கொட்டாவி விட்டபடி உள்ளங்கை இரண்டையும் தேய்த்து, கண்ணைத் திறந்து அதைப் பார்த்துவிட்டு சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை நோக்கிய ஸ்வாதி, அதில் 7.50 என்று காட்ட 'ஓ காட்... விடிஞ்சது தெரியாம தூங்கிட்டேனே...' என்றபடி எழுந்தபோது உடம்பெல்லாம் அடித்துப் போட்டது போல் வலியிருந்தது. உடம்பு வலியை போக்க கைகளைத் தூக்கி சோம்பல் முறித்தபடி வலது புறம் பார்த்தாள். உடம்பில் துணியில்லாது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தான் ராகவ். போர்வையை இழுத்து அவனை மூடிவிட்டு நைட்டியை சரி செய்தபடி எழுந்து பாத்ரூம் போனாள்.

ஹீட்டர் சுவிட்சை ஆன் பண்ணிவிட்டு, காபி குடித்தபடியே சமையல் வேலையில் மும்மரமானாள். உடல் வலி வேலைக்கு போக வேண்டாம் என்று நினைக்க வைத்தது என்றாலும் வார இறுதி பேங்கில் இன்று கூட்டம் அதிகமாக இருக்கும் கேஸ் கவுண்டரில் இருக்கும் சுதாகர் ஒருவன் மட்டுமே பார்ப்பது கடினம் என்ற நினைப்போடு சமையல் முடித்து அவசர அவசரமாக குளிக்கப் போனாள்.

ஷவரைத் திறந்துவிட்டு நின்றவளின் தலையில் இறங்கிய இளஞ்சூடான தண்ணீர் உடம்பில் ஓடி பாதம் வழியாக தரையில் இறங்க, உடல்வலிக்கு இதமாக இருந்தது. இதுவரை மனசுக்குள் எழாத கேள்வி இளஞ்சூடான தண்ணீர் விழுந்ததும் மெல்ல எழுந்தது. 'ராத்திரி ஏன் ராகவ் அப்படி நடந்து கொண்டான்?' என்ற கேள்வியும் அதன் பின்னே 'எப்பவும் இப்படி நடப்பதில்லையே... ஏன் அனுமதியில்லாமல் அவன் தொடுவது கூட இல்லையே... அப்புறம் ஏன்...? என அடுத்த கேள்வியும் எழ 'எவ்வளவு மூர்க்கமாய் நடந்து கொண்டான். திருமணமான இந்த இரண்டு வருடத்தில் நேற்றிரவுதான் மூர்க்கமாய் நடந்து கொண்டான்... அதை நான் விரும்பவில்லை என்று தெரிந்தும் அவனது மூர்க்கத்தனம் குறையவில்லையே.. ஏன்...? அவனுக்கு என்னாச்சு...?' என்று யோசித்தவளுக்கு முந்தைய இரவு கொடுத்த வலியும் அதற்கான காரணம் புரிந்தும் புரியாமலும் இருக்க வெந்நீரோடு கண்ணீரும் இறங்கியது.

ராகவ் அவளின் அத்தை பையன்தான்... சிடிஎஸ்ஸில் ஜாவா டெவலப்பர்... ஜாவாவில் எப்படியான கோடும் எழுதும் திறமைசாலி, அவனது நட்பு வட்டத்தில் ஜாவாவில் சந்தேகம் என்றால் இவனைத்தான் நாடுவார்கள். பலருக்கு இவனே கோட் எழுதிக் கொடுப்பான். இவள் மீது உயிரையே வைத்திருந்தான். 'ஸ்வா...' என்றுதான் அழைப்பான். இந்த இரண்டு வருடத்தில் இருவருக்குள்ளும் ஒரு சின்னக் கீறல்கூட விழுந்தது இல்லை... அலுவலகத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை போன் பண்ணி பத்து நிமிடம் பேசுவான். அவனின் அன்பும், அவளைத் தாங்கும் பாங்கும் அவளுக்கு ரொம்பவே பிடித்திருந்தது. சும்மா நட்புக்காக பீர் மட்டும் குடித்தேன் என்று குடித்ததற்கு காரணம் சொல்வோர் மத்தியில் எனக்குப் பிடிக்கலை... குடிக்கலை... டோண்ட் கம்பல்... என்று ஜென்டிலாக ஒதுங்கிக் கொள்பவன்.

