரொம்பப்பிடிக்குமா இல்லே அம்மாவையா ?'

'ரெண்டு பேரையும் எனக்குப் பிடிச்சது, இப்போதான் அம்மா இல்லையே ?'

மெதுவாய் என் மகளின் தலையைக் கோதி விட்டு நெற்றியில் ஒரு முத்தமிட்டேன்.

'நாம எப்போ அவங்களைப் பார்ப்போம் ?'

'இன்னும் ரெண்டு மணிநேரத்துல சென்னை, அங்கேர்ந்து வேற ப்லைட், எப்படியும் இன்னொரு ஃபைவ் ஹவர்ஸ்'

'அப்பா அவங்க பெயர் என்ன சொன்னீங்க ?'

'வைதேகி' போர்வையால் அவளைப்போர்த்தி விட்டேன்.

இதோ, முயல் குட்டிபோல் தூங்க முயற்சிக்கிறாளே, இவள், என் மகள், ரேணுகா, 5 வயதுதான் ஆகிறது, படு சுட்டி; நான் மாணிக்கம், பெயரைச் சென்னேன், மனமும் குணமும் கூட மாணிக்கம் தான், கதையைப் படிக்க படிக்க புரிந்துகொள்ளத்தானே போகிறீர்கள் நீங்கள். திருச்சியில் MCA படித்துவிட்டு வேலைக்காக, பணத்திற்காக அமெரிக்கா வந்து சம்பாதித்து, திருமணம் கட்டிக்கொண்டு, பிள்ளை பெற்று,

குழலினிது யாழினிது என்பார்தம் மக்கள்
மழலைச் சொல்கேளா தவர்.

என்ற குறளுக்குப் பொருள் புரிந்து வாழ எத்தனிக்கையில் ...

சரியாய் ஒரு நாலு மாதங்களுக்கு முன், என் மனைவி வயிற்றுவலி என்று சொல்ல, இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் சிகிச்சையளித்து, என்ன ஏது என்று புரியும்முன், எந்தச் சிகிச்சையும் பலனின்றி இறந்துவிட்டாள். எல்லாச் செலவுகளையும் மருத்துவமனை ஏற்றுக்கொண்டது. அவர்களின் தவறான சிகிச்சையினால் தான் என் மனைவி இறந்தாளோ என்றொரு சந்தேகம் இன்றும் எனக்கு இருக்கிறது. 'போராடு ... இனிமேலாவது அவர்கள் விழிப்போடு இருப்பார்கள் இல்லையா ? ' என்று என் அமெரிக்க நண்பர்கள் அறிவுறுத்திவிட்டு ... அவரவர் தம்தமது வழியில் போய்விட்டார்கள், என் பெண் ஒவ்வொருமுறை அழும்போதும் எனக்குள் துக்கம் பொங்கும், 'போராடுவோம்' என்று எழுவேன், இருந்தும், போராடி என்ன ஆகப்போகிறது என்ற ஒருஎண்ணம், எனக்கு மனைவியோ என் மகளுக்கு தாயோ மீண்டு வரப்போவதில்லை. என் துக்கம், என் பெண்ணின் ஒன்றும்புரியாது முழிக்கும் அழுகைப் பார்வை போராட வழிவிடாது ... சரி, அந்தக்கதையை விட்டுத்தள்ளுங்கள்.

என் மனைவி இறந்தபின், என்னதான் பணம் என் எல்லாத் தேவைகளையும் சரிபடுத்துமென்றாலும், என் மகளை எப்படி வளர்ப்பது என்ற ஒரே ஒரு கேள்விதான் என்முன்னே பூதகரமாய் எழுந்து நின்றது. ஒரு சிறு பெண் பிள்ளை, தாய் இல்லாமல் .... முடியுமா என்பதற்கு என்னால் விடை சொல்லமுடியவில்லை. அன்பு பணம் பாசம் சோறு இவையெல்லாவற்றையும் என்னால் சமாளித்துவிட முடியும், ஆனால் ... இன்னும் நாலைந்து வருடம் போனால் ... இவள் பெரியபெண் ஆவாள், இவளுக்கென்று சில தேவைகள் இருக்கும், என்னிடம் சொல்லுவாளா ? சொல்லமுடியுமா ? எனக்கு ஒன்றும் புரியவில்லை. 'என்ன வழி என்ன வழி' என்றுத் திணறினேன்.

