சிறு வயதில் இருந்தே நான் கூச்ச சுபாவம் உடையவன். அமைதியாகவே இருப்பேன். அறிமுகமில்லாதவர்களிடம் என்னால் தங்கு தடையின்றி பேச முடியாது. பள்ளி போட்டிகளில் கூட கட்டுரை போட்டி , கவிதை போட்டிகளில் மட்டுமே பங்கேற்பேன். தப்பி தவறி கூட பேச்சு போட்டி பக்கம் தலை காட்ட மாட்டேன். இப்படி இருந்த நான் பள்ளியில் அனைவர் முன்னால் முதன் முதலில் பேசிய என் அனுபவத்தை இங்கு நினைவு கூர்ந்து எழுதுகிறேன்.

------------------------------------------------------------------------------------------------------

எங்கள் பள்ளியில் மாணவர்களின் திறன்களை மேன்படுத்த வாரத்தில் ஒரு நாள், புத்தக அறிமுகம், பொது அறிவு கேள்வி போன்றவற்றை மாணவர்கள் அனைவர் முன்பும் பேச வேண்டும். யார் பேச வேண்டும் என்று முந்தைய வாரமே பள்ளி நூலகர் அட்டவணை அறிவிப்பு பலகையில் ஒட்டி விடுவார். நானும் என்னை போன்ற மற்றவர்களும் ஓடி சென்று பார்ப்போம், எங்கே தங்கள் பெயர் வந்துவிடுமோ என்று!

சில வாரங்கள் கழித்து, நான் பயந்தபடியே என் பெயர் வந்துவிட்டது. எனக்கு தூக்கிவாரி போட்டு விட்டது. போய் நூலகரிடம் பேசி பார்த்தேன். அவர் கண்டிப்பாக நான் பேச வேண்டும், அட்டவணையை மாற்ற இயலாது என்று கூறிவிட்டார். நானும் வேறு வழியில்லாது, புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் வேலையில் ஆயத்தமானேன்.

பள்ளி நூல்கள் தவிர விக்ரமாதித்தன், அக்பர்-பீர்பால் மற்றும் பரமார்த்த குரு கதை புத்தகங்களை படித்திருந்தேன். ஆனால் அதையெல்லாம் பள்ளியில் அறிமுகப்படுத்த முடியாது என்று எனக்கே தெரிந்ததால், வேறு ஏதாவது நல்ல நூலை படித்து அறிமுகப் படுத்த வேண்டும் என்று எண்ணினேன். பள்ளி நூலகத்தில் தேடிய போது, “கள்ளிக்காட்டு இதிகாசம்” கண்ணில் பட்டது. சாகித்திய அகாடமி பரிசு பெற்ற நாவல் என்ற குறிப்பு இருந்ததால், அதை எடுத்து கொண்டு போய் நூலகரிடம் காட்டினேன். தமிழ் நூல்களை அறிமுகப் படுத்த கூடாது என்று கூறிவிட்டார். ஆமாம், ஆங்கில பள்ளியில் எப்படி தமிழ் நூலை அறிமுகபடுத்த அனுமதிப்பார்கள்.

எனக்கு ஆங்கில புத்தகங்கள் எதுவும் தெரியாது என்பதால், நூலகரையே ஒரு புத்தகத்தை எடுத்து தர சொன்னேன். அவர், “Stress Management” என்ற புத்தகத்தை எடுத்து தந்து என்னை படிக்க சொன்னார்.

“Stress” என்றால் என்னவென்றே தெரியாது, அதை “manage” செய்வது எப்படி என்று கொடுத்திருந்ததை என்னால் புரிந்து படிக்க முடியவில்லை. ஏற்கெனவே போன முறை பேசிய நண்பனின் ஆலோசனை படி, புத்தகத்தின் முன்னுரை மற்றும் பொருளடக்கத்தில் இருந்து, பேசுவதற்குரிய பொருளை தயார் செய்து கொண்டேன். இரவு பகலாக அதை மனப்பாடம் செய்தேன்.

நான் பேசும் நாள் வந்தது. “Book talk by madhan kumar” என்று முதல்வர் அழைத்ததும். இதய துடிப்பு நின்று விடுவது போல் இருந்தது. ஏதோ கால்கள் தரையில் படாமல் நடப்பது போன்ற பிரம்மையுடன், முதல்வரை கூட பார்க்காமல் வேகமாக சென்று மைக் முன்னால் நின்று பேச ஆரம்பித்தேன். “Good morning to all” என்று சொன்ன போது, என் குரல் எனக்கு கேட்டது, மைக் வழியாக எனது சத்தம் அசரிரி போல் ஒலித்தது. மைக் முன்பு பேசுவது முதலாவது முறை என்பதால், எனக்கு கேட்கும் இரட்டை ஒலி, என் பயத்தை மேலும் அதிகரித்தது. நான் மனப்பாடம் நன்றாக செய்து வைத்திருந்தாதால், எனக்கு அடுத்து பேசுவது மறக்கவில்லை. “I am going to review the book “Stress Management” by Andrew Sayer” என்று கூறிவிட்டு கையில் வைத்திருந்த புத்தகத்தை எல்லோருக்கும் காட்டும் விதமாக ஒரு சுழட்டு சுழட்டி விட்டு, அடுத்த மனப்பாட வரியை பேச ஆரம்பித்து விட்டேன். நான் காண்பித்த புத்தகத்தை எவராலும் கண்டிருக்க இயலாது, ஆனால் அது என் கவலை இல்லை. என் கவலையெல்லாம் பேசி முடித்து விட்டு எப்போது செல்லலாம் என்பது பற்றி தான்.

பேசி கொண்டிருந்த போது, என் முன்னால் நின்று கொண்டிருந்த மற்ற வகுப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை பார்த்த போது, எங்கே நான் மனப்பாடம் செய்தது மறந்து விடுமோ என்று அஞ்சி, என் கண்களை பள்ளி சுவர் விட்டத்தில் நிலை நிறுத்தி கொண்டேன். அப்படியே கண்களை திருப்பாமல் மீதியையும் ஒப்பித்து விட்டு “Thank you” என்று சொல்லி கிளம்பும் போது மைக்கில் இருந்து நான்கடி தூரம் சென்றிருந்தேன்.

பேசி முடித்து விட்டு, வகுப்பு மாணவர்களுடன் சென்று வரிசையில் ஐக்கியமான பின்பு தான் இவ்வுலகத்திற்கு வந்ததாக தோன்றியது. என் மனமும் உடலும் நிதான நிலைக்கு வந்த பின்பு, முதல்வர் பேசுவது கேட்டது “ Madhan, came like storm, delivered dialogue like rajinikanth, and also went like a storm” என்று சொன்ன போது அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர் நான் உள்பட.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.