சோப்புப் போட்டபடி நினைவுகளில் ஆழ்ந்தவள், 'எனக்குப் பிடிக்கலை... குடிக்கலை....' என்ற நினைவில் சற்றே இடறினாள். கீழே விழுந்த சோப்பை எடுத்தவள், இரவு ராகவ் நடந்து கொண்ட விதமும் அவனது வாயில் அடித்த வித்தியாசமான வாசமும் மனதிற்குள் வந்து போக, திக்கென்று ஆனது... ராகவ் குடித்திருக்கிறான்... முதல் முறை குடித்திருக்கிறான்... அந்த குடி... அதுதான் அவனை முரடனாக்கியிருக்கிறது... ஏதோ இன்றே அவசரமாக அள்ளிக் கொள்ள வேண்டும்... நாளை இவள் கிடைக்கமாட்டாள் என்பது போல அவன் செயல் இருக்கக் காரணம் உள்ளே சென்ற தண்ணி... நினைத்தபோது வாய்விட்டு அழணும் போல் தோண, ஷவரைத் திறந்துவிட்டாள் தலையில் விழுந்த தண்ணீர் கன்னத்தில் இறங்கியபோது கண்ணீரும் அதோடு பயணித்தது.

உடைமாற்றி சாப்பிட்டு இருவருக்கும் டிபன் பாக்ஸ் ரெடி பண்ணி அவசரமாக கிளம்பி, பெட்ரூமில் இன்னும் தூக்கத்தில் இருந்த ராகவைத் தட்டிவிட்டு நேரமானதைச் சொல்லி தான் கிளம்புவதாக கூற, அவன் திரும்பிப் படுத்துக் கொண்டான். அவன் தூக்கத்தில் கும்பகர்ணன்... தினமும் அவசர அவசரமாக குளித்துவிட்டு காலைச் சாப்பாட்டை துறந்து ஓடுவதே அவனுக்கு வாடிக்கை. அவனது போனை எடுத்து இரண்டு நிமிடத்தில் அலாரம் அடிப்பது போல் வைத்து ரிபீட்டையும் ஒகே பண்ணிவிட்டு கிளம்பினாள்.

அலாரம் அடித்ததும் அதை கட் பண்ணிவிட்டு படுத்த ராகவ், சிறிது நேரத்தில் மீண்டும் அலாரம் அடிக்க கடுப்போடு எழுந்தான்... கண்ணைத் திறக்காது கையைத் துலாவி பெர்முடாஸை எடுத்தவன் உக்காந்தபடியே மாட்டிக் கொண்டு மணி பார்த்தான். அப்போது ஸ்வாதியிடமிருந்து போன்... 'மார்னிங் ஸ்வா..' என்றான். எதிர்முனையில் 'எழுந்துட்டீங்களான்னு தெரிஞ்சிக்கத்தான் அடிச்சேன்... ஈவ்னிங் சீக்கிரம் வாங்க...கோயிலுக்குப் போகணும்' என்று சொல்லி வைத்தாள். 'என்ன இவள்... எப்பவும் குட்மார்னிங் என குதூகலமாக ஆரம்பிப்பவள் சுரத்தில்லாமல் பேசுகிறாள்' என்று நினைத்தவனின் தலை விண்... விண்ணென்று வலிக்க, இரவு நிகழ்ந்தது நிழற்படமானது. அலுவலக நண்பனுக்குத் திருமணம் நிச்சயமானதற்கான பார்ட்டி... அங்கு... அங்கு.... மெல்ல அசை போட்டான்.