என் மனைவியின் தாய் ரேணுகாவை தங்களிடம் கொடுத்துவிடும்படியும், அவர்கள் நன்றாய் வளர்ப்பதாகவும் சொன்னார். அவர்கள் ஏற்கனவே அவர்களுடைய மகனின் ஆதரவில் இருப்பவர்கள். அவர்களிடம் என் பெண்ணை தள்ளிவிட எனக்கு துளிகூட விருப்பமில்லை. என் தாய் தந்தை என்னை இன்னொரு திருமணம் செய்துகொள்ளத் தொந்தரவு செய்து, பெண் பார்க்கவும் ஆரம்பித்துவிட்டனர். சித்தி கொடுமை பற்றிய சிந்தனையே எனக்கு ஒருமனைவி தேவை என்ற நிலைப்பாட்டை வெறுக்கவைத்தது. 'இன்னும் சிந்தி' என்று என்உள் மனது தூண்டியது.

***

கோபாலின் நினைவு வந்தது. திருச்சியில் இருக்கும் என் நண்பன், கல்லூரியில் எனக்கு சீனியர், எப்பொழுதும் எல்லாப்பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு பதில் வைத்திருப்பான். ஒவ்வொருமுறை ஊருக்கு செல்லும்போதும் அவனைப் பார்க்காது பேசாது வந்ததில்லை. உண்மையச் சொல்லனும்னா எனக்கு வைதேகியோட நினைவுதான் வந்தது. அப்படியும் சொல்லமுடியாது, மறந்தால்தானே நினைப்பதற்கு; வைதேகி, கோபாலின் சகோதரி, சித்தப்பா பெண், என்னோடு கல்லூரியில் படித்தவள். நான் கம்ப்யுட்டர் சயின்ஸ், அவள் மேத்ஸ், அன்பானவள், அறிவாளி, நல்ல சிநேகிதி, உயிர்த் தோழி; நாங்கள் படித்த காலத்தில் இந்த மொபைல் எல்லாம் கிடையாது. நான் அமெரிக்காவில் செட்டில் ஆக, அவள் தொடர்பின்றி மொபைல் எண் தெரியாது ... எப்படியிருக்கிறாள் என்றும் தெரியாது. கல்யாணம் ஆகி பெங்களூர் பக்கம் இருப்பதாய் ஒருமுறை கோபால் சொன்னான். தெரிந்துகொள்ள ஆசைதான். எனிவே, கோபாலுக்கு போன் அடித்தேன். கோபாலிடம் பேசினால் ஒரு ஆறுதல் பிறக்கும் என்று எண்ணி அழைத்தேன்.

கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தோம். என் மனைவி இறந்தவிஷயத்தை அவனுக்குத் தெரிவித்தேன். மிகவும் வருத்தப்பட்டான். இப்டித்தாண்டா வைதேகி விஷயத்திலும் ஒரு துக்கம் என்று தெரிவித்தான். கல்யாணம் ஆனா கொஞ்ச நாளிலேயே அவள் கணவன் சண்டை போட்டுக்கொண்டு அவளை விட்டுவிட்டு சென்றுவிட்டான் என்றும், இப்பொழுது மதுரையில் ஒரு பள்ளியில் வேலை செய்வதையும் தெரிவித்தான்.

கோபாலிடம் பேசும்போது வைதேகியின் எண்ணைக் கேட்டு வாங்கிக்கொண்டேன். வைதேகியிடம் பேசும்போது ரேணுகாவிற்கு ஏதாவது வழி கிடைக்குதா பார்ப்போம் என்ற எண்ணம் என் மனதில் ஓடிக்கொண்டிருந்தது. தொலைபேசியில் அழைத்தேன்.

வைதேகியும் நானும், வெளியில் சொல்லவில்லையே தவிர ... எனக்கு அவள் மீது ஒரு சாஃப்ட் கார்னெர். அவளுக்கும் என் மேல் ஒரு .... வைதேகி பிராமின், நான் நான்-பிராமின்; நாங்களே உணர்ந்து ஒதுங்கிஒதுங்கித்தான் இருந்தோம்.

'ஹலோவ்' அதே தேமதுரக்குரல், பழைய நினைவுகளை மீண்டும் மூட்டை கட்டிவைத்துவிட்டு நினைவுலகத்துக்கு வந்தேன்.

'வைதேகி' ஞாபகமிருக்கா கண்டுபிடின்னு சொல்ல நினைத்தேன், ஆனால் பாவம் அவளே தனிஆளாய் என்ன கஷ்டத்தில் இருக்கிறாளோ என்று எண்ணியப்படியால், 'மாணிக்கம் பேசுறே, ஞாபகம் இருக்கா' என்று கேட்டேன்.

'மாணிக்கம் ... திருச்சியா ?'

'ஆமா ... நல்லாயிருக்கியா ?' எனக்குள் ஒரு பரபரப்பு, வார்த்தை உடைய ஆரம்பித்தது, அவளிடமிருந்து பதில் வரவில்லை, அழுகிறாளோ, அவளுக்குள்ளும் சிலபல நினைவுகள் ஓடியிருக்குமோ தெரியவில்லை.

'வைதேகி எப்படியிருக்கே?'
'மாணிக்கம் .... எங்கே இருக்கே ... என்னோட நம்பர் ... கோபால் அண்ணா குடுத்தாரா ?'
'ஆமா ... டைவர்ஸ் ஆயிடுச்சின்னு சொன்னான்'
'என்னவோ திடீர்னு கல்யாணம் ஆகி, திடீர்னு முடிஞ்சி ... இப்போ நிம்மதியா இருக்கே, வாட் அபௌட் யு ?'
'மனைவி இறந்துட்டா ... ஒரு ஆறு மாசம் ஆயிடுச்சி'
'அடப்பாவமே, என்ன ஆச்சி, திடீர்னு ?'
'வயித்துவலி ன்னு அட்மிட் பண்ணேன், ஒரு ரெண்டு வாரம் ட்ரீட்மென்ட் குடுத்தாங்க, ஒன்னும் ப்ரோஜனம் இல்லாம போயிடுச்சி'
'அடடடா ... சே ... சாரிப்பா .. கேட்கவே சங்கடமா இருக்கு, பையனா பொண்ணா உனக்கு ?'
'பொண்ணு, ரேணுகா, ஐந்து வயசு, இப்போ அவதான் என் உலகம்'
'யாரு பாத்துக்குறா மாணிக்கம் ?'

'க்ரீச் ஒன்னு பக்கத்துல இருக்கு, பட் இவ்ளோ நாள் வீட்டுல இருந்துட்டு இப்போ அவளுக்கு அங்கே போகவே ஒருமாதிரி இருக்கு' அழுதுவிடுவேனோ என்று எனக்குத்தோன்றியது … பேச்சை நிறுத்திக்கொண்டேன்.

'நீ தப்பா நெனச்சிக்கலேன்னா ... எனக்கு ஒரு யோசனை தோணுது .... பட் எனக்கு ...'
'சொல்லு, ஐ ரன் அவுட்-ஆஃப் ஐடியாஸ்'
'உன் சைடு, உன் மனைவி சைடு, யாரு இல்லியா குழந்தையைப் பார்த்துக்க ?'
'அவங்கல்லா சொல்றதுல எனக்கு விருப்பம் இல்லை, நீ என்னவோ யோசனை தோணுதுன்னு சொன்னியே, என்னதது ?'
'எனக்குக் கேட்க ... ஐ மீன் ... சொல்ல ... கூச்சமா ...'

'சே ... என்னஇது ... கமான் ... கோ அகெட்' கல்யாணம் பண்ணிப்போமான்னு கேட்கப்போகிறாளோ ? என்று எனக்குள் ஒரு .... சரி ன்னு சொல்லலாமா, இல்லே .... ஒன்றும் புரியாது தவித்தேன்.

'எனக்கு இப்படி கேட்கலாமான்னு தெரியலே, பட் …'

அவளே என்ன சொல்கிறாளோ சொல்லட்டும் என்று நான் பேசாது இருந்தேன்.

'நான் வேணும்னா .... உன் பொண்ணை வளர்க்கட்டா ? நீ அங்கேயே இருந்துக்கோ .. உனக்குத் தோணும்போதெல்லா வந்து பார்த்துக்கோ ...'

காலை கண்விழிக்கும் போது, கோவில் மணியோசை கேட்டால், பூக்கள் மலர்ந்து மணம் வீசினால், சிறு குழந்தையின் பொக்கைவாய்ச் சிரிப்பு காண நேர்ந்தால், ஒரு பரவசம் பிறக்குமே, அவ்விதப் பரவசம் எனக்கு அந்த நிமிடத்தில் ஏற்பட்டது. ரேணுகா வைதேகியிடம் வளர்வதில் எனக்குப் பரிபூரணச் சம்மதம். நேரம் கூடிவரும் போது நடக்கவேண்டியதெல்லாம் தானாகவே நடக்கும் என்பது இதுதானோ ?

'என்ன மாணிக்கம் ... நான் ஏதும் தப்பா சொல்லியிருந்தேன்னா மன்னிச்சுடு ப்ளீஸ்'

'சே, தப்பாவே எனக்குத் தோணலை, இன் ஃபாக்ட், அது சரியான யோசனை, உன்னோட கண்காணிப்புல வளர்ந்தா ... உன்னோட பாசம், அன்பு, அறிவு, எல்லாமே அவளுக்குள்ளும் பரவும் இல்லையா, பட்'