ஒரு ஆப்பிள் சூஸை எடுத்துக் கொண்டு, தண்ணிப் பார்ட்டி முடியட்டும் என ஓரமாக அமர்ந்தவனுக்கு எதிரே வந்து அமர்ந்தாள் ஜெனிபர்...

---------

ஜெனிபர் அவனது குழுவில் புதிதாக இணைந்திருப்பவள்.. அழகி என்றால் அப்படி ஒரு அழகி... அவளின் நுனி நாக்கு ஆங்கிலமும்... அசரடிக்கும் அழகும்... வசீகரிக்கும் உடையும் சன்யாசியையும் சம்சாரியாக்கும். அவளிடம் பேசுவதற்கென்றே பலர் அலைவதுண்டு. ராகவ் அவளிடம் பணி குறித்துப் பேசுவதுடன் சரி... அவனுக்கு எதிரேதான் அவள் இருக்கை என்றாலும் மொக்கை போட நினைப்பதில்லை... அவனுக்கு அவனோட ஸ்வா... பேரழகி... அவளோட அழகுக்கு முன்னால இந்த ஜெனிபர் இல்ல... எத்தனை ஜெனிபர் ஒண்ணா வந்தாலும் நிக்கமுடியாது என்ற இறுமாப்பு அவனுக்குள்... அது உண்மைதான்... ஸ்வாதி பேரழகி... அவள் புயல் அல்ல... புன்னகை வீசும் தென்றல்... சுண்டினால் ரத்தம் தெறிக்கும் நிறம்... தண்ணீருக்கும் நீந்தும் கெண்டை மீன் போன்ற கண்கள்... நீளமாய் அதே நேரம் அடுத்தவரை வசீகரிக்கும் மூக்கு... ஆரஞ்சுச் சுளையை போன்ற உதடுகள்.... இன்னும்... ஸ்வாதி நினைவை விடுத்து ஜெனிபருக்குச் சென்றான்.

'என்ன ராகவ்... ஆப்பிள் சூஸா?' என்றபடி சிரித்தாள். 'எஸ்... ஐ டோண்ட் லைக் ஹாட் டிரிங்க்ஸ்...' என்றவன் அப்போதுதான் கவனித்தான் அவள் இரண்டு கிளாஸில் ஏதோ ஒரு மதுவகை ஊற்றிக் கொண்டு வந்திருந்தாள். 'ஏய் ராகவ்... வாட்யா..? யு டோண்ட் டிரிங்க் ஹாட்... ஜஸ்ட் டிரிங்க் பியர்யா... இட்ஸ் குட் பார் ஹெல்த்... இட்ஸ் ரெடியூஸ் யுவர் பாடி ஹீட்...' எனக் கண்ணடித்தாள். 'நோ... எனக்குப் பிடிக்காது... டோண்ட் கம்பல் ஜெனி...' என ஜென்டிலாக மறுத்தான். 'ஆர் யூ ஸ்கூல் பாய்..? லுக் மீ டியர்... ஸ்கூல் பாய்ஸ் கூட ஹாட் அடிச்சிட்டு கவிழ்ந்து கிடக்குறானுங்க...' என்று சிரித்தவள்... 'ஏன் ஸ்கூல் பொண்ணுங்களும்தான்...' என்றாள் மெல்ல, 'சீ... மீ... ஐ லைக் பியர் ஒன்லி... நவ் ஐ டிரிங்க் பியர்... திஸ் ஈஸ் மை செகெண்ட் கப்... டேக்... டேக் திஸ் அண்ட் ஹிவ் கம்பெனி டூ மீ... ப்ளீஸ்... ஏய்.. ஐ ஆம் அலோன்... ப்ளீஸ் ஹிவ் மி எ கம்பெனி...' என ஒரு கிளாஸை அவன் பக்கம் நகர்த்தினாள். 'வேண்டாம் ஜெனி... என்னோட ஒய்ப்புக்கு இதெல்லாம் பிடிக்காது... சாரி...' என்று எழ முயன்றான்.