'என்ன ?'
'இதுனால உனக்கு ஒரு கஷ்டமும் இல்லையா ? ஐ மீன் ...'
'என்ன கஷ்டம்?'
'உன்னோட எல்லாச் செயலிலும், இப்போ அவளையும் சேர்த்து சேர்த்து ... நீ முடிவெடுக்கணும், ஐ ...'
'சொல்லு'
'அவளுக்கு ஒரு ஸ்கூல் பார்க்கணும், அவளை அழைச்சுக்கிட்டு போய்விடணும், திரும்பி பிக்கப், சாப்பாடு, செலவு ... இன்னும் எனக்குத் தெரியலே'
'சரி, உனக்கு என்மேல நம்பிக்கை இருந்தா ... என்னால தடையெல்லாம் சமாளிச்சி வரமுடியும்னு நம்பிக்கை இருந்தா ...'
'இருக்கு, எனக்கு நம்பிக்கை இருக்கு, உன்னால முடியும், பட் ... '
'சரி, ரேணுகாவால அட்ஜஸ்ட் பண்ணமுடியாதுன்னு நெனக்குறியா?'
'நோ ... நோ ... அவ நிச்சயம் உன்கிட்ட அட்ஜஸ்ட் பண்ணிப்பா ... ஷி ஈஸ் வெரி சப்போர்டிவ்'
'சரி நீ இங்கே எப்போ வரமுடியும் ? ஐ மீன் ... ரேணுகாவை கொண்டுவந்து விட முடியும் ?'
'அவ இப்போ ஒண்ணாவது சேரணும், நீ ஸ்கூல் ல தானே வர்க் பண்ணுறே ?'
'நான் பார்த்துக்கறே, எங்க ஸ்கூல்லேயே சேர்த்துவிடரே, ப்ளீஸ் டோன்ட் வொரி'
'அடுத்த மாசம் 20ஆம் தேதிக்கு மேல வந்துப் பார்க்குறே, சரியா ?'
'வெல்கம், ஐம் வெய்ட்டிங்'

எனக்கு என் ப்ரச்சனைகளெல்லாம் தூரப்போய்விட்டதாய், மனம் அமைதியில் எங்கோ தவழ்வதாய் உணர்ந்தேன்.

***

சென்னை வந்து சேர்ந்து மதுரைக்கு விமானத்தில் புறப்படும்முன் வைதேகிக்கு விவரம் தெரிவித்தேன். காலை 10 மணிக்கு மதுரையில் இறங்கி, ஒரு டாக்சி பிடித்து வைதேகி தந்த விலாசத்திற்குச் சென்று சேர்ந்தோம்.

எங்களுக்காகக் காத்திருப்பாள், வாசலிலேயே நின்றுகொண்டிருந்தாள். ஓடிவந்து ரேணுகாவை அணைத்துக்கொண்டாள். பெட்டியை உள்ளே வைத்துவிட்டு 'ரேணு இவங்கதான் வைதேகி' என்று நான் அறிமுகப்படுத்த, அடுத்த நொடியே

குரு ப்ரம்மா, குருர் விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வராஹ்
குரு சாக்ஷாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹ:

குருவணக்கம் சொல்லி வைதேகியின் காலில் விழுந்து வணங்கினாள். அவளை அப்படியே அள்ளி எடுத்து, முத்தமழை பொழிந்து 'பிள்ளையை நல்லா வளர்த்திருக்கீங்க' என்று கண்கலங்கிக்கொண்டே எனைப் பார்த்துச் சொல்ல, கைகூப்பி நன்றி தெரிவித்தேன்.

'அப்பா நான் இவங்களை எப்படிக் கூப்பிடனும்?' என்று ரேணுகா கேட்க,
'அம்மான்னே கூப்பிடலாம், தப்பில்லே' என்று வைதேகி சொல்ல
ரேணுகா எனைப் பார்க்க, நான் கண் சிமிட்டி சம்மதம் தெரிவித்தேன்.

வைதேகிக்கு தருவதற்கென்று கொண்டுவந்த சாக்லேட்ஸ், சிலபல பரிசுப்பொருட்கள், லாப்டாப் என்று சகல பொருட்களையும் ரேணுகா ஒவ்வொன்றாய் எடுத்துத் தந்தாள். 'தேங்க்ஸ்டா குட்டி' என்று சொல்லிக்கொண்டே, 'எதற்கு இதெல்லாம் ?' என்று என்னைப் பார்த்துக்கேட்டாள்.

'குழந்தைங்களுக்கு நாம தானே நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லித்தரணும், பெரியவங்களைப் பார்க்கப் போகும்போது வெறுக்கையோட போகக்கூடாதுல்ல' என்று நான் சொல்ல, 'நீ எதுவும் மறக்கலை' என்று ஒரு நமட்டுச் சிரிப்போடு பதில் சொன்னாள்.
'அப்போ உனக்கும் ஞாபகம் இருக்கு, ரைட் ?' என்று நான் கேட்க ...... காரணம், பல வருடங்களுக்கு முன், ஒருமுறை வைதேகி எங்கள் வீட்டிற்கு ஒரு டஜன் வாழைப்பழம் எடுத்துக்கொண்டு வந்திருந்தப்பொழுது, 'எதுக்கு இதெல்லா எடுத்துக்கிட்டுவரணும் ?' என்று என் அன்னை கேட்க, அப்பொழுது வைதேகி சொன்ன வசனம் அது.

எனக்குப் பிடிக்குமென்று செய்த உளுந்துவடை தின்று சூடாய்க் காஃபி குடித்து, என் சோகக்கதையைப் பற்றி அவள் கேட்க விவரித்தேன். அவள் மறக்க விரும்பும் அவள் சோகக்கதையை நான் கிளற விரும்பவில்லை.

விருந்து சமைத்து, கேட்டுக்கேட்டு பரிமாறி, ரேணுகாவிற்கு பிசைந்து வாயில் ஊட்டி, நான் 'அவ சாப்பிடுவா' என்று சொன்னாலும் கேட்காது, 'இன்னிக்கு நான் ஊட்டி விடறேன், நாளைலேர்ந்து அவளே சாப்பிட்டுக்கிட்டும்' என்று சொல்லி, பக்கத்து வீட்டு எதிர்வீட்டு குழந்தைகளை அழைத்து ரேணுகாவை அறிமுகப்படுத்தி, சேர்ந்து விளையாடச்சொல்லி, அதற்குப்பின் நாங்கள் பலகதை பேசினோம்.

'உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையா ?'
'இல்லை, இன் ஃபாக்ட் நீ ரேணுகாவை என்னோட இருக்க சம்மதிச்சதுக்கு நான் தான் உனக்கு நன்றி சொல்லணும், ஷி ஈஸ் வெரி க்யூட் டால், எனக்கு ரேணுவை ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு'
'சரி, லெட்ஸ் பி ப்ராக்டிகல், பணத்தால எந்த செய்நன்றியையும் சரிகட்ட முடியாதுன்னு எனக்குத் தெரியும், இருந்தும் நான் .......... ப்ளீஸ்' பணம் மாதாமாதம் எவ்வளவு தரட்டும் என்று வெளிப்படையாகக் கேட்கத் தயங்கினேன். ஆனால் வைதேகி ரொம்ப புத்திசாலி, புரிந்துகொண்டாள்.

'ஸ்கூல்ல நான் அட்மிஷனுக்குப் பேசிட்டே, கார்டியன் ன்னு நானே கையெழுத்து போட்டு சேர்த்துவிடரேன், பன்னிரண்டாவது வரைக்கும் இங்கேயே படிக்கலாம், அதுக்கப்புறம் அப்புறம் பேசிப்போம்'

'அட்மிசன் ஃபீஸ் மத்த செலவுகள் ...'

'நான் பார்த்துக்கறேன், நீ வாரத்துக்கு ஒருதடவை போன் பண்ணு, ஏதாச்சும் தேவைன்னா நான் சொல்லுறே'

'நீ பணம் பத்தி எதுவும் சொல்லமாட்டே, உன்னைப்பத்தி எனக்குத் தெரியும், உன்னோட பாங்க் அக்கௌன்ட் டீடெயில்ஸ் தரமுடியுமா ப்ளீஸ்?'

'தேவைப்படும்போது நான் கேட்கிறேன், உன்னோட பொண்ணுக்கு செலவு பண்ணிட்டு, உன்கிட்ட கேட்காம வேறுயார்கிட்ட கேட்பேன்?'

ம்ம்ம் ... பண விசயத்தில் இவளை ஒத்துக்கொள்ள வைக்க முடியாது என்பது எனக்குப் புரிந்தது. பிடிவாதக்காரி, தெரிந்த விசயம்தான். வேறு ஏதாவது வழி கிடைக்காதா போகும் என்று காத்திருக்க நினைத்தேன். அவ்வழியும் கிடைத்தது.

தற்போது குடியிருக்கும் வீடுபற்றிய பேச்சு வந்தது.

'வேற வீடு பக்கத்துல பாக்கணும்'
'எதுக்கு ?'
' வீட்டுக்காரர் காலி பண்ணக் கேட்டுருக்காரு, அவரோட பொண்ணுக்குக் கல்யாணமா, பணம் தேவைப்படுது போல, வீட்டை விக்கறாரு'
'வீடு பேசி முடிச்சிட்டாரா இல்லேன்னா எனக்கு ஒரு ஐடியா'
'வாங்கிப் போடலாம்னு பார்க்குறியா ?'
'வாங்கலாம்ல ?'
'கேட்டுப்பார்ப்போம், போன்ல கூப்பிடட்டா இங்கே அவரை ?'
'சாயங்காலம் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குப் போவோம், போற வழியில பார்க்கமுடியுமா ?'
'இங்கே தான் இருக்காரு, நான் போன் பண்ணி சொல்லிடறே, சாயங்காலம் வரேன்னு'
'சரி'

மாலையில் மூவரும் மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குச் சென்று வந்தோம். கோவில் வரலாறு, தமிழர்களின் கட்டடக்கலை, பொற்றாமரைக்குளம், கோவில் சுற்றியிருக்கும் தெருக்கள் இவை எல்லாவற்றைப் பற்றியும் நானும் வைதேகியும் ரேணுகாவிற்கும் விளக்கி, பேசிக்கொண்டே வந்தோம்.