'ஹே... புரோக்ராம் எழுதுனா மட்டும் பத்தாது... இதெல்லாம் தெரிஞ்சிருக்கணும்... அம்பியா இருக்கிறதைவிட அந்நியனா இருந்தாத்தான் எல்லாரும் லைக் பண்ணுவா... பீயர் அடிக்க பயப்படுற நீ எப்படி....' ஏதோ சொல்ல வந்து அதை நிறுத்திவிட்டு அவனை வித்தியாசமாகப் பார்த்தவள் நாக்கை செக்ஸியாக வாய்க்குள் சுழற்றுவது கன்னத்தில் தெரிந்தது. 'செக்ஸிலும் இப்படித்தானா... இதுதான் பிடிக்கும்... இது பிடிக்காதுன்னு... லைப் போரடிக்கலையா..?' என்று அவள் கேட்டதும் ராகவ்வுக்கு ஜிவ்வென்று ஏறியது. 'ஏய்...' என்று கர்ஜித்தவனின் குரலுக்கு குடித்துவிட்டு ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த நண்பர்கள் திரும்பிப் பார்த்ததும் ஒன்றும் பேசாமல் அமர்ந்தான். 'ஓகே... ஓகே... ஐயம் சாரி... ஜஸ்ட் டிரிங்க திஸ் கப் ஒன்லி... திஸ் வில் ரெடியூஸ் யுவர் ஆங்கிரி ஆல்சோ...' என்று அவனிடம் நீட்டியவளின் முகத்தை நோக்கினான் அவளின் பார்வையில் குறும்பு தெரிந்தது. அவனது சுயம் அவனைச் சோதித்தது. ஒரு பெண் தன்னை இவ்வளவு கேவலமாகப் பேசுவதை அவனால் தாங்க முடியவில்லை. அவளிடமிருந்த கப்பை வாங்கி மடக்மடக்கெனக் குடித்தவன் அவளைப் பார்த்து நக்கலாகச் சிரித்தபடி 'ஒன் மோர் ப்ளீஸ்' என்றான் கெஞ்சலாய்.

'ஹாய் பிரண்ட்ஸ்... ஸ்டாப் யுவர் டான்ஸ்... ராகவ் வாண்ட் ஒன்மோர் பியர்...' என்று கத்த, 'ஹே' என நண்பர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். 'ஜெனி... யூ ஆர் த வின்னர்...' எனக் கத்தினாள் ஒருத்தி. ராகவ்வுக்கு என்ன நடக்குதுன்னு புரியாம விழிக்க, 'மச்சி நீ தண்ணி அடிக்கமாட்டேன்னு நாங்க சொன்னோம்... ஜெனி இன்னைக்கு உன்னை பியர் குடிக்க வைக்கிறேன்னு எங்ககிட்ட பெட் கட்டினா... ஒரு பத்துப் பேரு ஆளுக்கு பைவ் கண்ட்ரேட் பெட் வச்சோம்... இப்படி காலை வாரிட்டியேடா... பைவ் தவ்சண்ட் பீரடிச்சி பைவ் தவ்சண்டை காலி பண்ணிட்டியேடா...' என்று புலம்பியபோது ராகவ்வின் கையில் இரண்டாவது கப் இருந்தது.

நான்கு கப்புக்கள் இறங்கியதும் ஆட்டத்தில் கலந்து கொள்ளும் ஆவல் வர, ஜெனிபரின் கைபிடித்து இழுத்தான்... ஆட்டத்தில் அவனின் இழுவைக்கு எல்லாம் இணங்கிப் போனாள்... அவனின் கை அவளின் முதுகில் விளையாண்டது. அவள் ஒன்றும் சொல்லாமல் அவனுடன் ஆடியது அவனுக்கு சாதகமாக இருக்க உதடோடு உதடு பொருத்தினான்.

'சை... எவ்வளவு கேவலமா நடந்திருக்கேன்... அதன் பிறகு... அதன் பிறகு... யோசித்தவனுக்கு யோசனையில் அதன் பிறகு என்ன நடந்தது நினைவில் இல்லை. 'என்னோட ஸ்வாவுக்கு துரோகம் பண்ணிட்டேனா... அவதானே என்னோட உயிர்... எப்படி அப்படி நடந்துகொண்டேன்... பியர் இதையெல்லாம் செய்யச் சொல்லுமா?' என்று எழுந்தவன் பாத்ரூம் நோக்கி தளர்வாய் நடந்தான்.