கோவில் முடித்து, வீட்டுக்காரரை அவரது வீட்டில் சென்று சந்தித்தோம். அவர் 30 லட்சத்திற்கு வீட்டை விற்கத்தயாராய் இருப்பதாய்ச் சொன்னார். வைதேகியிடம் வாங்கிடலாமா என்று ஒப்புதல் கேட்டேன். 'வேற வீடு வாடகைக்குக் கிடைக்கும்' என்று சொன்னாள். இருந்தும் வீட்டுக்காரப்பெரியவரிடம் வீட்டைத் தான் வாங்கிக்கொள்வதாகவும், முன்பணமாக ஐம்பதாயிரத்திற்கு ஒரு செக் தந்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

***

அடுத்தநாள், நானும் ரேணுகாவும் திருச்சி சென்று என் பெற்றோரையும், என் மனைவியின் பெற்றோரையும் பார்த்து வணங்கி, கோபாலையும் சந்தித்து, ரேணுகா மதுரையில் வைதேகியின் பாதுகாப்பில் இருக்கப்போகும் விசயத்தையும் சொல்லி, மதுரை திரும்பினோம்.

அதற்கு அடுத்த நாள், நான் சென்னை சென்று அமெரிக்கா கிளம்பினேன். ரேணுகாவை விட்டுப் பிரிவதுதான் எனக்கு மிகவும் கஷ்டமாகயிருந்தது. அவளோ வைதேகியிடம் நன்றாய் ஒட்டிக்கொண்டாள். 'நான் பார்த்துக்கறே, பயப்படாம போய்வா' என்று வைதேகி என்னை அனுப்பிவைத்தாள்.

US வந்துசேர்ந்த பிறகு வைதேகிக்கு போன் செய்து நலம் விசாரித்துக்கொண்டேன். பக்கத்துவீட்டில் விளையாடிக்கொண்டிருந்த ரேணுகாவிடம் சென்று போன் தந்தாள். அவளிடமும் நீண்டநேரம் பேசி, அவள் அழுகாமல் அமைதியாக சொன்னபடி கேட்டு பத்திரமாக இருப்பதை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டேன். வைதேகிக்கு நன்றி சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

கோடைவிடுமுறை முடிய ரேணுகாவிற்கு தன் பள்ளியிலேயே ஒன்றாம் வகுப்பிற்கு அட்மிஷன் செய்துவிட்டதையும், பள்ளி தொடங்கிவிட்டதையும் வைதேகி எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தாள். நன்றி சொல்லத்தொடங்கினாள் எதற்குச் சொல்வது, எதை விடுப்பது. 'என்னதவம் செய்தேனடி, உனை என் பிள்ளைக்குத் தாயாய்ப் பெறவே' என்று எழுதியனுப்பினேன். அவ்வப்பொழுது தொலைபேசியில் அவர்களின் தினப்படி நடவடிக்கைகளைக் கேட்டுத்தெரிந்துகொண்டேன்.

'ரேணுகாவையும் தினம் இழுத்துக்கிட்டு போவது கஷ்டமாயிருக்கா ?'
'சே, என்ன கஷ்டம், தங்கம் போல பிள்ளை, சொன்னப்பேச்சு கேட்குறா, சமத்து, வேறென்ன வேணும் சொல்லு ?'
'இருந்தாலும்...' இழுத்தேன்,
'உன் மனைவிக்குக் குடுத்து வைக்கலை, உனக்கு அதிர்ஷ்டம் இல்லை, எனக்கு வாய்ச்சிருக்கு, எந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியமோ ... என்னதவம் செய்தேனோ, உன் பிள்ளைக்கு நான் தாயாகவே'

இப்படியாக இருநாளுக்கொருமுறை, வாரத்திற்கொருமுறை என்று பலமுறை தொலைபேசியில் பேசி, லாப்டாப்பில் வீடியோ சாட் செய்து, வீடு வாங்க பணம் அனுப்பி, ரெஜிஸ்டரேஷன் மாற்றி, ரேணுகா யோகா கற்றுக்கொள்வதையும், தேவாரம் பிரபந்தங்களைக் கற்றுக்கொண்டு பாடுவதையும் சொல்ல மகிழ்ந்து, 'எல்லாப் புகழும் வைதேகிக்கே' என்று பாராட்டி, இரண்டு மூன்று முறை நானும் இடையில் சென்று அவர்களின் நலம் கண்டு மகிழ்ந்து ... மாதங்கள் வருடங்கள் உருண்டோட, ரேணுகா தான் பத்தாவது பாஸ் செய்துவிட்டதையும், பன்னிரண்டாவது தேர்வு நன்றாய் எழுதியிருப்பதையும் எனக்குத் தெரிவித்தாள். 'நான் உங்களிடம் நேரில் பேசவேண்டும், அடுத்தமுறை வரும்போது பேசுவோம்' என்று மெயில் அனுப்பியிருந்தாள். 'என்ன பேசணுமாம் ரேணுவுக்கு?' என்று வைதேகியிடம் கேட்டேன், 'அப்பாவிற்கும் பெண்ணிற்கும் இடையில் ஆயிரம் இருக்கும், எனக்கெப்படி தெரியும்?' என்று சொல்லிவிட்டாள்.

மெயில் வந்த இருவாரம் கழித்து, பயணம் மேற்கொண்டு மதுரை வந்து சேர்ந்தேன். இருவருக்கும் என்னைப்பார்த்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. மாலையில்,

'அப்பா உங்களையும் அம்மாவையும் வச்சிக்கிட்டு நான் கொஞ்சம் பேசணும்' ரேணுகா தான் ஆரம்பித்தாள்.
'சொல்லுடா என்ன வேணும் ? '
'அம்மா .... இங்கே வாங்க' சமையலறையிலிருந்து வைதேகியை இழுத்துக் கொண்டு வந்தாள் .
'என்னாச்சி ? காஃபி போடணும்' என்று சொல்லிக்கொண்டே வைதேகியும் வந்தமர்ந்தாள்.

'மேல என்ன பண்ணலாம்னு இருக்கே ? என்ன வேணுமோ கேளு ?'
என்று நான் சொல்ல,

'எப்பவுமே என்னைப்பத்திதானா பேச்சு நினைப்பு எல்லாம், நீங்க ரெண்டுபேரும் உங்களைப் பத்தி ஒண்ணுமே யோசிக்கமாட்டீங்களா?' என்று ரேணுகா கேட்க,

'எங்களைப் பத்தி யோசிக்க என்ன இருக்கு, நீதானே எங்களுக்கு எல்லாம்' என்று வைதேகி தொடர,

'நான்தான் உங்களுக்கு எல்லாம், அதேமாதிரியே … நீங்கதானே எனக்கு எல்லாம் ?'
'இப்போ என்ன சொல்லவறே ?'
'நான் சின்னப்பொண்ணுன்னு அப்பா என்னை உங்ககிட்ட ஒப்படைச்சாரு, இல்லியா ?'
'12 வருசத்துக்கு முன்னாலே, இப்போ என்ன அதுக்கு?'
'அதேமாதிரியே, நாளைக்கு நான் மேலே படிக்க இல்ல வேலைக்குப் போனா, நீங்க பாதுகாப்பான இடத்துல இருந்தாதானே நான் அங்கே நிம்மதியா இருக்கமுடியும்'

'என்ன வைதேகி, பொண்ணுக்கு அறிவு ரொம்ப நிறைய வளர்ந்திடுச்சி, டெய்லி வெண்டைக்காய் சமைப்பியோ ?' என்று நான் நக்கல் அடிக்க,

'அட அதில்லேப்பா, நீ வர்றேல்ல, அந்த எக்ஸைட்மென்ட்ல நேத்து குட்டி தூங்கிருக்காது, அந்த மயக்கம், என்னடா கண்ணு ?' என்று கேட்டுக்கொண்டே வைதேகி ரேணுகாவின் நெற்றியில் கைவைத்துப் பார்த்தாள்.

'சரி நான் டைரக்ட்டாவே கேட்குறே, அப்பா நீங்க அம்மாவை, அம்மா நீங்க அப்பாவை கல்யாணம் கட்டிக்கிட்டா என்ன ?'

'சரி கேட்டாச்சில்ல, நான் போய் காஃபி போடட்டா ? ' என்று சொல்லிக்கொண்டே வைதேகி எழுந்திருக்க

'உட்காருங்க' ரேணுகா இருக்கை நோக்கி விரல் நீட்டி, 'நான் சொல்லுறவரைக்கும் யாரு எந்திரிக்கப்படாது ?'

படாது என்ற வார்த்தை கேட்டவுடன் பட்டென்று எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.

'பாப்பா கோபமா இருக்குல்ல, சிரிக்குறே ?' கோபமாய்ப் பேசுவதுபோல் பேசி, எனைப் பார்த்துக் கண்ணடித்தாள் வைதேகி.