பாத்டப்பிற்குள் தண்ணீரை நிறைத்து அதற்குள் இறங்கி அமர்ந்தவனின் உடல் சூடெல்லாம் வெளியாவது போல் தெரிய, முத்தக்காட்சி மீண்டும் மனத்திரையில் ஓட ஆரம்பித்தது... ஜெனிபரை அணைத்து ஆடியவன் அவளின் உதடோடு உதடு வைத்து முத்தம் கொடுத்தான்... அடுத்த சிறிது நேரத்தில் அவனின் உதட்டில் அவளின் முத்தம்... அவனுக்குள் சென்றிருந்த பியரும்... அவனின் ஆண்மையும் எகிறிக் குதிக்க, அவளின் உதட்டில் வாய் பதித்து கையை மார்பின் மீது வைத்தான்... அடுத்த நொடி ஜெனிபர் அவனைப் பிடித்துத் தள்ளினாள். விழப்போனவன் சுதாரித்து நிற்க, 'சாரி ராகவ்... போட்டிக்காக உங்களை குடிக்க வைத்து... நான் தோத்துட்டேன்... ஐ ஆம் சாரி...' என்றபடி அவள் அங்கிருந்து நகர, 'ஜெனி... நான்... ஜெனி.. ஜெனி...' என அவள் பின்னால் ஓடினான். மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

----------

வெகு நேரத்திற்குப் பிறகு வீட்டுக்கு வந்தவனின் வெறி அடங்காமல் ஸ்வாதியை என்றும் இல்லாத அளவுக்கு துன்புறுத்தினான். அவள் போதுமென சொன்னபோதும் 'எனக்கு வேண்டும்... வேண்டும்...' என மீண்டும் மீண்டும்... அவனுக்கு நினைவில் வர, 'சை... என்ன ஜென்மம் நான்... எப்படி ஸ்வாவை... இனி அவகிட்ட நான் பேச முடியுமா...? என்னைத் தப்பா நினைச்சிருப்பாளே... எவளோ சீண்டட்டும்.... அதுக்காக... குடிக்கணுமா...? நான் ஆம்பளைங்கிற ஆணவம் எனக்குள்ள எப்படி வந்தது...? ஜெனி ஏன் என்னை குடிக்க வைத்தாள்...? ஐயாயிரம் போட்டிக்காகவா...? இல்லை... வேறு எதற்காகவுமா..? அவள் அப்படிப்பட்டவளில்லை... போட்டிக்காகத்தான் அப்படி நடந்திருப்பாள்... இல்லை என்றால் முத்தத்தை ஏற்றவள்... அதன் பின்னான நகர்த்தலில் என்னை எவ்வளவு வேகமாகத் தள்ளினாள்...?

மாடர்ன் பெண் என்றாலும் அவளுக்குள்ளும் பெண்மைதானே இருக்கு... ஒருவேளை என்னை... என் செயலை ஏற்றிருந்தால்...? நான் ஸ்வாவுக்கு துரோகம் அல்லவா செய்திருப்பேன்... அழகி... அழகியின்னு சொல்லுவேனே... அவளைவிட ஜெனிபர் அழகா...? எப்படி கேவலமாக நடந்து கொண்டேன்...? எனக்கு எதிரே அமர்ந்து நாள் முழுவதும் வேலை பார்ப்பவளின் மார்பு அப்போதெல்லாம் எனக்குத் தெரியவில்லையா...? மனசு மிருகமாயிட்டா பார்வையில் கோளாறு வந்திருமா...? அவளின் முத்தச் சூடு எனது மொத்தத்தையும் இழக்க வைத்ததா...?

நான் ராமன் இல்லைதான்... ஆனால் ராவணனாக நடக்காதவன்தானே.... ராமன், ராவணனில் அவனை அறியாமல் சிரிப்பு வந்தது. படிக்கும் காலத்தில் இருந்தே அவனுக்கு ராவணனை கெட்டவன் என்று சொல்வது பிடிக்காது. ராமன் பிறன்மனை நோக்காதவன் என்று பெருமை பேசுகிறோம். ஆனால் தான் சத்தியகீர்த்தி என்று சொல்லும் அவன்தானே தன் மனைவியை தீயில் இறங்கி பத்தினி என நீரூபிக்கச் சொன்னான். இதைப் பற்றி அவனுக்கு பாடமெடுத்த வரலாற்று ஆசிரியர்களிடம் காரசாரமாக விவாதிப்பான்.

கல்லூரியில் தமிழ் ஐயாவுடன் இதுகுறித்து அவன் மிகப்பெரிய கருத்துப் போரே நடத்தியிருக்கிறான். 'அவன் ஊருக்காகத்தான் அப்படி செய்யச் சொன்னான்.. தனக்காக அல்ல... தன் மனைவி குறித்து ஊரார் தவறுதலாக பேசக்கூடாது என்பதற்காகத்தான்...' என வக்காலத்து வாங்கினார். 'தன்னோட பொண்டாட்டி உத்தமின்னு தனக்கு தெரிஞ்சாப் போதாதா.. ஊரு என்னமோ பேசட்டும்... அதுக்காக.. இதே சீதை நான் இலங்கையில் இருந்த போது நீ தனியாத்தானே இருந்தே நீ உத்தமனா இருந்தேன்னு நீருபின்னு கேட்டிருந்தா... ராமன் தீயிலிறங்கியிருப்பானா? மாட்டான் ஐயா... ஏன்னா இது ஆணாதிக்க உலகம் ஐயா.... இன்னைக்கு நேத்து இல்லை ராமாயண காலத்துல கூட ஆணுக்கு பெண் அடிமைதான் ஐயா..' என்று மனதில்பட்டதை பட்டென்று சொன்னவன்.

அதேபோல் எதுக்கு ராவணனை வில்லன் ஆக்குறீங்க... அவன் என்ன செய்தான்... ஒருத்தி மீது காதல் கொண்டான்... அவள் மற்றொருவனின் மனைவி என்ற போதிலும் அவள் மீதான காதலால் கடத்திச் சென்றான். சிறையில் அடைத்து வைத்திருந்தவனுக்கு அவளை அடைவதில் என்ன சிக்கல்..? அவன் சீதையைக் கெடுத்திருந்தால் அவள் என்ன செய்திருக்க முடியும்...? ஆனால் அவன் அப்படிச் செய்யலையே, அவளோட சம்மதத்துக்காக காத்திருந்தானே... அவளைச் சிறை பிடித்து வைத்திருந்த காலத்தில் அவனின் நகம் கூட அவள் மீது படவில்லைதானே... நாம் அப்படி இருப்போமா...? ஒரு பெண்ணை பார்க்கும் நாம் கண்ணாலேயே கற்பழிக்கிறோமா இல்லையா...? ஒருத்தி அழகாய் இருந்தால் அவளை எப்படியேனும் தொட்டுவிடத் துடிக்கிறோமா இல்லையா...? பேருந்தில் பெண்களை இடிக்காமல் பயணம் செய்பவர்கள் எத்தனை பேர்...? ஆனால் ராவணன் அப்படியில்லையே.. சீதையைக் கடத்தினான்... இலங்கை எரிந்தது... இராமாயணம் பிறந்தது. அவன் வில்லன் இல்லை... வில்லன் ஆக்கப்பட்டவன்... உண்மையில் பெண்மையை மதிக்கத் தெரிந்த ரொம்ப நல்லவன்... இன்னும் சொல்லப் போனால் சீதையை நெருப்பில் இறங்கச் சொன்ன இராமனைவிட நல்லவன் என்று கல்லூரி வழக்காடு மன்றத்தில் வாதிட்டவன் அவன்