' எந்திரிக்கப்படாது ன்னா … இப்போ யாரு பாடுறா?' பொதுவாய்க் கேட்டேன்.

'எந்திரிக்கப்படாது ன்னா எந்திரிக்கக் கூடாது ன்னு அர்த்தம்' பெண் விளக்கினாள்.

'ஓஹோ, பேஷ் பேஷ் ஐயர் ஆத்து பாஷை ... எங்கே கத்துண்டேள் ?'

'ம்ம்ம், நீங்கோ எங்கே கத்துண்டேளோ அங்கேதான் நானும் கத்துண்டேன், போறுமா'

பெண்பிள்ளை கண்முன் நின்றுபேசுவது பெருமையாய், சந்தோசமாய் இருந்தது.

'இப்போ என்ன வேணும் உனக்கு ?' பெண் சுத்தி சுத்தி எங்கே வரப்போகிறாள் என்பதை ஒருவாறு யூகித்துவிட்டேன்.

'அப்பா, US போதும், பணம் போதும், எனக்காக ஓடி ஓடி உழைச்சது போதும், உங்க வாழ்க்கையை வாழுங்கள், எங்களோடு இங்கேயே இருந்திடுங்க'

12 வருடத்திற்கு முன்னாலேயே என்னுள் இருந்த எண்ணம் இது, எல்லாம் போதும் என்று விட்டுவிட்டு, சொந்த ஊர் திருச்சியில் ஏதாவது சின்ன பிசினஸ் செய்துகொண்டு ஏன் இருக்கக்கூடாது, என்று என்னுள் கேள்வி அப்பொழுதே இருந்தது, இன்று வரை அக்கேள்விக்கு பதில் தேடாது காலம் தாழ்த்திக்கிடந்தேன். இப்பொழுது ரேணுகா இதே கேள்வி கேட்டதும், எனக்கு சரி என்று சொல்ல ஆசைதான். ஆனால் நான் இங்கே இருக்கவேண்டுமென்பது வைதேகியும் ஒப்புக்கொள்ளவேண்டிய விடயம், நான் அவளிடம் இதைப்பற்றி இதுவரை பேசவில்லை, பேச சந்தர்ப்பம் அமையவில்லை.


'சரி, யோசிப்போம், வேறே என்ன வேணும் ?'

'என் அப்பா என் அம்மா கல்யாணம் பண்ணிக்கணும்'

இதைத்தான் கேட்கப்போகிறாள் என்று நான் எதிர்பார்த்ததுதான். என்னாலேயே இதை யூகிக்க முடிந்தால், வைதேகி என்னைவிட மிக புத்திசாலி, அவளும் இந்த விடயம் பற்றி ஓரளவு யூகித்திருக்க முடியும் என்று நம்பினேன்.

'இதுபத்தி நான் யோசிக்கலே, கொஞ்சம் டைம் குடு, பார்ப்போம், என்ன வைதேகி ?' என்று நான் வைதேகியைக் கேட்க,

'காஃபி ... ஆறிடும், குடிச்சிடுவோமா ?' என்று உள்ளே சென்றாள்.

'காலம் தள்ளிப் போடக்கூடாதுன்னு அம்மா நினைக்கிறாங்க' என் காதில் கடித்தாள் மகள்.

மாலையில் மீனாக்ஷி அம்மன் கோவில் பொற்றாமரைக் குளத்தின் படிகளில் சென்றமர்ந்தோம். யாரோ பள்ளித்தோழியின் பெயர் சொல்லி அழைத்துக்கொண்டே 'இதோ வர்றேன்' என்று சொல்லிவிட்டு ஓடினாள்.

'வழி தெரியுமா அவளுக்கு ?' என்று நான் வைதேகியைக் கேட்க,
'நம்ப பொண்ண நீ என்னன்னு நெனச்சே ?'
'அது ...'

'அவள், நாம ரெண்டு பேரும் தனியா பேசிக்க இடம் குடுத்துட்டு, உள்ளே தரிசனம் பண்ண போயிருக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல கையில குங்குமத்தோட வருவோ பாரு'

'ஓஹ், அப்படியா சங்கதி' ஒரு சின்ன சிரிப்போடு வைதேகியின் காலில் கிள்ளினேன்.

'என்ன சொல்லறே ?' என்று கேட்டேன்,
'எது பத்தி ?'
'நாம தனியா பேச டைம் குடுத்துருக்காளே, அது பத்தி'
'வெரி இன்டலிஜெண்ட்'
'என் இனிய சிநேகிதியே, நம்பள கல்யாணம் பண்ணிக்க சொன்னாலே அதைக் கேட்டேன்'
'நான், நம்ப பொண்ணு ன்னு சொன்னேனே அதை நீ கவனிக்கலியா, என் இனிய சிநேகிதனே'

-- சுபம் –

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.