குளித்து முடித்தவனின் மனசுக்குள் ஏகப்பட்ட கேள்விகள்... தன் செயலுக்கான வருத்தம் அவனுக்குள் குடிகொண்டது... எப்படி ஜெனிபர் முகத்தில் விழிப்பது...? எப்படி ஸ்வாவை எதிர்க்கொள்வது...? என்ற கேள்விக் கணைகள் அவனைத் துளைத்து எடுத்தன... இதை யோசித்தபடியே இட்லி எடுத்தவனுக்கு சாப்பிட மனமில்லை. நண்பன் பிரகாஷ்க்கு போன் செய்து உடல் நலமில்லை நாளைக்கு வர்றேன் மேனேஜர்க்கிட்ட சொல்லிடு என்றவன், ‘ஜெனி வந்துட்டாளா...?’ என்று கேட்டு அவளிடம் போன் கொடுக்கச் சொன்னான்.

'ஜெனி...' என அவன் ஆரம்பிக்க, 'மார்னிங் ராகவ், வாட் ஹாப்பண்ட் யா...? உடம்பு சுகமில்லையா...? எல்லாம் என்னாலதானே... சாரிப்பா... ஏய் டோண்ட் திங்க் தட்... டேக் ரெஸ்ட்... ஐ வில் சால்வ் ஆல் புரோக்கிராம் இஸ்யூஸ்... நோ பிராப்ளம்...' என்று எப்பவும் போல் பேசினாள். 'இல்ல நைட்...' மெல்ல இழுத்தான். 'ஏய்... டோண்ட் வொர்ரி எபவுட் தட்... ஐ பர்காட் தட்... ஒகே... டேக் ரெஸ்ட் மேன்... ஐ ஆம் சாரி... டோண்ட் டிரிங்க் எகெய்ன்... ஓகே... சி யூ டுமாரோ... டேக் கேர்...' என்று போனைக் கட் செய்தாள்.

அவளின் நுனி நாக்கு ஆங்கிலமும் கவர்ச்சியான ஆடை அலங்காரமும் மட்டுமே அவளை எடை போட வைத்ததை நினைத்து வருந்தியவன் அவளின் நல்ல உள்ளம் யாருக்கும் தெரியவில்லை... ஏன் தனக்குக்கூட நேற்றிரவு அவள் ஆசைக்கு அடிபணிந்து விடுவாள் என்றுதானே எண்ணம் தோன்றியிருக்கிறது என நினைத்தபோது வருத்தமாக இருந்தது. ஸ்வாதிக்கு போன் செய்யலாம் என்று நினைத்தவன் என்ன பேசுவது...? ஒருவேளை பேசப் பிடிக்காமல் கட் பண்ணிட்டான்னா..? நேரில் பேசிக்கலாம்... என்ற நினைப்போடு போனை வைத்துவிட்டு சோபாவில் சாய்ந்தான்.

எப்பவும் அடிக்கடி கூப்பிட்டுப் பேசும் ராகவ் கூப்பிடாதது ஸ்வாதிக்கு வருத்தமாகவும் கஷ்டமாகவும் இருந்தது. அவனிடம் பேசவே கூடாது என்று நினைத்திருந்தவளின் நெஞ்சுக்குள் ராகவ் கூப்பிடமாட்டானா என்ற எண்ணம் மேலோங்கியது, சரி நாமே பேசலாம் என்று நினைத்து அவனுக்குப் போன் அடித்தாள்.

எதிர்முனையில் போன் எடுக்கப்பட்டதும் அவள் 'அலோ' சொல்லும் முன்னரே ராகவ் 'ஸ்வா.... சாரிடி... நேத்து நைட்டு...' என்று ஆரம்பித்தான், 'அதெல்லாம் முடிஞ்ச கதை... அது எதுக்கு இப்போ... ஆபீஸ் கிளம்பிட்டீங்களா?' என்றாள். 'இல்ல லீவ் சொல்லிட்டேன்.... நான் ரொம்ப கேவலமா நடந்துக்கிட்டேந்தானே... சாரி ஸ்வா...' என்றான் மீண்டும். 'லீவா... என்ன ரொம்ப கேரா இருக்கா... ப்ரிட்ஜ்ல எலும்பிச்சம்பழம் கிடக்கு எடுத்து பிழிஞ்சி குடிச்சிட்டு படுங்க... உங்க டிபன் பாக்ஸ் சாப்பாடை அப்படியே ப்ரிஜ்ட்ல வச்சிட்டு வெளியில போயி சாப்பிட்டு வாங்க...' என்றாள். 'ம்... நான் அங்க வாறேன்... ரெண்டு பேரும் வெளிய போயி லஞ்ச் சாப்பிடலாமா?' மெல்லக் கேட்டான். 'வேண்டாம் எனக்கு வேலை இருக்கு.. எங்கிட்ட லஞ்ச் இருக்கு... நீங்க போயிச் சாப்பிடுங்க...' என்றாள். 'எம்மேல கோபமா...? சாரிடி... எம்மேலதான் மிஸ்டேக்...' மறுபடியும் சாரி சொன்னான்.

'விடுங்க... தப்பு ரைட்டெல்லாம் பேசிக்கிட்டு... ஏங்க நான் உங்க பொண்டாட்டிதானேங்க... ராத்திரி, பகல்ன்னு எல்லாம் பாக்கிறவ இல்லையே... பின்ன ஏன் அப்படி... இனி கிடைக்காதுங்கிற மாதிரி... ஒருத்தி முடியலைன்னு சொன்னா கேக்குற மனநிலையில நீங்க இல்லை... வெறி பிடிச்சா எல்லா ஆம்பிளைகளும் ஒண்ணுதான் போல...' மெல்லப் பேசினாள். 'சாரிடி ஸ்வா... இனி அப்படி நடக்க மாட்டேன்... நேத்து பிரண்ட்ஸ் சேர்ந்து ஏமாத்தி பீர் குடிக்க வச்சிட்டாங்க... சாரிடி... இனி அந்தக் கருமத்தை தொடமாட்டேன்... நம்புடி... ப்ளீஸ் ஸ்வா...' அழுவது போல் பேசினான். ஸ்வாதி சிரித்தபடி 'நம்பிட்டேன்... என்னோட ராகவைப் பற்றி எனக்குத் தெரியதா..? சரி அதை விட்டுத் தள்ளுங்க... அதையே நினைச்சி வருந்தாதீங்க... ரெஸ்ட் எடுங்க.. .ஓகே... மறந்தேன்... மன்னித்தேன்...' என்றாள் 'தாங்க்ஸ்டி... உன்னைய மாதிரி ஒருத்தி பொண்டாட்டியா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்...' எதிர்முனை வழிந்தது.

'வழியாதீங்க... பேங்கல கூட்டமா இருக்கு... அப்புறம் பேசுறேன்...ஆமா யாருங்க அந்த ஜெனிபர்..? என்னைவிட அழகியா..?' என சிரித்தபடி மெல்லக் கேட்டதும் 'ஏய்... அவ ஒரு அட்டுப் பிகரு... அவ பேரை உனக்கிட்ட யாரு சொன்னா... பிரகாஷா..? அவளோட பேசக்கூடமாட்டேன்... நீதான்டி அழகு....' வேகமாய்ச் சொன்னான். 'அப்படியா... அப்புறம் ஏன் ராத்திரி அவ பேரு நம்ம பெட்ரூம்ல கேட்டுச்சு... அதுவும் உங்க வாய்ஸ்ல...' எனச் சிரிக்காமல் கேட்டுவிட்டு போனைக் கட் பண்ணினாள்.

-'பரிவை' சே.குமார்.

tamil@pratilipi.com
+91 9206706899
சமூக வலைதளங்களில் தொடர
     

எங்களைப் பற்றி
எங்களுடன் இணைய
தனியுரிமை கொள்கை
சேவை விதிமுறைகள்
© 2017 Nasadiya Tech. Pvt. Ltd.